19 August 2013

ஆதலால் காதல் செய்வீர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆ.கா.செ பார்க்க வேண்டுமென்றே முன்னேற்பாடு ஏதுமில்லை. எஸ், மனிஷா யாதவ் அழகுதான். ஆனால் அவருக்காக எல்லாம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. நண்பர்கள் எழுதியதை வைத்துப் பார்க்கும்போது படம் சராசரிக்கு மேலே ரகம் என்று தோன்றியது. நேரமும் சரியாக அமைந்ததால் பார்க்க முடிவெடுத்தேன். ஒரு படத்தை விமர்சனங்கள் தெரிந்துக்கொள்ளாமல் பார்ப்பதற்கும்,  தெரிந்துக்கொண்டபின் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆ.கா.செ.வை பொறுத்தவரையில் கதை என்ன ? எந்த காட்சியில் இடைவேளை போடுவார்கள் ? எப்போது எண்ட் கார்ட் போடுவார்கள் ? என்கிற வரைக்கும் ஏற்கனவே இணையத்தில் எழுதி வைத்திருப்பதால் படம் பார்ப்பதற்கு முன்பு பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை.

ஆதலால் காதல் செய்வீர் – என்கிற தலைப்பை ஏன் தேர்வு செய்திருப்பார்கள் ? படத்திற்கு முதலில் ஆதலினால் காதல் செய்வீர் என்று பெயர் சூட்டியிருந்ததாக ஞாபகம். சுஜாதா நாவலின் தலைப்பு. ஒருவேளை ஏதேனும் காப்பிரைட் பிரச்சனை வந்ததோ என்னவோ ? ஆனால், கதைப்படி சுஜாதாவின் தீண்டும் இன்பம் நாவலை நினைவூட்டுகிறது. தலைப்பிற்கான காரணம் குறித்த என்னுடைய எண்ணத்தை கடைசியில் சொல்கிறேன்.

முதல் பத்தியில் குறிப்பிட்ட வரிகளை நினைவு கூர்ந்து கதைச் சுருக்கத்தை எழுதி நேர விரயம் செய்வதை தவிர்க்கிறேன். ஹீரோவாக சந்தோஷ் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார், யாரோ தயாரிப்பாளரின் வாரிசு என்று அறிந்துக்கொள்ள முடிகிறது. ஹீரோ சுமார் மூஞ்சி என்று சொன்னால் அது சுய-எள்ளல் ஆகிவிடும் பாயம் இருந்தாலும் கூட அதுதான் உண்மை ! மனிஷாவுக்கு வழக்கு எண் படத்தில் நடித்த அதே நடுத்தர வர்க்க மாணவி வேடம். இப்போது கல்லூரிக்கு செல்கிறார். மனிஷா எப்போது தொப்புள் தெரிகிறபடி உடையணிந்து ஃபோல்க் டான்செல்லாம் ஆடப்போகிறார் என்று தெரியவில்லை. காத்திருப்போம்.

ஜெயப்பிரகாஷ் என்கிற குணச்சித்திர நடிகர், பிரமாதமாக நடிக்கக்கூடியவர். ஆ.கா.செவில் அவருடைய நடிப்பை புறந்தள்ளி அவருடைய மனைவி வேடத்தில் நடித்திருப்பவர் முந்தியிருக்கிறார். ஹீரோவுடைய நண்பராக வரும் அர்ஜுனனும், ஹீரோயினின் தோழியாக வரும் அர்ச்சனாவும் கவனிக்க வைத்திருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு அவருடைய இயல்பே கதாபாத்திரமாக அமைந்துவிட்டது போல அனாயசமாக அசத்தியிருக்கிறார். இவர்கள் எல்லோரை விடவும் கடைசி காட்சியில் தோன்றிய அந்த குழந்தை – பாசாங்கில்லாத நடிப்பு. உண்மையில் அது நடிப்பு அல்ல. குழந்தையின் இயல்பாக செயல்களை படம் பிடித்திருக்கக்கூடும். குழந்தை தான் படத்தின் உண்மையான ஹீரோ !

கதையின் கருவாக எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் நல்லது. ஆனால், பொழுதுபோக்கு ரீதியாக பார்க்கும்போது வெறுமையாக தோன்றுகிறது. சரி, ஒரு கலைப்படைப்பாக பயணிக்கிறதா என்றால் அதுவுமில்லை. குறைந்தபட்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருக்கலாம். உச்சக்கட்ட காட்சியில் குழந்தையை காட்டும்போது மனம் பதறுகிறது என்றாலும், ஹீரோ ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்முள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த மறுக்கிறது. பாடல்கள் மிகவும் சுமார் ரகம். ஒரு பாடலில் உதித் நாராயனையெல்லாம் கூட்டி வந்து அலற விட்டிருக்கிறார்கள். பாடல் வரிகள் அர்த்தமுடன் கூடியதாக இருப்பது மட்டும் ஆறுதல்.

ஆ.கா.செ. பெற்றோர்களுக்கான பாடம், ஆணாதைக் குழந்தைகள் கான்செப்ட் பற்றியெல்லாம் பேசினால் கூட இளைஞர்களுடைய நடைமுறை வாழ்வியலுக்கான படிப்பினைகள் நிறைய இருப்பதாக உணர்கிறேன், அதுவும் வெவ்வேறு படிநிலைகளில் :-

        - இளைஞர்கள், மாணவர்கள் தங்களுடைய இணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.
        - அவ்வாறு, அவசரப்பட்டு விடும் இளைஞர்கள் உடல்ரீதியான உறவில் எல்லை மீறக்கூடாது.
        - அவ்வாறு, எல்லை மீறும் பட்சத்தில் ஆணுறை அல்லது தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.
        - அவ்வாறு, கையாளவில்லை என்றால் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு மருத்துவ ஆலோசனை பெற்று மாத்திரைகளின் உதவியோடு கருவினை கலைக்கலாம்.
        - அவ்வாறு, கலைக்காத சூழ்நிலையில் முறையான கருகலைப்பு முறையை நாடலாம். ஆனால் முன்பே திட்டமிட்டு திருமணமாகாதவர் என்பது வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
        - அவ்வாறு, செய்துக்கொள்ள முடியவில்லை என்றால் பெற்றோரிடம் சரணாகதி அடைந்து திருமணம் செய்துவைக்க வாதிடலாம்.
        - அவ்வாறு பேசி அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ரெஜிஸ்டர் திருமணம் செய்யலாம் அல்லது கோர்ட்டு / போலீஸ் உதவியை நாடலாம்.
        - எல்லாவற்றிற்கும் மேலாக காதலில் ஈடுபடுவோர் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்துக்கொண்டு, தக்க சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுத்து காதலை விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும்.

மொத்தத்தில் ஆதலால் காதல் செய்வீர் வளர் இளம் பருவத்தினருக்கான திரைப்படம் என்று சர்வநிச்சயமாக சொல்லலாம்.

தலைப்பு விஷயத்திற்கு வருவோம். படத்தில் இருவர் காதல் செய்வதாக சொல்கிறார்கள். ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள், படுக்கையில் புரளுகிறார்கள், உறவு கொள்கிறார்கள். பெண் கருவுருகிறாள். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். ஆக, அவர்கள் ஒருவரையொருவர் உண்மையாக காதலிக்கவில்லை. ஆதலால் காதல் செய்வீர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

Ponmahes said...

பேசாம "காதலினால் நாசமா போவீர்" ன்னு.... title வச்சுருக்கலாம்...

//அது சுய-எள்ளல் ஆகிவிடும் ஆபாயம் ??? அபாயம் தானே..

பதிவும் படம் மாதிரியே இருக்கு .. நான் சொன்னது புரிஞ்சிருக்கும் ன்னு நினைக்கிறேன்....

தென்னவன் said...

boss hero ungala madhri irukiraru.!!!!!

Philosophy Prabhakaran said...

அது எழுத்துப்பிழை அல்ல பொன் மகேஸ்... தமிழில் விகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லி சமாளிக்க முடியாத துர்பாக்கிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்... பிழை திருத்தியமைக்கு நன்றி...

அரசன் சே said...

வணக்கம் தலீவா ///

பாய்ண்ட்ஸ் அட்டகாசம் ...

Anonymous said...

ஒரு நல்ல கதையை சிதைத்து விட்டார்கள் போலும், உணர்வுப் பூர்வமாய் எடுத்திருக்கலாம், மலையாளத்து இயக்குநர்களிடம் கொடுத்திருந்தால் தேவலை.

ananthu said...

படத்தின் தலைப்பிற்கான விளக்கம் அருமை . விமர்சனம் என்ற பெயரில் படத்தை பற்றி முழுவதுமாக அலசியதை நீங்கள் முன்பே படித்து விட்டதால் படம் உங்களை பெரிதாக கவரவில்லை என்று நினைக்கிறேன் . ஆனால் அதே தவறை நீங்களும் செய்தது போல தெரிகிறது ...

அன்புடன் அனந்து ...

சே. குமார் said...

விமர்சனம் அருமை...
படம் இன்னும் பார்க்கவில்லை.. பார்க்கணும்...

கோவை நேரம் said...

படத்தோட ஹீரோ உங்க தம்பியா....உங்கள மாதிரியே இருக்காப்புல...

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Ayurveda Schweiz
Ayurveda Suisse
Ayurveda.ch
Diät Küche Berner Oberland
Fisch Küche Brienz
Indische Küche Interlaken
Seehotel Bären Brienz
Boutique Ganesha
Wohlfühltag Schweiz
Seeterrasse Berner Oberland
Kinderspielplatz Interlaken