Showing posts with label writer. Show all posts
Showing posts with label writer. Show all posts

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

12 February 2014

வாசித்தவை – 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,


ஜாலியா தமிழ் இலக்கணம்
சென்ற புத்தகக்காட்சியிலேயே வாங்கியிருக்க வேண்டிய புத்தகம். இது அட்டையிலிருந்து அட்டை வரை ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகமில்லை. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். சொல்லப்போனால் தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள், ர-ற வேறுபாடு, ன-ண வேறுபாடு என எழுதும்போது திடீரென தோன்றி தொலைக்கும் சந்தேகங்களை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.

‘ஜாலியா’ என்பது தான் புத்தகத்தில் பிரதானம். தமிழ் என்றால் பிணக்கு என்பவர்களுக்கு பயன்படக்கூடும். மற்றவர்கள் ஜாலி பாகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரிவிலும் பிற்பகுதியில் செய்திக்கூறுகளை மட்டும் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விஷயம் மட்டும் போதும் என்பவர்கள் அதை மட்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வாங்கி பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம். அடுத்த பதிப்பின் அட்டையில் இலியானா அல்லது நயன்தாரா படத்தை போடலாம் என்பது எனது ஆலோசனை.

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் – கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்
இது எனக்கான தேநீர் கோப்பை அல்ல. உண்மையில் இது நண்பருக்காக வாங்கிய புத்தகம். அவரிடம் கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முப்பத்தைந்து பக்கங்களை தாண்ட முடியவில்லை. அதன்பிறகு சீரின்றி சில பக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.

உலகின் பண்டை நாகரிகங்களின் கடவுள்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். கிட்டத்தட்ட கடந்த பதிவில் பார்த்த குமரிக்கண்டமா...? சுமேரியமா...? புத்தகத்தை போன்றது. ஆனால் அந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தமையால் உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி சுவாரஸ்யமாக இருந்தது. இது அப்படியில்லை. அபோஃபிஸ், எனுமா எலிஷ், கில்காமேஷ் காவியம், ரஸ்ஷம்ரா என நிறைய பிதற்றொலிகள். புத்தகத்தின் இறுதியில் ரோம், கிரீஸ், ஹிந்து கடவுள்களை ஒப்பிட்டு அவற்றிலுள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145 – ஆன்லைனில் வாங்க

பாம்புத் தைலம்
பேயோன் என்பவர் யாரென்று எழுத்துலகில் நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருவதாக அறிகிறேன். இருக்கட்டும். அது எனக்கு தேவையில்லாத விஷயம்.

நான் ஏற்கனவே பேயோனின் திசைகாட்டிப்பறவை படித்திருக்கிறேன். இன்னதென்று வகைப்படுத்த முடியாமல் ஆழ்மனது போகிற போக்கில் போகும் அவருடைய எழுத்தில் ஒரு கிக் இருக்கிறது. பாம்புத்தைலமும் அப்படித்தான் இருக்கிறது. பேயோன் ஒரு சட்டையர் வாத்தியார். பின்னியெடுத்திருக்கிறார். வரும் புத்தகக்காட்சியில் எனது நூல்கள் என நூற்றியெட்டு தலைப்புகளை பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் வி.வி.சி ரகம். ரஜினி என்னும் சினிமா நடிகர் என்று ஒரு கட்டுரை வாழைப்பழ ஊசி மாதிரியான பகடி.

பாம்புத் தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100

ஆ..!
குரல் மருட்சி குறித்த கதை என்றதும் அபாரமான ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் என்னிடம் இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக செலவிட்டு ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. கிடைக்கும் இடைவெளிகளில் பத்து, இருபது நிமிடங்கள் என கொஞ்சம் கொஞ்சமாகவே படிப்பேன். அப்படி படித்ததாலேயே ஆ’வின் சிலிர்ப்பை முழுமையாக அனுபவிக்க முடிந்தது. வாத்தியார் வேறு எங்கே எவ்வளவு ரகசியத்தை அவிழ்க்க வேண்டுமோ அவ்வளவை மட்டும் கச்சிதமாக அவிழ்க்கிறார். யாரு இந்த ஜெயலட்சுமி...? யாரு கோபாலன்...? என்று அடுத்த நாள் புத்தகத்தை தொடும் வரையில் உள அலைவு படுத்தியெடுத்துவிட்டது.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி அவருடைய கண்களுக்கு மட்டும் தெரியும் ஷாலுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும் சிம்ஹா, என்ன பண்ணா பாஸ் இந்த வியாதி வரும்...? என்று கேட்பார். அதுபோல ஒரு கட்டத்தில் நமக்கும் குரல்கள் கேட்காதா...? ஜயலட்சுமியை பார்க்க முடியாதா...? என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ‘ஆ’ என்ற எழுத்தோடு முடித்திருக்கிறார். இந்த கதை தொடராக வெளிவந்தபோது வாசகர்கள் நிறைய பேருக்கு குரல் மருட்சி அனுபவம் கிடைத்திருக்கிறது.

ஆ..! – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.135 – ஆன்லைனில் வாங்க

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் !
காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த பயங்கரப் புயலை வாங்கினேன்.

கேப்டன் பிரின்ஸும் நண்பர்களும் ஒரு உல்லாசத்தீவிற்கு செல்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பன் செய்த வினையால் போலீஸ் துரத்துகிறது. எல்லோருமாக சேர்ந்து அருகிலிருக்கும் இன்னொரு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டுவாசிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவால் ஆபத்து நேர்கிறது. கூடவே இயற்கை சீற்றமும், கடலில் வாழும் ஒரு ராட்சத மீனும். நெருக்கடியை பிரின்ஸும் நண்பர்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

எப்பொழுதும் புதிய புத்தகங்களை படிக்க துவங்குவதற்கு முன்பு ஒரு முறை வாசம் பிடிப்பேன். அது ஒரு ராஜ போதை. பயங்கரப் புயல் காமிக்ஸ் ஒசத்தியான தாளில் அச்சாகியிருக்கிறது. அப்படியொரு மணம்...! படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் ! – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 28102013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கலவை இடுகை என்பது எழுதுவது நின்றுபோய் விடக்கூடாது என்பதற்காக நானாகவே ஏற்படுத்திக்கொண்ட கமிட்மென்ட். எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கூட டைரி எழுதுவது போல எதையாவது பதிந்து வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அதையும் மீறி கடந்த வாரம் எழுத முடியாத அளவிற்கு அலுவலகத்தில் ஆணி. ரிவெட் என்றுகூட சொல்லலாம். வாரத்துவக்கத்தில் இரண்டு நாட்கள் காலையிலிருந்து இரவு வரை பன்னிரண்டு மணிநேரம் பணிபுரிய வேண்டிய சூழல். பன்னிரண்டு மணிநேரம் என்பதில் சிக்கல் இல்லை. போக வர பயண நேரத்தையும் சேர்த்தால் பதினாறு மணிநேரம். ஆனால் இந்த இரண்டு நாட்களில், பீக் அவர்ஸில் அலுவலகம் நோக்கி பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர முடிந்தது. மூட்டு வலி, முதுகு வலி போன்ற சங்கடம் உள்ளவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்தால் பூரண குணமாகிவிடும். அவை இல்லாதவர்கள் பயணம் செய்தால் எல்லா வலியும் வந்து சேர்ந்துவிடும். பேச்சிலர் ரூம்களில் இருக்கும் டூத்பேஸ்டை போல பிதுக்கிவிடுகிறார்கள். கிண்டி சுரங்கப்பாதை அருகில் நடந்து செல்பவர்களிடையே கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், சில கூறு கெட்ட குக்கர்கள் முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ? என்று கேள்வி கேட்கப்போகிற நாள் வந்தாலும் வரலாம்.

ஆரூரார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் முதலாவதாக சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி வேட்டையை துவங்கினேன். ரேகா மணவயதை அடைந்த ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்து பெண். மணமகன் தேடுதல் நடைபெறுகிறது. கை நிறைய சம்பளம் வாங்கும், கெட்ட பழக்கங்களில்லாத என்று சொல்லப்படும் அர்ஜுனுக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அர்ஜுன் மேலைநாட்டு நாகரிகத்துடன் வாழ்பவன். அவனுக்கு சீட்டாட்ட, சிகரெட், மது, மாது பழக்கங்கள் இருப்பது ஒவ்வொன்றாக ரேகாவுக்கு தெரிய வருகிறது. அர்ஜுனின் நடத்தைகளால் நிம்மதியின்றி தவிக்கிறாள் ரேகா. இறுதியில் விவாகரத்து என்னும் புரட்சிகரமான முடிவை எடுக்கிறாள். இருபது வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. அப்போதைய காலகட்டத்திற்கு விவாகரத்து என்பதே புரட்சியானதாக இருந்திருக்கலாம். சமகாலத்தோடு ஒப்பிட்டால் ரேகாவின் விவாகரத்து முடிவை இயற்கையான எதிரொலிப்பு என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமானால் ரஞ்சனி செய்ததை புரட்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்து படிக்க வேண்டிய லிஸ்டில் இருப்பவை :- ஜே.கே, ஒரு நடுப்பகல் மரணம், கொலை அரங்கம், நிர்வாண நகரம். பரிசீலனைகள் வரவேற்கப்படுகின்றன.

கலிபோர்னியாவில் புதியதாக ஒரு ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டுள்ளது. சரி அதற்கென்ன என்கிறீர்களா ? உணவகம் கழிவறையுடன் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வெஸ்டர்ன் டாய்லெட் வடிவமைப்பில் இருக்கைகள், Golden Poop Rice, Smells like Poop, Bloody Number Two போன்ற உணவுவகைகள். பதறாதீர்கள் உணவுவகைகளின் பெயர் மட்டும்தான் இப்படி. உதாரணத்திற்கு Black Poop என்கிற பெயர் கொண்டது உண்மையில் Chocolate Sundae என்ற சுவையான ஐஸ்க்ரீம் ! உணவுகளும் ஒரு மினியேச்சர் டாய்லெட் பவுல் வடிவில் உள்ள ப்ளேட்டில் படைக்கப்படுகின்றன. தைவான், ஜப்பான் உட்பட பன்னிரண்டு நாடுகளில் ஏற்கனவே பிரபலமான கழிவறை கான்செப்ட் தான் இப்போது அமெரிக்காவில் என்ட்ரி அடித்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் வராதா என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். இங்கே சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அங்கு சாப்பிட்டால் கழிவறையில் அமர்ந்து சாப்பிடுகிற உணர்வு தாராளமாக கிடைக்கும். புகைப்படங்கள்.

மூடர் கூடம் பார்க்கக் கிடைத்தது. அபவ் ஆவரேஜ் என்று சொல்லலாம். கதாபத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள், ஆங்காங்கே சிறுசிறு காட்சிகள் என ரசிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த படத்தில் ஒரு பத்து வசனங்கள் க்ளாப்ஸ் அடிக்க வைக்கிற ரகம். அவை தவிர நிறைய சலிப்பூட்டுகின்றன. எனினும் படத்தில் சிந்திக்க வைக்கிற விஷயங்கள் சில இருக்கின்றன, நேரமில்லை. ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது. இன்னும் நான்கே வருடங்களில் அட்டகாசமான ஹீரோயினாக வருவார் பாருங்கள். டவுன்லோட் செய்த வெர்ஷனில் ஃபஸானா போர்ஷன் வரவில்லை. 

வார இறுதியில் சுட்ட கதை படம் பார்த்தேன். நேரம் கிடைப்பின் தனி இடுகை எழுதுகிறேன். ஆரம்பம் படத்திற்கு FDFS டிக்கெட் எடுத்தாயிற்று !

Hunt for Hint விளையாடிய அனுபவத்தை சொல்லியாக வேண்டும். முதல் ஆண்டு அந்த பக்கமே போகவில்லை. இரண்டாம் ஆண்டு விவரம் தெரியாமல் மெதுவா விளையாடிக்கலாம் என்று ரெஜிஸ்டர் மட்டும் செய்துவிட்டு சோம்பேறித்தனமாக இருந்துவிட்டேன். இந்த ஆண்டு, தேதிக்காக காத்திருந்து விளையாடத் துவங்கினேன். சில லெவல்கள் கடந்தபின்பு தான் புலி வாலை பிடித்துவிட்டதை உணர்ந்தேன். இரண்டு நாட்கள் கணினியை விட்டு எங்கேயும் நகரவில்லை / நகர முடியவில்லை. அப்படி இப்படியென போராடி இருபது லெவல்களை தாண்டியிருந்தபோது இரண்டு விஷயங்கள் நிகழ்ந்திருந்தன. ஒன்று, திங்கட்கிழமை விடிந்து அலுவலகத்திற்கு அழைத்தது. இரண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் மூளை சரிவர வேலை செய்யாமல் போனது. குடும்ப நலன் கருதி அத்துடன் விளையாட்டை நிறுத்திக்கொண்டு இனி வரும் வருடங்களில் ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாடுவதாக இருந்தால் அலுவலகத்திற்கு நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு, தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டபடி ஹாயாக விளையாட வேண்டும். HFHஐ தயார் செய்த குழுவினருக்கும், வெற்றி பெற்ற மூளைக்காரர்களுக்கும் வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 March 2013

பிரபா ஒயின்ஷாப் - 11032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா ? என்னுடைய தன்னம்பிக்கை மட்டம் குறைந்துக்கொண்டிருந்தது. படுக்கையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவினேன். ராஜூ முருகனின் வட்டியும் முதலும். அதை படிக்கக்கூடிய மனநிலை அப்போது இல்லை. வேறொரு சுஜாதா புத்தகத்தை எடுத்தேன். சுமார் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். எனக்குள் ஒரு ஊக்க மருந்து ஊசி ஏற்றப்பட்ட உணர்வு. நல்லதோ, கெட்டதோ, மொக்கையோ மனதில் தோன்றுவதை எழுது என்று என்னை உந்தித்தள்ளுகிறது. அதனால் தான் அவர் வாத்தியார் என்றழைக்கப்படுகிறார் போல.


*****

சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரை, சுஜாதா பாமரர்களுக்கு மட்டுமே மேதை என்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்கிபீடியா போன்ற சோர்ஸில் இருந்து, நாட்கள், வாரங்கள், மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பதில் சொல்வாராம். ஹாய் மதனும் அப்படித்தானாம். மேலும் சுஜாதா பெருசா எதையும் சாதிக்கவில்லை. சாகித்திய அகாடமி வாங்கவில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று நிறைய புலம்பல்கள். அய்யா... மதன் எழுதிய வரலாற்று புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா ? அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா ? சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் ? கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் ? நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.

கணையாழியில் சுஜாதா எழுதியது:
பிரபலமான எழுத்தாளர் நல்ல சிறுகதை எழுத முடியாது; அது காப்பியாக இருக்க வேண்டும்.பிரபல நடிகர் நன்றாக நடிக்க முடியாது; நடித்தால் அது மார்லன் பிராண்டோவைக் காப்பி அடித்தது. நண்பர் கமல்ஹாசன் ஒருமுறை, “நான் சின்ன தப்பு பண்ணாக்கூட ஏன் சார் அத்தனை க்ரிடிக்கலாக இருக்காங்க?” என்று கேட்டார். காரணம் கமல்ஹாசன் என்பது ஒரு எஷ்டாப்லிஷ்மென்ட். அதைச் சாடுவது நவீன மனிதனின் முக்கியமான பொழுதுபோக்கு.

பொதுவாக என்னை பேட்டி காண வருகிறவர்கள் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி ‘நீங்கள் இதுவரை சாதித்தது என்ன?’ ஒரே ஒரு ஆத்மிக்குத்தான் அதற்கு ‘நான் உன்னை பேட்டிக் காண வராம நீ என்னை பேட்டி காண வந்திருக்கிறாயே, அதான்யா சாதனை' என்று பதிலளித்தேன்.

சுஜாதாவை சாடும் பழமை பேசிகளுக்கான பதில் அது.


*****

அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமையல் போட்டி நடந்தது. கலந்துக்கொண்ட பன்னிரண்டு அணிகளில் இரண்டு மட்டுமே ஆண்கள் அணி. நியாயமாக பெண்களை அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவே அனுமதித்திருக்க கூடாது. ஆண்கள் மட்டும் சமைத்து அதை பெண்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ட்ரிபியூட். ஆனால் அதன் ‘பின்' விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் பெண்களையே சமைக்க விட்டுவிட்டார்கள். கேலிகள் ஒருபுறம், மகளிர் தினத்தன்று என்னுடைய நல்வாழ்வில் பங்காற்றிய மகளிரை எண்ணிப்பார்த்தேன். (i mean counting). என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.


*****

இதோ அதோ என்று ஒருவழியாக விஸ்வரூபம் ஆரோ 3Dயில் பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறக்கும்போது மட்டும் ஏதோ நம் தலைக்கு மேல் பறப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மற்றபடி சிறப்பாக எதுவுமில்லை அல்லது விஸ்வரூபம் அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ற படமில்லை. எப்படியோ பார்த்தாகிவிட்டது, இனி பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்காது. அதற்காக நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்யலாம். இன்னமும் ஆரோ 3Dயில் பார்த்தே தீருவேன் என்று செவ்வாய் இரவுகளில் தேவுடு காப்பவர்கள், C5, 6, 7 அல்லது C12, 13, 14 போன்ற இருக்கைகள் கிடைக்குமாறு பார்த்து முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில் பல கோணங்களில் இருந்தும் ஸ்பீக்கர்கள் மிக அருகாமையில் அங்குதான் உள்ளன.


*****

நேற்று என்னுடைய மாமனாரோடு ஆல்பட் திரையரங்கில் வசந்த மாளிகை ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி கண்டேன். கர்ணன் பார்த்தபோது அவருக்கு நான்தான் அவருடைய மருமகன் என்று தெரியாது. நான் என்னுடைய பர்ஸை பிரித்தபோது அதில் அவருடைய மகளின் புகைப்படத்தை பார்த்திருப்பாரோ என்று கொஞ்சம் பதறினேன். அப்போது பலே பாண்டியா நடிகர் திலகம் போல மாமா அவர்களே என்று பம்மிக்கொண்டிருந்தவன் இப்போது என்ன மாமா செளக்கியமா ? என்று பருத்திவீரன் கார்த்தி மாதிரி கெத்து காட்ட முடிகிறது. வசந்த மாளிகை பார்த்ததைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைத்தேன். அங்கே கண்ட எழுச்சியை சில வரிகளில் அடக்குவது சாத்தியமில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

*****

ஹி ஹி ஹி... கேப்பி சிவராத்திரி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment