Showing posts with label paambu. Show all posts
Showing posts with label paambu. Show all posts

12 February 2014

வாசித்தவை – 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,


ஜாலியா தமிழ் இலக்கணம்
சென்ற புத்தகக்காட்சியிலேயே வாங்கியிருக்க வேண்டிய புத்தகம். இது அட்டையிலிருந்து அட்டை வரை ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகமில்லை. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். சொல்லப்போனால் தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள், ர-ற வேறுபாடு, ன-ண வேறுபாடு என எழுதும்போது திடீரென தோன்றி தொலைக்கும் சந்தேகங்களை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.

‘ஜாலியா’ என்பது தான் புத்தகத்தில் பிரதானம். தமிழ் என்றால் பிணக்கு என்பவர்களுக்கு பயன்படக்கூடும். மற்றவர்கள் ஜாலி பாகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரிவிலும் பிற்பகுதியில் செய்திக்கூறுகளை மட்டும் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விஷயம் மட்டும் போதும் என்பவர்கள் அதை மட்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வாங்கி பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம். அடுத்த பதிப்பின் அட்டையில் இலியானா அல்லது நயன்தாரா படத்தை போடலாம் என்பது எனது ஆலோசனை.

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் – கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்
இது எனக்கான தேநீர் கோப்பை அல்ல. உண்மையில் இது நண்பருக்காக வாங்கிய புத்தகம். அவரிடம் கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முப்பத்தைந்து பக்கங்களை தாண்ட முடியவில்லை. அதன்பிறகு சீரின்றி சில பக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.

உலகின் பண்டை நாகரிகங்களின் கடவுள்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். கிட்டத்தட்ட கடந்த பதிவில் பார்த்த குமரிக்கண்டமா...? சுமேரியமா...? புத்தகத்தை போன்றது. ஆனால் அந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தமையால் உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி சுவாரஸ்யமாக இருந்தது. இது அப்படியில்லை. அபோஃபிஸ், எனுமா எலிஷ், கில்காமேஷ் காவியம், ரஸ்ஷம்ரா என நிறைய பிதற்றொலிகள். புத்தகத்தின் இறுதியில் ரோம், கிரீஸ், ஹிந்து கடவுள்களை ஒப்பிட்டு அவற்றிலுள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145 – ஆன்லைனில் வாங்க

பாம்புத் தைலம்
பேயோன் என்பவர் யாரென்று எழுத்துலகில் நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருவதாக அறிகிறேன். இருக்கட்டும். அது எனக்கு தேவையில்லாத விஷயம்.

நான் ஏற்கனவே பேயோனின் திசைகாட்டிப்பறவை படித்திருக்கிறேன். இன்னதென்று வகைப்படுத்த முடியாமல் ஆழ்மனது போகிற போக்கில் போகும் அவருடைய எழுத்தில் ஒரு கிக் இருக்கிறது. பாம்புத்தைலமும் அப்படித்தான் இருக்கிறது. பேயோன் ஒரு சட்டையர் வாத்தியார். பின்னியெடுத்திருக்கிறார். வரும் புத்தகக்காட்சியில் எனது நூல்கள் என நூற்றியெட்டு தலைப்புகளை பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் வி.வி.சி ரகம். ரஜினி என்னும் சினிமா நடிகர் என்று ஒரு கட்டுரை வாழைப்பழ ஊசி மாதிரியான பகடி.

பாம்புத் தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100

ஆ..!
குரல் மருட்சி குறித்த கதை என்றதும் அபாரமான ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் என்னிடம் இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக செலவிட்டு ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. கிடைக்கும் இடைவெளிகளில் பத்து, இருபது நிமிடங்கள் என கொஞ்சம் கொஞ்சமாகவே படிப்பேன். அப்படி படித்ததாலேயே ஆ’வின் சிலிர்ப்பை முழுமையாக அனுபவிக்க முடிந்தது. வாத்தியார் வேறு எங்கே எவ்வளவு ரகசியத்தை அவிழ்க்க வேண்டுமோ அவ்வளவை மட்டும் கச்சிதமாக அவிழ்க்கிறார். யாரு இந்த ஜெயலட்சுமி...? யாரு கோபாலன்...? என்று அடுத்த நாள் புத்தகத்தை தொடும் வரையில் உள அலைவு படுத்தியெடுத்துவிட்டது.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி அவருடைய கண்களுக்கு மட்டும் தெரியும் ஷாலுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும் சிம்ஹா, என்ன பண்ணா பாஸ் இந்த வியாதி வரும்...? என்று கேட்பார். அதுபோல ஒரு கட்டத்தில் நமக்கும் குரல்கள் கேட்காதா...? ஜயலட்சுமியை பார்க்க முடியாதா...? என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ‘ஆ’ என்ற எழுத்தோடு முடித்திருக்கிறார். இந்த கதை தொடராக வெளிவந்தபோது வாசகர்கள் நிறைய பேருக்கு குரல் மருட்சி அனுபவம் கிடைத்திருக்கிறது.

ஆ..! – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.135 – ஆன்லைனில் வாங்க

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் !
காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த பயங்கரப் புயலை வாங்கினேன்.

கேப்டன் பிரின்ஸும் நண்பர்களும் ஒரு உல்லாசத்தீவிற்கு செல்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பன் செய்த வினையால் போலீஸ் துரத்துகிறது. எல்லோருமாக சேர்ந்து அருகிலிருக்கும் இன்னொரு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டுவாசிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவால் ஆபத்து நேர்கிறது. கூடவே இயற்கை சீற்றமும், கடலில் வாழும் ஒரு ராட்சத மீனும். நெருக்கடியை பிரின்ஸும் நண்பர்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

எப்பொழுதும் புதிய புத்தகங்களை படிக்க துவங்குவதற்கு முன்பு ஒரு முறை வாசம் பிடிப்பேன். அது ஒரு ராஜ போதை. பயங்கரப் புயல் காமிக்ஸ் ஒசத்தியான தாளில் அச்சாகியிருக்கிறது. அப்படியொரு மணம்...! படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் ! – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment