Showing posts with label 3D. Show all posts
Showing posts with label 3D. Show all posts

8 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 08042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில் ஒரு நாள் - படம் பற்றியதல்ல. என்னுடைய பள்ளிப்பருவ நண்பர் ஒருவர் திடீரென முந்தய வாசகத்தில் குறிப்பிட்ட படத்திற்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பதாக அழைத்தார். நண்பர் என்னைப்போன்ற  ஏழைகளை தன்னுடைய டெபிட் கார்டை வைத்து சொறிந்துவிடக் கூடியவர். தங்க முட்டையிடும் வாத்து. அவருடைய அன்பின் பாதையில் சென்று S2 மாலில் சுற்றி ப்ளாக் ஃபாரஸ்ட், சாக்கோ லாவா கேக்கெல்லாம் வாங்கி சாப்பிட்டாயிற்று. அடுத்தது தாக சாந்தி. அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்து இறுதியில் கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்ற சொலவடைக்கு ஒத்து தி.நகர் ஈகிள் பாருக்கு சென்று அமர்ந்தோம். நண்பர் சிக்நேச்சர் தவிர்த்து வேறு எதையும் தொடுவதில்லை என்று தன்னுடைய வரலாற்று பெருமையை பேசிக்கொண்டிருந்தார். சிக்நேச்சர் டேபிளுக்கு வந்தது போல இருந்தது. அடுத்த நிமிடம் நண்பர் திரவத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு சைட் டிஷ்ஷை சாப்பாடு போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் இந்தமாதிரியான நண்பர்கள் வாய்க்கிறார்கள். என்னுடைய குணநலன்களுக்கு ஒத்திசைகிற நண்பர் வாழ்நாளுக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். இன்னமும் எனக்கான பரமனை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

*************************

ஜுராசிக் பார்க் 3Dயில் வெளிவந்திருக்கிறது. நான் முதன்முதலில் பார்த்த ஆங்கிலப்படம் அது தானென்று நினைக்கிறேன். என் வயதையொட்டிய இளைஞர்களில் பெரும்பான்மைக்கு ஜுராசிக் பார்க் படத்தின் மீதான சுவாரஸ்ய நினைவுக் குவியல் இருக்கக்கூடும். தேவி வளாக திரையரங்கங்கள் கிட்டத்தட்ட என்னுடைய ஹோம் தியேட்டர் போலாகிவிட்டன. வாரத்தில் ஏதாவது ஒரு படமாவது தேவியில் பார்த்துவிடுகிறேன். கூட்டமும் அதிகம் சேருவதில்லை என்பதால் ஏதோ எனக்கு மட்டும் ஸ்பெஷலாக திரையிடுவது போன்ற உணர்வு தோன்றி உற்சாகமூட்டுகிறது. ஜுராசிக் பார்க்கை தேவி பாலாவில் பார்த்தேன். நான்கைந்து ஆங்கில 3D படங்களின் ட்ரைலர் காட்டினார்கள். அத்தனையும் அசத்தலாகவே இருக்கின்றன. அவற்றை புரிந்துக்கொள்ள வேண்டியாவது ஆங்கிலம் கற்க வேண்டும். திரையரங்குகளில், ஒரு கையெழுத்து, மாறியது தமிழனின் தலையெழுத்து என்று ஒரு செய்திப்படம் போடுகிறார்கள். அதைப்பார்க்கும்போது புகையிலை தரக்கூடிய கொடிய... மிகவும் கொடிய நோய் அப்படியொன்றும் அருவருப்பாக தோன்றவில்லை. நல்லவேளை முகேஷ் இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடு இல்லை. தமிழில் டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் பம்மாத்து போலவே ஹாலிவுட்டில் 3D டக்கால்ட்டி போல. எனினும், 3D நுட்பம் தாண்டி கிளாசிக் சீரியஸ் என்பதற்காக டைட்டானிக், ஜுராசிக் பார்க் போன்றவைகளை மறுபடி பார்க்கலாம். அநேகமாக அடுத்த மாதத்தில் ஷெர்லின் சோப்ராவின் இயல்பான நடிப்பில் காமசூத்ரா 3D வெளியாகக்கூடும்.

*************************

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு ஏதோவொன்றை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. உதாரணத்திற்கு நீயா நானா. சில சமயங்களில் சில்லறைத்தனமான தலைப்புகளை ஒட்டி விவாதம் நடந்தாலும் கூட அதிலிருந்து ஒன்றிரண்டு படிப்பினைகளாவது கிடைத்து விடுகின்றன. நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு பேர் பேசியது எனக்கு மனதளவில் தெளிவைக் கொடுத்தது. முதலாவது, 56 இடங்களில் நேர்முகத்தேர்விற்கு சென்று வேலை கிடைக்காமல் 57வது இடத்தில் பணம்கட்டி ஏமாந்து தற்கொலைக்கு முயன்று மீண்ட இளைஞர். ஒருமுறை தற்கொலைக்கு முயன்றாலும் கூட, பணம் கட்டி ஏமாந்தாலும் கூட, தற்போது அத்தகைய குழப்பங்களில் இருந்து மீண்டு தீர்மானமான வாழ்க்கையை எட்டியிருக்கும் அந்த இளைஞர் என்னுடைய கண்களுக்கு சாதனையாளராகவே தெரிகிறார். நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறவிருந்த தற்கொலை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

இரண்டாவது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திருநங்கை. நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கிற திருநங்கைகள் எப்படியிருக்கிறார்கள். பகலில் ரயிலில் கைதட்டி பிச்சை எடுக்கிறார்கள், மாலையில் டாஸ்மாக்கில் குடித்துக் களிக்கிறார்கள், இரவில் சப்வேக்களுக்கு அருகில் நின்று அழைக்கிறார்கள். சரி, அதைப்பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். ஊடகங்களில் வெளிப்படும் திருநங்கைகள் தங்களுக்கென்று ஒரு துக்க பிலாசபி வைத்திருப்பார்கள். எங்களுக்கும் மனசிருக்கு என்பது போன்ற நெஞ்சை அடைக்கும் துக்கம் கலந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவராக தெரிந்தார். எவ்வளவு நாள் தான் நானும் செண்டிமெண்டாவே ஃபீல் பண்ணுறது என்று கேட்டு, மிகவும் ஹாஸ்யமாக தன்னுடைய வித்தியாச அனுபவங்களை சில நிமிடங்கள் பகிர்ந்துக்கொண்டார். அவர் தன்னுடைய ஞான நிலையை அடைய எத்தனை இன்னல்களை கடந்து வந்திருப்பார் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற திருநங்கைகள் அவரை ஒரு முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம்.

*************************

தொண்டை மண்டலத்தைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த விஜய நகரப் பேரரசில் ராயர் என்ற கன்னட பிராமணர்கள் பலர் முக்கியப் பதவிகளை வகித்தனர். ராயர்களுக்கு அதன் பொருட்டு அரசு மானியமாக அளித்த சென்னையின் வடக்குப்பகுதி ராயர்கள் வசித்த ராயர்புரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி ராயபுரம் ஆனது. ராயபுரம் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை உயர் வகுப்பினர் வசிக்கும் செல்வபுரியாய் இருந்த செய்தி இன்று பலருக்கும் தெரியாது. வசதிமிக்க பார்சி இனத்தவரும், ஆங்கில கனவான்களும் சிரும்பி வசித்த கடற்கரையுடன் கூடிய ராயபுரத்தின் கடந்தகாலம் அடங்கிவிட்ட பேரலையாய் நம்முன் நிற்கிறது. (ராயபுரம் பற்றி நம்ம சென்னை ஏப்ரல் மாத இதழில்...)

*************************

உலகிலேயே அருவருப்பான உணவுகள் என்று சில உள்ளன; போலவே குரூரமான முறையில் தயார் செய்யப்படும் உணவுகள் சில உள்ளன. மேற்கூறிய இரண்டு பட்டியலிலும் இடம்பெற தகுதியுள்ள ஜப்பானிய மீன் உணவுவகை - இகிஸுகுரி. உணவகத்தில் ஒரு தொட்டியில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மீனை காட்டினால், உடனடியாக சமையல் வல்லுநர் அதனை பிடித்து உயிருடன் சமைத்துக் கொடுப்பார். உயிருடன் எப்படி சமைப்பது ? பார்க்க காணொளி:


இப்ப சொல்லுங்க, இனிமேல் தியேட்டரில் முகேஷை பற்றிய செய்திப்படம் போடும்போது கண்ணை மூடிக்கொள்வீர்களா ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 March 2013

பிரபா ஒயின்ஷாப் - 11032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா ? என்னுடைய தன்னம்பிக்கை மட்டம் குறைந்துக்கொண்டிருந்தது. படுக்கையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவினேன். ராஜூ முருகனின் வட்டியும் முதலும். அதை படிக்கக்கூடிய மனநிலை அப்போது இல்லை. வேறொரு சுஜாதா புத்தகத்தை எடுத்தேன். சுமார் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். எனக்குள் ஒரு ஊக்க மருந்து ஊசி ஏற்றப்பட்ட உணர்வு. நல்லதோ, கெட்டதோ, மொக்கையோ மனதில் தோன்றுவதை எழுது என்று என்னை உந்தித்தள்ளுகிறது. அதனால் தான் அவர் வாத்தியார் என்றழைக்கப்படுகிறார் போல.


*****

சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரை, சுஜாதா பாமரர்களுக்கு மட்டுமே மேதை என்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்கிபீடியா போன்ற சோர்ஸில் இருந்து, நாட்கள், வாரங்கள், மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பதில் சொல்வாராம். ஹாய் மதனும் அப்படித்தானாம். மேலும் சுஜாதா பெருசா எதையும் சாதிக்கவில்லை. சாகித்திய அகாடமி வாங்கவில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று நிறைய புலம்பல்கள். அய்யா... மதன் எழுதிய வரலாற்று புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா ? அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா ? சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் ? கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் ? நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.

கணையாழியில் சுஜாதா எழுதியது:
பிரபலமான எழுத்தாளர் நல்ல சிறுகதை எழுத முடியாது; அது காப்பியாக இருக்க வேண்டும்.பிரபல நடிகர் நன்றாக நடிக்க முடியாது; நடித்தால் அது மார்லன் பிராண்டோவைக் காப்பி அடித்தது. நண்பர் கமல்ஹாசன் ஒருமுறை, “நான் சின்ன தப்பு பண்ணாக்கூட ஏன் சார் அத்தனை க்ரிடிக்கலாக இருக்காங்க?” என்று கேட்டார். காரணம் கமல்ஹாசன் என்பது ஒரு எஷ்டாப்லிஷ்மென்ட். அதைச் சாடுவது நவீன மனிதனின் முக்கியமான பொழுதுபோக்கு.

பொதுவாக என்னை பேட்டி காண வருகிறவர்கள் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி ‘நீங்கள் இதுவரை சாதித்தது என்ன?’ ஒரே ஒரு ஆத்மிக்குத்தான் அதற்கு ‘நான் உன்னை பேட்டிக் காண வராம நீ என்னை பேட்டி காண வந்திருக்கிறாயே, அதான்யா சாதனை' என்று பதிலளித்தேன்.

சுஜாதாவை சாடும் பழமை பேசிகளுக்கான பதில் அது.


*****

அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமையல் போட்டி நடந்தது. கலந்துக்கொண்ட பன்னிரண்டு அணிகளில் இரண்டு மட்டுமே ஆண்கள் அணி. நியாயமாக பெண்களை அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவே அனுமதித்திருக்க கூடாது. ஆண்கள் மட்டும் சமைத்து அதை பெண்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ட்ரிபியூட். ஆனால் அதன் ‘பின்' விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் பெண்களையே சமைக்க விட்டுவிட்டார்கள். கேலிகள் ஒருபுறம், மகளிர் தினத்தன்று என்னுடைய நல்வாழ்வில் பங்காற்றிய மகளிரை எண்ணிப்பார்த்தேன். (i mean counting). என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.


*****

இதோ அதோ என்று ஒருவழியாக விஸ்வரூபம் ஆரோ 3Dயில் பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறக்கும்போது மட்டும் ஏதோ நம் தலைக்கு மேல் பறப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மற்றபடி சிறப்பாக எதுவுமில்லை அல்லது விஸ்வரூபம் அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ற படமில்லை. எப்படியோ பார்த்தாகிவிட்டது, இனி பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்காது. அதற்காக நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்யலாம். இன்னமும் ஆரோ 3Dயில் பார்த்தே தீருவேன் என்று செவ்வாய் இரவுகளில் தேவுடு காப்பவர்கள், C5, 6, 7 அல்லது C12, 13, 14 போன்ற இருக்கைகள் கிடைக்குமாறு பார்த்து முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில் பல கோணங்களில் இருந்தும் ஸ்பீக்கர்கள் மிக அருகாமையில் அங்குதான் உள்ளன.


*****

நேற்று என்னுடைய மாமனாரோடு ஆல்பட் திரையரங்கில் வசந்த மாளிகை ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி கண்டேன். கர்ணன் பார்த்தபோது அவருக்கு நான்தான் அவருடைய மருமகன் என்று தெரியாது. நான் என்னுடைய பர்ஸை பிரித்தபோது அதில் அவருடைய மகளின் புகைப்படத்தை பார்த்திருப்பாரோ என்று கொஞ்சம் பதறினேன். அப்போது பலே பாண்டியா நடிகர் திலகம் போல மாமா அவர்களே என்று பம்மிக்கொண்டிருந்தவன் இப்போது என்ன மாமா செளக்கியமா ? என்று பருத்திவீரன் கார்த்தி மாதிரி கெத்து காட்ட முடிகிறது. வசந்த மாளிகை பார்த்ததைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைத்தேன். அங்கே கண்ட எழுச்சியை சில வரிகளில் அடக்குவது சாத்தியமில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

*****

ஹி ஹி ஹி... கேப்பி சிவராத்திரி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment