Showing posts with label theatre. Show all posts
Showing posts with label theatre. Show all posts

12 June 2016

பெங்களூரு தினங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு. புது ஊர், புது மாநிலம், புது வேலை, புது மனிதர்கள். ஒரு பக்கம் பதட்டமாகவும், மறுபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்துவிடும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே என்கிற நம்பிக்கையில் தான் பெங்களூருக்கு சென்றிருக்கிறேன்.

பெங்களூரில் நான் தங்கப்போகிற இடத்தின் பெயர் மடிவாளா என்று முகவரி கொடுத்திருந்தார்கள். லேண்ட்மார்க் சந்தியா டிஜிட்டல் தியேட்டர் அருகில். முதலில் ஏனோ எனக்கு இது சினிமா தியேட்டர் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாத டாக்ஸி டிரைவரிடம் ஜிப்ரிஷில் வழி சொல்லி சந்தியா தியேட்டர் வாசலில் வந்து இறங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் சினிமா தியேட்டர் :) அதுவும் காஜல் அகர்வால் படம் (பிரம்மோத்சவம்). ஆனால் இதனை நினைத்து நினைத்து அகமகிழும் மனநிலை அப்போது இல்லை. 

இளைப்பாறிவிட்டு அருகிலிருக்கும் நண்பன் வீட்டைத் தேடியபடி பெங்களூரு தெருக்களில் ஒரு சுற்று வந்தேன். எங்கு பார்த்தாலும் PG for Gents, PG for ladies என்று போர்டுகள் தொங்குகின்றன. முதலில் எனக்கு PGயின் விரிவாக்கம் என்னவென்று தெரியவில்லை. நண்பனிடம் கேட்டு Paying Guest என்று தெரிந்துக்கொண்டேன். ‘மெய்ன் ஹூன் நா’ படத்தில் ஷாருக் தனது கல்லூரி நண்பர் / தம்பி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குவார். அதாவது பெயருக்கேற்ப அந்த வீட்டில் நம்மை ஒரு விருந்தினர் போல கவனித்துக் கொள்வார்கள். ஆனால் தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டும் பணம் கொடுத்துவிட வேண்டும். இது சினிமா :) மெய்ன் ஹூன் நா PGக்கும் பெங்களூரு நிஜ PGகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இது கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் செட்டப். கொஞ்சம் சுதந்திரமான ஹாஸ்டல். 

PG போர்டுகளுக்கு அடுத்த படியாக அதிகம் தொங்குவது அகலக்கற்றை சேவை விளம்பரங்கள். இதில் பெங்களூருவாசிகளுக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. இவை தவிர்த்து, ஹேர் லாஸ், வெயிட் லாஸ், யோகா கிளாஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஆசாமிகளுக்கான சேவைகள் குறித்த விளம்பரங்கள். இந்த விளம்பரத்தட்டிகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன.

ஒன்று, இது வந்தேறிகளின் நகரம். இரண்டாவது, இந்த வந்தேறிகள் பெரும்பாலும் ஐ.டி துறையினர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக சில சமயங்களில் யோசிப்பதுண்டு. பெங்களூரை பார்க்கும்போது அப்படி யோசிப்பதே மகாபாவம் என்று தோன்றுகிறது. இங்கே அலுவலகத்தில் கன்னடர்களை தேட வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

நண்பன் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் கூகுள் மேப்ஸ் திணறியது. தொலைக்காட்சி நாடகமொன்றில் எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் கே.கே.நகரை தேடியலைவார்கள். கடைசியில் தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் பொங்கலுக்கு செல்வார்கள். நான் முதன்முதலில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அண்ணா நகர் நிறுவன முகவரியை கையில் வைத்துக்கொண்டு ஏறத்தாழ மொத்த ஏரியாவையும் சுற்றிவிட்டேன். யாரைக் கேட்டாலும் ‘எந்த ப்ளாக் ?’ என்று கேட்கிறார்கள். எனக்கென்ன தெரியும். என்னிடமுள்ள முகவரியில் ப்ளாக் எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட மதியம் வரை தேடியபின் முகவரியில் டோர் நம்பர் S51 என்று இருப்பதை கவனித்து, எஸ் ப்ளாக்கை தேடி கண்டடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையில் நான் அண்ணா நகருக்கே செல்வதில்லை என்று சபதம் ஏற்றுக்கொண்டேன். டிவியில் அண்ணா நகர் முதல் தெரு போட்டால் கூட பார்க்கமாட்டேன். பெங்களூரை பொறுத்தவரையில் எல்லா ஏரியாவும் அண்ணா நகர் தான். 4th க்ராஸ், 2nd மெயின் என்று தாலியருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மேப்பில் பார்க்கும்போது தெருக்கள் எல்லாம் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேர்த்தியாக இருக்கின்றன.

பெங்களூரில் முதல் தினம், நண்பரின் தயவால் அவருடைய இல்லத்தில் தரமான அசைவ உணவுடன் சிறப்பாக கழிந்தது. பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும். அடேயப்பா, நான் எப்பர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் தெரியுமா ? நானெல்லாம் வாரத்தில் எட்டு நாட்கள் (முட்டையை கணக்கிடாமல்) அசைவம் சாப்பிடுபவன் அய்யா. வேறு வழியில்லாமல், அந்த சிக்கன் மசாலா தண்ணீரை சோற்றில் குழைத்து முதல் வாய் வைக்கும்போது என் மாமியார் சமைக்கும் அற்புதமான இறால் பிரியாணியை நினைத்துக்கொண்டேன்.

இந்த துக்கங்களுக்கு மத்தியில் தனிமையும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது. தனிமை இனிமையானது, அது நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்கும்போது மட்டும். என் வாழ்வில் பல உன்னதமான தருணங்களை தனிமை எனக்கு கொடுத்திருக்கிறது. (சுய இன்பத்தை பற்றி சொல்லவில்லை). அதே தனிமைதான், இப்போது என்னை வதைக்கிறது. இயல்பில், நான் ஹோம்சிக்கெல்லாம் கிடையாது. நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறேன். ஆனால் இப்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த காதல், கல்யாணம், மனைவி, குழந்தை போன்ற லெளகீக விஷயங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். குறிப்பாக நிலாவைப் பற்றி நினைக்கும்போது கண்ணீர் துளிர்த்துவிடும் போல இருந்தது. நிற்க. இத்தனைக்கும் என் பெங்களூர் வாசம் நிரந்தரமில்லை. பெங்களூருக்கும் சென்னைக்கும் ஆறுமணிநேர பயணம். எல்லா வாரயிறுதிகளிலும் சென்னைக்கு வந்துவிடப் போகிறேன். இப்படியெல்லாம் தீர்க்கமான மனநிலையில் இருக்கும் எனக்கே இப்படி இருக்கிறதென்றால் எங்கேயோ அமீரகத்திலோ, மலேசியா, சிங்கப்பூரிலோ எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது இந்தியாவுக்கு திரும்புவோம் என்பதே தெரியாமல் மெளனமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும் ? மனதை திடப்படுத்திக்கொண்டு பெங்களூர் தினங்களின் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் அனைவரையும் மானசீகமாக நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 23122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிசம்பர் பத்து தொடங்கி ஒரு வாரத்திற்கு இணையம் வேலை செய்யவில்லை. BSNL அலுவலகத்தை அழைத்தால் சம்பந்தப்பட்ட லைன்மேன் ஊருக்கு போயிருப்பதாகவும் (அதுவும் எங்கே...? சாத்தூருக்கு...!) திரும்பிவர மூன்று நாட்களாகும் என்றும் பதில் வந்தது. ஒருவழியாக அவர் திரும்பி வந்து இணைய கோளாறை சரி செய்துக் கொடுத்த நேரம் புனே பயணத்திற்கு கிளம்ப வேண்டியதாக ஆயிற்று.

இணையம் வேலை செய்யாதது கூட ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்டது. பாரதியார், தலைவர் பிறந்தநாள் தொடர்பான ஜல்லிகளை தவிர்த்தாயிற்று. வருடா வருடம் நடைபெறுகிற கூத்துதான். ஒன்று, பாரதியார் பிறந்தநாளை மறந்துவிட்டு தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூப்பாடு போடும் கூட்டம். இரண்டு, பாரதியார், தலைவர் என இருபெரும் சகாப்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததை எண்ணி சிலாகிக்கும் கூட்டம். மூன்று, உண்மையில் பாரதியின் பால் ஈடுபாடு இல்லையென்றாலும் முதல் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க வேண்டி, பாரதிக்கு ஒரு சம்பிரதாய வாழ்த்து சொல்லிவிட்டு தலைவர் பிறந்தநாள் கும்மியடிப்பவர்கள். அப்புறம், வழக்கம்போல தலைவர் சமூகத்துக்காக என்ன செஞ்சு கிழிச்சாரு’ன்னு ஒரு குரூப் கேட்கும். அதுக்கு நடிகரிடம் ஏன் சமூக அக்கறையை எதிர்பார்க்குறீங்க’ன்னு தலைவரின் அடிபொடிகள் கேட்கும். இதுல பியூட்டி என்னன்னா – மத்த லொட்டு லொசுக்கு நடிகர்களிடமெல்லாம் எதிர்பார்க்காத சமூக அக்கறையை ஏன் தலைவரிடம் மட்டும் எதிர்பார்க்கிறார்கள்...? என்ற கேள்விக்கு அவருடைய ரசிகர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறென்ன செய்வது...? திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கிட்டு இருந்துதானே ஆகணும்...!

ஒரு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு ஆறு நாட்கள் புனே பயணம். மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. ஆட்டோக்களில் எல்லாம் பயங்கர சின்சியராக மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அதுவும் எப்படி என்றால் மீட்டரில் ஐம்பத்தி நான்கு ரூபாய் காட்டினால் கர்ம சிரத்தையுடன் மீதி ஆறு ரூபாய் சில்லறை தேடித் தருகிறார்கள். அதேபோல மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. பெருநகரம் இல்லை என்பதாலோ என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது. போகிறபோக்கில் யாருடைய வாகனத்தையாவது தட்டிவிட்டு போனால் ஒரு மன்னிப்பு கூட கேட்பதில்லை. வள்ளுவரின் வாக்குப்படி கண்டபடி துப்பார்க்கு துப்பாய துப்பி வைக்கிறார்கள். துப்புவதில் படித்தவர் / படிக்காதவர், பாலின பேதமெல்லாம் கிடையாது. நிறைய மல்டிப்ளக்ஸ்கள் உள்ளன. ஆனாலும் சினிமாப்பட போஸ்டர்களை பார்க்க முடிவதில்லை. 

வந்ததுக்கு ஏதாவதொரு லோக்கல் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்றால் எங்கு பார்த்தாலும் சன்னி லியோனின் ஜாக்பாட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நஷா’ கண்ட வரலாறு நமக்கிருந்தாலும் போனது உறவினர் வீட்டுக்கு என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாக போய்விட்டது. வெள்ளி வரை காத்திருந்து அப்சரா சினிமாஸில் தூம் 3 பார்த்தேன். பக்கா லோக்கல் தியேட்டர். ஹிந்தியில் டிக்கெட் விலை எழுதியிருந்ததை பார்த்துவிட்டு ஒரு நைண்டி ருபீஸ் டிக்கெட் என்று நூறு ரூபாயை நீட்டினேன். டிக்கெட்டுடன் மீதி ஐம்பது ரூபாய் கிடைத்தது. என்னடா இது என்று பார்த்தால் ஹிந்தியில் ஐம்பதைத் தான் தொண்ணூறு போல எழுதுகிறார்கள். அரங்கில் படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் போடுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் எந்தவித கிண்டலோ கேலியோ இல்லாமல் அனைவரும் எழுந்து அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷம் எழுப்பிவிட்டு சமத்தாக அமர்ந்துக்கொண்டார்கள். தூம் 3யில் தம், தண்ணி காட்சிகள் இல்லாததால் முகேஷ் ஹரானே செய்திப்படம் காட்டவில்லை.

ஏற்கனவே தூம் வரிசை படங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்ததால் படம் எப்படியிருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பிற்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் அமீர் கான் மூன்று காட்சிகளிலும் அபிஷேக் ஒரு காட்சியிலும் முறையே பைக், ஆட்டோ வைத்து கொரளி வித்தை காட்டுகிறார்கள். அமீருடன் ஒப்பிடும்போது அபிஷேக் வேடம் மிகவும் டம்மி போல தெரிகிறது. கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! இருந்தாலும் பிபாஷா பிசாசு இல்லாதது வருத்தம் தான். ஓரளவுக்கு உடல்மொழியை வைத்து ஹிந்தி வசனங்களை புரிந்துக்கொண்டாலும், உதய் சோப்ரா அடித்த சோக்குகள் எதுவும் புரியவில்லை. சும்மா ஹிந்திக்காரர்களுடன் சேர்ந்து கடமைக்கு சிரித்து வைத்தேன். படம் முடிந்து வெளிவந்தபோது அடுத்த காட்சிக்கு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. படம் சூப்பர்ஹிட் போல.

பயண நேரத்தில் படிப்பதற்கென சுதாகரின் 6174 எடுத்துச் சென்றிருந்தேன். நாவலை வெறுமனே படிக்க முடியவில்லை. படிக்கும்போதே குறைந்தபட்சம் ஐம்பது விஷயங்களையாவது கூகுள் செய்யவேண்டும் போலிருக்கிறது. சில விஷயங்களை உள்வாங்கும்பொருட்டு மறுமுறை படிக்க வேண்டும். படித்துவிட்டு அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம். 6174 படித்துவிட்டு தோழர் சிங்கம் என்னிடம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி நாவல் குறித்த ப்ளாட் சொன்னார். என்னுடைய நேரம், நான் அப்போது 6174 படித்திருக்கவில்லை. படித்தபின்பு சிங்கம் சொன்ன கதையும் 6174 கதையும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியாக இருந்தது. ஒருவேளை சிங்கம் அக்கதையை நாவலாக்கினால் அது 6174-ன் காப்பியாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவருடையது 6174-ஐ விட அட்டகாசமான கதை. அடுத்தடுத்த ஸ்டோரி டிஸ்கஷன் சிட்டிங்குகளில் கலந்துக்கொண்டு அக்கதையை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 07102013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்க்கச்சொல்லி சிங்கம் வற்புறுத்தியது. பதிவுலகம் என்பது சற்றே விந்தையானது. இங்கே ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஏறத்தாழ எல்லோருக்குமே ஒரு திரைப்படம் பிடிப்பது அபூர்வ நிகழ்வு. அந்த வகையில் ஓ.ஆ.வை தவறவிட விரும்பவில்லை. கூடவே சிங்கத்தையும் அழைத்துக்கொண்டேன். ஒன்றுமில்லை, ஏதேனும் குறியீடுகள் தென்பட்டால் எடுத்துக்கொடுப்பார் அதற்குத்தான். ஆரூர் மூனாவையும் அழைத்தோம். சாய் சாந்தி திரையரங்கம். ஒரு புறம் சிங்கம், மறுபுறம் ஆரூர் மூனா, இடையில் அடியேன்.

சத்யம் திரையரங்கில் சிறுநீர் கழிக்கும்போது நமக்கு முன்பாக ஒரு டிஜிட்டல் போர்டு இருப்பதை பார்த்திருக்கலாம். அதில் இதுவரைக்கும் எதுவும் படம் காட்டி பார்த்ததில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் விளம்பரங்கள் காட்டவேண்டி வடிவமைத்திருக்கலாம். ஆனால் சாய் சாந்தியிலே இப்பொழுதே விளம்பரங்கள் பார்க்கலாம். டிஜிட்டலில் இல்லை. ஐட்டம், மாமா போன்ற குறியீடுகளுடன் பத்து இலக்க எண்கள் கிறுக்கப்பட்டுள்ளன. ஆரூர் மூனா நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு நேரே சுவற்றில் “குதி” என்று எழுதியிருந்ததை நல்லவேளையாக அவர் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் குதித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

படம் முடிந்து வெளியேறும்போது நிசப்தம். பார்க்கிங்கில் வந்து அவரவர் வண்டிகளை கிளப்பும் வரைக்கும் யாரும் பேசிக்கொள்ளவில்லை. வண்டியை முறுக்கிவிட்டு “எங்கே ?” என்றபடி மெளனத்தை கலைத்தார் ஆரூர் மூனா ! “எக்மோர்” என்றது சிங்கம். சென்னையில் பிரசித்தி பெற்ற அரசாங்க மதுக்கூடம் அது. “தெரிலையே மச்சி... ஒரு குவாட்டர் சொல்லேன்...!” காட்சி படமாக்கப்பட்ட மதுக்கூடம். “படம் ஒன்னும் அவ்வளவு சூப்பரால்லாம் இல்ல பாஸு...!” என்று ஆரம்பித்தேன். வெகு நாட்களாக அனைவரையும் “ஜீ” என்று விளித்து சலிப்படைந்திருந்தமையால் பாஸுக்கு மாறியிருக்கிறேன். ஆரூர் மூனா தான் விளக்கினார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு குறுக்கெழுத்து புதிரை போன்றது. நிரப்பியவர்களுக்கு பிடிக்கிறது என்றார். அப்படியெனில் எனக்கு நிரப்பத் தெரியவில்லை என்பதை என்னால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி விவாதிக்க நிறைய இருந்தாலும் கூட அதை நான் விரும்பாததால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அக்டோபர் மாத அந்திமழை இதழ் சமூக ஊடகங்களில் செயல்படும் புதிய மற்றும் திறமையான இளைஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களில் அடியேனும் ஒருவன். உடன் கோவை நேரம் ஜீவா, கார்க்கி, தோட்டா, சோனியா, டிமிட்ரி ஆகியோரைப் பற்றிய பத்திகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அதிஷாவிற்கும் அந்திமழை நிர்வாக ஆசிரியர் அசோகன் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஆகாயச்சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் என்றொரு பாடல் கேட்கக் கேட்க பிடிக்கக்கூடியது. பாடலுக்கு இடையே ஆண்குரல் இப்படி பாடுகிறது – என்னைக் கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ? டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே ! அதென்ன டோரா போரா மலைகள் ? புதிதாக ஏதேனும் ஒன்றைக் கேள்விப்பட்டதும் அதனை கூகிளிடுவது தானே ஒலகவழக்கம். செய்தேன். டோரா போரா (Tora Bora) என்பது ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு மலைக்குகை. செப்டம்பர் 11 சம்பவத்தின் காரணமாக அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்த போது தாலிபான், அல்-காயிதாவிற்கு டோரா போரா நல்லதொரு மறைவிடமாக அமைந்திருந்தது. குறிப்பாக ஒசாமா இங்கே தான் மறைந்திருந்ததாக நம்பப்படுகிறது. ஆகாயச்சூரியன் பாடலை எழுதியவர் வைரமுத்து. இரட்டை கோபுரம் தாக்குதல் நிகழ்ந்த வருடம் 2001. சாமுராய் வெளிவந்தது ஜூலை 12, 2002. வைரமுத்து ரொம்ப ஃபாஸ்ட் !

போலவே, போரா போரா (Bora Bora) என்றொரு தீவு இருக்கிறது. நேரமிருப்பின் கூகுளிட்டு பார்க்கவும்.

பாரதிராஜா, பாலச்சந்தரெல்லாம் டொக்கு ஆகிவிட்டால் ஓரமாக உட்கார வைத்துவிடுகிறோம். ஆனால் சச்சினை மட்டும் இன்னமும் நிறைய பேர் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சாம்பியன்ஸ் லீக்கில் சச்சினுடைய அணி வென்றுவிட்டது என்று சொல்வதெல்லாம் அபத்தம். நிற்க. நான் ஒன்றும் “சச்சின் ஹேட்டர்” கிடையாது. சும்மா சொல்லணும்’ன்னு தோனுச்சு. நேற்றோடு சச்சினுடைய T20 வாழ்க்கை முடிந்திருக்கிறது. சச்சினுக்காக ஒரு ட்ரிப்யூட் வீடியோ (பழையது தான்) :-


தலைவா படத்தில் இடம்பெற்ற இந்த மெலடியை கொஞ்சம் தாமதமாகத் தான் கேட்க முடிந்தது. ஆனால் கேட்டால் அன்று முழுக்க முனுமுனுக்க வைக்கிற ரகம். பாடியிருப்பவர்கள் பொருத்தமாக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி.

இந்த பாடலை படமாக்கும்போது இயக்குநர் விஜய்யின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன் – வேணாம் ப்ரோ... ஊரான் வீட்டு மாங்காயில ஊறுகா போடுறது தப்பு ப்ரோ !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 March 2013

வசந்த மாளிகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கர்ணன் படம் டிஜிட்டலில் வெளியாகி சரியாக ஓராண்டு பூர்த்தியாகவிருக்கிறது. இப்படியொரு தருணத்தில் வசந்த மாளிகையின் மறு வெளியீடு. கிட்டத்தட்ட அதே கொண்டாட்டம், அதே ஆரவாரம். சம்பவ இடம் மட்டும் சாந்தியிலிருந்து ஆல்பட்டிற்கு மாறியிருக்கிறது. ஏன் சாந்தியில் வெளியாகவில்லை ? சொந்த திரையரங்கிலேயே ஓட்டிக்கொண்டார்கள் என்று வரலாறு பழிக்கக்கூடும். சென்ற ஆண்டு வெளிவந்த டிஜிட்டல் கர்ணன் சாந்தியில் ஓடியது ஏழு வாரங்கள், சத்யம் திரையரங்கில் 152 நாட்கள்...! அதுதான் வரலாறு...!!


நான் திரையரங்கை சென்றடைந்தபோது சாலையெங்கும் பட்டாசுக் குப்பைகள் பரவிக்கிடந்து அங்கு ஏற்கனவே நடைபெற்ற உற்சவத்தை அறிவித்தன. விளம்பர பதாகைகள் ஆல்பட்டில் துவங்கி அருகிலிருந்த டாஸ்மாக்கையும் தாண்டி வியாபித்திருந்தன. வசந்த மாளிகை அவருடைய 159வது படம் என்ற புள்ளி விவரத்திற்கு ஒத்திசைந்து 159 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஒலிபெருக்கியில் அவருடைய படப்பாடல்கள் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாக மிகுதியுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கழுத்தில் ஏதோவொரு மூவர்ண துண்டுடன் தீப்பூசணி ஏந்திக்கொண்டிருக்கிறார். கர்ணன் பார்த்தபோது அவர்கள் குடித்திருப்பார்களோ என்று சந்தேகித்தேன். சர்வநிச்சயமாக அது மது போதையல்ல. அவர் மீது கொண்ட அன்பின் உணர்ச்சிக்குவியல். அவர்தான் சிவாஜி...!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு துருவங்களாக விளங்கிய நடிகர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். ஒருவர் திரைப்படங்களில் நல்லவராக மட்டுமே நடிப்பார், மற்றொருவர் கதைக்கு தகுந்தபடி நடிப்பார். ஒருவர் ஏழைப்பங்காளனாகவே பெரும்பான்மை படங்களில் நடிப்பார். மற்றொருவர் கோர்ட்டு சூட்டு போட்டும் நடிப்பார். முன்னவர் கோட்டு சூட்டு போட்டால் ஊரார் எள்ளி நகையாடுவர். பின்னவர் கோமணம் கட்டினால் கூட ரசிக்கப்படும். அதற்கேற்ப அவர்களுடைய ரசிகர்களும் வேறுபடுவார்கள். முன்னவருடைய ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடியவர்கள், பின்னவருடைய ரசிகர்கள் தர்க்கரீதியாக செயல்படுபவர்கள். ஆனால் அங்கே ஆல்பட் திரையரங்கில் அன்றைய தினத்தில் மட்டும் உணர்வுப்பூர்வமாக உருமாறியிருந்தார்கள் இதய வேந்தனின் ரசிகர்கள்.

ஒலிபெருக்கியில் மயக்கம் என்ன கசிந்திருக்கொண்டிருக்க, ஐம்பது அல்லது அறுபதைக் கடந்த பலரும் தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் தங்கள் அன்பிற்கினிய நாயகன் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பதாக உணர்கிறார்கள். அப்போது அங்கே விவேக் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் சாத்தப்பன் வருகிறார், ஏற்கனவே கர்ணனுக்கு வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து என்னடி ராக்கம்மா என்று ஒலிபெருக்கி அலற, சாத்தப்பனை கூட்டத்தில் நடனமாட இழுத்துவிட்டனர். அவரும் தன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்திவிட்டு போனார்.

மிகுந்த நெருக்கடிக்கிடையில் திரையரங்கிற்குள் நுழைய, உள்ளே சிம்மக்குரலோன். (அந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு சிவாஜி ரசிகர்கள் மன்னிக்க). காருக்குள் பிண்ணனி பாடகர் T.M.செளந்திரராஜன். அவர் காரை விட்டு இறங்கிய சமயம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சூழ்ந்து நின்று கைதட்டி வரவேற்றது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரிபியூட்...! எழுத்துக்காக சொல்லவில்லை, எண்பதை கடந்த TMS, 50ரூபாய் டிக்கெட் வரிசையில் ரசிகர்களுடன் அமர்ந்து முழுப்படத்தையும் பார்த்தார்.

வசந்த மாளிகையை பொறுத்தவரையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, முக்காலத்திற்கும். இப்போதும் கூட வசந்த மாளிகையின் எந்த பாடலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரிமோட் கண்ட்ரோல் செயலிழந்துவிடுகிறது. தெய்வீகமான காதல் பாடல் என்று வரும்போது சூப்பர் ஸ்டாரே கூட மயக்கம் என்ன பாடலைத் தானே தெரிவு செய்தார். கோவில் திருவிழாக்களில் நடைபெறும் இசை கச்சேரிகளில் யாருக்காக பாடலை பாடியே தீரவேண்டுமென்ற எழுதப்படாத விதிமுறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் காலத்தால் அழியாத கொண்டாட்டப் பாடல். அந்தப்பாடலின் இறுதியில் நடிகர்திலகம், கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச்சக்கரம் சுத்துதடா...! அதில் நான் சக்கரவர்த்தியடா...!! என்று முடிக்கும்போது சிலிர்க்காத ரோமங்கள் உண்டா ?

டிஜிட்டல் ப்ரிண்ட், ஸ்டீரியோஸ்கோபிக் ரெஸ்டோரேஷன், லொட்டு, லொசுக்கெல்லாம் இருந்தாலென்ன, இல்லையென்றால் என்ன ? அவருடைய படங்களை பெருந்திரையில் பார்க்கக்கிடைப்பதே போதுமே !


இறுதியாக அறிந்துக்கொண்ட ஒரு தகவலோடு நிறைவு செய்கிறேன். வசந்தமாளிகை படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் திலகத்தின் தாயார் மறைந்துவிட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்து ஐந்தாம் நாள் வீட்டிலிருந்து நடிகர் திலகம், தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, ‘வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது, படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மனம் அமைதியாகவாவது இருக்கும்' என்று கூறினார். அத்தனை சோகத்திலும் தயாரிப்பாளரின் நலன் கருதி, ஒத்துழைப்பை நல்கும் அவரின் உயர்ந்த குணத்தை எண்ணி வியந்த தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கினார். நடிகர்திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கமென்ன... இந்த மெளனமென்ன...’ பாடல் காட்சி. கவலையின் ரேகையே தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார். அதுதான் சிவாஜி...!

தொடர்புடைய சுட்டிகள்:
கர்ணன் – கொண்டாட்டத் துளிகள்
ஓ மானிட ஜாதியே!
வசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment