Showing posts with label maaligai. Show all posts
Showing posts with label maaligai. Show all posts

13 March 2013

வசந்த மாளிகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கர்ணன் படம் டிஜிட்டலில் வெளியாகி சரியாக ஓராண்டு பூர்த்தியாகவிருக்கிறது. இப்படியொரு தருணத்தில் வசந்த மாளிகையின் மறு வெளியீடு. கிட்டத்தட்ட அதே கொண்டாட்டம், அதே ஆரவாரம். சம்பவ இடம் மட்டும் சாந்தியிலிருந்து ஆல்பட்டிற்கு மாறியிருக்கிறது. ஏன் சாந்தியில் வெளியாகவில்லை ? சொந்த திரையரங்கிலேயே ஓட்டிக்கொண்டார்கள் என்று வரலாறு பழிக்கக்கூடும். சென்ற ஆண்டு வெளிவந்த டிஜிட்டல் கர்ணன் சாந்தியில் ஓடியது ஏழு வாரங்கள், சத்யம் திரையரங்கில் 152 நாட்கள்...! அதுதான் வரலாறு...!!


நான் திரையரங்கை சென்றடைந்தபோது சாலையெங்கும் பட்டாசுக் குப்பைகள் பரவிக்கிடந்து அங்கு ஏற்கனவே நடைபெற்ற உற்சவத்தை அறிவித்தன. விளம்பர பதாகைகள் ஆல்பட்டில் துவங்கி அருகிலிருந்த டாஸ்மாக்கையும் தாண்டி வியாபித்திருந்தன. வசந்த மாளிகை அவருடைய 159வது படம் என்ற புள்ளி விவரத்திற்கு ஒத்திசைந்து 159 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஒலிபெருக்கியில் அவருடைய படப்பாடல்கள் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாக மிகுதியுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கழுத்தில் ஏதோவொரு மூவர்ண துண்டுடன் தீப்பூசணி ஏந்திக்கொண்டிருக்கிறார். கர்ணன் பார்த்தபோது அவர்கள் குடித்திருப்பார்களோ என்று சந்தேகித்தேன். சர்வநிச்சயமாக அது மது போதையல்ல. அவர் மீது கொண்ட அன்பின் உணர்ச்சிக்குவியல். அவர்தான் சிவாஜி...!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு துருவங்களாக விளங்கிய நடிகர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். ஒருவர் திரைப்படங்களில் நல்லவராக மட்டுமே நடிப்பார், மற்றொருவர் கதைக்கு தகுந்தபடி நடிப்பார். ஒருவர் ஏழைப்பங்காளனாகவே பெரும்பான்மை படங்களில் நடிப்பார். மற்றொருவர் கோர்ட்டு சூட்டு போட்டும் நடிப்பார். முன்னவர் கோட்டு சூட்டு போட்டால் ஊரார் எள்ளி நகையாடுவர். பின்னவர் கோமணம் கட்டினால் கூட ரசிக்கப்படும். அதற்கேற்ப அவர்களுடைய ரசிகர்களும் வேறுபடுவார்கள். முன்னவருடைய ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடியவர்கள், பின்னவருடைய ரசிகர்கள் தர்க்கரீதியாக செயல்படுபவர்கள். ஆனால் அங்கே ஆல்பட் திரையரங்கில் அன்றைய தினத்தில் மட்டும் உணர்வுப்பூர்வமாக உருமாறியிருந்தார்கள் இதய வேந்தனின் ரசிகர்கள்.

ஒலிபெருக்கியில் மயக்கம் என்ன கசிந்திருக்கொண்டிருக்க, ஐம்பது அல்லது அறுபதைக் கடந்த பலரும் தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் தங்கள் அன்பிற்கினிய நாயகன் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பதாக உணர்கிறார்கள். அப்போது அங்கே விவேக் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் சாத்தப்பன் வருகிறார், ஏற்கனவே கர்ணனுக்கு வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து என்னடி ராக்கம்மா என்று ஒலிபெருக்கி அலற, சாத்தப்பனை கூட்டத்தில் நடனமாட இழுத்துவிட்டனர். அவரும் தன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்திவிட்டு போனார்.

மிகுந்த நெருக்கடிக்கிடையில் திரையரங்கிற்குள் நுழைய, உள்ளே சிம்மக்குரலோன். (அந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு சிவாஜி ரசிகர்கள் மன்னிக்க). காருக்குள் பிண்ணனி பாடகர் T.M.செளந்திரராஜன். அவர் காரை விட்டு இறங்கிய சமயம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சூழ்ந்து நின்று கைதட்டி வரவேற்றது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரிபியூட்...! எழுத்துக்காக சொல்லவில்லை, எண்பதை கடந்த TMS, 50ரூபாய் டிக்கெட் வரிசையில் ரசிகர்களுடன் அமர்ந்து முழுப்படத்தையும் பார்த்தார்.

வசந்த மாளிகையை பொறுத்தவரையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, முக்காலத்திற்கும். இப்போதும் கூட வசந்த மாளிகையின் எந்த பாடலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரிமோட் கண்ட்ரோல் செயலிழந்துவிடுகிறது. தெய்வீகமான காதல் பாடல் என்று வரும்போது சூப்பர் ஸ்டாரே கூட மயக்கம் என்ன பாடலைத் தானே தெரிவு செய்தார். கோவில் திருவிழாக்களில் நடைபெறும் இசை கச்சேரிகளில் யாருக்காக பாடலை பாடியே தீரவேண்டுமென்ற எழுதப்படாத விதிமுறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் காலத்தால் அழியாத கொண்டாட்டப் பாடல். அந்தப்பாடலின் இறுதியில் நடிகர்திலகம், கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச்சக்கரம் சுத்துதடா...! அதில் நான் சக்கரவர்த்தியடா...!! என்று முடிக்கும்போது சிலிர்க்காத ரோமங்கள் உண்டா ?

டிஜிட்டல் ப்ரிண்ட், ஸ்டீரியோஸ்கோபிக் ரெஸ்டோரேஷன், லொட்டு, லொசுக்கெல்லாம் இருந்தாலென்ன, இல்லையென்றால் என்ன ? அவருடைய படங்களை பெருந்திரையில் பார்க்கக்கிடைப்பதே போதுமே !


இறுதியாக அறிந்துக்கொண்ட ஒரு தகவலோடு நிறைவு செய்கிறேன். வசந்தமாளிகை படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் திலகத்தின் தாயார் மறைந்துவிட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்து ஐந்தாம் நாள் வீட்டிலிருந்து நடிகர் திலகம், தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, ‘வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது, படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மனம் அமைதியாகவாவது இருக்கும்' என்று கூறினார். அத்தனை சோகத்திலும் தயாரிப்பாளரின் நலன் கருதி, ஒத்துழைப்பை நல்கும் அவரின் உயர்ந்த குணத்தை எண்ணி வியந்த தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கினார். நடிகர்திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கமென்ன... இந்த மெளனமென்ன...’ பாடல் காட்சி. கவலையின் ரேகையே தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார். அதுதான் சிவாஜி...!

தொடர்புடைய சுட்டிகள்:
கர்ணன் – கொண்டாட்டத் துளிகள்
ஓ மானிட ஜாதியே!
வசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 March 2013

பிரபா ஒயின்ஷாப் - 11032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா ? என்னுடைய தன்னம்பிக்கை மட்டம் குறைந்துக்கொண்டிருந்தது. படுக்கையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவினேன். ராஜூ முருகனின் வட்டியும் முதலும். அதை படிக்கக்கூடிய மனநிலை அப்போது இல்லை. வேறொரு சுஜாதா புத்தகத்தை எடுத்தேன். சுமார் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். எனக்குள் ஒரு ஊக்க மருந்து ஊசி ஏற்றப்பட்ட உணர்வு. நல்லதோ, கெட்டதோ, மொக்கையோ மனதில் தோன்றுவதை எழுது என்று என்னை உந்தித்தள்ளுகிறது. அதனால் தான் அவர் வாத்தியார் என்றழைக்கப்படுகிறார் போல.


*****

சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரை, சுஜாதா பாமரர்களுக்கு மட்டுமே மேதை என்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்கிபீடியா போன்ற சோர்ஸில் இருந்து, நாட்கள், வாரங்கள், மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பதில் சொல்வாராம். ஹாய் மதனும் அப்படித்தானாம். மேலும் சுஜாதா பெருசா எதையும் சாதிக்கவில்லை. சாகித்திய அகாடமி வாங்கவில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று நிறைய புலம்பல்கள். அய்யா... மதன் எழுதிய வரலாற்று புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா ? அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா ? சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் ? கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் ? நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.

கணையாழியில் சுஜாதா எழுதியது:
பிரபலமான எழுத்தாளர் நல்ல சிறுகதை எழுத முடியாது; அது காப்பியாக இருக்க வேண்டும்.பிரபல நடிகர் நன்றாக நடிக்க முடியாது; நடித்தால் அது மார்லன் பிராண்டோவைக் காப்பி அடித்தது. நண்பர் கமல்ஹாசன் ஒருமுறை, “நான் சின்ன தப்பு பண்ணாக்கூட ஏன் சார் அத்தனை க்ரிடிக்கலாக இருக்காங்க?” என்று கேட்டார். காரணம் கமல்ஹாசன் என்பது ஒரு எஷ்டாப்லிஷ்மென்ட். அதைச் சாடுவது நவீன மனிதனின் முக்கியமான பொழுதுபோக்கு.

பொதுவாக என்னை பேட்டி காண வருகிறவர்கள் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி ‘நீங்கள் இதுவரை சாதித்தது என்ன?’ ஒரே ஒரு ஆத்மிக்குத்தான் அதற்கு ‘நான் உன்னை பேட்டிக் காண வராம நீ என்னை பேட்டி காண வந்திருக்கிறாயே, அதான்யா சாதனை' என்று பதிலளித்தேன்.

சுஜாதாவை சாடும் பழமை பேசிகளுக்கான பதில் அது.


*****

அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமையல் போட்டி நடந்தது. கலந்துக்கொண்ட பன்னிரண்டு அணிகளில் இரண்டு மட்டுமே ஆண்கள் அணி. நியாயமாக பெண்களை அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவே அனுமதித்திருக்க கூடாது. ஆண்கள் மட்டும் சமைத்து அதை பெண்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ட்ரிபியூட். ஆனால் அதன் ‘பின்' விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் பெண்களையே சமைக்க விட்டுவிட்டார்கள். கேலிகள் ஒருபுறம், மகளிர் தினத்தன்று என்னுடைய நல்வாழ்வில் பங்காற்றிய மகளிரை எண்ணிப்பார்த்தேன். (i mean counting). என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.


*****

இதோ அதோ என்று ஒருவழியாக விஸ்வரூபம் ஆரோ 3Dயில் பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறக்கும்போது மட்டும் ஏதோ நம் தலைக்கு மேல் பறப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மற்றபடி சிறப்பாக எதுவுமில்லை அல்லது விஸ்வரூபம் அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ற படமில்லை. எப்படியோ பார்த்தாகிவிட்டது, இனி பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்காது. அதற்காக நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்யலாம். இன்னமும் ஆரோ 3Dயில் பார்த்தே தீருவேன் என்று செவ்வாய் இரவுகளில் தேவுடு காப்பவர்கள், C5, 6, 7 அல்லது C12, 13, 14 போன்ற இருக்கைகள் கிடைக்குமாறு பார்த்து முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில் பல கோணங்களில் இருந்தும் ஸ்பீக்கர்கள் மிக அருகாமையில் அங்குதான் உள்ளன.


*****

நேற்று என்னுடைய மாமனாரோடு ஆல்பட் திரையரங்கில் வசந்த மாளிகை ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி கண்டேன். கர்ணன் பார்த்தபோது அவருக்கு நான்தான் அவருடைய மருமகன் என்று தெரியாது. நான் என்னுடைய பர்ஸை பிரித்தபோது அதில் அவருடைய மகளின் புகைப்படத்தை பார்த்திருப்பாரோ என்று கொஞ்சம் பதறினேன். அப்போது பலே பாண்டியா நடிகர் திலகம் போல மாமா அவர்களே என்று பம்மிக்கொண்டிருந்தவன் இப்போது என்ன மாமா செளக்கியமா ? என்று பருத்திவீரன் கார்த்தி மாதிரி கெத்து காட்ட முடிகிறது. வசந்த மாளிகை பார்த்ததைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைத்தேன். அங்கே கண்ட எழுச்சியை சில வரிகளில் அடக்குவது சாத்தியமில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

*****

ஹி ஹி ஹி... கேப்பி சிவராத்திரி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment