29 January 2012

திருவொற்றியூர் – புலம்பல்கள்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எச்சரிக்கை: கொஞ்சமே கொஞ்சம் பொது விஷயங்களோடு நிறைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம்.

சென்னையின் பிரச்சனைகள் என்றால் வெளியூர்க்காரர்கள் வெயிலையும் உள்ளூர்க்காரர்கள் போக்குவரத்து நெரிசலையும் குற்றம் சாட்டுவார்கள். சென்னையை ஒட்டி அமைந்துள்ள திருவொற்றியூர் நகரத்தின் நிலை அதனினும் கொடிது. நகர்ப்புறங்களில் இருந்து திருவொற்றியூர் நோக்கி பயணிப்பவர்கள் ஊர் எல்லைக்குள் நுழைந்ததும் கரடு முரடான, எளிதாக போய்வர வழியில்லாத கொடுமையான சாலை வசதியை அனுபவிப்பார்கள். போகவும் வரவும் நாற்பதடிதான். மழைக்காலங்களில் இன்னும் கொடுமை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் திருவொற்றியூர் புகைப்படம் தினத்தந்தியில் தவறாமல் இடம்பெறும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்... கூடவே வலியும் பிறக்கும் போல...! திருவொற்றியூரின் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக என் தந்தையின் கடை, வீடு பாதிக்கு மேல் இடிபட போகிறது. இப்பொழுதே வீட்டில் அனைவரும் இடிந்துபோய் தான் இருக்கிறோம்.

அம்மாவின் டென்ஷன் பேசப் பேசத்தான் குறையும். அப்பாவின் டென்ஷன் பேசாமலிருந்தால் தான் குறையும். இருவரது கண்களில் எந்தவொரு சமயத்திலும் கண்ணீர் கசிந்துவிடக் கூடாதென்பது என்னுடைய கவலை. ஓரளவுக்கு பக்குவப்பட்ட (!!!) எனக்கே இப்படியென்றால் என் தங்கையின் மனநிலை எப்படி இருக்கும்..? அன்றாட வாழ்வாதாரத்திற்காக தன்னுடைய கடையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் கடைக்கோடி வியாபாரியின் மனநிலை...???

நீங்கள் பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த வீடோ, கடையோ சில நொடிகளில் பொக்லைன் இயந்திரத்தால் தரைமட்டமாக்கப்படும்போது எப்படி இருக்கும்...?

கடந்த வாரம் சனிக்கிழமை, எங்கள் மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக நகரம் நோக்கி பயணித்துவிட்டு மாலை வீடு திரும்பும்போது திருவொற்றியூர் ஒட்டுமொத்தமாக உருமாறியிருந்தது. காலையிலேயே மின்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் பொக்லைன் இயந்திரங்கள் ஆங்கிலப்பட டைனோசர்கள் போல ஊருக்குள்ளே நுழைந்தன. முந்தய நாள் இரவே தகவல் தெரிந்திருந்ததால் வியாபாரிகள் தத்தம் கடைகளை காலி செய்துக்கொண்டிருந்தனர். கலவரம் நடந்தாற்போல ஊர் முழுவதும் பரபரப்பு, காக்கிசட்டைகள். ஈவு இறக்கமில்லாமல் வீடுகளும் கடைகளும் இடித்து தள்ளப்பட்டன. ஒருசில கடைகளுக்கு முன்னெச்சரிக்கை கிடைக்காமல் போக பொருட்களோடு கடைகள் இடிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் திருவொற்றியூரை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, மெயின் ரோட்டோரம் சொந்தக்கடை அல்லது வீடு வைத்திருப்பவர்கள். இரண்டு, மெயின் ரோட்டோரம் வாடகை கடை / வீடு வைத்திருப்பவர்கள். (இந்த லிஸ்டில் நம்ம பதிவர் அஞ்சாசிங்கமும் இருக்கிறார். மனிதர், அவருடைய அலுவலகம் அடித்து நொறுக்கப்படும்போது கூட ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் மாதிரி சிரித்தபடி இருந்தார். கூலர்ஸ் வேறு). மூன்றாவது, வீதிகளில் அல்லது கடலோரச் சாலையில் வசிப்பவர்கள்.

மூன்றாவது பிரிவினர், நிறைய பேர் விஷயம் என்னவென்று தெரியாமல் இது என்னவோ முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான புரட்சி போராட்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஷங்கர் படத்தில் வரும் பொதுஜனம் ரேஞ்சுக்கு “வெச்சான் பார்யா ஆப்பு”, “இவ்ளோ நாள் ஆடுனீங்கல்ல... சாவுங்கடா” போன்ற கமெண்ட் அடிக்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் வேதனையாக இருக்கிறது. தனது கடையின் பெயர்பலகையை கழட்டிக்கொண்டிருந்த வியாபாரி ஒருவரைப் பார்த்து பொதுஜனம் அடித்த கமெண்ட் – “ங்கோத்தா... கடையே போயிடுச்சு லூசுக்கூதி போர்டை கழட்டிட்டு இருக்கான்...”

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி, விதிமுறைகளை மீறி, பொதுவழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலானவர்களிடம் பட்டா இருக்கிறது. ஆம் அரசாங்கம் பணம் தருகிறது. தற்போதைய நிலவரப்படி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு சதுர அடி 4000ரூ. ஆனால் அரசாங்கம் தருவதோ 910ரூ. (அன்பே சிவம்...!) அந்த தொள்ளாயிரத்து பத்தையும் நாயாக அலைந்து திரிந்து வாங்க வேண்டும். மேலே சொன்னது காலியிடத்தின் விலை மட்டுமே. அங்கே கட்டிய வீடு, அதற்காக செலவழிக்கப்பட்ட பணம் எல்லாம் காந்தி மகான் கணக்கு தான்.

இவ்வளவையும் செய்தால் உடனே திருவொற்றியூர் சிங்கப்பூராக ஆகிவிடுமா...? அதற்கு நிறைய தடைகள் உள்ளன. மரங்கள், மின் கம்பங்கள், தெரு விளக்குகள், ட்ரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதனினும் கொடிது, ஒவ்வொரு தெருமுனையிலும் தவறாமல் வீற்றிருக்கும் கோவில்களையும் இடித்துதள்ள வேண்டும். எங்கள் வீட்டிற்கு நேரெதிரே மசூதி ஒன்று உள்ளது. மசூதியை இடித்தால் என்ன நடக்குமென்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதற்கு சற்றே தள்ளி அமைந்திருக்கும் துலுக்கானத்தம்மன் கோவிலின் கோபுரம் கிட்டத்தட்ட நடுரோட்டில் இருக்கிறது. நல்லவேளையாக, தேவாலயங்களை முன்னெச்சரிக்கையாக உள்ளேதள்ளி கட்டியிருக்கிறார்கள். சொல்ல முடியாது, “ஹே... ஹே... பார்த்தீங்களா கோவில், மசூதியெல்லாம் இடிச்சிட்டாங்க... “சர்ச்சை” மட்டும் இடிக்கவில்லை... கர்த்தர் டீவிக்கிறார்...!” என்று சொல்லி ஆள்சேர்க்கப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.

எல்லாம் முடிந்து திருவொற்றியூர் விரிவடைந்த சாலையாகவும், வியாபாரிகள் விழுந்த அடியில் இருந்து மீண்டு வரவும் குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகலாம். இதுவும் கடந்துபோகும்...!

இன்னும் சில வாரங்களில் என்னுடைய வசிப்பிடமும் தகர்க்கப்படலாம். அதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் வருந்துகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

63 comments:

Philosophy Prabhakaran said...

கடந்த வாரம், இயலாமையின் காரணமாக இன்னும்கூட நிறைய புலம்பி Draft-ல் வைத்திருந்தேன். நல்லவேளையாக இப்போது கொஞ்சம் நகைச்சுவை உணர்வு மீண்டும் திரும்பியிருக்க குறைந்தபட்ச புலம்பல்கள் மட்டும் இங்கே...!

இந்த பிரச்சனை மட்டுமில்லாமல் இன்னும் சில பர்சனல் விஷயங்கள் ஒருசேர நெருக்கடி கொடுப்பதால் இன்னும் சில மாதங்களுக்கு பதிவுலகில் தென்பட மாட்டேன் என்பது உங்களுக்கான இனிப்பு...!

Philosophy Prabhakaran said...

My kind request: no template comments please...

அனுஷ்யா said...

அனுதாபங்களைத் தவிர வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரபா...
அம்மாவிடம் பேசுங்கள்.. தேறுவார்கள் என்று சொல்லியுள்ளீர்களே..

அனுஷ்யா said...

ஒட்டுமொத்த தமிழகமும் சென்னியில் மையம் கொள்ளும் நிலை மாறும் வரை இத்தகைய கசப்புகள் தொடரவே செய்யும்...

அனுஷ்யா said...

உங்களால் உங்கள் குடும்பத்தாருக்கு உறுதுணையாக நிற்க முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது...

அனுஷ்யா said...

அணைத்து பிரச்சனைகளையும் கடந்து மீண்டும் உங்களை பதிவுலகில் விரைவில் சிந்திப்போம் என்று நம்புகிறேன்...

கோகுல் said...

"இந்த நிலையும் மாறும்"என நமக்கு நாமே தேற்றிக்கொள்வதைத்தவிர என்ன சொல்றதுன்னு தெரியல பிரபா.

நெல்லை கபே said...

புரிகிறது...மீண்டு வர பிரார்த்னைகள். அரசு மார்க்கெட் ரேட்டை கொடுக்கணும் என்று வழக்கெல்லாம் போட முடியாதா?

Philosophy Prabhakaran said...

@ மயிலன், கோகுல்

நன்றி மயிலன், கோகுல்...

காலம் காயங்களை ஆற்றும்... கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்குமே எனக்கு நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன...

Philosophy Prabhakaran said...

@ மாயன்:அகமும் புறமும்
// புரிகிறது...மீண்டு வர பிரார்த்னைகள். அரசு மார்க்கெட் ரேட்டை கொடுக்கணும் என்று வழக்கெல்லாம் போட முடியாதா? //

திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்கம் அதற்காக முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை...

ம.தி.சுதா said...

/////சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக என் தந்தையின் கடை, வீடு பாதிக்கு மேல் இடிபட போகிறது.////

சகோ தங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை....

எமது ஊர்களில் பிரதேச சபையில் அனுமதி எடுத்துத் தான் கட்டியிருக்க வேண்டும்... அப்படிக் கட்டியிருந்தால் எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் வந்தால் சரியான நட்ட ஈடு கொடுக்க வேண்டும்...

கட்டாயத் தகர்ப்பானாலும் இப்படி பொருட்களோடு வைத்தெல்லாம் தகர்க்கமாட்டார்கள்...

நாய் நக்ஸ் said...

Prabha......
:(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீட்டை மறுசீரமைப்பு பண்ணிடுங்க, எல்லாம் விரைவில் சரியாகிடும் பிரபாகரன்....!

அபி said...

//அதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் வருந்துகிறேன்.//
இந்த தெளிவு போதும் பிரபா. நன்மையே நடக்கும்.

REACHING OUT said...

Kavalaiyaga than irukkiradhu... Naam Libya naatil nadandhadhu pol ingum nadakka yedhavadhu seiya vendum.. Govt enbathu politics than... Naan iruppadho manali, angu eppozhudhu indha mathiri seiya porargal endru theriya villai...

Philosophy Prabhakaran said...

@ ♔ம.தி.சுதா♔
// எமது ஊர்களில் பிரதேச சபையில் அனுமதி எடுத்துத் தான் கட்டியிருக்க வேண்டும்... அப்படிக் கட்டியிருந்தால் எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் வந்தால் சரியான நட்ட ஈடு கொடுக்க வேண்டும்...

கட்டாயத் தகர்ப்பானாலும் இப்படி பொருட்களோடு வைத்தெல்லாம் தகர்க்கமாட்டார்கள்... //

நீங்க எந்த பிரதேசத்தை பத்தி சொல்றீங்கன்னு புரியல...இலங்கையிலா இப்படி...? தமிழர்கள் வாழும் பகுதியிலுமா...?

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Prabha......
:( //

நக்ஸ்... நீங்க இரண்டாவது பின்னூட்டத்தை படிக்கலையா...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// வீட்டை மறுசீரமைப்பு பண்ணிடுங்க, எல்லாம் விரைவில் சரியாகிடும் பிரபாகரன்....! //

கண்டிப்பா தல... மறுசீரமைப்பு முடிந்ததும் மகிழ்ச்சியா கம்பேக் பதிவு போடுவேன்...

Philosophy Prabhakaran said...

@ அபி
// இந்த தெளிவு போதும் பிரபா. நன்மையே நடக்கும். //

புரிந்துக்கொண்டமைக்கு நன்றி அபி...

Philosophy Prabhakaran said...

@ REACHING OUT
// Kavalaiyaga than irukkiradhu... Naam Libya naatil nadandhadhu pol ingum nadakka yedhavadhu seiya vendum.. Govt enbathu politics than... Naan iruppadho manali, angu eppozhudhu indha mathiri seiya porargal endru theriya villai... //

நண்பா... இந்த சாலை விரிவாக்க பணிகள் ரஜினி மாதிரி எப்போ வரும் எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது... ஆனா வரக்கூடாத நேரத்துல கரெக்டா வரும்... ஒருவேளை உங்கள் வீடு மணலியின் பிரதான சாலையில் இருந்தால் தயாராகா இருங்கள்...

துரைடேனியல் said...

ஒருமுறை மாவீரன் நெப்போலியன் இப்படித்தான் ஜெயித்த உலக நாடுகளையெல்லாம் இழந்து நின்ற போது அவனுடைய தளபதி அவனிடம் " எல்லாம் முடிந்து போயிற்று. இனி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டானாம். அப்போது நெப்போலியன் என்ன சொன்னார் தெரியுமா? அந்த வாக்கியம் இதோ " எல்லாம் என்னை விட்டுப் போனாலும் இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் என்னிடம் இருக்கிறது. அதை வைத்து இழந்த எல்லாவற்றையும் மீட்பேன் என்றானாம் ". தளபதி அவனிடம் " அது என்ன என்று ஆச்சரியத்தோடு கேட்டானாம். " நம்பிக்கை " அவன் தீர்க்கமாய் சொன்ன அந்த ஐந்தெழுத்து மந்திரம் அந்த மலைப்பகுதி முழுவதும் எதிரொலித்ததாம். தளபதி அசந்து போனானாம். நெப்போலியன் சொன்னபடியே மறுபடியும் நடந்தது என்பதை சரித்திரம் அறியும். எல்லா பிரச்சினைகளும் உங்களுக்கு சாதகமாக முடிந்து பீனிக்‌ஸ் பறவை போல எழுந்து வருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறன். தங்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

துரைடேனியல் said...

நினைவு மலர்களின் மேல்
தாஜ்மஹாலா
விளங்குமா இந்த அரசாங்கம்?!....

Philosophy Prabhakaran said...

@ துரைடேனியல்
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி டேனியல்... இப்பதான் வால் தளத்தில் இதே விஷயத்தை கற்றுக்கொண்டு வந்தேன்...

ம.தி.சுதா said...

/////நீங்க எந்த பிரதேசத்தை பத்தி சொல்றீங்கன்னு புரியல...இலங்கையிலா இப்படி...? தமிழர்கள் வாழும் பகுதியிலுமா...? ////

ஆமாம் சகோ இலங்கையைத் தான் சொல்கிறேன்... இப்போது யாழ்ப்பாணத்தில் பல இடத்தில் வீதி அகலிப்பு நடக்கிறது இதே முறையில் தான் நடக்கிறது....

பருத்தித்துறை எனும் நகரப்பகுதியில் அகலிக்க வேண்டி வந்தால் ஒரு கடையின் அரைவாசிக்கு மேல் விடுபட வேண்டி வரும் என்ற கடைக்காரரின் எதிர்ப்பால் அந்தப் பகுதி மட்டும் அகட்டப்படாமல் இருக்கிறது....

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பா.. வருத்தமான சேதி தான்...
தற்போதைய நிலையிலே திருவெற்றியூரில் சாலையையும், சாலை போக்குவரத்தையும் சீர் செய்யாம இப்படி மக்களின் வாழ்வாதாரங்களை சீர் செயராங்களே? கொடுமை பிரபா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

இவற்றிற்கு வாக்கிட மனமில்லை பிரபா...

நிரூபன் said...

வணக்கம் சகோதரா,

தந்தையையும், தாயினையும், தங்கையினையும் ஆறுதல்படுத்த வேண்டும்,

நானும் இந்த மாதிரியான கொடூர நிலைகளைக் கண்டு வந்திருக்கிறேன்.
கண் முன்னே விமானக் குண்டு வீச்சில் வீடுகளை இழந்தோரின் வேதனைகளுக்கு ஒப்பானது இந்த அவலம்.

கவலையை விடுங்கள்! நிச்சயம் காலமும் நேரமும் ஒன்று சேரும் போது நல்லவை நடக்கும்.

திருவொற்றியூர் பற்றி சம்பந்தரது தேவாரங்கள், தல பாடல்கள், வீரட்டானத்துறை அம்மன் ஆலயம் பற்றி பள்ளியில் படித்த காலத்தில் அறிந்து வைத்திருந்தேன்.

ஆனால் இந்தப் பதிவின் மூலம் மனதை நெருட வைத்து விட்டீங்க.

கவலைகளிலிருந்து மீண்டு வாருங்கள் பிரபா!

சில்க் சதிஷ் said...

அம்மாவிடம் பேசுங்கள் Please don't loose your hope.

Try 🆕 said...

வேதனைப்படுவதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

பால கணேஷ் said...

படித்ததும் வருத்தமாக இருந்தது பிரபா! அதிலும் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஜனங்கள் அடித்த கமெண்ட்டை நீங்கள் சொல்லியிருந்ததைப் படித்ததும் இன்னும் வேதனையாக இருந்தது நம் சகஜனங்களை நினைத்து! இதுவும் மாறும்! முன்பைவிட சிறப்பாக உங்கள் வீட்டினர் மீண்டுவர வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்!

சசிகுமார் said...

ஒருவன் இருக்கும் வீடே அவனுக்கு கோவிலாக இருக்கும். அதனை இடிக்கும் பொழுது அனைவரும் பெருந்துயரத்திர்க்கு உள்ளாவார்கள் தான்.... அப்பாவுக்கு ஆறுதல் கூறுகள் பிரபா...

Unknown said...

வருந்தாதே மாப்ள..உங்க தாய் தந்தைக்கு உங்களின் நம்பிக்கை மிகுந்த முகம் தான் ஆறுதல். கவலைகளை நீக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்...இதுவும் கடந்து போகும்...மனிதன் சங்கடப்ப்படும்போது எள்ளி நகையாடுபவர்கள் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள். உன் நம்பிக்கையின் மேல் வாழ்கை இருக்கு...அதை உன்னோட எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கே முடிவு செய்கிறது...உன் மனம் அமைதி கொள்ள நான் பிரார்த்திக்கிறேன்!

Unknown said...

வருத்தமான செய்தி என்றாலும் நீங்கள் அதை எடுத்து கொண்ட விதம் ஆச்சர்யம்....பொதுமக்களின் பயனுக்காக என்றாலும் கோயிலை விட வீடு என்பது நாம் மிகவும் நேசிக்கும் இடம் அதை இழக்கும் வலி மிகமிக வேதனையானது......நானும் அந்த வலியுணர்நதவன் ஆறுதல்களால் தீரக்கூடியது அல்ல இந்த வலி....தாங்கிகொள்ளும் பக்குவம் உங்கள் குடும்பத்திக்கு விரைவில் வரும் அப்பொழுது
இதுவும் கடந்து போகும்

நாய் நக்ஸ் said...

Parba by mob.
So that...it happens....
:(

ராஜ் said...

பாஸ்,
Its not the end of life...நீங்க மட்டும் நம்பிக்கையை இழந்து விடாதேங்க......கண்டிப்பா இந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வருவீங்க....

உண்மைத்தமிழன் said...

உண்மையாகவே பொது நலனுக்காக ஒரு மாபெரும் இழப்பை சந்தித்திருக்கும் உங்களது குடும்பத்தினருக்கு எனது வீர வணக்கங்கள்..!

910 ரூபாய் என்பது மிகக் குறைவு. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்..! விரைவாகச் செயல்படுங்கள்..!

Riyas said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரபா..

இதுவும் கடந்து போகும் என்று இலகுவில் சொல்லிவிட முடியாது,

நம்பிக்கையோடிருங்கள்.

Unknown said...

படிக்கவே கஷ்டமா இருக்கு.

Anonymous said...

//இந்த லிஸ்டில் நம்ம பதிவர் அஞ்சாசிங்கமும் இருக்கிறார். மனிதர், அவருடைய அலுவலகம் அடித்து நொறுக்கப்படும்போது கூட ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் மாதிரி சிரித்தபடி இருந்தார். கூலர்ஸ் வேறு//

யோவ்..இந்த ரணகளத்துலயும் உனக்கு நக்கல் குறையலைய்யா!!

NKS.ஹாஜா மைதீன் said...

நலமா என்று என்னால் கேட்க முடியவில்லை...ஆனால் விரைவில் நல்லதே நடக்கும் ...என் அனுதாபத்தை சொல்லி உங்களை கஸ்டபடுத்த விரும்பவில்லை நண்பா..

Anonymous said...

பிரபா..அண்ணாச்சி சொன்ன பாய்ன்ட்டை நோட் பண்ணிக்க மாப்ள. செல்வினோட ஆலோசனை செஞ்சி கோர்ட்டை அப்ரோச் பண்ண முடியுமான்னு பாருப்பா!

Anonymous said...

மேதையவே பாத்தவங்க நம்ம. இதெல்லாம் தாண்டி I AM BACK ன்னு சொல்லிட்டு சீக்கிரம் வர்ற தைரியம் உன்கிட்ட இருக்குன்னு எனக்கு தெரியும். அதால நோ அனுதாபம் பார் யூ. அப்பா, அம்மா, தங்கை எல்லாரையும் பீல் பண்ண உடாத. நம்ம பாட்சா அஞ்சாசிங்கமும் இதுல இருந்து சீக்கிரம் மீண்டு வரணும்!

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் நெகிழ்ந்தது ! விடுங்க சார் ! இந்த நிலை மாறும் ! நன்றி !

Anonymous said...

எது போனால் என்ன பிரபா, உன்னிடம் இருக்கும் தன்னம்பிக்கை அத்தனையையும் மீட்டுக் கொடுக்கும். நீ வலையுலகில் சில காலம் வராமல் இருப்பேன் என்பது தான் வருத்தமளிக்கிறது.

கூடல் பாலா said...

கடவுள் தங்கள் குடும்பத்திற்கு ஆறுதலளிப்பாராக....

Philosophy Prabhakaran said...

@ ♔ம.தி.சுதா♔
// பருத்தித்துறை எனும் நகரப்பகுதியில் அகலிக்க வேண்டி வந்தால் ஒரு கடையின் அரைவாசிக்கு மேல் விடுபட வேண்டி வரும் என்ற கடைக்காரரின் எதிர்ப்பால் அந்தப் பகுதி மட்டும் அகட்டப்படாமல் இருக்கிறது.... //

இங்கே அந்தமாதிரி சொன்னா நைட்டோட நைட்டா அடிச்சு தூக்கிடுவாங்க...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி பிரகாஷ், நிரூபன், சில்க் சதிஷ், ilavarasan, கணேஷ், சசிகுமார்

நன்றி நண்பர்களே...

@ நிரூபன்
இங்கிருப்பவர்களில் பலருக்கே அதெல்லாம் தெரியாது நீங்கள் படித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// மனிதன் சங்கடப்ப்படும்போது எள்ளி நகையாடுபவர்கள் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள். //

சனங்கள நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க விக்கி...

உங்க அப்பா கடவுள் இல்லைன்னு சொன்னதால தான் அவருக்கு இப்படியெல்லாம் நடக்குதுன்னு இன்னமும் சிலர் சொல்வதுண்டு...

அப்படின்னா பக்தி பரவசமூட்டும் மளிகைக்கடை அண்ணாச்சிக்கும், கோவிலுக்கும், மசூதிக்கும் கடவுள் ஏன் தண்டனை தருகிறார் ஏன் புரியவில்லை...

Philosophy Prabhakaran said...

@ veedu
நன்றி சுரேஷ்...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Parba by mob.
So that...it happens....
:( //

இருக்கட்டும் நக்ஸ்... சும்மா தமாஷ்...

Philosophy Prabhakaran said...

@ ராஜ்
// பாஸ்,
Its not the end of life...நீங்க மட்டும் நம்பிக்கையை இழந்து விடாதேங்க......கண்டிப்பா இந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வருவீங்க.... //

நன்றி ராஜ்... வேறொரு தளத்தில் உங்கள் பின்னூட்டங்களை வெகுவாக ரசித்தேன்...

Philosophy Prabhakaran said...

@ உண்மைத்தமிழன்
// உண்மையாகவே பொது நலனுக்காக ஒரு மாபெரும் இழப்பை சந்தித்திருக்கும் உங்களது குடும்பத்தினருக்கு எனது வீர வணக்கங்கள்..! //

ஹே... ஹே... வேற வழி...

// 910 ரூபாய் என்பது மிகக் குறைவு. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்..! விரைவாகச் செயல்படுங்கள்..! //

அண்ணே... சட்டப்படி அரசாங்கம் மார்க்கெட் விலையில் 25% சதவிகிதம் தான் தருவார்களாம்... நீங்கள் குறிப்பிட்டுள்ள நிலைகளை ஏற்கனவே கடந்துவிட்டோம்...

Philosophy Prabhakaran said...

@ Riyas
// என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரபா..

இதுவும் கடந்து போகும் என்று இலகுவில் சொல்லிவிட முடியாது,

நம்பிக்கையோடிருங்கள். //

நன்றி ரியாஸ்...

Kite said...

உங்கள் பிரச்சனை வருத்தமளிக்கிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பு ஒரு சதுர அடிக்கு 3500 ரூபாய்.

http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp

மேலும் கட்டிடத்தின் வயதைப் பொறுத்து அதற்கும் நஷ்ட ஈடு கோரலாம். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். பொதுவாக இது
போன்ற வழக்குகளில் பொதுமக்களுக்கு சரியான இழப்பீடுகள் கிடைக்குமாறே நீதிமன்ற தீர்ப்புகள் அமைகின்றன.

Philosophy Prabhakaran said...

@ எம்.ஞானசேகரன் / Gnanasekaran.M
// படிக்கவே கஷ்டமா இருக்கு. //

நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// யோவ்..இந்த ரணகளத்துலயும் உனக்கு நக்கல் குறையலைய்யா!! //

இந்தியனாச்சே... அது இல்லைன்னா நாம செத்து போயிடுவோம்...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// நலமா என்று என்னால் கேட்க முடியவில்லை...ஆனால் விரைவில் நல்லதே நடக்கும் ...என் அனுதாபத்தை சொல்லி உங்களை கஸ்டபடுத்த விரும்பவில்லை நண்பா.. //

நன்றி மைதீன்...

Prem S said...

களிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு அதிக கவலைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பது உங்கள் மூலம் உண்மை ஆகி விட்டது.இதை எல்லாம் நீங்கள் ஊதி தள்ள வேண்டும் .மனம் தளராதீர்கள் அன்பரே

Prem S said...

//“ஹே... ஹே... பார்த்தீங்களா கோவில், மசூதியெல்லாம் இடிச்சிட்டாங்க... “சர்ச்சை” மட்டும் இடிக்கவில்லை... கர்த்தர் டீவிக்கிறார்...!” என்று சொல்லி ஆள்சேர்க்கப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.

//இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை அன்பரே!

தினேஷ்குமார் said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரபா ... தங்கள் நம்பிக்கையில் பலமிருக்கு பிரபா இதுவும் கடந்து போகும்

Jayadev Das said...

எங்க ஊர் வழியா ஆறுவழிச் சாலை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இடிக்கப் போவதாக நான்கு வருடங்களுக்கு முன்னரே சொல்லிட்டாங்க. இழப்பீடை கொடுத்து ஆறு மாதங்கள் டைம் கொடுத்துதான் இடிக்கச் சொன்னார்கள். ஏதோ திடீர்னு வந்து சொல்லாம கொள்ளாம இடிச்சாங்க என்று நீங்க சொல்வது ஆச்சரியமா இருக்கு. பெங்களூருவில் மெட்ரோ திட்டத்துக்கு கட்டிடங்கள் இடிக்கப் பட்ட போது மார்க்கெட் விலையே கொடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன். உங்களுக்கு ஏன் குறைத்தார்கள் என்று தெரியவில்லை. வழக்கு போட்டால் நிச்சயம் மறு பரிசீலனை செய்வார்கள். அடுத்ததாக நீங்கள் இப்போது வளர்ந்து ஆளாகி வேலைக்குச் செல்லும் நிலைக்கு வந்து விட்டீர்கள், உங்கள் பெற்றோரை நிச்சயம் உங்களால் காக்க முடியும். இனிமே நீங்க உழைக்க வேண்டாம், நான் பாத்துக்கறேன் என்று அவங்களுக்கு தைரியம் சொல்லுங்க மச்சி.

அன்புடன் அருண் said...

மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது..இந்த இழப்பு எளிதல்ல..ஓரிரு வார்த்தைகளில் ஆறுதல் சொல்ல..உங்கள் தெளிவான பார்வையும் நம்பிக்கையும் ஆச்சர்யம் தருகிறது.. இதையும் கடந்து நிச்சயம் வெளியே வருவீர்கள்..குடும்பத்தோடு! வாருங்கள்!

N.H. Narasimma Prasad said...

பதிவின் கடைசியில் நீங்கள் சொல்லியதைத்தான் நான் உங்களுக்கு சொல்கின்றேன். 'இதுவும் கடந்து போகும்' பிரபா...!