Showing posts with label thamizha. Show all posts
Showing posts with label thamizha. Show all posts

29 January 2014

வாசித்தவை - 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புக் மார்க்ஸ்
புத்தகக்காட்சி முடிந்த கையோடு முதலில் துவங்கிய புத்தகம். எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்களை பற்றியும் சுவாரஸ்யமான துணுக்குகள் அடங்கிய தொகுப்பு. ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், ஆதாரங்களோடு. சீவக சிந்தாமணியில் வரும் தாமரைக் கண்ணால் பருகினார்கள் என்ற சொற்றொடரைப் பற்றிய பத்தி மாஸ்டர் பீஸ்...!

சில கைவினைப் பொருட்கள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் சிறப்பாக இருக்காது. ஆனால் அது அதிக உழைப்பில் உருவாகியிருக்கும். அதுபோல புக் மார்க்ஸ் பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லாத புத்தகம் என்றாலும் அத்தனை தகவல்களை தொகுக்க என்.சொக்கன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. 

புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

தமிழா! நீ ஒரு இந்துவா?
பொதுவாக எனக்கு பிரசார வகைமை புத்தகங்களின் மீது ஈடுபாடு கிடையாது. நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தமிழா நீ ஒரு இந்துவா என்ற புத்தகத்தை தேடி, அது எங்கேயும் கிடைக்கவில்லை. திடல்லயே இல்லையாம்...! புத்தகக்காட்சிக்கு சென்றிருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் இருக்கிறதா என்று ஒரு வார்த்தை கேட்டுப்பார்த்தேன். உடனடியாக கிடைத்துவிட்டது.

சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார். அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழா! நீ ஒரு இந்துவா? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும்
இதுவும் கிட்டத்தட்ட முந்தய புத்தகத்தை போன்றது தான். தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் மிகவும் குறைந்த அளவில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், லெமுரியா,  சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. கிரேக்க கடவுள்களையும் ஹிந்து கடவுள்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் பகுதி கொஞ்சம் ரசிக்க வைத்தது. சுஜாதா விருது பெற்ற நூல் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் சொல்வதற்கில்லை.

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும் – பா.பிரபாகரன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.125 – ஆன்லைனில் வாங்க

கி.பி.2087இல்...
நான் சிறுவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதைகள் அடங்கிய நூல். ஒருவேளை நூல் வெளியான சமயத்திலேயே வாசித்திருந்தால் விரும்பியிருக்கக்கூடும். பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கைந்தை கூட முழுமையாக வாசிக்கவில்லை. 

கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25

திசை கண்டேன் வான் கண்டேன்
வாத்தியாருடைய சயின்ஸ் ஃபிக்ஷன். நோரா என்ற கிரகத்தினர் விண்வெளியில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமியை அழிக்க திட்டமிடுகிறார்கள். அது குறித்து பூமியின் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும்பொருட்டு பாரி என்னும் நோராவாசியும் அவனுடைய வாகனமும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பூமியின் எதிர்ப்பு நடவடிக்கை என்ன...? பூமி அழிந்ததா தப்பித்ததா...? என்பது கதை. மளமளவென வாசிக்க முடிந்தது. எனினும், இயந்திரா, ஜீனோ, சொர்க்கத்தீவு போன்ற அளவிற்கு ஈர்க்கவில்லை.

திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா - கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment