23 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 23122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிசம்பர் பத்து தொடங்கி ஒரு வாரத்திற்கு இணையம் வேலை செய்யவில்லை. BSNL அலுவலகத்தை அழைத்தால் சம்பந்தப்பட்ட லைன்மேன் ஊருக்கு போயிருப்பதாகவும் (அதுவும் எங்கே...? சாத்தூருக்கு...!) திரும்பிவர மூன்று நாட்களாகும் என்றும் பதில் வந்தது. ஒருவழியாக அவர் திரும்பி வந்து இணைய கோளாறை சரி செய்துக் கொடுத்த நேரம் புனே பயணத்திற்கு கிளம்ப வேண்டியதாக ஆயிற்று.

இணையம் வேலை செய்யாதது கூட ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்டது. பாரதியார், தலைவர் பிறந்தநாள் தொடர்பான ஜல்லிகளை தவிர்த்தாயிற்று. வருடா வருடம் நடைபெறுகிற கூத்துதான். ஒன்று, பாரதியார் பிறந்தநாளை மறந்துவிட்டு தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூப்பாடு போடும் கூட்டம். இரண்டு, பாரதியார், தலைவர் என இருபெரும் சகாப்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததை எண்ணி சிலாகிக்கும் கூட்டம். மூன்று, உண்மையில் பாரதியின் பால் ஈடுபாடு இல்லையென்றாலும் முதல் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க வேண்டி, பாரதிக்கு ஒரு சம்பிரதாய வாழ்த்து சொல்லிவிட்டு தலைவர் பிறந்தநாள் கும்மியடிப்பவர்கள். அப்புறம், வழக்கம்போல தலைவர் சமூகத்துக்காக என்ன செஞ்சு கிழிச்சாரு’ன்னு ஒரு குரூப் கேட்கும். அதுக்கு நடிகரிடம் ஏன் சமூக அக்கறையை எதிர்பார்க்குறீங்க’ன்னு தலைவரின் அடிபொடிகள் கேட்கும். இதுல பியூட்டி என்னன்னா – மத்த லொட்டு லொசுக்கு நடிகர்களிடமெல்லாம் எதிர்பார்க்காத சமூக அக்கறையை ஏன் தலைவரிடம் மட்டும் எதிர்பார்க்கிறார்கள்...? என்ற கேள்விக்கு அவருடைய ரசிகர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறென்ன செய்வது...? திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கிட்டு இருந்துதானே ஆகணும்...!

ஒரு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு ஆறு நாட்கள் புனே பயணம். மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. ஆட்டோக்களில் எல்லாம் பயங்கர சின்சியராக மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அதுவும் எப்படி என்றால் மீட்டரில் ஐம்பத்தி நான்கு ரூபாய் காட்டினால் கர்ம சிரத்தையுடன் மீதி ஆறு ரூபாய் சில்லறை தேடித் தருகிறார்கள். அதேபோல மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. பெருநகரம் இல்லை என்பதாலோ என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது. போகிறபோக்கில் யாருடைய வாகனத்தையாவது தட்டிவிட்டு போனால் ஒரு மன்னிப்பு கூட கேட்பதில்லை. வள்ளுவரின் வாக்குப்படி கண்டபடி துப்பார்க்கு துப்பாய துப்பி வைக்கிறார்கள். துப்புவதில் படித்தவர் / படிக்காதவர், பாலின பேதமெல்லாம் கிடையாது. நிறைய மல்டிப்ளக்ஸ்கள் உள்ளன. ஆனாலும் சினிமாப்பட போஸ்டர்களை பார்க்க முடிவதில்லை. 

வந்ததுக்கு ஏதாவதொரு லோக்கல் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்றால் எங்கு பார்த்தாலும் சன்னி லியோனின் ஜாக்பாட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நஷா’ கண்ட வரலாறு நமக்கிருந்தாலும் போனது உறவினர் வீட்டுக்கு என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாக போய்விட்டது. வெள்ளி வரை காத்திருந்து அப்சரா சினிமாஸில் தூம் 3 பார்த்தேன். பக்கா லோக்கல் தியேட்டர். ஹிந்தியில் டிக்கெட் விலை எழுதியிருந்ததை பார்த்துவிட்டு ஒரு நைண்டி ருபீஸ் டிக்கெட் என்று நூறு ரூபாயை நீட்டினேன். டிக்கெட்டுடன் மீதி ஐம்பது ரூபாய் கிடைத்தது. என்னடா இது என்று பார்த்தால் ஹிந்தியில் ஐம்பதைத் தான் தொண்ணூறு போல எழுதுகிறார்கள். அரங்கில் படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் போடுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் எந்தவித கிண்டலோ கேலியோ இல்லாமல் அனைவரும் எழுந்து அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷம் எழுப்பிவிட்டு சமத்தாக அமர்ந்துக்கொண்டார்கள். தூம் 3யில் தம், தண்ணி காட்சிகள் இல்லாததால் முகேஷ் ஹரானே செய்திப்படம் காட்டவில்லை.

ஏற்கனவே தூம் வரிசை படங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்ததால் படம் எப்படியிருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பிற்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் அமீர் கான் மூன்று காட்சிகளிலும் அபிஷேக் ஒரு காட்சியிலும் முறையே பைக், ஆட்டோ வைத்து கொரளி வித்தை காட்டுகிறார்கள். அமீருடன் ஒப்பிடும்போது அபிஷேக் வேடம் மிகவும் டம்மி போல தெரிகிறது. கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! இருந்தாலும் பிபாஷா பிசாசு இல்லாதது வருத்தம் தான். ஓரளவுக்கு உடல்மொழியை வைத்து ஹிந்தி வசனங்களை புரிந்துக்கொண்டாலும், உதய் சோப்ரா அடித்த சோக்குகள் எதுவும் புரியவில்லை. சும்மா ஹிந்திக்காரர்களுடன் சேர்ந்து கடமைக்கு சிரித்து வைத்தேன். படம் முடிந்து வெளிவந்தபோது அடுத்த காட்சிக்கு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. படம் சூப்பர்ஹிட் போல.

பயண நேரத்தில் படிப்பதற்கென சுதாகரின் 6174 எடுத்துச் சென்றிருந்தேன். நாவலை வெறுமனே படிக்க முடியவில்லை. படிக்கும்போதே குறைந்தபட்சம் ஐம்பது விஷயங்களையாவது கூகுள் செய்யவேண்டும் போலிருக்கிறது. சில விஷயங்களை உள்வாங்கும்பொருட்டு மறுமுறை படிக்க வேண்டும். படித்துவிட்டு அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம். 6174 படித்துவிட்டு தோழர் சிங்கம் என்னிடம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி நாவல் குறித்த ப்ளாட் சொன்னார். என்னுடைய நேரம், நான் அப்போது 6174 படித்திருக்கவில்லை. படித்தபின்பு சிங்கம் சொன்ன கதையும் 6174 கதையும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியாக இருந்தது. ஒருவேளை சிங்கம் அக்கதையை நாவலாக்கினால் அது 6174-ன் காப்பியாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவருடையது 6174-ஐ விட அட்டகாசமான கதை. அடுத்தடுத்த ஸ்டோரி டிஸ்கஷன் சிட்டிங்குகளில் கலந்துக்கொண்டு அக்கதையை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

Ponmahes said...

அருமை ....வாழ்த்துக்கள்....

தனிமரம் said...

இன்னும் புனோவைப்பற்றி எழுதுங்கள் ஐயா!

வவ்வால் said...

பிரபா,

"புனே வென்ற புரட்சிதமிழன்" என்பதான பட்டங்கள் வருங்காலத்தில் கிடைக்க கடாவது!!!

எந்த வெளியூருக்கு போனாலும் அதன் கலாச்சாரத்தின் அடிநாதத்தினை உணர வேண்டுமானால் சினிமா அரங்கு , சரக்கு கடைகளில் மட்டுமே முடியும். தியேட்டரை பார்த்தாப்போல ,சரக்கு கடையையும் பார்த்திருந்தால் "புனேயின் வாசம்" முழுசா புலப்பட்டிருக்க கூடும் :-))

#//மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. //

சந்தேகமே வேண்டாம், தமிழ் நாட்டைத்தாண்டினாலே இதான் நிலைமை,ஆனால் தமிழ் நாட்டில் "தமிழ்" என வாயத்தொறந்தால் என்னமோ மொழி வெறியன் போல பாக்குதுகள் சில "மாமாக்கள்" அவ்வ்.

# மும்பை ,டெல்லில ஆட்டோ கட்டணம் கம்மியா தான் இருக்கு , அதுக்கு முதல் காரணம் " சிஎன்.ஜி" வாயுல வண்டிகள் ஓடுது. ஒரு யூனிட் வாயு சுமார் 42 ரூவாத்தான்.

நம்ம ஊருல எல்பிஜியே இன்னும் முழுசா கொண்டுவரலை, சி.என்.ஜி கொண்டு வந்தால் மலிவாகலாம்.

# //கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! //

படம் ஹிட்டாக இது ஒன்னு போறாதா? பார்க்கனும் ...பார்க்கனும் ..படத்தை தான் அவ்வ்!

என்ன ஒன்னு அமீருக்கு பதிலா ரித்திக் ரோஷனே நடிச்சிருந்தால் ரோசக்கார மனுசன் "பதிலுக்கு ஒரு ஸ்ட்ரீப் டீசர் ஆடியிருப்பார் ....ஹி...ஹி... பெண் ரசிகைகளுக்குலாம் அதாம்யா புடிச்சிருக்கு அவ்வ்!

லோ ஹிப் ஜீன்,டாப்லெஸ் என கவிர்ச்சி காட்டும் ஆணழகர் ஆச்சே ரோசன் :-))

# பத்தி எழுத்தாக எழுதும் போது ஒவ்வொரு பத்திக்கும் #,*,$ என எதாவது அடையாள குறி போடவும்.

அனுஷ்யா said...

ஒரு காலத்தில் ஜொள்ளுக்கென்றே தனிப்பகுதி ஒதுக்கிய பிரபாவை இன்று கத்ரினாவையே ஆமிர்கானுக்கு பின் ஒளித்துவைக்க வைத்துவிட்டதே இந்த சமுதாயம்....

Philosophy Prabhakaran said...

தனிமரம், புனே எபிஸோடு அவ்வளவுதான்... விரிவாக எழுத விருப்பமில்லை...

Philosophy Prabhakaran said...

வவ்வால், நான் சமீபகாலமாக சரக்கடிப்பதில்லை என்பதால் புனேயின் மதுபான கலாசாரத்தை சரிவர புரிந்துக்கொள்ளமுடியவில்லை...

வெளியிலிருந்து பார்த்தவரைக்கும் தனியார் மாயம் என்பதால் உயர் ரக பானங்கள் கிடைக்கின்றன... பியர் என்று எடுத்துக்கொண்டால் Carlsberg, Heineken, Budweiser போன்றவை கிடைக்கின்றன... ஆனால் தெருவில் தள்ளாட்டம், ரோட்டோரத்தில் கவிழ்ந்தபடி செவ்வாய் நோக்கி பயணித்தல் போன்ற காட்சிகள் காணக் கிடைக்கவில்லை...

// சந்தேகமே வேண்டாம், தமிழ் நாட்டைத்தாண்டினாலே இதான் நிலைமை,ஆனால் தமிழ் நாட்டில் "தமிழ்" என வாயத்தொறந்தால் என்னமோ மொழி வெறியன் போல பாக்குதுகள் சில "மாமாக்கள்" அவ்வ். //

ஆனால் பல வட மாநிலங்களில் உள்ளூர் மொழியைக் காட்டிலும் ஹிந்தி தானே அதிகம் பேசுகிறார்கள்...

Philosophy Prabhakaran said...

மயிலன், என்ன பண்றது...? கேட்டா ஆபீஸ்ல படிக்க முடியல'ங்குறாங்க...

விட்டாக்கா உனா தானா மாதிரி ஆக்கிடுவாங்க போல :)

கனவுக்கன்னி போஸ்ட் கூட போடலாமா வேணாமான்னு யோசனைல இருக்கேன்....

unmaiyanavan said...

"//போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது//" - போக்குவரத்து விதிகள் பின்பற்றியிருந்தால் தான் ஆச்சிரியமே!!!

MANO நாஞ்சில் மனோ said...

மும்பையிலும் ஆட்டோக்காரர்கள் சரியாக மீட்டர் போட்டு காசை திருப்பி தருவதற்கு ஒரு காரணம் உண்டு பிரபா, மக்கள் அடி பின்னி விடுவார்கள்.

சென்னை போல் இங்கே இல்லை.