Showing posts with label lakshmi. Show all posts
Showing posts with label lakshmi. Show all posts

18 June 2016

பெங்களூரு தினங்கள் - 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மே 23ம் தேதி புதிய அலுவலகத்தில் முதல்நாள். கத்தையாக விண்ணப்பப் படிவங்களிலும் சாசனங்களிலும் சலிக்காமல் கையொப்பமிட வேண்டியிருந்தது. ‘ஆறாவது’ முறையாக தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட அதே சமயத்தில் இன்னொரு பதவியேற்பு விழாவும் ஆர்பாட்டமில்லாமல் நடந்து முடிந்தது.

தொடர்கிற பத்தியை படித்துவிட்டு இவனெல்லாம் உருப்படவே மாட்டான் என்று நீங்கள் நினைக்கலாம். நினைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் அலுவல் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால் எதிர்த்தரப்புக்கு தமிழ் தெரியும் பட்சத்தில் நான் தமிழிலேயே பதிலளிப்பேன். இதில் உள்ள ‘கம்ஃபர்ட்’ ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. வேறு வழியே இல்லாத சூழல்களில் மட்டும்தான் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை கையில் எடுப்பேன். நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தமிழகத்திலேயே இருந்தாலும் ஏர்போர்ட்டுக்கோ, போஷான உணவகத்திற்கோ, ரெஸார்ட்டுக்கோ சென்றால் அங்கே ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் பேசினால்தான் மரியாதை என்று கற்பனை செய்துகொண்டு நாவை சுழட்டிக்காட்டுவார்கள். நான் இப்படிப்பட்ட வணிகம் சார்ந்த இடங்களில் துளி கூட யோசிக்காமல் தமிழிலேயே பேசுவேன். நம்மூருக்கு வந்து வியாபாரம் செய்பவர்கள் நமது மொழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பிழைக்கப் போன இடத்தில் இப்படிப்பட்ட குறிக்கொழுப்பு பேச்செல்லாம் பேச முடியுமா ?

பெங்களூர் அலுவலகத்தில் சம்பாஷனைகள் எல்லாம் இப்போதைக்கு ஆங்கிலம்தான், எதிர்தரப்புக்கு தமிழ் தெரிந்திருந்தாலும் கூட. என்ன ஒன்று, இங்கே யாரும் நம்மை மிரட்டுவதற்காகவே ஆக்ஸ்போர்டிலேயே இல்லாத வொக்கபிலேரியை பயன்படுத்துவதில்லை. அக்சென்ட் என்ற பெயரில் உள்ளூர்க்காரர்களிடமே சுழட்டிக் காட்டுவதில்லை. தெளிவான இந்திய / ஹிந்திய ஆங்கிலம்தான். இருப்பினும் நாள்முழுக்க ஆங்கிலத்தில் பேசுவது என்பது தண்டனைதான். இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ‘சாப்ட்டீங்களா தம்பி’ என்று தமிழில் கேட்டபடி ஒருவர் ஆதரவாக தோளில் கை வைத்தால் எப்படி இருக்கும் ! அதுவும் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு நபர். ‘இல்லை’ என்றதும் அருகிலுள்ள நல்ல உணவகங்களுக்கு வழி சொன்னார். 

சில விஷயங்களைப் பொறுத்தவரையில் நாமே எக்ஸ்ஃப்ளோர் செய்வதுதான் சுவாரஸ்யம். முதல்நாள் மதியம் கொஞ்ச தூரம் நடந்தபிறகு ஒரு சைவ உணவகத்தில் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் இன்னொரு கடையில் ஆம்பூர் பிரியாணி 60ரூ என்றிருந்ததை கவனித்தேன். அடுத்தடுத்த நாட்களில் அதே பகுதியில் பல ஆம்பூர் பிரியாணி கடைகள் உள்ளதை கண்டுகொண்டேன். இந்தக் கடைக்காரர்களுக்கு எல்லாம் தமிழக வரைபடத்தில் ஆம்பூர் எந்த திசையில் உள்ளது என்று கேட்டால் கூட சொல்லத் தெரியாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கடையிலும் பிரியாணியின் சுவை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது, ஆனால் எங்கேயும் பிரியாணி மாதிரி இல்லை. வாயிலேயே வைக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. இதே பிரியாணியை சென்னையில் விற்றால் கண்டிப்பாக 80 அல்லது 90 ரூபாய் வாங்குவார்கள். இங்குள்ள போட்டியின் காரணமாகவோ என்னவோ 50 அல்லது 60 ரூ மட்டும் வாங்குகிறார்கள்.

அலுவலகம், தங்குமிடம் தவிர்த்து பொது இடங்களில் வியாபாரிகளும், வழிப்போக்கர்களும் பரவலாக தமிழில் பேசுவதைக் காண முடிகிறது என்பதால் ப்ரியா ஆனந்த் போல ‘ஹேய்... நீங்க தமிழா ?’ என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதே சமயத்தில் தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பலர் தாராளமாக மூன்று அல்லது நான்கு மொழிகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே தாய்மொழி தவிர்த்து வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாத அதிக அப்பாவிகள் உள்ள ஊர் தமிழகமாகத்தான் இருக்கும்.

பெங்களூர் பற்றி மற்றவர்கள் அதிகம் பயம் காட்டிய விஷயம் – சினிமா டிக்கட் விலை. நம்மூர் மாதிரி 120 வரையறை இங்கு இல்லை. அதுவும் வார இறுதிகளில் டிமாண்டை பொறுத்து விலையை ஏற்றி இறக்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு பொருந்தும். ஆனால் எனக்கு கிடைத்த நற்பேறு என்னவென்று பாருங்கள். நான் வசிக்கும் பகுதியில் இருந்து இரண்டு கி.மீ சுற்றளவிலேயே நான்கு ஒற்றைத்திரை அரங்குகள் உள்ளன. இவற்றில் இரண்டிலாவது தமிழ் படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய / மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டும்தான். இங்கே பார்ப்பது போல ஜீரோ, களம் எல்லாம் அங்கே முடியாது.

புது ஊருக்கு போனால் அங்குள்ள கலாசாரத்தை அறிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும். அவற்றில் முதலாவது திரையரங்கம். பெங்களூரில் முதல் படமாக என்ன சினிமா பார்க்கலாம் ? வரவேற்று உற்சாகமளித்த காஜல் அகர்வால் படமா அல்லது மண்ணின் மொழியான கன்னட படமா ? கன்னட படமே பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். லூஸியா இயக்குநரின் படம் என்பது பிரதான காரணம். இங்குள்ள திரையரங்குகளில் சாதாரணமாகவே தினசரி ஐந்து காட்சிகள் ஓட்டுகிறார்கள். ஒற்றைத்திரைகளில் டிக்கட் கட்டணம் நூறு அல்லது நூற்றைம்பது இருக்கிறது. முதல் படம் பார்த்த தியேட்டர் – பாலாஜி. முன் சீட்டு ஆசாமியின் தலை திரையை மறைக்க வாய்ப்பே இல்லாத வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாரநாள் என்றாலும் அரங்கு நிறைந்திருந்தது. பெரும்பான்மை கார்ப்பரேட்களில் பணிபுரியும் ஆண்-பெண் குழுமங்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கன்னடம் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். முதல் சீனில் சப்-டைட்டிலை பார்த்ததும் பலர் உற்சாகமாக கத்தியதை வைத்து சொல்கிறேன். கேண்டீனில் கொள்ளையடிப்பதை பொறுத்தவரையில் தமிழகத்தைவிட மோசம். அஞ்சு, பத்து சில்லறை எல்லாம் தருவதில்லை. கடலைபருப்பையும், பட்டாணியையும் சில்லறைக்கு பதிலாக தள்ளிவிட்டு ஏமாற்றுகிறார்கள். ஆனால் திரையரங்கில் பார்த்த முதல் கன்னட சினிமா ஏமாற்றவில்லை.

புது ஊர் கலாசாரத்தை தெரிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் இல்லையா. முதலாவது, திரையரங்கம். இரண்டாவது என்ன என்று யூகித்திருப்பீர்கள். அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 December 2013

கனவுக்கன்னி 2013 – பாகம் 1

10. லக்ஷ்மி ப்ரியா
ங்கர் சிமெண்ட், ஏர்செல் விளம்பரங்கள் மூலம் யாரு சாமீ இவ ? என்று தேட வைத்தவர். சுட்டகதை படத்தில் சினிமா அறிமுகம். ஆறு வயது பையனின் அம்மா, புதிதாய் திருமணமான மணப்பெண், மலைவாழ் இனப்பெண் என எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தபடி தோற்றம் தரக்கூடியது லக்ஷ்மியின் ஸ்பெஷாலிட்டி. தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நடிப்பும் கைவருகிறது. கிரிக்கெட், ஃப்ரிஸ்பீ விளையாட்டுகளில் ஆர்வமுள்ள லக்ஷ்மி இந்திய 'B' அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
09. ஸ்ரீ திவ்யா
ஸ்ரீ திவ்யாவின் எழுச்சி என்று ஒரு கட்டுரையே எழுதலாமா எனக் கருதும் அளவிற்கு ஒரே படத்தில் பிரபலம் ஆகியிருக்கிறார். ஆந்திர வரவு. குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நடிகை போன்ற பரிமாணங்களை கடந்து, கதாநாயகியாக சில தெலுங்கு படங்களில் நடித்தவர். தற்போது வ.வா.ச வெற்றியின் காரணமாக ஜி.வி.பிரகாஷ் படம் உட்பட நான்கைந்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாவாடை தாவணி திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி. பாக்காத பாடலில் முடிவில் காட்டுவது போல சின்னச் சின்ன முகபாவனைகளில் மனதை அள்ளிவிடுகிறார்.
08. விஷாகா
ல் திவ்யா தூள் இப்ப திவ்யா ஆயிட்டா என்பதுதான் க.ல.தி.ஆ பார்த்தவர்களின் ஒருமித்த குரல். பார்த்தால் தமிழ் பொண்ணு மாதிரி தெரியும் விஷாகா அபுதாபியில் பிறந்த பஞ்சாபி. க.ல.தி.ஆ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு போய்விட்டார். அது மட்டுமில்லாமல் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டு மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜாவில் நடிக்க இருக்கிறார். கொஞ்சம் கோதுமை நிறத்தில் ஜொலித்தாலும் Dark is Beautiful என்கிற கேம்பெயினில் பங்கெடுத்திருக்கிறார்.
07. ரெஜினா
ண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்காவின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் ரெஜினா. அதிகம் கவனிக்கப்படாத நிர்ணயம் என்ற லோ பட்ஜெட் படத்திலும் நடித்தார். நிர்ணயம் படத்தைப் போலவே ரெஜினாவின் மீள் வருகையும் கவனிக்கப்படாமல் போனது வருத்தம். தற்சமயம் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் மும்மொழியில் தயாராகும் என் சமையல் அறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா பாப்பா.
06. மிர்த்திகா
செதுக்கி வைத்த சிலை போல் தோற்றமளிக்கும் மிர்த்திகா 555 படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் கேரளத்து பைங்கிளி. நதியா, ஷாலினி போல திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பட்சியின்  லட்சியம். இயல்பில் மிர்த்திகா ஒரு பாடகி மற்றும் நடனப்பிரியை. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரை இயக்குநர் சசி கண்டுபிடித்து நடிப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார். சசி ரசனைக்காரர். மற்ற கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை மிர்த்திகா மீது படாதது அவர்களுடைய துரதிர்ஷ்டம்.

Post Comment

10 March 2013

ஒன்பதுல குரு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அறுபதுகளில் பீச் பார்ட்டி என்கிற அமெரிக்க படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே சாயலில் சில படங்கள் வெளிவந்தன. தமிழில் வெளிவந்த கோவா கிட்டத்தட்ட அந்த ரகம் என்று கொள்ளலாம். போலவே டீன் ஃப்லிம்ஸ் என்றொரு ஜான்ரா உள்ளது. பதின்பருவ வயதினரை குறி வைத்து எடுக்கப்படும் அத்தகைய படங்கள், முதல் காதல், காம உணர்ச்சிகள், பெற்றோருடன் கலாசார இடைவெளி போன்றவற்றை மையப்படுத்தி அமைந்திருக்கும். கவர்ச்சி தூக்கலாக இருக்கும். ஒன்பதுல குரு விளம்பரங்கள் அந்த படங்களை நினைவூட்டியது. லட்சுமி ராயின் இருப்பு, மந்த்ராவின் மீள்வருகை போன்ற தகவல்களாலும் திரையரங்கிற்கு உந்தப்பட்டேன்.


திரைப்படங்கள் மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் கதையே இல்லை என்று கிண்டலடிப்பது விமர்சன க்ளிஷே. ஆனால் உண்மையிலேயே ஒன்பதுல குருவில் கதையை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டியிருக்கிறது. வாழ்க்கையை கொண்டாடும் சில பேச்சுலர்கள் திருமணத்திற்குப் பின் பேச்சு இல்லாதோராகி விடுகின்றனர். குடும்பத்தை விட்டு விலகி மீண்டும் பேச்சுலராக முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களே ROTS.

ஒன்பதுல குரு ஒரு நகைச்சுவை திரைப்படம் என்று சொல்வது தான் உச்சக்கட்ட நகைச்சுவையாக படுகிறது. நான்கைந்து நல்ல நகைச்சுவைகளை வைத்துக்கொண்டு, ஏராளமான சிரிப்பே வராத பாடாவதி காமெடிகளை சேர்த்து, கோர்வையாக இல்லாமல் பயங்கர மொக்கையாக இருக்கிறது.

பராசக்தியில் நடிகர் திலகம் அறிமுகமானபோது, “மீன்குஞ்சு மாதிரி வாய வாய தொறக்குறான்...” என்று கமெண்ட் அடித்தார்களாம். வினய்யும் அதேபோல அடிக்கடி வாயை திறக்கிறார் என்பதற்காக அவரை சிவாஜியாகவோ, வாயை கோணலாக வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து பேசுவதால் ரஜினியாகவோ, படத்தில் பில்லா என்ற பெயரை சூட்டிக்கொண்டதற்காக அஜித்தாகவோ கருதிவிட முடியாது. வினய்க்கு பொருந்தாத வேடம். குறிப்பாக பாடல்காட்சிகளில் அவருடைய வாயசைப்பு நாசம்.

சத்யன், ப்ரேம்ஜியின் நடிப்பு எரிச்சலும் இரைச்சலும் கலந்த கூட்டுக்கலவை. அரவிந்த் அகாஷும் உடன் இணைந்து சலம்பாதது ஆறுதலளிக்கிறது. ஒன்பது குருவின் பிரதான வேடங்களில் முதலில் நடிப்பதாக இருந்தவர்கள், நகுல், சிவா, சந்தானம், ப்ரேம்ஜி. ஒப்பீட்டளவில் நல்ல காம்பினேஷன். பவர் ஸ்டாரின் கோமாளித்தனங்களை எல்லாம் ஒருமுறை தான் ரசிக்க முடியும்.


லட்சுமி ராய் - மங்களகரமான பெயர். புத்தம் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் போல பளபளப்பாக இருக்கிறார். மைதா மாவை பிசைந்து செய்யப்பட்ட ஐந்தே முக்கால் அடி சிலை. மனோபாலாவின் மனைவியாக வருபவர் வல்லிய கேரளத்து பெண்குட்டி. சோனா, மந்த்ரா போன்ற டபுள் டக்கர் ஆண்ட்டிகள் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, லட்சுமி ராய், சாம்ஸ், பவர் ஸ்டார் போன்ற நல்ல ரிசோர்ஸஸ் வீணடிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர், வசனம் எழுதியவர் எல்லாம் பெரிதாக எதுவும் உழைக்கவில்லை. பழைய பாடல்கள், பழைய படங்களின் பிண்ணனி இசை, பிரபலமான வசனங்கள், இதையெல்லாம் கொஞ்சம் டிங்கரிங் செய்தோ செய்யாமலோ சொருகியிருக்கிறார்கள். முதலில் பழைய பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவர வேண்டும். ஆல்ரைட், சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் ஆரம்பித்த போது ரசிக்க வைத்தது. ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் ? ஒரு ரம்மியமான இரவுப்பொழுதில் வா வா அன்பே அன்பே பாடலையோ கடலோர கவிதைகள் பாடலையோ கேட்கும்போது உங்களுக்கு சோனாவும் ப்ரேம்ஜியும் நினைவுக்கு வந்தால் எப்படி இருக்கும் ? மாட்டு சாணம்.

திருமணம் செய்துகொள்பவர்கள் ஒன்பதுல குரு, எட்டுல சனி, மூணுல ராகு என்று ராசி, ஜாதகமெல்லாம் பார்த்து திருமணம் செய்வதை விட, தமக்கு மனதளவில் பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒன்பதுல குருவின் மையக்கருத்தாக நாமே வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். படக்குழுவினரை பொறுத்தவரையில் மந்த்ரா, சோனா, லட்சுமி ராய், அப்புறம் நிறைய துணை நடிகைகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்று நன்றாக கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள்லாம் நல்லா வருவீங்க !

ஒன்பதுல குரு - தேவி திரையரங்கில் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்கும் சாமர்த்தியம் இருப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment