10 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 10022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் ஆசீர்வாதம். பெயரே அதுதான். கடவுள் மறுப்பாளர். என்னை செதுக்கியதில் அவருக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. படித்து முடித்தபிறகு எல்லா வாத்தியார்களோடும் தொடர்பு விட்டுப் போயிற்று. அதாவது நான் விடுபட்டுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு வாத்தியார்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் கூட அதனைவிட பயம் சற்று கூடுதலாக இருக்கும். வாத்தியார்கள் யாரேனும் பெயரைச் சொல்லி அழைத்தாலே கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நீ கழிசடையாத்தான் இருக்கியா...? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது. அதனால் வாத்தியார்களை எல்லாம் சந்தித்து பேசுவதோ, தொடர்பிலிருப்பதோ கிடையாது. ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதம் வாத்தியாரைப் பற்றி கூட ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தற்சமயம் ஃபேஸ்புக் வந்துவிட்டதால் பழைய வாத்தியார்களை தேடிப் பார்த்தேன் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர் அந்த காலத்திலேயே, அதாவது சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே ‘பென் ஃப்ரெண்ட்’ என்ற பதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், படிப்பு தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசுவார். நட்பு கோரினேன், ஏற்றுக்கொண்டார். அவருடைய ஃபேஸ்புக் பயன்பாடு அப்படியொன்றும் எதிர்பார்த்த வகையில் இல்லை. தமிங்கிலத்தில் வேறு எழுதிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென சாட்டுக்கு வந்து ‘என்னை நினைவிருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. தற்சமயம் நான் ஒரு தமிழ் வலைப்பதிவர் என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன். அவருக்கு அது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு கொஞ்சம் சிரமப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போதே ‘விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளவும்’ என போன் நம்பரை அனுப்பி விட்டார். எனக்கு அப்போது வழக்கம்போல உதறல் தொடங்கிவிட்டது. சங்கடமான சூழ்நிலை. அழைப்பதற்கு பயம். அழைக்காமல் விட்டாலும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். சிறிது நேர மனப்போராட்டத்திற்கு பிறகு அழைத்தேன். அவருக்கு என்னை அவ்வளவாக நினைவில்லை. என்னுடைய தந்தையின் பெயர், அவரிடம் தனிவகுப்பு படித்தது, அவர் என்னிடம் ஆசிரியரைப் பற்றி கேட்டு நான் பள்ளிக்கூட ஆசரியர் என்று புரிந்துகொண்டது எல்லாம் சொன்னபிறகு நினைவுக்கு கொண்டு வந்தார். இணையத்தில் தமிழில் எழுதத் தெரியவில்லை என்றார். அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்று வழிமுறைகளை கூறினேன். ஒரு வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதியைப் போல அவருடைய கணினியில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரெட் மென்பொருளை நிறுவ படிப்படியாக சொல்லிக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொடுத்தாயிற்று. எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அது மட்டுமில்லை. இன்னொரு பெருமையும் எனக்காக காத்திருக்கிறது. அவர் இரண்டு கவிதை புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்லி அதனை மின்புத்தக வடிவில் மாற்றித் தரும்படி கேட்டிருக்கிறார். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக இருக்கும் என்பது எனக்கு திண்ணமாக தெரியும். இருக்கட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. ஆனால் அவருக்காக அதையும் செய்து தர போகிறேன். ஆசீர்வதிக்கப்பட்டதை போல உணர்கிறேன்...!
*
ஆசீர்வாதம் வாத்தியார் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்வத்தை புனைந்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன். அது மீள் பிரசுரமாக :- வாத்தியார் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு மஞ்சக்காட்டு மைனான்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட வாத்தியார் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். அவன் குறிப்பிட்ட வரிகள் - கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”.
*
படவா... கடைசி ரெண்டு போஸ்டுல ஐஸ்வர்யாவைப் பத்தி ஜொள்ளு விட்டிருக்குற... இப்ப என்னடான்னா வாத்தியாரு, மஞ்சக்காட்டு மைனா'ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற... நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போச்சுல்ல...!
*
Freaks படம் பற்றியும், அதில் காட்டப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதுகுறித்து மேலும் சில வரிகள். அப்படத்தில் ஜோஸஃபீன் ஜோஸப் என்றொரு கதாபாத்திரம். இவர் ஒரு இருபாலின உடலி. (Hermaphrodite என்ற பதத்தை தோராயமாக மொழி பெயர்த்தேன். தவறென்றால் மன்னிக்கவும்). அதாவது இவருடைய உடலை செங்குத்தாக பகுத்தால் ஒரு புறம் பெண்ணாகவும், மறுபுறம் ஆணாகவும் இருப்பார். ஆனால் ஜோ.ஜோ உண்மையாகவே இருபாலின உடலி என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சில சமயங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டும்பொருட்டு ஆண்களே இருபாலின உடலிகளாக சித்தரிக்கப்படுவார்கள். அதாவது ஒரு புறத்தில் மட்டும் ரோமங்களை மழித்து, உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாகவும், மறுபுறம் தொள தொளவென பெண்ணின் மார்பகத்தை போல வளரவிட்டு, ஒருபுறம் ஆணின் ஆடைகளையும் மறுபுறம் பெண்ணின் ஆடைகளையும் அணிந்துக்கொள்வார்களாம். ஜோஸஃபீன் ஜோஸப்ப்பும் அந்த மாதிரி ஒருவராக இருக்கலாம். 

Freaks படத்தின் ஒரு காட்சியில் ஜோஸஃபீன் ஒரு ஆடவரை குறுகுறுவென பார்த்தபடி கடந்துசெல்வார். உடனே அந்த ஆடவருக்கு அருகிலிருப்பவர், ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கிறது ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் அடிப்பார்.
*
அடிக்கடி சுஜாதா நாவல்களைப் பற்றி எழுதுவதை பார்த்துவிட்டு நண்பர் செந்தில்குமார் சாட்டில் வந்து ரத்தம் ஒரே நிறம் படித்திருக்கிறீர்களா...? என்று கேட்டார். படித்ததில்லை என்று சொன்னதுதான் தாமதம். கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று சொல்லி என்னுடைய விலாசத்தை வாங்கி புத்தகத்தை அனுப்பவே செய்துவிட்டார். அவர் அனுப்பிய புத்தகங்கள் கையில் கிடைத்த நேரத்தில் ஒத்திசைவாக சீனு அதனை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது. சரித்திர நாவல் என்று தெரிகிறது. சுஜாதா – சரித்திரம் என்ற சேர்க்கையே ஆர்வத்தீயை கிளப்பிவிட்டாலும் அர்பணித்து படிக்க தொடர்ச்சியான சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன. தற்சமயம் செந்தில்குமார் அனுப்பிய மற்றொரு சுஜாதா நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் – ஆ...!
*
யாரோ ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் சுரேஷ் பீட்டர்ஸை பற்றி நல்லவிதமாக எழுதி கீழ்காணும் பாடலை பகிர்ந்திருந்தார். அப்படியென்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தேன். அவ்வளவுதான், பாடல் தனக்குள் என்னை வசமாக இழுத்துக் கொண்டது. வித்தியாசமான இசை, நடனம், உடைகள், அதனுடன் ஸ்வர்ணலதாவின் குரல், மீனா எல்லாமுமாக சேர்ந்து காணொளியாகவே தரவிறக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாடலின் இறுதியில் வரும் நாதஸ்வர இசையை கத்தரித்து என்னுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்துக்கொண்டேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

Ponmahes said...

கல்லூரியில் ஒரு பராசக்தி(அம்மா) மாதிரி பள்ளியில் ஒரு ஆசிர்வாதமா...நடத்து நடத்து....

// ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன்.

இதுல ஏதும் உள்குத்து இருக்கா...தம்பி ???

பாடல் அருமை....
பதிவும் அருமை....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆசிரியருக்கே வாத்தியார் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
ஆசிரியரின் கவிதையை ஒப்பீடு செய்தது நகைச்சுவைக்காக என்றாலும் முடிந்த வரை தவிர்க்கவும்.

கருப்பு சிவப்பு வெளுப்பு என்று ஒரு தொடர்கதை சுஜாதாவால் குமுதத்தில் தொடங்கப்பட்டு எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. அதுவே பின்னர் ரத்தம் ஒரே நிறம் என்று சிறிது மாற்றங்களுடன் மீண்டும் எழுதப் பட்டது

ஆ! ஓவ்வொரு அத்தியாயத்திலும் ஆ! என்று முடியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

சுவாரஸ்யமான வாத்திகளும் இருக்கத்தான் ,செய்கிறார்கள்...!

நாம வாத்திகளைக் கண்டு பயப்படுற மாதிரியே வாத்திகளும் நம்மை கண்டு பயம் என்று கேள்விப்பட்டேன் எங்கே பழசை எல்லாம் நினைச்சு இப்போ அடிச்சிபுடுவானொன்னு.

ஜேகே said...

Coolie got another gem "Raja Raja Chozhan pola" .. good song too. Mano and Sornalatha.

சீனு said...

//கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக// என்னே ஒரு உவமை

மிகப்பிடித்த ஐந்து சுஜாதா நாவல்களில் ஆ-வும் ஒன்று. அட்டகாசமாக எழுதியிருப்பார்... இதில் நாயகன் AS400 என்ற தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பதாக வரும் (துர்)அதிஷ்டவசமாக நானும் அதே தொழில்நுட்பத்தில்...

ரத்தம் ஒரே நிறம் படிப்பதற்கு; அர்ப்பணிப்பு வேண்டுமென்பது உண்மைதான்.. முதல் சில பக்கங்களின் அயற்சியை துடைதெறிவதற்கே எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன...

unmaiyanavan said...

"//எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். //" - உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்.
வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

வாத்தியார்கள் விசயத்தில் நானும் உங்களைப்போலத்தான்! வாத்தியாருக்கே பாடம் கற்பித்த கதை சூப்பர்!

'பரிவை' சே.குமார் said...

ஒரு சில ஆசிரியர்கள் நம்மால் மறக்க முடியாமல் போய்விடுவதுன்டு...

ஆசானுக்கு ஆசானாய் மாறிய கதை... நமக்கும் உண்டு...

தனிமரம் said...

ஆசிரியர்கள் சிலர் எப்போதும் நினைவில் நிற்பவர்கள். குருவுற்கே குருவா??