Showing posts with label days. Show all posts
Showing posts with label days. Show all posts

8 July 2016

பெங்களூரு தினங்கள் – 5 (கடைசி பகுதி)

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூர் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இணக்கமாகி வரும் சமயத்தில், அலுவலகத்தில் உயரதிகாரி அழைத்து அநேகமாக அடுத்த வாரத்தில் நீங்கள் சென்னைக்கு மாற்றலாகி விடுவீர்கள் என்றார். ஒரு கணம் மனதில் ஒரு கனம். சென்னைக்கு மாற்றலாவது நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சிதான் என்றாலும் அதனை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம் அல்லது முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். பெங்களூர் வந்து ஒரு பெயருக்காக கூட லால் பாக், கப்பன் பார்க் சுற்றிப் பார்க்கவில்லை. பப் இருக்கும் திசையை நோக்கி நடந்துகூட செல்லவில்லை. இவ்வளவு ஏன் ? கண் எதிரிலேயே இருந்த சந்தியா தியேட்டர் காம்பவுண்டில் கூட நுழைந்ததில்லை. இது போதாதென்று கடைசி வாரத்திற்கு கடுமையான வேலைப்பளுவை சுமத்தி, “Take your own time. ஆனா நீங்க சென்னை போறதுக்குள்ள முடிச்சிட்டு போங்க” என்று கெடு ஒன்றை விதித்திருந்தார் டேமேஜர். ஆமாம், மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், டொமைன் மாறலாம், ஆனால் டேமேஜர்கள் மாறுவதில்லை !


ஏதேதோ திட்டமிட்டு வைத்திருந்தேன். கெடுவின் காரணமாக கடைசி வாரம் எதுவும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. நண்பர்களை சந்தித்து விடைபெற, ஹெய்னகென் அருந்த, சந்தியா தியேட்டரில் காஞ்சூரிங் 2 நைட் ஷோ பார்க்க என்று எதுவுமே முடியவில்லை. சென்னை கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு தன்மையான ஆந்திர நண்பரொருவரின் உதவியால் எனது வேலைகளை முடிக்க (முடிந்தது போல பாவனை செய்ய) முடிந்தது. பெங்களூரு நினைவுகளை அசை போட்டபடி பிருந்தாவன் விரைவு ரயிலில் சென்னை திரும்பினேன்.

பெங்களூரில் இருந்த இந்த கொஞ்ச நாட்களிலேயே அதன் வாழ்க்கைமுறை சில சமயங்களில் என்னை திகைக்க வைத்திருக்கின்றன. கடைசி நாள் இரவு. கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியில் வயிற்றுக்கு சற்று ஈய்வதற்காக ஆந்திர நண்பருடன் வெளியே வந்திருந்தேன். சுமார் பத்து மணி இருக்கும். அந்த சாலையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. சாலையோரத்தில் மூடியிருந்த ஒரு வங்கியின் படிக்கட்டுகளில் ஒரு ஜோடி நெருக்கமாக அமர்ந்திருந்தது. எனக்கு அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க கூச்சமாக இருந்தது. ஆனால் அவர்கள் காதல் புரிந்துக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற ஒரு காட்சியை, நீங்கள் சென்னையில் இரவு வேளையில் பார்ப்பது கடினம். பொதுவாகவே, இங்குள்ள பெண்கள் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்துடன் இருப்பது போல தெரிகிறது. ஆண்களைப் போலவே பல பெண்களும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி பணிபுரிவதால் கட்டுப்பாடுகள் தளர்ந்து சுதந்திரமாக இருக்கின்றனர். சென்னையில் புகை பிடிக்கும் பெண்கள் அரிது. அப்படியே யாரேனும் பிடித்தால் அவரை கடந்து செல்லும் ஆண்கள் அவளை குறுகுறுவென பார்த்து, அது சிகரெட் தான் என்பதை உறுதி செய்து சக ஆண்களிடம் அதுபற்றி வசைப்பாங்குடன் கருத்துரைப்பார்கள். பெங்களூரில் பெண்கள் புகைப்பிடித்தல், கவர்ச்சியுடை அணிதல், க்ளீவேஜ் தரிசனம் தருதல் எல்லாம் சாதாரண விஷயங்கள்.

தொடரை முடிக்கும் முன் பெங்களூருக்கு என சில பிரத்யேகமான இனிப்பு வகைகள் உள்ளன. அதுகுறித்து சொல்லிவிடுகிறேன். தமிழகத்தில் ஆவின் எப்படியோ அப்படி கர்நாடகத்தில் இந்த நந்தினி பார்லர்கள். பால் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கூட்டுறவு நிறுவனம். இதன் விற்பனை நிலையங்கள் பெங்களூரில் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக ரயில் / பேருந்து நிலையங்களுக்கு அருகில் அதிகம் இருக்கின்றன. நீங்கள் பெங்களூர் அல்லது கர்நாடக மாநிலத்தின் பிற ஊர்களுக்கு சென்றாலோ இந்த கடைகளில் கண்டிப்பாக வாங்க வேண்டிய இரண்டு இனிப்பு பண்டங்கள் உள்ளன. ஒன்று, தர்வத் பேதா. இரண்டாவது, பேஸான் லட்டு!

தர்வத் பேதா என்பது உத்திர பிரதேசத்தில் இருந்து கர்நாடக மாநில ‘தர்வத்’ என்ற ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு வணிகரின் கண்டுபிடிப்பு. ஆரம்பத்தில் அவருடைய குடும்ப ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட தர்வத் பேதா செய்முறை. நாளடைவில் கர்நாடகம் முழுவதும் பிரபலமாகி, தற்போது மற்ற மாநிலங்களில் கூட விற்பனையாகிறது. பிரத்யேகமான சுவையுடன் விளங்கும் இந்த தர்வத் பேதா கால் கிலோ 70ரூவில் கிடைக்கிறது. அடுத்தது, பேஸான் லட்டு. இதனை நம்முடைய வீடுகளில் கூட நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். கடலை மாவுடன் நெய், சர்க்கரை, ஏலக்காய் இத்யாதிகளை கலந்து உருண்டையாக திரட்டி வைத்திருக்கிறார்கள். இதனுடைய சுவை நம்மை விடேன் விடேன் என்கிறது. கால் கிலோ 80ரூ. இவை இரண்டையும் தவிர்த்து, நான் கேள்விப்பட்டு ஆனால் நந்தினி பாலகத்தில் கிடைக்காத ஒரு பண்டம் பெல்காம் குண்டா. இதுவும் பால் பொருட்களின் கூட்டுறவில் தயாராகும் இனிப்பு வகையே.

சென்னை திரும்பியாயிற்று. கொஞ்ச நாட்கள் எனது வலைப்பூவில் முன்பு போல எழுத வாய்ப்பளித்த நாட்கள் இத்துடன் (தற்காலிகமாக) நிறைவு பெறுகிறது. இனி வரும் காலங்களில் நான் மீண்டும் பெங்களூர் வரலாம், சிறிது காலம் தங்கலாம். அப்போது புதிய தகவல்களுடன், அனுபவங்களுடன் மீண்டும் எழுதுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 July 2016

பெங்களூரு தினங்கள் – 4


அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு போகப்போகிறோம் என்றதும் அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் உற்சாகமூட்டிய ஒரு விஷயம், அங்கு நல்ல சரக்கு கிடைக்கும் என்பது. குறிப்பாக வெளிநாட்டு பியர் வகைகள். தமிழ்நாட்டு மதுக்கடைகளில் திரும்பிய திசையெல்லாம் கிங்ஃபிஷர்தான் பிரதானமாக கிடைக்கும். அதிலேயும் ‘லாஹர்’ கிடைக்காது, கூலிங் இருக்காது. வேண்டாம் என்றால் 6000, 12000 என்ற பெயரில் உள்ள மட்டமான பியர்தான் கிடைக்கும். டாஸ்மாக்குகளின் ஒரேயொரு ஆறுதல் ப்ரிட்டிஷ் எம்பயர் பியர்தான். பெங்களூரில் அப்படியில்லை. கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. 

முதல்முறை பெங்களூரில் உள்ள ஒரு மதுபான ஷோரூமுக்கு சென்றோம். ஏறத்தாழ தமிழக எலைட் கடைகளைப் போல காட்சியளித்தது. ஆனால் சாய்ஸ் மட்டும் ஏராளம்.

தமிழகத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். டாஸ்மாக்கில் மற்ற பானங்களை விட பிராந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். புதிய சரக்குகளை அறிமுகப்படுத்தும்போது அதில் பிராந்தி பிரதான இடம் வகிக்கும். ஒருமுறை அலுவலக டீம் அவுட்டிங் சென்றிருந்தோம். வந்திருந்தவர்கள் அவரவர் விருப்ப சரக்குகளை கொணர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர்கூட பிராந்தி கொண்டு வரவில்லை. மேலும் என் பையில் இருந்து பிராந்தியை எடுத்ததும் என்னை ‘டிபிக்கல் டமில்நாடு கய்’ என்று ஏளனம் செய்தார்கள். சென்னையின் விருப்ப பானம் பிராந்திதான் என்று ஒரு பிரபல நாளிதழே சூடமேற்றி சத்தியம் செய்கிறது. மற்ற (பியரல்லாத) பானங்களோடு ஒப்பிடும்போது டாஸ்மாக்குகளில் எண்பது சதவிகிதம் பிராந்தி விற்பனையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பிராந்தியை குதிரைக்கு கொடுக்கும் சரக்கு என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதனால்தான் தங்களை கட்டுக்கடங்காத குதிரையாக கருதும் தமிழர்கள் பிராந்தியை அருந்துகிறார்களோ ? இன்னொரு பக்கம், தமிழர்கள் வேறு வழியில்லாமல் தான் பிராந்தி அருந்துகிறார்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுவதுண்டு. உண்மையைச் சொல்வதென்றால் தமிழக குடிகாரர்கள் பெரும்பாலோனோருக்கு பானங்களின் பெயரோ, வகையோ தெரிவதில்லை. இருப்பதிலேயே மலிவாக எது கிடைக்கிறதோ அதனை அவர்கள் உட்கொள்கிறார்கள். டாஸ்மாக்குகளில் வெறுமனே பணத்தை மட்டும் நீட்டி எழுபது ரூபாய் சரக்கு, எண்பது ரூபாய் சரக்கு என்று கேட்பவர்கள் அதிகம். எதற்காக இந்த பிராந்தி கதையை சொல்கிறேன் என்றால் பெங்களூரில் ஒப்பீட்டளவில் பிராந்தி குறைவு. அதே சமயம் ரம், விஸ்கியில் அதிக வெரைட்டி கிடைக்கின்றன. 

பெங்களூரில் உள்ள விதவிதமான மதுக்கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும், க்ளப் / பப் வகையறாக்களுக்கு சென்று ஆராயும் அளவிற்கு எனக்கு நேரம் கிடைத்ததில்லை. ஒருமுறை அங்குள்ள மோர் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். அங்குள்ள பலசரக்கு பொருட்களுக்கு இடையே ஓரமாக ஒரு பிரிவை மதுபானங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு நான் கண்டு உவந்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
  • குவார்ட்டர் அளவு பானங்கள் ஃப்ரூட்டி பாணியில் டெட்ரா பேக்குகளில் கிடைக்கின்றன. இதுபோக பாண்டிச்சேரி போல சாம்பிள் பானங்கள் குட்டிக்குட்டி புட்டிகளில் கிடைக்கின்றன.
  • மலிவான பானங்கள் முதல் விலையுயர்ந்த ‘ஒசந்த சாதி’ பானங்கள் வரை பாரபட்சமின்றி கிடைக்கின்றன. குறைந்த பட்சமாக ஒரு ஃபுல் பாட்டில் ரம் வெறும் 254 ரூபாய்க்கு கிடைக்கிறது.
  • பகார்டியில் லெமன், ஆப்பிள், ஆரஞ்சு, பீச், கொய்யா, டிராகன் ஃப்ரூட், ராஸ்பெர்ரி உள்ளிட்ட சுவைகள் கிடைக்கின்றன. இதுபோக இறக்குமதி செய்யப்பட்ட காபோ, மலிபு தேங்காய் சுவையூட்டப்பட்ட வெண்ணிற ரம் கிடைக்கின்றன.
  • வொட்காவில் ஸ்மிர்னாஃப், எரிஸ்டாஃப், ரோமொனோவ் போன்ற உள்ளூர் பானங்களில் துவங்கி அப்சொலூட், க்ரே கூஸ் வரை கிடைக்கின்றன.
  • ஜின்னில் டாஸ்மாக்கில் கிடைக்குமே அந்த லோக்கல் பிராண்ட் (ப்ளு டைமண்ட் ?) தொடங்கி 8400 ரூபாய் மதிப்புள்ள டேன்க்வெரி (Tanquery) நம்பர் 10 ஜின் வரை கிடைக்கின்றன. அநேகமாக, அங்குள்ள விலையுயர்ந்த பானம் இதுவாகத்தான் இருக்கும்.
  • பியர்களில் முந்தைய பத்தியில் சொன்னது போல கால்ஸ்பர்க், பட்வெய்ஸர், ஹெய்னகென், ஃபாஸ்டர்ஸ் உட்பட நல்ல பியர்கள் டின்னிலும், பாட்டிலிலும் MRP விலைக்கே கிடைக்கின்றன. இதுபோக சில உள்ளூர் பியர்வகைகளும், ப்ரீசர்களும் கிடைக்கின்றன.
  • விஸ்கியில் பேக்பைப்பர் ரேஞ்சில் ஆரம்பித்து ப்ளாக் டாக், ஜேக் டேனியல், க்ளென்ஃபிடிச் வரை கிடைக்கின்றன. ஒரு ஃபுல் பாட்டில் க்ளென்ஃபிடிச்சின் விலை ஏழாயிரத்து எழுநூற்றி சொச்சம்.
  • ரெட் மற்றும் ஒயிட் ஒயின்கள் வெவ்வேறு விலையில் கிடைக்கின்றன. போர்ட் ஒயின் எனப்படும் காட்டமான ஒயின் வகையின் மிகக்குறைவான விலை என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரு ஃபுல் பாட்டில் வெறும் 86 ரூபாய். 
ஐடி துறையில் பணிபுரிபவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவர்கள் பெரும்பாலும் தாங்கள் ஐரோப்பாவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக கற்பனையில் இருப்பவர்கள். எங்கும், எதிலும் ஆடம்பரமாக இருப்பதை விரும்புவார்கள். ஆனால் குடி என்று வந்துவிட்டால் இவர்கள் பெரும்பாலும் விரும்பிக் குடிக்கும் பானம் எது தெரியுமா ? ஓல்ட் மாங்க் ! முதலில் இதனை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவேளை ஓல்ட் மாங்க் என்ற பெயரில் இறக்குமதியாகும் பானம் ஒன்றிருக்கிறது போலும் என்றுதான் நினைத்தேன். பின்னாளில் அது அதே அடிமட்ட ஓல்ட் மாங்க் என்பதை தெரிந்துகொண்டேன். ஓல்ட் மாங்க்கை சிலாகித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகளை நீங்கள் கூகுளில் தேடிப் படிக்கலாம். அத்தகைய பெருமைகள் கொண்ட ஓல்ட் மாங்க் பெங்களூரில் சல்லிசாக கிடைக்கிறது. ஒரு ஃபுல் 305 ரூபாய். இதே பாணியில் விஸ்கியில் கிளாஸிக்கான பேக்பைப்பரும் மலிவாக கிடைக்கிறது. இவையிரண்டையும் பார்த்தபிறகு எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. பிராந்தியில் குரியர் நெப்போலியன் என்றொரு அடிமட்ட அற்புதம் உள்ளதே அது எங்கே அய்யா ? அதே போல டக்கீலா பானங்களை பார்த்ததாக நினைவில்லை. ஒருவேளை வேறு கடைகளில் இருக்கலாம். 

பெங்களூரில் ஆங்காங்கே உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் (Restobar) உள்ளன. இவற்றில் ஒன்றில் நுழைந்து கால்ஸ்பர்க் கேட்டோம். தமிழக பார்களைப் போலவே கிங்ஃபிஷர் கொண்டு வரட்டுமா என்று மதுக்கூட ஊழியர் காலில் வெந்நீர் ஊற்றியதைப் போல துடியாய் துடித்தார். (என்ன மாயம் செய்தாய் மல்லய்யா ?) அதெல்லாம் முடியாது என்றதும் வெவ்வேறு பியர்களின் பெயரைச் சொல்லி கடைசியாக கில்லரோ, புல்லட்டோ ஏதோ ஒரு பெயர்கொண்ட பியரைக் கொணர்ந்து இது கால்ஸ்பர்கை போலவே இருக்கும் என்று திறக்கப் போனார். ‘குடித்தால் கால்ஸ்பர்க், இல்லையேல் விஷம்’ என்ற கொள்கையோடு அங்கிருந்து உக்கிரமாக வெளிநடப்பு செய்து மற்றொரு மதுக்கூடத்திற்கு சென்று கால்ஸ்பர்கை அடைந்தோம். இந்த மதுக்கூடங்களில் உள்ள இன்னொரு விசேஷம் பன்றிக்கறி. எனக்கு நினைவிருக்கிறது, நான் சின்ன வயதிலிருந்தபோது தமிழக துரித உணவகங்களில் பன்றிக்கறி கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னர் என்ன காரணத்தினாலோ அவை கிடைப்பதில்லை. இப்போது மாட்டுக்கறி கூட பெரும்பாலும் கிடைப்பதில்லை. பெங்களூரில் பன்றி மற்றும் மாட்டிறைச்சியை பாரபட்சமில்லாமல் விற்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம், ஒரேயொரு முறை பெங்களூரு மதுக்கூடங்களுக்கு சென்றுவிட்டு வந்து டாஸ்மாக்குகளுக்குள் நுழைந்தால் உங்களுக்கு வாழ்ந்துகெட்ட வீடு நினைவுக்கு வரும் ! 

பன்றிக்கறி வறுவலுடன் கால்ஸ்பர்கை பருகிய உற்சாகத்தில் வெளியேற முற்பட்டபோது ஒரு குடிமகன் அவருடைய பில்தொகையை குறுகுறுவென உற்றுப்பார்த்துவிட்டு பணியாளர் தன்னை ஏமாற்ற முயல்வதாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். மாநிலம் மாறலாம், மொழி மாறலாம், மதுபானங்களும் மாறலாம். ஆனால் மக்கள் மாறுவதில்லை ! 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 June 2016

பெங்களூரு தினங்கள் - 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூரு வந்து மூன்று வாரங்களாகி விட்டன. எல்லா வார இறுதிகளிலும் தவறாமல் சென்னை வந்துவிடுகிறேன். முதல்முறையாக சென்னையை விட்டு கிளம்பியது ஒரு துயரம் என்றால் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையை விட்டு கிளம்புவது பெருந்துயரம். சனிக்கிழமை எப்படி, எங்கே போனதென்றே தெரியாது. ஞாயிற்றுக்கிழமை மதியத்தை தாண்டியதும் மனச்சலனம் துவங்கிவிடும்.

மனப்போராட்டங்கள் ஒருபக்கம் என்றால் ரயிலில் / பேருந்தில் டிக்கட் எடுப்பது, பயணிப்பது எல்லாம் இன்னொரு வகையான போராட்டம். முதல் வார இறுதிக்கு, சில மாதங்கள் முன்பே ரயில் டிக்கட் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்சனையில்லை. அடுத்தடுத்த வாரங்களுக்கு தட்கல் டிக்கட் புக் செய்ய வேண்டியிருந்தது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது ஒரு கலை. இதுகுறித்து BLADEPEDIAவில் விரிவாக எழுதியுள்ள பதிவு நல்ல பலனளித்தது. காலையில் பத்தரை மணியளவில் குளித்து முடித்து சுத்தமாக, கடவுள் நம்பிக்கை இருந்தால் தொழுதுவிட்டு கணினி முன்பு வந்து அமர்ந்துகொள்ள வேண்டும். சோர்ஸ், டெஸ்டினேஷன் ரயில் நிலைய மூன்றிலக்க குறியீடுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ரயில், எந்த தேதி, எந்த நேரம் என்பதையெல்லாம் கவனமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பயணம் செய்பவர்களின் பட்டியலை முன்கூட்டிய மாஸ்டர் பாசஞ்சர்ஸ் லிஸ்டில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். சரியாக பத்து ஐம்பத்தி எட்டுக்கு ஒருமுறை லாக் அவுட் செய்து லாகின் செய்துகொள்வது நலம். IRCTC சர்வரில் சரியாக பதினோரு மணியானதும் துரித கதியில் டிக்கெட் புக் செய்ய வேண்டும். பெங்களூருக்கு பரவாயில்லை. அதிக போராட்டங்கள் இல்லாமல் கிடைத்துவிடுகிறது.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் இளைஞர்கள் ‘வாரணம் ஆயிரம்’ சமீரா போல தங்களுக்கு ஒருபோதும் சகபயணி அமைவதில்லை என்று புலம்புவதை பார்த்திருப்பீர்கள். ஒருவேளை சமீரா போன்ற சகபயணி கிடைத்தால் இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெங்களூரு செல்லும் இரவு ரயிலை பொறுத்தவரையில் சமீரா மாதிரி அல்ல, சமீராவே வந்தாலும் பிரயோஜனமில்லை. ஏனென்றால் ரயில் கிளம்பிய அடுத்த நிமிடமே அனைவரும் அவரவர் பெர்த்தில் ஏறி படுத்துக்கொள்கின்றனர். அத்தோடு கண்டோன்மென்ட் வந்ததும் தான் துயில் எழுகின்றனர். இருந்தாலும் சார்ட்டில் நம் கம்பார்ட்மென்டில் யுவதிகள் யாரேனும் உளரா பார்ப்பதில் ஒரு கிக் இருக்கிறது. ஒருமுறை இப்படி சார்ட் பார்க்கும்போது F28 ஒன்று இருந்தது. ஆளை பார்க்கும் ஆவலில் பெர்த்தில் ஏறி படுக்காமல் காத்திருந்தேன். ரயில் கிளம்பும் தருவாயில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அம்மாள் வந்து நான் எதிர்பார்த்த பெண்ணுக்குரிய சீட்டில் படுத்துக்கொண்டார். அவர்தான் அந்த F28 என்பதை ஜீரணிக்கவே எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. ரயில் டிக்கட் புக் செய்யும்போதாவது உங்கள் உண்மையான வயதை குறிப்பிட்டுத் தொலைக்கலாமே லேடீஸ்? அடுத்தமுறை ஒரு F26 இருப்பதை கவனித்தேன். நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக சீட்டில் அமர்ந்து ரயில் கிளம்புவதற்காக காத்திருந்தேன். இந்தமுறை நிஜ யுவதிதான். பவ்யமாக என்னிடம் வந்து என்னுடையது மிடில் பெர்த், அதை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் அப்பர் பெர்த்தை எனக்கு தர முடியுமா என்று வினவினார். அழகான பெண்கள் கேட்டால் அப்பீல் உண்டா. ஒரு நொடிகூட தாமதிக்காமல் மாற்றிக்கொண்டேன். இன்னொரு முறை எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சார்ட்டில் எல்லோரும் பெருசுகள் என்பதால் வெளியில் காத்திருந்து ரயில் கிளம்புவதற்கு ஒரு நொடிக்கு முன் ஏறினேன். என் பெர்த் அருகே சென்றதும் எதிர் லோயரில் இருந்த முதியவர், அவருடைய மனைவி பக்கத்து கோச்சில் தனியே இருப்பதால் என்னை அங்கே மாற்றிக்கொள்ளுமாறு பணித்தார். சரி என்றதும் விறுவிறுவென பக்கத்து கோச்சுக்கு நடந்து, அங்கு லோயர் பெர்த்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு அம்மாளை எழுப்பினார். அவர் எழுந்து சில நொடிகளுக்கு முதியவரை முறைத்துப் பார்த்தார். பெரியவர் ஏதோ நினைவுக்கு வந்தவராய் அடுத்த கம்பார்ட்மென்ட் லோயர் பெர்த்துக்கு போய் அங்கிருந்த அம்மாளை எழுப்பினார். முதலில் எழுப்பியது அவருடைய மனைவி இல்லை போலும்.

IRCTC ஒரு பக்கம் என்றால் SETCயில் டிக்கெட் புக் செய்வது இன்னொரு வகையான தலைவலி. SETC தளத்திற்கு சென்றால் ஆறரை, ஏழு, ஏழரை என்று அரைமணிக்கொரு பேருந்து இருப்பதாக காட்டுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நாய் மாதிரி காத்திருந்தால் ஆறே முக்காலுக்கு வர வேண்டிய பேருந்து ஏழு இருபதுக்கு சாவகாசமாக வருகிறது. தாமதமாக வருவது குறித்த குற்ற உணர்ச்சி துளிகூட ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் டிக்கெட் குறைவாக புக் ஆகிற காரணத்தினால் ஆறரை, ஏழு மணி பேருந்துகளை ஒரே பேருந்தாக்கி விடுகின்றனர். KSRTC பேருந்துகள் மாலை நேரங்களில் சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதுவரையில் தனியார் பேருந்துக்கு முயற்சி செய்யவில்லை. IRCTC, SETC இரண்டும் காலை வாரும்போது தனியாரிடம் தான் செல்லவேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரு பரிட்சயமாகி வருகிறது. மடிவாளா என்பது நம்ம ஏரியா என்று மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது. இது அதிகம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது. சுலபமாக கிடைக்கும் பீஃப் பிரியாணி இதனை உறுதிப்படுத்துகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் ஹனுமான் சிலைதான் இந்த ஏரியாவுக்கு நம்மை வரவேற்கிறது. திப்பு சுல்தானுக்கு விழா எடுக்கிறார்கள். மொட்டை மாடியில் இயங்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் உண்டு. திடீரென அம்பேத்கர் பேந்தர்ஸ் சார்பாக கூட்டம் நடக்கிறது. மொத்தத்தில் மடிவாளா ஒரு லிட்டில் இந்தியா என்றுதான் சொல்லவேண்டும். இப்போது கொஞ்சம் ஏரியா பழக்கமாகிவிட்டதால் எங்கெங்கே என்னென்ன கிடைக்கும் என்று தெரிகிறது. BDA காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு பேக்கரியில் அற்புதமான லெமன் டீ கிடைக்கிறது. பொமனஹல்லி கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள வண்டிக்கடையில் அட்டகாசமான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் கிடைக்கிறது. 

இவை தவிர்த்து, பெங்களூருக்கென சில பிரத்யேக வாசனைகள் உள்ளன. தெருவோரத்தில் மாம்பழம் விற்கும் கடைகளை கடக்கும்போது கும்மென்று ஒரு வாசம் வரும். மறுபடியும் ஒருமுறை அந்தப்பக்கம் நடந்து போகலாமா என்று தோன்றும். அடுத்தது, பானிப்பூரி வாசனை. கடுந்தவம் புரியும் முனிவரிடம் இந்த பானிப்பூரி வாசத்தை காட்டினால் தவம் கலைந்துவிடும். பெரும்பாலான டீக்கடைகளில் லெமன் டீ சாதாரணமாக விற்கப்படுகிறது. தமிழகத்தில் இது அரிதாக சில டீக்கடைகளில் மட்டும்தான் பார்க்க முடியும். சென்னை சத்யம் திரையரங்கின் எதிரில் மசாலா பெப்ஸி என்று ஒன்று கிடைக்கும். பெரிய விசேஷமில்லை. பெப்ஸியில் ஜல்ஜிரா மசாலாவை கலந்தால் மசாலா பெப்ஸி. பெங்களூரில் இது ரெடிமேடாகவே கிடைக்கிறது. பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா என்கிற பெயரில் கிடைக்கும் இந்த பானம் கர்னாடகத்தின் காளிமார்க். டீ / ஜுஸ் கடைகளிலும் ஜல்ஜிரா டீ, மசாலா கோக், மசாலா 7UP போன்றவை கிடைக்கின்றன.

பெரிய பெரிய ஸ்டார்கள் எல்லாம் செருப்பு விளம்பர பதாகைகளில் சிரிக்கிறார்கள். லுனாருக்கு உபேந்திரா, பாரகனுக்கு சுதீப் மற்றும் சமந்தா, வி.கே.சி. பிரைடில் கன்னுக்குட்டிக்கு பதிலாக திவ்யா ஸ்பந்தனா. இந்த பதாகைகள் ஹைவேஸில் இருநூறுக்கு அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. செருப்புகளுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

புதிய வேலை என்பதால் அலுவலகத்தில் அதிகம் வாட்டுவதில்லை. பெங்களூர் சூழலும் கொஞ்சம் இலகுவாகி வருவதால் தினசரி ஒரு புத்தகம், அரை சினிமா, பக்கத்து ஏரியாவுக்கு போய் நைட் ஷோ படம் பார்ப்பது என்று செட்டில் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அலுவலகத்திலிருந்து ஒரு (இன்ப) அதிர்ச்சி கொடுத்தார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 June 2016

பெங்களூரு தினங்கள் - 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மே 23ம் தேதி புதிய அலுவலகத்தில் முதல்நாள். கத்தையாக விண்ணப்பப் படிவங்களிலும் சாசனங்களிலும் சலிக்காமல் கையொப்பமிட வேண்டியிருந்தது. ‘ஆறாவது’ முறையாக தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட அதே சமயத்தில் இன்னொரு பதவியேற்பு விழாவும் ஆர்பாட்டமில்லாமல் நடந்து முடிந்தது.

தொடர்கிற பத்தியை படித்துவிட்டு இவனெல்லாம் உருப்படவே மாட்டான் என்று நீங்கள் நினைக்கலாம். நினைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் அலுவல் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால் எதிர்த்தரப்புக்கு தமிழ் தெரியும் பட்சத்தில் நான் தமிழிலேயே பதிலளிப்பேன். இதில் உள்ள ‘கம்ஃபர்ட்’ ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. வேறு வழியே இல்லாத சூழல்களில் மட்டும்தான் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை கையில் எடுப்பேன். நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தமிழகத்திலேயே இருந்தாலும் ஏர்போர்ட்டுக்கோ, போஷான உணவகத்திற்கோ, ரெஸார்ட்டுக்கோ சென்றால் அங்கே ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் பேசினால்தான் மரியாதை என்று கற்பனை செய்துகொண்டு நாவை சுழட்டிக்காட்டுவார்கள். நான் இப்படிப்பட்ட வணிகம் சார்ந்த இடங்களில் துளி கூட யோசிக்காமல் தமிழிலேயே பேசுவேன். நம்மூருக்கு வந்து வியாபாரம் செய்பவர்கள் நமது மொழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பிழைக்கப் போன இடத்தில் இப்படிப்பட்ட குறிக்கொழுப்பு பேச்செல்லாம் பேச முடியுமா ?

பெங்களூர் அலுவலகத்தில் சம்பாஷனைகள் எல்லாம் இப்போதைக்கு ஆங்கிலம்தான், எதிர்தரப்புக்கு தமிழ் தெரிந்திருந்தாலும் கூட. என்ன ஒன்று, இங்கே யாரும் நம்மை மிரட்டுவதற்காகவே ஆக்ஸ்போர்டிலேயே இல்லாத வொக்கபிலேரியை பயன்படுத்துவதில்லை. அக்சென்ட் என்ற பெயரில் உள்ளூர்க்காரர்களிடமே சுழட்டிக் காட்டுவதில்லை. தெளிவான இந்திய / ஹிந்திய ஆங்கிலம்தான். இருப்பினும் நாள்முழுக்க ஆங்கிலத்தில் பேசுவது என்பது தண்டனைதான். இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ‘சாப்ட்டீங்களா தம்பி’ என்று தமிழில் கேட்டபடி ஒருவர் ஆதரவாக தோளில் கை வைத்தால் எப்படி இருக்கும் ! அதுவும் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு நபர். ‘இல்லை’ என்றதும் அருகிலுள்ள நல்ல உணவகங்களுக்கு வழி சொன்னார். 

சில விஷயங்களைப் பொறுத்தவரையில் நாமே எக்ஸ்ஃப்ளோர் செய்வதுதான் சுவாரஸ்யம். முதல்நாள் மதியம் கொஞ்ச தூரம் நடந்தபிறகு ஒரு சைவ உணவகத்தில் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் இன்னொரு கடையில் ஆம்பூர் பிரியாணி 60ரூ என்றிருந்ததை கவனித்தேன். அடுத்தடுத்த நாட்களில் அதே பகுதியில் பல ஆம்பூர் பிரியாணி கடைகள் உள்ளதை கண்டுகொண்டேன். இந்தக் கடைக்காரர்களுக்கு எல்லாம் தமிழக வரைபடத்தில் ஆம்பூர் எந்த திசையில் உள்ளது என்று கேட்டால் கூட சொல்லத் தெரியாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கடையிலும் பிரியாணியின் சுவை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது, ஆனால் எங்கேயும் பிரியாணி மாதிரி இல்லை. வாயிலேயே வைக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. இதே பிரியாணியை சென்னையில் விற்றால் கண்டிப்பாக 80 அல்லது 90 ரூபாய் வாங்குவார்கள். இங்குள்ள போட்டியின் காரணமாகவோ என்னவோ 50 அல்லது 60 ரூ மட்டும் வாங்குகிறார்கள்.

அலுவலகம், தங்குமிடம் தவிர்த்து பொது இடங்களில் வியாபாரிகளும், வழிப்போக்கர்களும் பரவலாக தமிழில் பேசுவதைக் காண முடிகிறது என்பதால் ப்ரியா ஆனந்த் போல ‘ஹேய்... நீங்க தமிழா ?’ என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதே சமயத்தில் தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பலர் தாராளமாக மூன்று அல்லது நான்கு மொழிகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே தாய்மொழி தவிர்த்து வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாத அதிக அப்பாவிகள் உள்ள ஊர் தமிழகமாகத்தான் இருக்கும்.

பெங்களூர் பற்றி மற்றவர்கள் அதிகம் பயம் காட்டிய விஷயம் – சினிமா டிக்கட் விலை. நம்மூர் மாதிரி 120 வரையறை இங்கு இல்லை. அதுவும் வார இறுதிகளில் டிமாண்டை பொறுத்து விலையை ஏற்றி இறக்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு பொருந்தும். ஆனால் எனக்கு கிடைத்த நற்பேறு என்னவென்று பாருங்கள். நான் வசிக்கும் பகுதியில் இருந்து இரண்டு கி.மீ சுற்றளவிலேயே நான்கு ஒற்றைத்திரை அரங்குகள் உள்ளன. இவற்றில் இரண்டிலாவது தமிழ் படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய / மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டும்தான். இங்கே பார்ப்பது போல ஜீரோ, களம் எல்லாம் அங்கே முடியாது.

புது ஊருக்கு போனால் அங்குள்ள கலாசாரத்தை அறிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும். அவற்றில் முதலாவது திரையரங்கம். பெங்களூரில் முதல் படமாக என்ன சினிமா பார்க்கலாம் ? வரவேற்று உற்சாகமளித்த காஜல் அகர்வால் படமா அல்லது மண்ணின் மொழியான கன்னட படமா ? கன்னட படமே பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். லூஸியா இயக்குநரின் படம் என்பது பிரதான காரணம். இங்குள்ள திரையரங்குகளில் சாதாரணமாகவே தினசரி ஐந்து காட்சிகள் ஓட்டுகிறார்கள். ஒற்றைத்திரைகளில் டிக்கட் கட்டணம் நூறு அல்லது நூற்றைம்பது இருக்கிறது. முதல் படம் பார்த்த தியேட்டர் – பாலாஜி. முன் சீட்டு ஆசாமியின் தலை திரையை மறைக்க வாய்ப்பே இல்லாத வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாரநாள் என்றாலும் அரங்கு நிறைந்திருந்தது. பெரும்பான்மை கார்ப்பரேட்களில் பணிபுரியும் ஆண்-பெண் குழுமங்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கன்னடம் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். முதல் சீனில் சப்-டைட்டிலை பார்த்ததும் பலர் உற்சாகமாக கத்தியதை வைத்து சொல்கிறேன். கேண்டீனில் கொள்ளையடிப்பதை பொறுத்தவரையில் தமிழகத்தைவிட மோசம். அஞ்சு, பத்து சில்லறை எல்லாம் தருவதில்லை. கடலைபருப்பையும், பட்டாணியையும் சில்லறைக்கு பதிலாக தள்ளிவிட்டு ஏமாற்றுகிறார்கள். ஆனால் திரையரங்கில் பார்த்த முதல் கன்னட சினிமா ஏமாற்றவில்லை.

புது ஊர் கலாசாரத்தை தெரிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் இல்லையா. முதலாவது, திரையரங்கம். இரண்டாவது என்ன என்று யூகித்திருப்பீர்கள். அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 June 2016

பெங்களூரு தினங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு. புது ஊர், புது மாநிலம், புது வேலை, புது மனிதர்கள். ஒரு பக்கம் பதட்டமாகவும், மறுபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்துவிடும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே என்கிற நம்பிக்கையில் தான் பெங்களூருக்கு சென்றிருக்கிறேன்.

பெங்களூரில் நான் தங்கப்போகிற இடத்தின் பெயர் மடிவாளா என்று முகவரி கொடுத்திருந்தார்கள். லேண்ட்மார்க் சந்தியா டிஜிட்டல் தியேட்டர் அருகில். முதலில் ஏனோ எனக்கு இது சினிமா தியேட்டர் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாத டாக்ஸி டிரைவரிடம் ஜிப்ரிஷில் வழி சொல்லி சந்தியா தியேட்டர் வாசலில் வந்து இறங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் சினிமா தியேட்டர் :) அதுவும் காஜல் அகர்வால் படம் (பிரம்மோத்சவம்). ஆனால் இதனை நினைத்து நினைத்து அகமகிழும் மனநிலை அப்போது இல்லை. 

இளைப்பாறிவிட்டு அருகிலிருக்கும் நண்பன் வீட்டைத் தேடியபடி பெங்களூரு தெருக்களில் ஒரு சுற்று வந்தேன். எங்கு பார்த்தாலும் PG for Gents, PG for ladies என்று போர்டுகள் தொங்குகின்றன. முதலில் எனக்கு PGயின் விரிவாக்கம் என்னவென்று தெரியவில்லை. நண்பனிடம் கேட்டு Paying Guest என்று தெரிந்துக்கொண்டேன். ‘மெய்ன் ஹூன் நா’ படத்தில் ஷாருக் தனது கல்லூரி நண்பர் / தம்பி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குவார். அதாவது பெயருக்கேற்ப அந்த வீட்டில் நம்மை ஒரு விருந்தினர் போல கவனித்துக் கொள்வார்கள். ஆனால் தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டும் பணம் கொடுத்துவிட வேண்டும். இது சினிமா :) மெய்ன் ஹூன் நா PGக்கும் பெங்களூரு நிஜ PGகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இது கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் செட்டப். கொஞ்சம் சுதந்திரமான ஹாஸ்டல். 

PG போர்டுகளுக்கு அடுத்த படியாக அதிகம் தொங்குவது அகலக்கற்றை சேவை விளம்பரங்கள். இதில் பெங்களூருவாசிகளுக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. இவை தவிர்த்து, ஹேர் லாஸ், வெயிட் லாஸ், யோகா கிளாஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஆசாமிகளுக்கான சேவைகள் குறித்த விளம்பரங்கள். இந்த விளம்பரத்தட்டிகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன.

ஒன்று, இது வந்தேறிகளின் நகரம். இரண்டாவது, இந்த வந்தேறிகள் பெரும்பாலும் ஐ.டி துறையினர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக சில சமயங்களில் யோசிப்பதுண்டு. பெங்களூரை பார்க்கும்போது அப்படி யோசிப்பதே மகாபாவம் என்று தோன்றுகிறது. இங்கே அலுவலகத்தில் கன்னடர்களை தேட வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

நண்பன் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் கூகுள் மேப்ஸ் திணறியது. தொலைக்காட்சி நாடகமொன்றில் எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் கே.கே.நகரை தேடியலைவார்கள். கடைசியில் தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் பொங்கலுக்கு செல்வார்கள். நான் முதன்முதலில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அண்ணா நகர் நிறுவன முகவரியை கையில் வைத்துக்கொண்டு ஏறத்தாழ மொத்த ஏரியாவையும் சுற்றிவிட்டேன். யாரைக் கேட்டாலும் ‘எந்த ப்ளாக் ?’ என்று கேட்கிறார்கள். எனக்கென்ன தெரியும். என்னிடமுள்ள முகவரியில் ப்ளாக் எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட மதியம் வரை தேடியபின் முகவரியில் டோர் நம்பர் S51 என்று இருப்பதை கவனித்து, எஸ் ப்ளாக்கை தேடி கண்டடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையில் நான் அண்ணா நகருக்கே செல்வதில்லை என்று சபதம் ஏற்றுக்கொண்டேன். டிவியில் அண்ணா நகர் முதல் தெரு போட்டால் கூட பார்க்கமாட்டேன். பெங்களூரை பொறுத்தவரையில் எல்லா ஏரியாவும் அண்ணா நகர் தான். 4th க்ராஸ், 2nd மெயின் என்று தாலியருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மேப்பில் பார்க்கும்போது தெருக்கள் எல்லாம் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேர்த்தியாக இருக்கின்றன.

பெங்களூரில் முதல் தினம், நண்பரின் தயவால் அவருடைய இல்லத்தில் தரமான அசைவ உணவுடன் சிறப்பாக கழிந்தது. பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும். அடேயப்பா, நான் எப்பர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் தெரியுமா ? நானெல்லாம் வாரத்தில் எட்டு நாட்கள் (முட்டையை கணக்கிடாமல்) அசைவம் சாப்பிடுபவன் அய்யா. வேறு வழியில்லாமல், அந்த சிக்கன் மசாலா தண்ணீரை சோற்றில் குழைத்து முதல் வாய் வைக்கும்போது என் மாமியார் சமைக்கும் அற்புதமான இறால் பிரியாணியை நினைத்துக்கொண்டேன்.

இந்த துக்கங்களுக்கு மத்தியில் தனிமையும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது. தனிமை இனிமையானது, அது நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்கும்போது மட்டும். என் வாழ்வில் பல உன்னதமான தருணங்களை தனிமை எனக்கு கொடுத்திருக்கிறது. (சுய இன்பத்தை பற்றி சொல்லவில்லை). அதே தனிமைதான், இப்போது என்னை வதைக்கிறது. இயல்பில், நான் ஹோம்சிக்கெல்லாம் கிடையாது. நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறேன். ஆனால் இப்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த காதல், கல்யாணம், மனைவி, குழந்தை போன்ற லெளகீக விஷயங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். குறிப்பாக நிலாவைப் பற்றி நினைக்கும்போது கண்ணீர் துளிர்த்துவிடும் போல இருந்தது. நிற்க. இத்தனைக்கும் என் பெங்களூர் வாசம் நிரந்தரமில்லை. பெங்களூருக்கும் சென்னைக்கும் ஆறுமணிநேர பயணம். எல்லா வாரயிறுதிகளிலும் சென்னைக்கு வந்துவிடப் போகிறேன். இப்படியெல்லாம் தீர்க்கமான மனநிலையில் இருக்கும் எனக்கே இப்படி இருக்கிறதென்றால் எங்கேயோ அமீரகத்திலோ, மலேசியா, சிங்கப்பூரிலோ எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது இந்தியாவுக்கு திரும்புவோம் என்பதே தெரியாமல் மெளனமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும் ? மனதை திடப்படுத்திக்கொண்டு பெங்களூர் தினங்களின் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் அனைவரையும் மானசீகமாக நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment