12 June 2016

பெங்களூரு தினங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு. புது ஊர், புது மாநிலம், புது வேலை, புது மனிதர்கள். ஒரு பக்கம் பதட்டமாகவும், மறுபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்துவிடும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே என்கிற நம்பிக்கையில் தான் பெங்களூருக்கு சென்றிருக்கிறேன்.

பெங்களூரில் நான் தங்கப்போகிற இடத்தின் பெயர் மடிவாளா என்று முகவரி கொடுத்திருந்தார்கள். லேண்ட்மார்க் சந்தியா டிஜிட்டல் தியேட்டர் அருகில். முதலில் ஏனோ எனக்கு இது சினிமா தியேட்டர் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாத டாக்ஸி டிரைவரிடம் ஜிப்ரிஷில் வழி சொல்லி சந்தியா தியேட்டர் வாசலில் வந்து இறங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் சினிமா தியேட்டர் :) அதுவும் காஜல் அகர்வால் படம் (பிரம்மோத்சவம்). ஆனால் இதனை நினைத்து நினைத்து அகமகிழும் மனநிலை அப்போது இல்லை. 

இளைப்பாறிவிட்டு அருகிலிருக்கும் நண்பன் வீட்டைத் தேடியபடி பெங்களூரு தெருக்களில் ஒரு சுற்று வந்தேன். எங்கு பார்த்தாலும் PG for Gents, PG for ladies என்று போர்டுகள் தொங்குகின்றன. முதலில் எனக்கு PGயின் விரிவாக்கம் என்னவென்று தெரியவில்லை. நண்பனிடம் கேட்டு Paying Guest என்று தெரிந்துக்கொண்டேன். ‘மெய்ன் ஹூன் நா’ படத்தில் ஷாருக் தனது கல்லூரி நண்பர் / தம்பி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குவார். அதாவது பெயருக்கேற்ப அந்த வீட்டில் நம்மை ஒரு விருந்தினர் போல கவனித்துக் கொள்வார்கள். ஆனால் தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டும் பணம் கொடுத்துவிட வேண்டும். இது சினிமா :) மெய்ன் ஹூன் நா PGக்கும் பெங்களூரு நிஜ PGகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இது கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் செட்டப். கொஞ்சம் சுதந்திரமான ஹாஸ்டல். 

PG போர்டுகளுக்கு அடுத்த படியாக அதிகம் தொங்குவது அகலக்கற்றை சேவை விளம்பரங்கள். இதில் பெங்களூருவாசிகளுக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. இவை தவிர்த்து, ஹேர் லாஸ், வெயிட் லாஸ், யோகா கிளாஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஆசாமிகளுக்கான சேவைகள் குறித்த விளம்பரங்கள். இந்த விளம்பரத்தட்டிகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன.

ஒன்று, இது வந்தேறிகளின் நகரம். இரண்டாவது, இந்த வந்தேறிகள் பெரும்பாலும் ஐ.டி துறையினர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக சில சமயங்களில் யோசிப்பதுண்டு. பெங்களூரை பார்க்கும்போது அப்படி யோசிப்பதே மகாபாவம் என்று தோன்றுகிறது. இங்கே அலுவலகத்தில் கன்னடர்களை தேட வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

நண்பன் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் கூகுள் மேப்ஸ் திணறியது. தொலைக்காட்சி நாடகமொன்றில் எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் கே.கே.நகரை தேடியலைவார்கள். கடைசியில் தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் பொங்கலுக்கு செல்வார்கள். நான் முதன்முதலில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அண்ணா நகர் நிறுவன முகவரியை கையில் வைத்துக்கொண்டு ஏறத்தாழ மொத்த ஏரியாவையும் சுற்றிவிட்டேன். யாரைக் கேட்டாலும் ‘எந்த ப்ளாக் ?’ என்று கேட்கிறார்கள். எனக்கென்ன தெரியும். என்னிடமுள்ள முகவரியில் ப்ளாக் எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட மதியம் வரை தேடியபின் முகவரியில் டோர் நம்பர் S51 என்று இருப்பதை கவனித்து, எஸ் ப்ளாக்கை தேடி கண்டடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையில் நான் அண்ணா நகருக்கே செல்வதில்லை என்று சபதம் ஏற்றுக்கொண்டேன். டிவியில் அண்ணா நகர் முதல் தெரு போட்டால் கூட பார்க்கமாட்டேன். பெங்களூரை பொறுத்தவரையில் எல்லா ஏரியாவும் அண்ணா நகர் தான். 4th க்ராஸ், 2nd மெயின் என்று தாலியருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மேப்பில் பார்க்கும்போது தெருக்கள் எல்லாம் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேர்த்தியாக இருக்கின்றன.

பெங்களூரில் முதல் தினம், நண்பரின் தயவால் அவருடைய இல்லத்தில் தரமான அசைவ உணவுடன் சிறப்பாக கழிந்தது. பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும். அடேயப்பா, நான் எப்பர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் தெரியுமா ? நானெல்லாம் வாரத்தில் எட்டு நாட்கள் (முட்டையை கணக்கிடாமல்) அசைவம் சாப்பிடுபவன் அய்யா. வேறு வழியில்லாமல், அந்த சிக்கன் மசாலா தண்ணீரை சோற்றில் குழைத்து முதல் வாய் வைக்கும்போது என் மாமியார் சமைக்கும் அற்புதமான இறால் பிரியாணியை நினைத்துக்கொண்டேன்.

இந்த துக்கங்களுக்கு மத்தியில் தனிமையும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது. தனிமை இனிமையானது, அது நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்கும்போது மட்டும். என் வாழ்வில் பல உன்னதமான தருணங்களை தனிமை எனக்கு கொடுத்திருக்கிறது. (சுய இன்பத்தை பற்றி சொல்லவில்லை). அதே தனிமைதான், இப்போது என்னை வதைக்கிறது. இயல்பில், நான் ஹோம்சிக்கெல்லாம் கிடையாது. நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறேன். ஆனால் இப்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த காதல், கல்யாணம், மனைவி, குழந்தை போன்ற லெளகீக விஷயங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். குறிப்பாக நிலாவைப் பற்றி நினைக்கும்போது கண்ணீர் துளிர்த்துவிடும் போல இருந்தது. நிற்க. இத்தனைக்கும் என் பெங்களூர் வாசம் நிரந்தரமில்லை. பெங்களூருக்கும் சென்னைக்கும் ஆறுமணிநேர பயணம். எல்லா வாரயிறுதிகளிலும் சென்னைக்கு வந்துவிடப் போகிறேன். இப்படியெல்லாம் தீர்க்கமான மனநிலையில் இருக்கும் எனக்கே இப்படி இருக்கிறதென்றால் எங்கேயோ அமீரகத்திலோ, மலேசியா, சிங்கப்பூரிலோ எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது இந்தியாவுக்கு திரும்புவோம் என்பதே தெரியாமல் மெளனமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும் ? மனதை திடப்படுத்திக்கொண்டு பெங்களூர் தினங்களின் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் அனைவரையும் மானசீகமாக நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

வருண் said...

***பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும்.***

அதெல்லாம் பண்ணியிருக்காது..உம்மை கொலை பண்ணியிருக்கும்னுதான் எனக்குத்தோணுது.

என்ன பிளாசஃபி..ஏதோ ஆஃப்ரிக்காவில் ஒரு சின்ன கிராமத்துல போயி கஷ்டப்பட்டமாதிரி, ஹோம்ம் சிக், சிக்கன் குழம்பைப் பார்த்தால் சிக்கன் தற்கொலை பண்ணியிருக்கும்னு ஒரே எழவாயிருக்கு.. வயதாக ஆகத்தான் எழுத்தில் சுவாரஸ்யம் குறையும்னு சொல்லுவாங்க.. உங்களுக்கு அதுக்குள்ள இந்த நிலைமையா? :(

N.H. Narasimma Prasad said...

பொதுவாகவே வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் முதல் இரண்டு வருட பிரிவு மட்டும் தான் கொஞ்சம் அதிகமான வலியாகத் தோன்றும். ஆனால் காலப்போக்கில் மனைவி, குழந்தை, மாமியார் மருமகள் சண்டை, ஹிந்தி டப்பிங் சீரியல்களின் தொல்லை, Cost of Living போன்றவற்றை ஒப்பிடும்போது 'நாம இங்க இருக்குறது தான் நல்லது' என்ற எண்ணம், தானாகவே நம் மனதில் மேலோங்க ஆரம்பித்துவிடும். இது ஒரு வகையில் என் அனுபவமும் கூட. மெட்ரோ சிட்டியான பெங்களூருக்கே நீங்க இப்படி சொல்றீங்க, நான் ஆப்ரிக்கா கண்டத்துல இருக்குற புருண்டி என்கிற அடையாளம் தெரியாத நாட்ல மூன்று வருஷத்துக்கும் மேல வாழுறேனே, அதை என்னன்னு சொல்லுவீங்க?