Showing posts with label iraval. Show all posts
Showing posts with label iraval. Show all posts

4 February 2015

இரவல் காதலி + கொட்டு மொழக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு விஷயத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்மையறியாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. நாட்டின் நிலைமை அறிந்துகொள்ள சிகப்பு நா.....டா ! என்கிற விளம்பரப் பாடல் போல குருத்தோலை, இரவல் காதலி, கொட்டு மொழக்கு, செல்லமுத்து குப்புசாமி போன்ற பதங்கள் பரிட்சயமாகிவிட்டது. எழுத்தாளர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர் என்பதாலும் ஒரு ஆர்வம். அவருடைய இரண்டு நாவல்களை புத்தகக்காட்சியில் வாங்கினேன்.

முதலில் இரவல் காதலி. கமாக்கதை தளங்களில் விரவிக்கிடக்கும் UNSATISFIED WIFE கதையொன்றில் காதல் மற்றும் பிற உணர்ச்சிகளை சேர்த்து மானே தேனே போட்டு எழுதினால் இரவல் காதலி ரெடி.

முதல் ஐம்பது பக்கங்கள் சும்மா ஜிவ்வென்று பறக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் போரடித்தது. SMS, Gtalk சம்பாஷனைகளை பார்த்ததும் ஒருவேளை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருக்குமோ என்று பதிப்பிக்கப்பட்ட வருடத்தை அவசரமாக திருப்பிப் பார்த்தேன். புதுசுதான். SMS இடத்தை வாட்ஸப்பும், GTalk இடத்தை ஃபேஸ்புக் சாட்டும் எப்போதோ நிரப்பியாயிற்றே அய்யா. மைக்ரோஸாஃப்ட் வேர்டில் ஸ்மைலி போட்டால் அது J என்று மாறிக்கொள்வதை கவனித்திருப்பீர்கள். அது வினையாகி, சம்பாஷணைகளின் இடையே அடிக்கடி J, L என்று வருகிறது.

ஐ.டி.துறை சார்ந்த நாவல் என்பதால் அதன் வகையைச சேர்ந்த ‘ராஜீவ் காந்தி சாலை’யுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ராகாசா’வில் பூர்வக்குடி மக்களின் விவசாய நிலங்களை பறித்தது, மாறிவரும் கலாசாரம், ஐடி ஊழியர்களின் வாழ்க்கைமுறை, கேப் டிரைவர்களின் கிளைக்கதைகள் என்று பலவற்றையும் தொட முயற்சி செய்திருப்பார் விநாயக முருகன். நிறைய கதாபாத்திரங்கள். சில சமயங்களில் குழப்பவும் கூட செய்தது. இரவல் காதலியில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்கள். கொஞ்சம் ஐ.டி. கொஞ்சம் விமன் ஸைக்காலஜி. கொஞ்சம் செக்ஸ் என்று பிரமாதமான ப்ளெண்ட்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர், “நான் எழுதுவதை எல்லாம் என் மனைவி படிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவதாக கூறினார். நியாயம்தான். என்னதான் ஆடவர்கள் ஆயிரம் பேர் பாராட்டினாலும் கூட பெண்ணின் பாராட்டு என்பது சிலிர்ப்பை தரக்கூடியது. அதுவும் நமக்கு உற்றவளுடைய பாராட்டு என்பது மிகவும் உன்னதமானது. அந்த வகையில் எழுத்தாளருடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா ? “நான் நான்கு பக்கங்கள் படிப்பதற்குள் தூங்கி விடுவேன்” என்று ஒரே போடாக போட்டார். என்னைக்கேட்டால் அதுவே சாலச் சிறந்தது என்பேன். இரவல் காதலி போன்ற கதையினை எழுத்தாளரின் மனைவி படித்தால் என்ன நடக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. நாளடைவில் எழுத்தாளர் எழுதுவதையெல்லாம் மனைவி உட்கார்ந்து மட்டறுத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும் ?

இரண்டாவது கொட்டு மொழக்கு.

கொட்டு மொழக்கின் பின்னட்டை பத்தி இப்படிச் செல்கிறது – கார்ப்பரேட் வாழ்க்கையின் அழுத்தங்களில் மூச்சுத்திணறும் ஒருவன்.... கொட்டு மொழக்கு மட்டுமல்ல. இந்த ஆண்டு வெளியான வேறு சில நாவல்களின் பின்னட்டைகளில் கூட ஏறத்தாழ இதே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

சமீபத்தில் நடந்த புத்தகக்காட்சியில் ஒரு போட்டோக்கார நண்பர் ஸ்டால்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நித்யானந்தா ஸ்டாலில் பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கே வீற்றிருந்த ரெடிமேட் சாமியார் போட்டோக்கார நண்பரை அமர்த்தி கபாலத்தில் கை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று கேட்டாராம். உடனே நண்பர் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட சாமியார் ஷாக் ஆகியிருக்கிறார். பின்னட்டை வாசகங்கள் எழுதும் ஆசாமிகளும் அந்த சாமியாரைப் போன்றவர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு மனக்குறையோடு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களாகவே கற்பிதம் செய்துகொள்கிறார்கள். ரைட்டு.

மரண வீடுகளை எதிர்கொள்ளத் தெரியாத ஒரு நகர நாகரிக மனிதன் என்ற கதைக்கரு பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாவலின் வட்டார மொழிநடை என்னை விழி பிதுங்க வைத்துவிட்டது. வட்டார மொழிநடை என்பது விருப்பத்திற்குரிய ஒன்றுதான். உரையாடல்கள் வட்டார மொழிநடையிலும், விவரணைகள் எழுத்துத் தமிழிலும் மாறி மாறி வரும்போது படிப்பதற்கு தொய்வில்லாமல் இருக்கும். இந்த நாவலை பொறுத்தவரையில் வட்டார மொழிநடை கொஞ்சம் ஓவர்டோஸ். குறிப்பிட்ட வட்டார மக்கள் விரும்பக்கூடும்.

சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் நாவலின் இடையே யாரோ ஒருவரை குத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் எடிமலை கதாபாத்திரம் எல்லாம் ரிட்டன் ஃபார்மட் சூரி என்றுதான் சொல்ல வேண்டும். முடியல. 

அப்புறம், மரண வீட்டு சடங்குகள் பற்றிய டீடெயிலிங். இதன் பின்னாலுள்ள எழுத்தாளரின் உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. நிறைய விவரங்களை தேடித் தேடித் தொகுத்திருக்கக்கூடும். சில இடங்களில் ‘எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யுறது தாம்பா’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போவதை எளிமையாக கடந்துபோக முடியவில்லை. எதற்காக ஒரு எழுத்தாளர் சடங்காச்சாரங்களை பற்றியெல்லாம் எழுத வேண்டும் ? அந்த சடங்குகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை தெளிவு படுத்தினாலன்றி அதனை எழுதுவதால் என்ன பயன் ? என்று புரியவில்லை.

இரண்டு நாவல்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்வதென்றால் நகர்புறத்து கதைகளை விரும்புபவர்கள் இரவல் காதலியையும், கிராமத்து கதைகளை விரும்புபவர்கள் கொட்டு மொழக்கினையும் வாசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment