அன்புள்ள வலைப்பூவிற்கு,
சிங்கம் 2 அவ்வப்போது பிட்டு பிட்டாக பார்த்ததை முன்னிட்டு சில
வரிகள். இப்பொழுதெல்லாம் முனுக்குன்னா ஏதாவதொரு அமைப்பு கேஸ் போட்டுவிடுகிறார்களே.
அதனை தவிர்க்க ஹரி எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் என்று பார்ப்போம். ஒரு
வில்லனை இஸ்லாமியராக சித்தரித்ததை சரி கட்டுவதற்காக மன்சூர் அலிகான் கதாபாத்திரம்.
ஒரு கிறிஸ்தவ தலித் ராஜேந்திரனுக்கு பதிலாக சந்தானம் கதாபாத்திரம். மன்சூர்
அலிகானை உருவத்தை முன்னிட்டு ‘காட்டெருமை’ என்று அழைக்கவேண்டிய வசனத்தை
வேண்டுமென்றே ‘பைசன்’ என்று மாற்றியிருக்கிறார். இன்னொரு காட்சியில் ‘பொட்டை’
என்று வரவேண்டிய வசனம் ‘பேடி’ என்று மாற்றப்பட்டுள்ளது. நிஜவாழ்க்கையில்
யாராவது கோபத்தில் இருக்கும்போது ‘பேடி’ என்று திட்டி பார்த்திருக்கிறீர்களா...?
எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தவர்கள் டேனி விஷயத்தில் மட்டும் கவனக்குறைவாக
விட்டிருக்கிறார்கள். சூர்யா ஒரு காட்சியில் டேனியை ‘African Animal’ என்று
திட்டுகிறார். ஒருவேளை ஆப்பிரிக்கர்கள் தமிழ் படம் பார்த்து கேசெல்லாம் போட
மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ...?
பழைய தமிழ் சினிமாக்களில் மெயின் ஹீரோயின் ஒருவர் இருக்கும்போது
இரண்டாவதாக ஒருவர் ஹீரோவை ஒருதலையாக காதலிப்பார். ஹீரோவுடன் ஒரு கனவுப்பாடலில் ‘திறமை’
காட்டுவார். ஹீரோவுக்கு உதவிகள் செய்து, படம் முடியும் தருவாயில் அற்பாயுசில் போய்ச் சேர்ந்துவிடுவார்.
அந்தமாதிரி ஒரு வேடம் ஹன்சிகாவுக்கு. சித்தப்பாவின் ஐபோன் பாஸ்வேர்ட் பயன்படுத்தி
சூர்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். ஹன்சிகாவுக்கு பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டது என்ற
காரணத்திற்காக குடும்பத்திலேயே அவரை விஷம் வைத்து கொன்றுவிடுகிறார்கள்.
அடப்பாவிகளா...! ஐபோன் பாஸ்வேர்ட் தெரிஞ்சிடுச்சு’ன்னா மாத்திக்க வேண்டியது தானே.
அதுக்கு ஏன்டா ஹன்சிகாவை போட்டீங்க...? பச்ச மண்ணுடா அது...!
மறுபடியும் சுஜாதாவிடமே திரும்பியாயிற்று. முதலில், கொலை அரங்கம்.
அப்புறம், ஒரு நடுப்பகல் மரணம். இரண்டும் க்ரைம் த்ரில்லர்கள். முதலாவதில் கணேஷ் –
வசந்த் வருகிறார்கள். ஒரு சொத்து, நான்கு வாரிசுகள். ஒருவர் மட்டும் சொத்தை
முழுமையாக அபகரிக்க முயற்சிக்கிறார். அது யாரென்பதை சஸ்பென்ஸ் கலந்து, எண்பதுகளில்
நடைபெற்ற இலங்கைத்தமிழர் போராட்டத்தை லேசாக உரசி சொல்லியிருக்கிறார். கணேஷ் –
வசந்தை படிக்கும்போது ‘அந்த’ இரட்டையர்கள் நினைவுக்கு வந்தார்கள். குறிப்பாக
வசந்த் கணேஷை ‘பாஸு’ என்று விளிப்பதும், ஃபிகர்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக
இருப்பதும் பைலட்டை நினைவூட்டியது. உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒரு கணேஷும் ஒரு
வசந்த்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொஞ்சம் இண்டலிஜென்ஸ், கொஞ்சம் ஜொள்ளு,
கொஞ்சம் பொறுப்பு, கொஞ்சம் விளையாட்டுத்தனம் எல்லாம் கலந்தவன் தானே மனிதன். ஒரு நடுப்பகல் மரணம் அதைவிட
சுவாரஸ்யமான கதை. புதுமண ஜோடியொன்று தேனிலவுக்கு செல்கிறது. கணவன்
கொல்லப்படுகிறான். வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு முன்னூறு பக்கங்களில்
க்ளைமாக்ஸை எட்டுகிறது.
க்ரைம் த்ரில்லர் நாவல், க்ரைம் த்ரில்லர் சினிமா என்றெல்லாம்
பார்க்கும்போது நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பாக
இருக்கிறது. யாரும் நம்மை டாட்டா சுமோவில் அரிவாளோடு துரத்துவதில்லை...? யாரும்
நம்மை கடத்திக்கொண்டு போய் அறையில் அடைத்து வைப்பதில்லை...? ஒரு போலீஸ்
விசாரனையில்லை. ஒரு கோர்ட், கேஸ் இல்லை. தூங்கி விழிப்பது, சாப்பிடுவது, அலுவலகம்
செல்வது. ச்சே என்ன வாழ்க்கை இது...?
![]() |
6174 நாவலுடன் தொடர்புடைய மிங்குன் ஆலயம் |
அலுவலகத்தில் தோழி ஒருவர், அவரிடம் யவன ராணி முதல் பாகம் மட்டும்
இல்லையென்று ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொண்டிருந்தார். புத்தகத்தின் விலை 210ரூ.
250க்கு மேல் வாங்கினால் இலவச டோர் டெலிவரி. என்ன செய்வது என்று யோசித்தவரிடம்
6174 என்ற நாவலைப் பற்றி நான் கேள்விப்பட்ட அருமை பெருமைகளை எல்லாம்
எடுத்துச்சொல்லி வாங்க வைத்துவிட்டேன். வேறெதற்கு...? இரவல் வாங்கி படிக்கத்தான்.
புத்தகம் தற்போது என் கைவசம்...!
இரவல் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சுமார் ஆறு
மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சாட்டில் அறிமுகமானார். பரஸ்பர நலம்
விசாரிப்புகள் கடந்து, ‘நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா...?’ என்றொரு
கேள்வியை கேட்டார். எனக்கு புரியவில்லை. ‘ஏன் கேட்கிறீர்கள்...?’ என்றேன். ‘இரவல்
வாங்கி படிக்கத்தான்...!’ என்று பதிலளித்தார். எனக்கு பக்’கென்று ஆகிவிட்டது.
அத்துடன் அவருடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். சென்ற வாரத்தில் ஒருநாள் ராஜ்
குமார் என்ற வாசகர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் ‘உங்களிடம் நிறைய புக்ஸ்
இருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். அதே ‘பக்’. அதெல்லாம் இல்லைங்க. ரீடிங்கில்
நானொரு பிகினர் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய புத்தகங்களை நான் இரவல் கொடுப்பதில்லை.
கூடாது என்றில்லை. இரவல் வாங்கும் 99.9 சதவிகிதக்காரர்கள் அதனை
திருப்பிக்கொடுப்பதில்லை. அதுகூட பிரச்சனையில்லை. கொடுத்து சிலநாள் கழித்து
புத்தகத்தை கேட்டால் அதுவா..? அது இங்கதான் எங்கேயோ இருந்துச்சு... தெரியல
மச்சான்... என்று அலட்சியமாக பதில் வரும். அட்லீஸ்ட் படிச்சியா...? என்று
கேட்டால் எங்க மாப்ள...? வண்டி கழுவுறதுக்கு கூட நேரமில்லை என்று
சலித்துக்கொள்வார்கள். அப்புறம் என்ன மா’ன்னாவுக்குடா புக்கை வாங்கின’ன்னு
கடுங்கோபம் வரும். இப்படித்தான் சென்ற புத்தகக்காட்சியில் சிங்கம் சேர, சோழ,
பாண்டியர்கள் குறித்த மூன்று புத்தகங்களை வாங்கினார். அதை இரவல் வாங்கி படித்துவிட
வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்குள் அவருடைய நண்பர் யாரோ முந்திவிட்டார். இப்ப
புக்கு எங்கடா’ன்னா என் சின்னாத்தாளோட மாமியா பொண்ணு கட்டிக்கிட்ட
பையனோட சித்தப்பன் வீட்டுல இருக்குங்குறார். எங்க போய் முட்டிக்கிறது...? புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம்...!
நீ மட்டும் இரவல் வாங்கலாமா...? என்று
கேட்கலாம். இரவல் வாங்குவதில் நான் மற்றவர்களிடம் என்ன மாதிரியான டீசன்ஸியை
எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவர்களிடமும் பின்பற்றுகிறேன். இரவல் வாங்கிய
புத்தகத்திற்கு ப்ரையாரிட்டி கொடுத்து படித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவேன்.
ஆரூர் மூனா வீட்டிலிருந்து பத்து, பதினைந்து புத்தகங்கள் எடுத்து வந்திருப்பேன்.
அவற்றில் இன்னும் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி. முடித்ததும் வீடு
தேடிச்சென்று கொடுத்துவிடுவேன். அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. திரும்பக்
கொடுத்தால் தான் அடுத்த செட்டு புத்தகங்கள் இரவல் கிடைக்கும்.
தீபிகாவுக்காக சில சமயங்களில்
யூடியூபில் பார்க்கிற பாடல். அப்படியொரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது பாடலின்
மீதான ஈர்ப்பிற்கு பாடகியும் ஒரு காரணம் என்று புரிந்தது. கணீரென்ற குரல்.
யாரென்று கூகுள் செய்தேன். சுநிதி செளஹான். தமிழில் கூட சில பாடல்களை பாடியிருக்கிறார்.
ஆனால் எதுவும் ‘டில்லி வாலி’ போல வசீகரிக்கவில்லை.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|