24 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 24032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்குவதற்கான விஜயம். புத்தகம் கிடைத்தபிறகு ஒரு சுற்று மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஜெயா டீச்சரை கண்டேன். கூடவே நான்கு வயது சுமார் மகனையும் கூட்டி வந்திருந்தார். Flashback...! நான் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி மாணவர்கள் பி.டி.மாஸ்டர் என்றாலே அலறுவார்கள். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் அப்படித்தான் என நினைக்கிறேன். பி.டி.மாஸ்டரின் பெயர் ஸ்ரீநிவாசன். நெற்றியில் செங்குத்தாக மூன்று கோடுகளை வரைந்திருப்பார். மற்ற வாத்தியார்களைப் போல சின்ன பிரம்பு அவருக்கு உபயோகப்படாது. ஆறு அடி நீளத்துக்கு சிலம்பத்திற்கு பயன்படுத்துவது போல ஒன்றை வைத்திருப்பார். அப்போது தான் தப்பியோட முயற்சிப்பவர்களை துரத்தி அடிக்க முடியும். அவர் அந்த பிரம்பை எடுத்துக்கொண்டு நடந்துவந்தால் அப்படியே நம்முடைய மூதாதையர்களை பார்த்தது போல இருக்கும். திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் சிதறி ஓடுவார்கள். அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். 

நான் ஒன்பதாவது வகுப்பிற்கு சென்றபோது புதிதாக எங்கள் பள்ளியில் ஒரு பி.டி.ஆசிரியை சேர்ந்திருந்தார். அவர்தான் ஜெயா டீச்சர். பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...! ஜெயா டீச்சரை அங்கங்கே ஓரமாக சைட் அடித்துக்கொள்வோம். ஜெயா டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரிதான், அவர் மட்டும் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருந்திருக்காவிட்டால் வரம்பு மீறி சேட்டை செய்திருப்பார்கள் மாணாக்கர். திமிர்தான் பெண்களுக்கு வேலி என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸில் ஜெயா டீச்சரை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்து கூடவே உதட்டோரத்தில் ஒரு புன்னகையும் வந்தது. நல்லவேளையாக டீச்சருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்தாலும் பேசுவதாக இல்லை. இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய பிம்பமாவது நம்முடைய மனதில் நல்லபடியாக இருக்கட்டும் என்றொரு எண்ணம். ஒன்பதாம் வகுப்பு மாணவனைப் போலவே ஜெயா டீச்சரை திருட்டுத்தனமாக சைட் அடித்து கிளம்பிவிட்டேன்.

ஹிக்கின்பாதம்ஸ் என்றதும் தொடர்ச்சியாக நூலகம் நினைவுக்கு வருகிறது. சிறுவயதிலிருந்தே நூலகம் எனக்கு விருப்பமான ஒரு இடம். எனினும் இந்நாள் வரைக்கும் ஒரு நூலகத்தின் பலனை ஒருமுறை கூட நான் முழுமையாக அனுபவித்ததில்லை. முந்தய பத்தியில் குறிப்பிட்ட அதே உயர்நிலை பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தபிறகு போய் படிக்கலாம். புத்தகங்கள் பூட்டிய கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எந்த புத்தகம் வேண்டுமென நூலகரிடம் கை காட்டினால் அவர் நல்ல மூடில் இருந்தால் மட்டும் எடுத்துக் கொடுப்பார். பிரச்சனை என்னவென்றால் அவர் பெரும்பாலான நேரங்களில் நல்ல மூடில் இருக்க மாட்டார். அதுபோன்ற நேரங்களில் வேறு வழியில்லாமல் வெளியே இறைந்து கிடக்கும் பள்ளி ஆண்டு மலர்களை எடுத்து புரட்ட வேண்டியிருக்கும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை இருந்தாலும் கூட நூலகரின் சிடுசிடு மூஞ்சி நினைவுக்கு வந்து அந்த ஆசையே போய்விடும். மேனிலை பள்ளியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். அங்கே பெண் நூலகர் என்பதால் சிடுசிடுப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் கேர்ள்ஸ் ஸ்கூலை நோக்கி உசேன் போல்ட் வேகத்தில் ஓட வேண்டும், பஸ் ஸ்டாப்பில் நின்று சைட்டடிக்க வேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்ததால் நூலகம் பெரிதாக தெரியவில்லை. 

கல்லூரி நூலகத்தில் படிப்பு சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து அதிக புத்தகங்கள் இருக்காது. அதிலும் தமிழ் மருந்துக்கு கூட இருக்காது. ஆங்கில நாளிதழ்கள், இந்தியா டுடே, கணினி சம்பந்தமான சஞ்சிகைகளை வாசிக்கலாம். கல்லூரி நூலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான்கு மணிக்கு கல்லூரி பேருந்துகள் கிளம்பிவிடுவதால் அதன்பிறகு வளாகத்தில் மாணாக்கர் நடமாட்டம் அதிகமிருக்காது. நூலகத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் சாதனை. தள்ளுமுள்ளு இல்லாமல் நிதானமாக வாசிக்கலாம். அதைவிட முக்கியமாக தினசரி ஒரு மணிநேரம் எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோவிலை எப்படி உணர்வார்களோ அதுபோல நான் நூலகத்தை உணர்ந்துக்கொண்டிருந்த சமயம் அது. மேலும் அங்குள்ள நூலகர்களுக்கு புன்னகை செய்ய தெரிந்திருந்தது. அதில் ஒரு நூலகர் இப்பொழுது கேப்டன் தொலைக்காட்சியில் ரவி பெர்னாட் ரேஞ்சுக்கு இருக்கிறார். படிப்பெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். நிறைய பழைய புத்தகங்களாகவே இருந்தன. பாக்கியம் ராமசாமியின் புத்தகம் ஒன்றை சிறிதுநேரம் புரட்டிவிட்டு திரும்பினேன். கன்னிமாரா என்று சொல்கிறார்களே அந்த நூலகத்திற்கு இதுவரைக்கும் நான் சென்றதே கிடையாது. 

திருவொற்றியூரில் ஒரு நூலகம் நீண்டகாலமாக இருக்கிறது. தற்போது அதனை புதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சேர்த்து நூலகத்துடனான என்னுடைய தொடர்பையும் புதிப்பித்துக்கொள்ள ஒரு விருப்பம். புதுப்பிப்பு பணிகள் முடியும் வரை நூலகம் தற்காலிகமாக பின் பக்கத்தில் நடத்தப்படுகிறது என்று செல்வின் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தால் நூலகம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. செல்வினை நம்ப முடியாது. சரியாக தெரியவில்லை என்றால் கூட தெரிந்த மாதிரியே அடித்துவிட்டுவிடுவார். என்னடா இது சோதனை என்று அருகிலுள்ள பூங்காவிற்குள் நுழைந்தேன். அந்த பூங்காவைப் பற்றிய சுவையான நினைவுகள் என்னிடம் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாது. வேறொன்றும் இல்லை, சொன்னா உதைப்பீங்க. நான்கு பள்ளிச்சிறுமிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மாநிறமாக லட்சணமாக இருந்தாள். பேச்சு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் செல்வின் வந்துவிட்டார். நூலகம் அதன் பழைய இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இயங்குவதால் புத்தகங்கள் கொஞ்சமாக இருந்தன. தேர்தல் முடிந்ததும் புது கட்டிடத்திற்கு போய்விடுவோம் என்று சொன்னார் நூலகர். உறுப்பினராக விண்ணப்ப படிவம் வாங்கி வந்தோம்.

இதற்கிடையே என் இல்லத்திலிருந்து நடை தொலைவிலேயே ஒரு நூலகம் இருப்பதாக என் தாயார் சொன்னார். ஏன் விடுவானேன் என்று அங்கேயும் சென்றேன். அது நூலகம் அல்ல. படிப்பகம். நாளிதழ்கள், சஞ்சிகைகள் மட்டும் வைத்திருக்கிறார்கள். மின்சார செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு மின்விசிறியை போடுவதில்லை. சென்ற பாவத்திற்காக வியர்க்க வியர்க்க ஆனந்த விகடனை புரட்டிவிட்டு திரும்பினேன்.

*****

ரொம்ப போரடித்துவிட்டேனோ...? சற்று இளைப்பாறலாம். நேற்று தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பலமுறை கேட்டு, பார்த்திருந்தாலும் ஏனோ சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடல் பிடித்துவிட்டது. செக்ஸியாக இருப்பதாக தோன்றுகிறது. இங்கே செக்ஸி என்று குறிப்பிடுவது செளந்தர்யாவையோ அவருடைய தொப்புளையோ அல்ல. ஹரிணியின் குரலையும், சிணுங்கல்களையும் தான்...! கேட்டுப் பாருங்கள்.


அடுத்து வருவது: வேலைக்கார நாயி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் - பேசிவிடக் கூடாது... // - அப்படி என்னதான் நடந்தது அன்று...?

கன்னிமாரா செல்லாதது வியப்பு தான்...!

பாடல் என்றும் இனிமை...

ஜீவன் சுப்பு said...

//இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது.//

வாத்தியாருக்கே பாடம் சொல்லிக்கொடுத்த அனுபவம் தந்த பாடம் தானே :)

கோர்வையற்ற வரிகள் - இலக்கியவாதியா மாறிட்டு இருக்கீறோ ...?

ஹரிணி - exactly correct . அது மனம் விரும்புதே, வான் எங்கும் நீ மின்ன போன்ற மெலடி ஆகட்டும் , அல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி போன்ற வெஸ்டேர்ன் ஆகட்டும் ஹரிணியோட சவுண்டிங் ரெம்ப நல்லாருக்கும் .

arasan said...

ஒரு முடிவோடத்தான் இருக்கீக போலையே ஜி ... இந்த ஸ்டைலும் நல்லா தான் இருக்கு ...

aavee said...

அன்று "ஹைரப்பா" பாடிய ஹரிணி, "சுத்தி சுத்தி வந்தீக" பாடிய ஹரிணி, இன்று "அன்பே அன்பே" பாடிய ஹரிணி என்று ஒவ்வோரு காலகட்டத்திலும் அவர் குரலின் இனிமை மேருகேறியுள்ளதை கேட்கலாம்.. :)

aavee said...

//பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...!//

பிரபா டச்!! :) :)

”தளிர் சுரேஷ்” said...

ப்ளஸ் டூ வரை நூலகம் சென்றதில்லை! அப்புறம் சில நூலகம் சென்று அங்குள்ள நூலகர்களின் கடுப்பினால் நானே சொந்தமாக நூலகம் அமைக்கத்தொடங்கி 1000 புத்தகங்களுக்கு மேல் சேர்த்து எலிகளுக்கும் செல்களுக்கும் நிறைய புத்தகங்களை பலிகொடுத்து இப்போது மீண்டும் படிக்கும் ஆர்வம் எழுந்திருக்கிறது! உள்ளூரில் நூலகம் ஒன்று இருக்கிறது! பார்ப்போம்!

வவ்வால் said...

பிரபா,

ஒயின்ஸ் ஷாப்புல நூலகத்தை ஓபன் செய்து "படிச்சாலும்" கிக் வரும்னு சொல்லுறீரா அவ்வ்!

"போதை" என்ற சொல்லுக்கு அறிவு ,ஞானம் என ஒரு பொருள் உண்டு.

போதி - கற்பி , போதை -கற்றல்/அறிவு என பெயர்ச்சொல்!

போதி என்பதில் இருந்து உருவான சொல் புத்தகம் -புத்தர் .ஆனால் வடமொழி , இப்போ புத்தகம்,போதி ,போதனை எல்லாம் தமிழாகிடுச்சு.

போதி மரம்,போதி தர்மன், போதி சத்வர் எல்லாம் அப்படித்தான்.

ஹி...ஹி எனவே நமக்கு நூலகத்திலும் கிக் வரும்!

# கன்னிமரா நூலகத்தில் ஒரு ரெண்டு வருஷம் பட்டறையே போட்டிருக்கேன்.

காலை -9 முதல் மாலை 5 வரையில் சுத்தி சுத்தி படிக்கிறோம்கிற பேருல பல புத்தகங்களை இடம் மாத்தி வைக்கிறதுண்டு , அதுல என்ன டிரிக்குனா, அடுத்து எடுக்க வேண்டிய புக்கை யாரும் எடுத்துக்கூடாதுனு ஒளிச்சு வச்சிடுவோம்ல :-))

அங்கே சுற்றுப்புறங்களில் ஒரு ரவுண்டு அடிச்சால் மெரினா பீச்சை விட நிறைய பேரு "காதல் அகழ்வுகளில்" ஈடுப்பட்டிருப்பதை காணலாம் அவ்வ்!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள்.....//.....நானும் ஒரு ஆசிரியைதான். என் மகன் கார்த்தியும் ஒரு விபத்தில் இ ....து விட்டான்.நானும் மாணவர்களை அடித்துள்ளேன்.ஆனால் அவர்கள் படிக்கவேண்டும் , முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்.என் மகன் என்னை விட்டு மேல் உலகம் சென்றதற்கு காரணம் நான் மாணவர்களை அடித்ததுதான் என்றால் ...மனம் ஊமையாக அழுகிறது.
kala karthik

Philosophy Prabhakaran said...

ஜீவன்,

// வான் எங்கும் நீ மின்ன //

என்ன பாட்டு...? நான் கேட்டதில்லையே ?

Philosophy Prabhakaran said...

தளிர் அய்யா... நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் ?

Philosophy Prabhakaran said...

கலா கார்த்திக்,

உங்களுக்கு தர்க்கரீதியான பதில் பயன் தராது என்று நினைக்கிறேன்... கலங்காதிருங்கள்... உங்கள் மாணவர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளே...

ஜீவன் சுப்பு said...

படம் - என்றென்றும் புன்னகை

Mahesh Prabhu said...

நூலகம் ஒரு கோவில்... நல்ல உவமானம்.....