10 April 2013

அந்தமானில் நிறைவு நாள் - விமானப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கிட்டத்தட்ட பயணத்தொடரின் இறுதிக்கு வந்துவிட்டோம். கடைசியாக ஒருநாள் ஓய்வாக குடித்துக் களிக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தபோது நம் பயண கர்த்தா நம்மை அழைத்து, மவுண்ட். ஹேரியட் - சிடியா டாப்பு போயிட்டு வாங்க சார்... என்று அன்பொழுக கேட்டார். பணம் எதுவும் வாங்கவில்லை. வாங்குவதாக இருப்பின் ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கக்கூடும். காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு மதிய உணவை பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பினோம். முந்தய பதிவொன்றில் கண்ட சாத்தம் படகுத்துறையில் இருந்து சிறிய கப்பலொன்றில் புறப்பட்டோம். இருபது நிமிடப் பயணம். அதன்பின்பு சிறிது நேர மகிழ்வுந்து.


மவுண்ட் ஹேரியட் - பெயரைக் கேட்டதும் ஏதோ எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ ரேஞ்சுக்கு நினைத்து வைத்திருந்தேன். ஹேரியட் டெயிலர் என்கிற துரையம்மாவின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 365மீ உயரம். எவரெஸ்டின் ஐந்து சதவிகிதம் கூட கிடையாது, எனினும் அந்தமானிலேயே உயரமான மலை. எரிமலை குழம்பு ஏதோ காணக் கிடைக்கப்போகிறது என்று நினைத்தவனுக்கு மறுபடியும் ஏமாற்றம் தான்; காரக்குழம்பு கூட கிடைக்கவில்லை. உண்மையில் அது காட்டுப்பகுதியில் ‘வியூ பாயிண்டுகள்' எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட சிறு பூங்கா. ஆனால் இயற்கை இயற்கையாகவே இருக்கக்கூடிய பகுதி. அமைதியான சூழல், அதனை லேசாக குலைக்க முயலும் பறவையின் கூக்குரல், அலாதியான காற்று என்று நாற்பதை கடந்தவர்களுக்கு உகந்த சூழல்.

சிடியா டாப்பு - என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. இது மறுபடியும் ஒரு கடற்கரை பகுதி. கடற்கரைக்கு செல்வதற்கு முன்பு உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அதன் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. சிலவகை முதலைகள், மான்கள், குரங்குகள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன. அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ மேடுபள்ளங்கள் தாண்டி பயணித்தால் சிடியா டாப்பு கடற்கரை. இந்த கடற்கரைக்கு மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் சென்றால் விஷுவல் ட்ரீட். மற்ற கடற்கரைகள் போல பெரிய ஆரவாரங்கள் இருக்காது. குடும்ப பாங்கான கடற்கரை. SLR கேமராக்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல்.


அபெர்டீன் பஜார் - போர்ட் ப்ளேரின் அங்காடித்தெரு. அந்தமான் மக்களை பொறுத்தவரையில் பஜாரில் எல்லாமே கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும், சுற்றுலாப்பயணிகளுக்கு அது சரிப்பட்டு வராது. ஏனெனில் பஜாரில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் துணைக்கண்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை. விலை அதிகம், தரம் எதிர்பார்க்க முடியாது. தவிர, திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம், சாத்தூர் காராசேவு போல அந்தமானுக்கென்று ஸ்பெஷல் எதுவும் கிடையாது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடைசி நாளில் ஷாப்பிங் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அந்தமானை பொறுத்தவரையில் பிடித்த பொருளை சுற்றுலா தளங்களில் பார்த்தால் உடனே வாங்கிவிடுவது உத்தமம்.


அந்தவகையில் அந்தமானில் இருந்து வாங்கிவர உகந்த சில பொருட்கள் - அந்தமான் கடற்கரையின் படங்கள் பொறித்த டீ-ஷர்ட், மரத்தில் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகள், சிப்பியில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள். என்னுடைய கொள்முதலாக பன்னிரண்டு ஜரவா பொம்மைகளை வாங்கிவந்து உறவினர் இல்லங்களுக்கு கொடுத்தேன்.

*************************


அந்தமானை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளி செல்லும் மழலையின் மனநிலையில் தான் இருந்தேன். அதைவிட முதல் விமானப்பயணம் என்கிற படபடப்பு. ஏர் சிக்நெஸ் என்று கூகிளில் போட்டு தேடிக்கொண்டிருந்தேன். அன்றைய தினம் டிசம்பர் 26. சுனாமி நாள். நகரில் அதற்கான நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னுடைய விமான நேரம் காலை பதினோரு மணி. கோ ஏர். ஒன்பதரை மணிக்கெல்லாம் நிலையத்திற்கு சென்று அமர்ந்துவிட்டேன். விமான நிலையத்திற்கு கூட வீர சவார்க்கரின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். அந்தமானுக்கு கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா - ஆகிய நான்கு விமான சேவைகள் மட்டுமே உள்ளன. மலிவான மன நிறைவிற்கு கோ ஏரை தேர்ந்தெடுக்கலாம்.


என்னுடைய மூட்டை முடிச்சுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்கரையில் இருந்து சில அரிய வகை சிப்பிகளை பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்; ஸ்கேனிங் கருவி காட்டி கொடுத்துவிட்டது. விமான நிலைய பணியாட்களுக்கு தமிழ் தெரியாததால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டுக்கொண்டேன். என்னுடைய மூட்டை முடிச்சுகளையெல்லாம் சென்னைக்கு கொண்டு வந்திடுவீங்க தானே என்று நான்காவது முறை கேட்டபோதும் அவள் உதிர்த்த புன்னகை அழகாகத்தான் இருந்தது. பயணம் தொடங்க பதினைந்து நிமிடங்களே இருந்தன. பேருந்து ஒன்று எங்களை விமானத்திற்கு அருகாமையில் கொண்டு சென்றது.


வானில், வெகு தொலைவில் மட்டுமே பார்த்து ரசித்த விமானம். பழவந்தாங்கல், பரங்கிமலை பக்கம் விமானம் சற்று தாழ்வாக பறந்தாலே பரவசமடைவேன். அது இப்போது சில அடிகள் தொலைவில் நின்றுக்கொண்டிருக்கிறது. நான் அதில் பயணிக்கப்போகிறேன். விமானம் ஏறுவதற்கு முன்பே பறந்துக்கொண்டு தான் இருந்தேன். விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். தடதடவென படியேறினேன் - சென்னையில் கப்பலேறிய அதே வேகத்துடன். ஜன்னலோர இருக்கை வாய்த்திருந்தது. அலைபேசியில் உள்ள ஃப்ளைட் மோடை முதன்முறையாக பயன்படுத்தி பெருமை அடைந்தேன். எத்தனை சினிமாக்களில் சீட் பெல்ட் காமெடி பார்த்திருப்போம். அவ்வளவையும் பார்த்தும்கூட சீட் பெல்ட் மாட்டத்தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான். பெருமுயற்சி எடுத்து இறுதியில் நானே அணிந்துக்கொண்டேன்.

கழுகுப்பார்வையில் அந்தமான் தீவுகள்

மணி பதினொன்றை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது. விமானம் இடமும், வலமுமாக திரும்பி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென ரன்வேயில் நுழைந்து தடதடத்து உயரே எழும்பியது. அந்தமான் தீவுகளை விட்டு கடந்த சில நிமிடங்கள் கண்கொள்ளா காட்சி. கழுகுப்பார்வையில் குட்டி குட்டியாக தீவுகள் ! அதன்பிறகு கீழே வெண்பஞ்சு மேகங்களை தவிர வேறொன்றும் தெரியவில்லை. மேகங்களுக்கு இடையில் கூட எதுவும் தெரியவில்லை. ரிலேடிவ் ஸ்பீட் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதிவேக ரயிலில் செல்லும்போது வெளியே இருக்கும் மரம், செடி கொடிகளை பார்க்கும்போது தான் ரயிலின் வேகம் தெரியும். அருகிலேயே இன்னொரு அதிவேக ரயில் அதே வேகத்தில் பயணித்தால் இரண்டு ரயில்களும் நின்றுக்கொண்டிருப்பது போலவே தோன்றும். போலவே மிக மிக தொலைவில் பார்த்து பழக்கப்பட்ட மேகங்களை மிக அருகில் பார்ப்பதாலோ என்னவோ விமானம் ஏதோ அந்தரத்தில் நின்றுக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

சிங்கார சென்னை
சென்னையை அடைய வேண்டிய நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். தீப்பெட்டி சைஸில் ஒரு பொருள் கீழே தெரிந்தது. ஹார்பரில் நிற்கும் கப்பல் என்று சோம்பப்டி அவனுடைய புது மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னது சரிதான், மெரீனாவின் விசாலமான கரையை கடந்து விமானம் சென்னைக்குள் நுழைந்துக்கொண்டிருந்தது. தரையிறங்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்குமோ ? பரமசிவன் படத்தில் லைலா முருகா முருகா என்று முனங்குவாரே. மறுபடியும் விமானம் இடமும் வலமுமாக ஏதோ ஆட்டம் காட்டி சின்ன ஜெர்க் கூட இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டது. முதல் வேலையாக அந்தமான் அங்கிளுக்கு போனை போட்டு கோட்டான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.


விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தோன்றிய உணர்வு - யப்பா என்னா வெய்யிலு !


அடுத்து வருவது: அந்தமான் பயணம் - அசத்தல் டிப்ஸ்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 comments:

Ponmahes said...

ஏலே சரக்கு நல்லா இருக்கு லே .....கலக்கிபுட்டியே மக்கா ....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள, அந்தாமனுக்கே எங்கள கூட்டி பொய் வந்துடீங்க.. நன்றி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

உன்னோடு சேர்ந்து எங்களுக்கும் நல்ல அனுபவம் தான் பிரபா

ஜீவன் சுப்பு said...

//குடும்ப பாங்கான கடற்கரை. // ஹா ஹா . பெரிய ஏமாற்றம் தான் .

//ஜரவா பொம்மைகளை // அப்டின்னா ? போட்டோவாத்தான் போடுறது ...!

//அந்தமானை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளி செல்லும் மழலையின் மனநிலையில் தான் இருந்தேன்.//

வி டூ .

// நான்காவது முறை கேட்டபோதும் அவள் உதிர்த்த புன்னகை அழகாகத்தான் இருந்தது.//

ரசன ...!.சாருக்கு என்னா ரசன ..!

//பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான்.//

விமான பயணமே வெறுத்துருமே ..!

Anonymous said...

அசத்தல் டிப்ஸ் - இந்த டைட்டில் காப்பிரைட் உனக்கு யாருய்யா தந்தது?

Anonymous said...

நீயும் ஏம்ப்பா இப்படி கெளம்பிட்டே, நல்லாயிரு ராசா

அமுதா கிருஷ்ணா said...

/பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான்.//

நல்லா வேணும்....

கோவி.கண்ணன் said...

இறுதிநாள் என்று போடாமல் நிறைவு நாள் என்றும் போடலாம்.

சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் அந்தமான் தீவுகளை விமானத்தில் இருந்து பார்ப்பதுடன் சரி, சிங்கப்பூரில் இருந்து விமானம் இயக்கப்பட்டால் இரண்டு நாள் தங்கி செல்ல முடியும், போக ஆசை எப்போது வாய்க்குமோ ? தெரியவில்லை

Unknown said...

டிப்ஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...

சீனு said...

விமானப் பயண அனுபவ விவரிப்பு சூப்பர்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அந்தமான் சுற்றுலா இனிமையாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.
பயணக் கட்டுரை சுவாரசியமாக இருந்தது
டிப்ஸ் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் பிரபாகரன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//அந்தமானில் இறுதிநாள்//
தலைப்பை மாற்றி இருக்கலாமே!
வேண்டுமென்றே வைக்கப்பட்டதா?

Philosophy Prabhakaran said...

தலைப்பில் பொருட்பிழை இருப்பதாக பின்னூட்டமிட்ட நண்பர்கள் குறிப்பிட்டுள்ளமையால் தலைப்பு மாற்றப்படுகிறது...

நன்றி கோவி சார் மற்றும் TNM சார்...

மாதேவி said...

அந்தமான் பயணித்தோம்.