Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

25 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 25112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் மாஸ் ஹீரோ படங்கள் தவிர்த்து இதுபோல பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவருவதை முதன்முறையாக பார்க்கிறேன். இரண்டாம் உலகம் பற்றி தான் சொல்கிறேன். விமர்சனம் என்று எடுத்துக்கொண்டால், அதாவது சினிமா விமர்சனம் மட்டுமல்ல அரசியல் அல்லது whatever, ஒரு விமர்சனம் என்பது அனைவரையும் திருப்தி படுத்திவிட முடியாது. அது டைம்ஸ் ஆப் இந்தியாவாக இருந்தாலும் சரி, டைம்பாஸுக்காக எழுதும் வலைப்பதிவர்களாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் அதே விதிதான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆயிரத்தில் ஒருவன் பிடித்தவருக்கு இரண்டாம் உலகம் பிடிக்காமல் போகலாம் அல்லது வைஸ் வெர்ஸா. சிலருக்கு இரண்டுமே பிடிக்காமல் போகலாம். ஆனால் இணையவெளியில் பொதுவாகவே நிறைய பேர் (என்னையும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளலாம்) தங்களுடைய விமர்சனத்தை justify செய்வதற்கு எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானவை. படம் பிடித்தவர்கள் படத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு படம் பிடிக்காதவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகிறார்கள். மறுபடியும் வைஸ் வெர்ஸா. இன்னென்ன திரைப்படங்களை இன்னென்ன வகை ஆட்களுக்கு மட்டுமே பார்க்கத் தகுதியிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். சில சமயங்களில் அதுவே ரொம்ப சீரியஸாகிப் போய் அந்த படத்தை நல்லாயிருக்கு’ன்னு சொல்பவர்களெல்லாம் மனப்பிறழ்வு ஏற்பட்டவர்கள் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.

BTW, இரண்டாம் உலகம் பார்த்து முடித்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. நாம ஏன் கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையணும். எதுக்காக ஹாலியுட்டு படங்களை பார்த்து அங்கெங்கு என தாக்கம், தழுவல் என்று சொல்லி கதை செய்ய வேண்டும். பேசாமல் வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?


கிழக்கு அதிரடி சேலில் எப்போதோ வாங்கிய சில புத்தகங்களை படிக்க நேரம் கிடைத்தது. முதலில், தத்தக்கா புத்தக்கா. எழுதியவர் ஜே.எஸ்.ராகவன். பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு சுவாரஸ்யமில்லை. மனிதர் ஆட்டோக்களை பற்றியும் அதன் ஓட்டுனர்களை பற்றியும் நிறைய ஆராய்ந்திருப்பார் போல. மொத்தம் முப்பது கதைகள். அவற்றில் பத்து ஆட்டோ சம்பந்தப்பட்டது. குறிப்பாக ஆட்டோக்காரருக்கும் பயணிக்கும் இடையே நடைபெறும் லொள்ளுத்தனமான உரையாடல்கள். இரண்டாவது, சோம. வள்ளியப்பன் எழுதிய திருமண கைடு. திருமண மேலாண்மை (!) புத்தகம். பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். கடைசியாக, டாக்டர். ஷாலினியின் பெண்கள் மனசு. உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உதாரணங்களோடு சொல்லி, அவற்றிற்கான காரணம், தீர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பெண்கள் மனசு என்பது எனக்கு கொஞ்சம் அவுட் ஆப் ஃபோகஸ் டாபிக் என்றாலும் உளவியல் சம்பந்தப்பட்டது என்பதால் முழுமையாக வாசிக்க முடிந்தது. நல்லவேளையாக இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் முழுத்தொகை கொடுத்து வாங்காமல் சல்லிசு காசில் வாங்கினேன்.

நேற்று டிவியில் எதிர்நீச்சல் பார்த்தேன். விஜய் டிவியில் வாரம் இரண்டு முறை ஒளிபரப்புவார்கள் போலிருக்கிறது. சமகால காமெடி படங்களைப் போலவே தொடங்கி அப்படியே சீரியஸான விஷயங்களை லேசாக உரசி முடித்திருக்கிறார்கள். தடகள வீராங்கனை சாந்தி விவகாரத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து சேர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் வரவேற்கலாமா என்று குழப்பமாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் சில கருத்துகளை கோடிகளில் செலவிட்டு செய்யும்போது அதில் ஒரு பத்து சதவிகிதத்தையாவது அதற்கான களப்பணிக்காக பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் செங்கல் சூளையில் பணிபுரியும் சாந்திக்கு உதவியாக இருந்திருக்கும். சாந்தி அரசு உதவியில் தடகள பயிற்சியாளராக இருப்பதாக கடைசியாக ஏதோவொரு பேட்டியில் படித்த ஞாபகம். உறுதியாக தெரியவில்லை. எதிர்நீச்சலின் க்ளைமேக்ஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் தொடர்பான தமிழ் படங்களில் க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும். சக போட்டியாளர் நாயகனை தோற்கடிக்க சதி வேலைகள் செய்வார். ப்ளேட் வைத்து கீறுவது, காலை வாரிவிடுவது, அவருடைய உணவுப்பொருளில் எதையாவது கலப்பது என்று ஏதாவது. மேலோட்டமாக பார்த்தால் சினிமா சுவாரஸ்யத்திற்காக என்றாலும் இதுபோன்ற காட்சிகள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. சக போட்டியாளரை காலை வாரிவிட்டு ஜெயிக்க வேண்டுமென்று நினைப்பவன் இரண்டாவது இடத்தை கூட பெற முடியாது. இறுதியாக, படம் பெயரில் என்ன இருக்கிறது எல்லாம் வாழ்ந்து காட்டுவதில் தான் என்பது போன்ற மாரலோடு நிறைவடைகிறது. ஆனால் படத்தின் முற்பகுதியில் சில காட்சிகளில் பெயரை வைத்துதான் நகைச்சுவை செய்கிறார்கள் என்பது நகைமுரண்.

பேசாம போறியா ? வாயில கத்திய விட்டு சுத்தவா ?
என்னுடைய திருமணத்திற்கு என்னைப் பெற்றவரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சில பேனர்கள் வைக்கப்பட்டன. இதுவும் ஒருவகையில் சுயமரியாதை மீறல்தான். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துவிட்டாயிற்று. வேறு வழியில்லை. ஏதோ நடந்து முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...? பொதுபுத்திக்காரர்கள் மத்தியில் அப்படி இருக்க முடியவில்லை. நம் பின்னணி தெரியாத சில நண்பர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்கள் எப்போதாவது விளையாட்டாக பேசும்போதெல்லாம் உனக்கென்னப்பா உங்கப்பா கட்சியிலெல்லாம் இருக்கிறார். பணத்துக்கு பஞ்சமிருக்காது என்று விளையாட்டாகத்தான் என்றாலும் சீண்டுகிறார்கள். ஒரு வகையில் உண்மை நிலை என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சீண்டிப்பார்ப்பதில் ஒரு சுகம். அல்லது ஒருத்தர் ஒரு கட்சியில், ஏதாவதொரு லெட்டர் பேடு கட்சியில் இருந்தால் கூட அவர் பல சைபர் போட்ட கோடிகளில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பார் என்று நினைக்கிறார்களா என்று புரியவில்லை. அவ்வளவு மக்குகளா...? தமிழக கட்சிகளில் பதவி, அந்தஸ்து கிடைத்து பணம் சம்பாதிப்பவர்களை விட நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், இன்னும் சொல்வதென்றால் தன்னுடைய கைக்காசை போட்டு போஸ்டர் ஓட்டும் கடைநிலை தொண்டர்கள் தான் அதிகம். என்னைப் பெற்றவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான். இதுபோலவே, பொதுபுத்திக்காரர்களில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. ஆனால் இப்போது வேண்டாம். ஓவர் புலம்பல் ஒடம்புக்கு ஆகாது...!

வ.வா.ச படத்தில் பாக்காத பாக்காத அய்யயோ பாக்காத என்றொரு பாடல். வரிகள் தான் அப்படியே தவிர பாடல் முழுவதும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பாடலின் இறுதியில் ஸ்ரீதிவ்யா படியேறி முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டு வாசலில் நிற்கிறார். சிவகார்த்தி கீழிருந்து அவரை வரச்சொல்லி சைகை காட்டுகிறார். அப்போது திவ்யா பதிலுக்கு வரமுடியாது என்று ஒரு சைகை காட்டுகிறார் பாருங்கள். சொத்தை எழுதிவைத்துவிட்டு சந்நியாசியாக போய்விடலாம். நீங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment