Showing posts with label captain. Show all posts
Showing posts with label captain. Show all posts

12 February 2014

வாசித்தவை – 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,


ஜாலியா தமிழ் இலக்கணம்
சென்ற புத்தகக்காட்சியிலேயே வாங்கியிருக்க வேண்டிய புத்தகம். இது அட்டையிலிருந்து அட்டை வரை ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகமில்லை. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். சொல்லப்போனால் தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள், ர-ற வேறுபாடு, ன-ண வேறுபாடு என எழுதும்போது திடீரென தோன்றி தொலைக்கும் சந்தேகங்களை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.

‘ஜாலியா’ என்பது தான் புத்தகத்தில் பிரதானம். தமிழ் என்றால் பிணக்கு என்பவர்களுக்கு பயன்படக்கூடும். மற்றவர்கள் ஜாலி பாகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரிவிலும் பிற்பகுதியில் செய்திக்கூறுகளை மட்டும் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விஷயம் மட்டும் போதும் என்பவர்கள் அதை மட்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வாங்கி பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம். அடுத்த பதிப்பின் அட்டையில் இலியானா அல்லது நயன்தாரா படத்தை போடலாம் என்பது எனது ஆலோசனை.

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் – கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்
இது எனக்கான தேநீர் கோப்பை அல்ல. உண்மையில் இது நண்பருக்காக வாங்கிய புத்தகம். அவரிடம் கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முப்பத்தைந்து பக்கங்களை தாண்ட முடியவில்லை. அதன்பிறகு சீரின்றி சில பக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.

உலகின் பண்டை நாகரிகங்களின் கடவுள்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். கிட்டத்தட்ட கடந்த பதிவில் பார்த்த குமரிக்கண்டமா...? சுமேரியமா...? புத்தகத்தை போன்றது. ஆனால் அந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தமையால் உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி சுவாரஸ்யமாக இருந்தது. இது அப்படியில்லை. அபோஃபிஸ், எனுமா எலிஷ், கில்காமேஷ் காவியம், ரஸ்ஷம்ரா என நிறைய பிதற்றொலிகள். புத்தகத்தின் இறுதியில் ரோம், கிரீஸ், ஹிந்து கடவுள்களை ஒப்பிட்டு அவற்றிலுள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145 – ஆன்லைனில் வாங்க

பாம்புத் தைலம்
பேயோன் என்பவர் யாரென்று எழுத்துலகில் நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருவதாக அறிகிறேன். இருக்கட்டும். அது எனக்கு தேவையில்லாத விஷயம்.

நான் ஏற்கனவே பேயோனின் திசைகாட்டிப்பறவை படித்திருக்கிறேன். இன்னதென்று வகைப்படுத்த முடியாமல் ஆழ்மனது போகிற போக்கில் போகும் அவருடைய எழுத்தில் ஒரு கிக் இருக்கிறது. பாம்புத்தைலமும் அப்படித்தான் இருக்கிறது. பேயோன் ஒரு சட்டையர் வாத்தியார். பின்னியெடுத்திருக்கிறார். வரும் புத்தகக்காட்சியில் எனது நூல்கள் என நூற்றியெட்டு தலைப்புகளை பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் வி.வி.சி ரகம். ரஜினி என்னும் சினிமா நடிகர் என்று ஒரு கட்டுரை வாழைப்பழ ஊசி மாதிரியான பகடி.

பாம்புத் தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100

ஆ..!
குரல் மருட்சி குறித்த கதை என்றதும் அபாரமான ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் என்னிடம் இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக செலவிட்டு ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. கிடைக்கும் இடைவெளிகளில் பத்து, இருபது நிமிடங்கள் என கொஞ்சம் கொஞ்சமாகவே படிப்பேன். அப்படி படித்ததாலேயே ஆ’வின் சிலிர்ப்பை முழுமையாக அனுபவிக்க முடிந்தது. வாத்தியார் வேறு எங்கே எவ்வளவு ரகசியத்தை அவிழ்க்க வேண்டுமோ அவ்வளவை மட்டும் கச்சிதமாக அவிழ்க்கிறார். யாரு இந்த ஜெயலட்சுமி...? யாரு கோபாலன்...? என்று அடுத்த நாள் புத்தகத்தை தொடும் வரையில் உள அலைவு படுத்தியெடுத்துவிட்டது.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி அவருடைய கண்களுக்கு மட்டும் தெரியும் ஷாலுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும் சிம்ஹா, என்ன பண்ணா பாஸ் இந்த வியாதி வரும்...? என்று கேட்பார். அதுபோல ஒரு கட்டத்தில் நமக்கும் குரல்கள் கேட்காதா...? ஜயலட்சுமியை பார்க்க முடியாதா...? என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ‘ஆ’ என்ற எழுத்தோடு முடித்திருக்கிறார். இந்த கதை தொடராக வெளிவந்தபோது வாசகர்கள் நிறைய பேருக்கு குரல் மருட்சி அனுபவம் கிடைத்திருக்கிறது.

ஆ..! – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.135 – ஆன்லைனில் வாங்க

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் !
காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த பயங்கரப் புயலை வாங்கினேன்.

கேப்டன் பிரின்ஸும் நண்பர்களும் ஒரு உல்லாசத்தீவிற்கு செல்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பன் செய்த வினையால் போலீஸ் துரத்துகிறது. எல்லோருமாக சேர்ந்து அருகிலிருக்கும் இன்னொரு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டுவாசிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவால் ஆபத்து நேர்கிறது. கூடவே இயற்கை சீற்றமும், கடலில் வாழும் ஒரு ராட்சத மீனும். நெருக்கடியை பிரின்ஸும் நண்பர்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

எப்பொழுதும் புதிய புத்தகங்களை படிக்க துவங்குவதற்கு முன்பு ஒரு முறை வாசம் பிடிப்பேன். அது ஒரு ராஜ போதை. பயங்கரப் புயல் காமிக்ஸ் ஒசத்தியான தாளில் அச்சாகியிருக்கிறது. அப்படியொரு மணம்...! படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் ! – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 August 2013

கேப்டன்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் அதிகமாக கேலி செய்யப்படுபவர்களில் ஒருவர். சமகாலத்தில் அவருடைய ரசிகர் என்று யாரேனும் சொன்னால், சொன்னவர் சர்வநிச்சயமாக எள்ளி நகையாடப்படுவார். அவருடைய உருவம், வசன உச்சரிப்பு, சண்டைமுறை, ஆங்கிலம் பேசும் முறை என்று அரசியல் வரைக்கும் எல்லா வகையிலும் அவரை ஜாலியாக கிண்டலடிப்பதில் துவங்கி சீரியஸாக விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனாலும் போகிறபோக்கில் எல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் மிமிக்ரி கலைஞர் என்றால் கண்டிப்பாக அவருக்கு நாக்கை மடித்து, “ஆங்...!” என்று சொல்லும் அவருடைய ஸ்டைல் தெரிந்திருக்க வேண்டும். சிகப்புநிற தோல் இல்லை, புஜபல பராக்கிரமசாலியும் இல்லை, சினிமாவில் பெரிய பின்புலம் இல்லை. ஆனாலும், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில், குறிப்பாக பி, சி செண்டர்களின் பேராதரவை பெற்று பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர். கேப்டன் விஜயகாந்த் !

யாரிந்த விஜயகாந்த் ?

விஜயகாந்த் அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஆகஸ்ட் இருபத்தி ஐந்தில் நாராயணனாக பிறந்தார். ஆண்டாள் அழகர் தம்பதியர் ஈன்றெடுத்தனர். பிறந்த மண் மதுரை. நாராயணன் என்பது அவருடைய தாத்தாவின் பெயர். அந்த பெயரைச் சொல்லி அழைக்கும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக விஜயராஜ் என்ற கூப்பிடுபெயரையும் சூட்டி வைத்தனர். சினிமா அவரை காந்தம் போல ஈர்த்து ராஜ் என்பதற்கு பதிலாக ‘காந்த்’ என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டது. பின்னாளில் இயக்குநர் விஜயன், அமிர்தராஜ் என்ற புதுப்பெயரை சூட்டினாலும் கூட விஜயகாந்த் என்பதே நிலைத்துவிட்டது.

விஜயகாந்தின் குடும்பம் பெரியது. உடன்பிறப்புகளில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று எல்லோரையும் வாய்க்கப்பெற்றவர் விஜயகாந்த். ஆண்டாள் – அழகர் தம்பதியருக்கு விஜயகாந்துடன் சேர்த்து மொத்தம் எட்டு குழந்தைகள். விஜயகாந்துக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. மூன்றாவதாக விஜயகாந்த். ஒரு தங்கை, நான்கு தம்பிகள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. விஜயகாந்த் அவருடைய வீட்டில் ஒரு ஆறிலிருந்து அறுபது வரை ரஜினிகாந்த். தங்கை, தம்பிகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டு திரைப்படத்துறையிலும் முத்திரையை பதித்துவிட்டு தன்னுடைய முப்பத்தி ஏழாவது வயதில் தான் அண்ணியாரை கை பிடித்தார்.

விஜயகாந்தின் தந்தையார் மதுரையில் ரைஸ்மில் முதலாளி. விஜயகாந்தும் பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு நிரந்தர விடுப்பு எடுத்துக்கொண்டு ரைஸ்மில்லை கவனித்து வந்தார். அப்போது விஜயகாந்தின் நண்பர் எம்.ஏ.காஜா மதுரையில் சினிமா கம்பெனி வைத்திருந்தார். 1979ம் ஆண்டு சினிமா பிரவேசம் செய்த எம்.ஏ.காஜா நட்பின் அடிப்படையில் தன்னுடைய இனிக்கும் இளமை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். விஜயகாந்த் என்ற பெயரும் அவர் சூட்டியது தான். அப்படித்தான் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கை துவங்கியது.

சராசரியாக போய்க்கொண்டிருந்த அவருடைய சி.வா.யில் திருப்புமுனை ஏற்படுத்தியது யாரென்று நினைக்கிறீர்கள் ? தி ஒன் அண்ட் ஒன்லி – எஸ்.ஏ.சி ! பஸ்.ஏ.சியின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.சி.க்கு அதுதான் முதல் படம். கிடைத்த நடிகரை கப்பென பிடித்துக்கொண்டு தொடர்ந்து விஜயகாந்தை வைத்தே படங்கள் எடுக்கலானார். எஸ்.ஏ.சி, விஜயகாந்தை வைத்து இதுவரையில் பதினேழு படங்களை இயக்கியிருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். எஸ்.ஏ.சி.யைப் போலவே விஜயகாந்துடன் இணைந்து வளர்ந்த இன்னொரு இயக்குநர் ராம.நாராயணன். அவரும் விஜயகாந்தை வைத்து அதே எண்ணிக்கையில் படங்களை இயக்கியிருக்கிறார்.

புகழின் படிகளில் முன்னேறிய விஜயகாந்த், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துக்கு மாற்றாக இருந்திருக்கிறார். ரஜினியை வைத்து படம் பண்ண முடியாதவர்கள் எல்லாம் நேரே வண்டியை விஜயகாந்த் வீட்டிற்கு செலுத்தியிருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்களின் பொன் முட்டையிடும் வாத்தாக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். 1984 மற்றும் 1985 ஆண்டுகளில் விஜயகாந்த் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்திருக்கிறார். இரண்டே ஆண்டுகளில் முப்பத்தி ஐந்து படங்கள். யோசித்துப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. சராசரியாக இருபது நாட்களுக்கு ஒரு படம். அவற்றில் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும் அடங்கும். தமிழ் சினிமா தன்னை முதன்முதலில் விஜயகாந்த் மூலமாகத்தான் முப்பரிமாணத்தில் வெளிக்காட்டிக்கொண்டது. திரைப்படம்: அன்னை பூமி. 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில… சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் எழுதி தயாரித்த ஊமை விழிகள். 1984ல் மதுரை சூரன் முதல் ஜனவரி 1 படம் வரை 18 படங்களும் 1985ம் ஆண்டில் மட்டும் அலை ஓசை முதல் நானே ராஜா நானே மந்திரி வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். வேறு எந்த ஹீரோவும் செய்யாத சாதனை இது. விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம் இனிக்கும் இளமை.

அந்த சமயத்தில் நடந்த ஒரு பட விழாவில் தான் கலைஞர் முன்னிலையில் புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது. சூட்டியவர் கலைப்புலி தாணு.

நிறைய துணை நடிகர்களை தன்னுடன் சேர்த்து வளர்த்துவிட்டிருக்கிறார் விஜயகாந்த். ஆனந்த் ராஜ், அருண் பாண்டியன் (என்கிற துரோகி), மன்சூர் அலிகான் போன்றவர்களை நிறைய விஜயகாந்த் படங்களில் பார்க்கலாம். போலவே விஜய்யுடன் செந்தூரப்பாண்டி, சரத்குமாருடன் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து அவர்களை ஆரம்பகாலத்தில் உயர்த்தி விட்டிருக்கிறார். இதனை விஜய்யே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தந்த காலக்கட்டங்களில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமைகளை தட்டிக் கொடுத்து தானும் வெற்றிக் கண்டவர் நம்ம கேப்டன். அப்படி வெளிவந்த படங்களில் முக்கியமான படங்கள் செந்தூரப்பூவே மற்றும் ஊமை விழிகள்.

விஜயகாந்தின் நண்பர் அ.செ.இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர் (இப்போது இல்லை). வேற்றுமொழிப்படங்களே நடிக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்த விஜயகாந்த் அவருக்காக மே டே என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பூஜையும் போடப்பட்டது. அசம்பாவிதமாக அதுவும் வெளிவரவில்லையாம். 

புகழின் உச்சியில் இருந்தபோதும் மற்ற மொழிப் படங்களில் நடிக்க சம்மதிக்காத விஜயகாந்த் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார், அது 1975ல் வெளிவந்த Zakhmee. படத்தைப் பற்றிய செய்திகள் இணையத்தில் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. விஜயகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு ஓடியது. சின்ன கவுண்டரை பார்த்த ரஜினி, உதயகுமாரை அணுகி அதுபோன்றதொரு படம் தனக்கு வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டு வெளிவந்தது தான் எஜமான். 

நடனம் ஆடுவதிலும் தலைவர் கில்லி. இதை ஏனோ பல இயக்குனர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பரதன் படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம், மாநகர காவல் படத்தில் வரும் வண்டிக்காரன்  சொந்த ஊரு மதுரை இவரது நடனத்திறமையை வெளிக்கொண்டு வந்த பாடல்கள்.

விஜயகாந்த்துடைய கால்கள் உதைத்து பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவருடைய கைகள் கொடுத்து பழக்கப்பட்டவை. பொன்மனச் செம்மலை பார்த்து வளர்ந்த அவருக்கும் அந்த குணம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய அலுவலகத்தில் குறைந்தது நூறு பேராவது சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (விஜயகாந்த் ஆபீசுல எப்போ கறிசோறு போடுறாங்க என்பதை டைரியில் குறித்து வைத்திருக்கும் அன்னவெறி கண்ணையனை நினைவுகூரவும்).

தமிழ் சினிமாவில் துரிதமாக நூறாவது பட இலக்கை எட்டியவர்களில் ஒருவர் விஜயகாந்த். அவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படத்திற்கு அப்பெயரை சூட்டினார். படம் இமாலய வெற்றி. அன்றிலிருந்து புரட்சிக்கலைஞருடன் கேப்டன் என்கிற புனைப்பெயரும் இணைந்துக்கொண்டது. கேப்டன் பிரபாகரன் என்பது சமகாலத்தில் சிலர் செய்வது போல வணிக நோக்கத்திற்காக சூட்டிய பெயரல்ல. FYI, விஜயகாந்த்துடைய மூத்த மகனின் பெயர் விஜய பிரபாகரன் !

விஜயகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களைப் போல வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்என்று சொல்லி யாரையும் ஏமாற்றவில்லை. இதுவரை, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில், இவர் மட்டும் தான் எடுத்த எடுப்பிலேயே கட்சி ஆரம்பித்தவர். மற்றவர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் இருந்து பின் பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்கள். தன்னுடைய படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டால் உடனே பம்மிக்கொண்டு ஓடி ஒளியும் கோழையும் அல்ல. ச்சும்மா Time to Lead என்று கேப்ஷன் போட்டாலே துரத்தியடிக்கும் கேவலமான அரசியல் சூழல் கொண்ட தமிழகத்தில், கட்சி துவங்கி, சில தேர்தல்களை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கும் அவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை சர்வநிச்சயமாக பாராட்டுக்குரியது தான் ! ஆங் !

ஓவியம்: விஜய்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment