Showing posts with label about. Show all posts
Showing posts with label about. Show all posts

21 September 2015

சினிமா வியாபாரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப வருடங்களாக சினிமா ரசிகர்கள் பரவலாக படங்களின் வசூல், நடிகர்களின் மார்க்கெட் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ரசிகன் என்ன கூந்தலுக்கு படத்தின் வசூலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். வசூல் மட்டுமல்ல. படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்ட காலம், சிரத்தை உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகனுக்கு அவை மீது ஆர்வமில்லாத பட்சத்தில் அவசியமற்ற விஷயங்கள். பல வருடங்கள் உழைத்து, பல கோடிகள் கொட்டி உருவாக்கிய ஒரே காரணத்திற்காக ரசிகர்கள் ஒரு படத்தை பாராட்டியே ஆகவேண்டிய அவசியமில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். அதே சமயத்தில் ஒரு ரசிகன் கோச்சடையானையும் அவதாரையும் கூட கூச்சப்படாமல் ஒப்பிடலாம். ஏனெனில், அவன் இரு படங்களையும் அதே 120ரூ கொடுத்துதான் பார்க்கிறான். In fact, முந்தயதிற்கு அதிக பணம்.

என் எண்ணங்கள் இப்படியிருக்க, முழுக்க முழுக்க சினிமாவின் backend தகவல்கள் அடங்கிய புத்தகமொன்று என்னை விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கேபிள் சங்கர் எழுதியிருக்கும் சினிமா வியாபாரம். இரண்டு பாகங்கள். முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்தின் பெயர் ‘இலவச விளம்பரம்’. சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு அது தாராளமாக கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆளாளுக்கு ‘இதெல்லாம் தெரியணும்ன்னா நீ சினிமா வியாபாரம் படிச்சிருக்கணும்’ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சொல்ல முடியாது இதுபோன்ற ஆசாமிகளை எல்லாம் கேபிளே கூட செட் பண்ணியிருக்கலாம். எதற்கு வம்பு என்று இரண்டு பாகங்களையும் வாங்கி படித்துவிட்டேன்.

முதல் பாகத்தில் பெரும்பாலும் திரைப்பட விநியோகம் பற்றியும் பல்வேறு வகையான உரிமைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில் சிட்டி, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு என்று தொடங்கி FMS வரை என்று முடிப்பார். இவைதான் தமிழ் சினிமாவின் விநியோக ஏரியாக்கள். விநியோகம் தவிர்த்து ஆடியோ ரைட்ஸ், டிவிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங், ரீ-மேக் ரைட்ஸ் உட்பட நாமெல்லாம் கேள்விப்பட்டிராத பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் பரிவர்த்தனைகள் என்ன மாதிரியெல்லாம் நடைபெறுகிறது, என்ன மாதிரியான படங்களுக்கு யாருடைய கை ஓங்குகிறது போன்ற விவரங்களை புரிந்துகொள்ள உதவுகிறது முதல் பாகம். என்ன ஒன்று, பாதி புத்தகத்திற்கு பிறகு ஹாலியுட்டுக்கு தாவி அங்குள்ள தொழில்நுட்பங்கள், பெருநிறுவனங்கள், அவற்றின் அரசியல் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொன்னாலும் கூட ஏனோ அந்நியமாக தெரிகிறது.

முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் எனக்கு மிகவும் நெருக்கமாக படுகிறது. ஏனெனில், இரண்டாவது ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்துவது பற்றியது. நான் திரையரங்குகளை உணர்வுப்பூர்வமாக கருதுபவன். ஒரு படம் என்னுள் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துமோ, அதற்கு இணையான தாக்கத்தை திரையரங்குகளும் என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு திரையரங்கில் என்ன பிராண்ட் ‘ரூம் ஸ்ப்ரே’ பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதே ரூம் ஸ்ப்ரேயை என் வீட்டிற்கு வாங்கும் அளவிற்கு பைத்தியக்காரன் நான். திரையரங்குகள் குறித்து நான் எழுதத் துவங்கினால் தனி புத்தகம்தான் போட வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். சிட்டி பார்டரில் உள்ள ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்திய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் கேபிள். திரையரங்கத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் எழுதியதால் எதுவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக போயிற்று. உதயம், காசிக்கு அருகில் என்று எழுதியிருக்கிறார். பிட்டுப்படம் ஒட்டிய தியேட்டர் என்றும் சொல்கிறார். ஜோதி என்று நினைத்தால் அதனை வேறொரு திரையரங்கமாக பாவித்தும் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது கண்டிப்பாக கே.கே.நகர் விஜயா தான் என்று நானாகவே முடிவு செய்துவிட்டேன். விஜயா திரையரங்கம் கேபிளின் இல்லத்தில் இருந்து நடைதொலைவு. ஆனால் கே.கே.நகர் சிட்டி லிமிட்டிற்குள் தானே வரும் என்று யோசித்து, கடைசியாக ஆலந்தூர் எஸ்.கே என்று முடிவு கட்டியிருக்கிறேன். உண்மையில் அது எந்த திரையரங்கம் என்பது கேபிளுக்கே வெளிச்சம்.

பாடாவதியான அந்த திரையரங்கை லீசுக்கு எடுக்கிறார்கள். புதுப்பிக்கிறார்கள். தடைகளை கடந்து முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு ஒரு திரையரங்க உரிமையாளராக என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நூல் பிடித்ததை போல தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லை, திரைப்படங்களுக்கென போஸ்டர் ஓட்டுவது என்பது நாம் அன்றாடம் சாலையில் பார்த்துவிட்டு கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று. அதற்குப் பின்னால் என்ன மாதிரியான அரசியல் இருக்கிறது என்றெல்லாம் தெரியும்போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. 

இன்று சென்னையில் வசிக்கும் மூவி பப்ஸ்கள் பெரும்பாலானாவர்களுக்கு ஆதர்ஸ திரையரங்கம் என்றால் அது சத்யம் தான். ஒரு கட்டத்தில், சத்யம் திரையரங்கத்திற்கு மூடுவிழா நடத்த முடிவாகியிருந்ததும், அதிலிருந்து சத்யம் மீண்டுவரக் காரணம் நக்சலைட்டுகள் தான் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஆனால் ஒன்று, சினிமா வியாபாரம் பாகம் இரண்டினை வாங்க விரும்புபவர்கள் தயவு கூர்ந்து முதல் பாகத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே ‘இது தெரிய வேண்டுமென்றால் நீங்கள் முதல் பாகம் படித்திருக்க வேண்டும்’ என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

சினிமா வியாபாரம் – பாகம் 1
கேபிள் சங்கர்
மதி நிலையம்
144 பக்கங்கள்
ரூ.90

சினிமா வியாபாரம் – பாகம் 2
கேபிள் சங்கர்
டிஸ்கவரி புக் பேலஸ்
88 பக்கங்கள்
ரூ.70

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 03032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

Such an eventful weekend...!

நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மெரினா மகிழ்ச்சிக்கு பல வாயில்கள் கொண்ட ஒரு வீடு. கடலலையில் கால் நனைக்கலாம், மணலில் காலாற நடக்கலாம், மல்லாக்க படுத்துக்கொண்டு அண்டவெளியை வேடிக்கை பார்க்கலாம், சைட் அடிக்கலாம் அல்லது அமைதியாக ஏதேனும் ஒரு கல்லிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். நான் கடைசி வாசலை தேர்ந்தெடுத்தேன். கடற்கரையில் காக்கைகள் அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து, பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. நானாக இருந்தால் சோத்துப்பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியே போயிருப்பேன். அந்த மனிதருக்கு அது வழக்கம் போல. அவர் பாட்டுக்கு அசராமல் சாப்பிட்டு முடித்தார். அதுவுமில்லாமல் காக்கைகள் மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும், நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும், அப்புறம் யாராவது பார்த்திருப்பார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அசடு வழிவதாகவோ பொழுது போனது.

புகைப்படம்: தி ஹிந்து
காக்கைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு சில மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த தொந்தரவும் தராதவை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒருமுறை தலையில் முட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று ஜெனிலியா நம்புவார். ஜெயம் ரவி நீ இதையெல்லாமா நம்புற...? என்று கேட்கும்போது நல்லா இருக்குல்ல என்று சிரித்தபடி பதிலளிப்பார் ஜெனிலியா. அதுபோல தான் எனக்கு சில நம்பிக்கைகள். விஷயம் இதுதான். தினமும் காலையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு குறிப்பிட்ட காகம் வந்து கரைகிறது. உடனே தாத்தா வந்துவிட்டார் என்று அதற்கு கொஞ்சம் உணவுப்பொருள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த காக்காவும் சளைத்ததில்லை. உப்புமாவோ, வெண் பொங்கலோ வைத்தால் சீண்டாது. உணவை எடுத்துக்கொண்டு போய் வைக்க தாமதமானாலும் விடாமல் கரைந்து கொண்டிருக்கும். அதுவும் அசாதாரண குரலில். ஏதோ சுனாமி வரப்போகிறது என்று எச்சரிப்பது போல இருக்கும். என்றோ ஒருநாள் அந்த காக்கைக்கு உணவளித்து அது தினமும் வந்து பழகியிருக்கக்கூடும். அல்லது உண்மையாகவே மறைந்த முன்னோர்கள் காக்கைகளாக உரு பெறுகிறார்களோ என்னவோ...?

அப்படி அவர்கள் காக்கைகளாக உருப்பெறும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்நாள் எவ்வளவாக இருக்கும் என்று தேடினேன். காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. காக்கைகளில் பல இனங்கள் இருக்கின்றன. பொதுவாக காக்கைகள் இருபது வயது வரை வாழ்கின்றன. அதாவது உருமாறும் நமது மூதாதையர்களின் வாழ்நாள் இருபது வருடங்கள். அதன்பிறகு அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு காக்கை 59 வயது வரை வாழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. டாட்டா என்று பெயரிடப்பட்ட அந்த காக்கை ஒரு செல்லபிராணியாக வீடுகளில் வளர்ந்திருக்கிறது. ஒருவேளை அதனை அதிக கவனம் செலுத்தி வீட்டுச்சூழலில் வளர்த்தமையால் கூட அத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கலாம். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. டாட்டாவை விட வேறு எந்த காக்கையும் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததில்லை என்று எப்படி சொல்ல முடியும். உலகில் உள்ள எல்லா காக்கைகளின் வயதையும் சென்சஸ் அதிகாரிகள் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா என்ன...?

சரி, காகங்கள் பற்றிய கரைதலை நிறுத்திக்கொள்வோம். நேற்று காலை ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நண்பர் அருள் செல்வன் அவருடைய குறும்பட ஷூட்டிங்கை பார்ப்பதற்கு அழைத்திருந்தார். வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதை போட்டியில் ரஜினியிசம் என்ற சிறுகதை நிறைய பேருடைய நினைவிலிருக்கும். அதை எழுதியவர் தான் இந்த அருள் செல்வன். ஏற்கனவே சொம்பு, மொக்கை பையன் சார் உட்பட ஐந்தாறு குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். எல்லாமே சராசரிக்கு மேல் என்று சொல்லக்கூடிய அளவில் இருந்தன. அவற்றில் சொம்பு என் விருப்பதிற்குகந்தது. எல்லா படங்களையும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தற்சமயம் H2SO4, பொண்ணு ஒன்னு கிடைக்கல என்று இரு குறும்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உற்சாகமான அணியையும் தன்னகத்தே வைத்திருக்கிறார் அருள். பெங்களூரில் ஒரு உலக பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணனுக்கு நடிப்பதில் பேரார்வம். அருளுக்காக பெங்களூரிலிருந்து சென்னை வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்கிறார். கிட்டத்தட்ட அருளின் எல்லா படங்களிலும் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாக நடித்துவிடுகிறார். இந்தமுறை அருள் செல்வன் குழுவினர் நாளைய இயக்குநரில் பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் காதில் விழுந்தது. அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...!

பார்க்க: சொம்பு

அங்கிருந்து மதிய உணவிற்கு அண்ணா நகர் ஸீ ஷெல்ஸுக்கு அழைத்துச் சென்றார் அஞ்சாசிங்கம். ஏதோ மட்டன் ரான் பிரியாணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் கூட ஆட்டுத்தொடையை அப்படியே கொண்டு வந்து வைப்பார்கள் போல என்று நம்பிக்கொண்டிருந்தேன். வண்ணமயமான உணவகம். ஏராளமான மேட்டுக்குடி யுவதிகளும், சீமாட்டிகளும் சில தடிமாடுகளுடன் வந்து செல்கிறார்கள். கைகளை கழுவிவிட்டு வருவதற்குள் சைட்டடிக்க தோதான இடத்தில் அமர்ந்துகொண்டார் சிவக்குமார். சரி, வளர்ற பிள்ளையாச்சே’ன்னு விட்டுத்தர வேண்டியதாக போய்விட்டது. கேபிள், கே.ஆர்.பி, பிரபு கிருஷ்ணா ஆகியோரை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆரூர் மூனாவும் வந்திருந்தார். பிரியாணி வெகு சுமார். பில்லுக்கு பணம் செலுத்திய அஞ்சாசிங்கத்துக்கு என்னுடைய அனுதாபங்கள்.

முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர் நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன கருமம்டா...! போனதற்கு உருப்படியாக ஆரூராரிடமிருந்து ராஜீவ்காந்தி சாலை, உப்புநாய்கள், மரபல்லி ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறேன்.

சமீபத்தில் எழுதியது: தெகிடி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 August 2013

கடையேழு வள்ளல்கள் – பாரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாரி – கடையேழு வள்ளல்களில் முதன்மையானவர், அதிக புகழ் பெற்றவரும் கூட. ஓரறிவு உயிரான முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்தவர் என்பதே அதற்கு காரணம்.

சிவகங்கை மாவட்டத்தில் சமகாலத்தில் பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும் குன்றுக்கூட்டம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பறம்புமலை என்று வழங்கப்பட்டது. பறம்புமலை முன்னூறு கிராமங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. சிரிப்பது போன்று சலசலக்கும் அருவிகள், ஓடைகள், கனி நிறை மரங்கள், மலர் நிறை சோலைகள், இசை நிறை பறவைகள், எழில் நிறை காட்சிகள் என பல நல்வளங்களை கொண்டிருந்தது பறம்புமலை. அதனை வேளிர்குல வழிவந்த சிற்றரசர்களே பல்லாண்டுகளாய் ஆண்டுவந்தார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் முடியுடை வேந்தர்க்கு அடங்கியும், அவர்களோடு அன்புகொண்டும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிற்றரசர்களின் வழிவந்தவர் தான் பாரி. வேளிர்குலத்தோன்றல் என்பதால் அவரை பாரிவேள் என்றும் வேள்பாரி என்றும் அழைப்பர்.

பாரி அரசனான பின் குடிகளிடத்தில் மிகவும் அன்புடையவனாய் இருந்தான். குடிகளும் அவனைப் பொன்னேபோல் போற்றி வந்தனர். அவனுடைய ஆட்சியில் குடிகள் முன்னையினும் பன்மடங்கு நலமுற்று இன்பம் துய்த்தார்கள். பறம்பு மக்கள் எள்ளளவும் சோம்பலின்றி உழைப்பவர்களாக இருந்தனர். தினை, வரகு, எள், கிழங்கு வகைகள் போன்றவற்றை விளைவித்து அவற்றுடன் மா, பலா, வாழை போன்ற கனிகளையும் கொண்டுசென்று மலையடிவார ஊர்களில் பண்டமாற்று செய்து வாழ்ந்து வந்தனர். பொதுவாகவே, மக்கட்பிறப்பை அடைந்தவர் எல்லோரும் நல்ல உடல்பலம் பெற்றிருக்க வேண்டுமென்பது பாரியின் எண்ணம். ஆகையால், அவன் நாட்டின் ஊர்கள்தோறும் சிலம்புக்கூடங்கள் ஏற்படுத்தியிருந்தான். வாலிபரைச் சிறந்த வித்தைகளைப் பயிலச்செய்தான். பாரியும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்பொருட்டு தேகபலம் கொண்ட மிகச்சிறந்த வீரனாய் இருந்தான். காரணமாக, அவனுடைய படை பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

பாரி படை வீரத்தில் மட்டுமின்றி கொடை தீரத்திலும் சிறந்திருந்தான். அவனை நாடிவந்த புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள் மற்றும் இரவலர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தான். எங்ஙனம் கொடுத்தான் என்றால், கேட்டவர்கள் ‘போதும், போதும்’ என்று சொல்லும்வரையில் கொடுத்தான். கேட்பதற்கு முன்பே கூட முகக்குறிப்பும் அங்கக்குறிப்பும் கண்டுணர்ந்து ஈந்தான். பறம்புநாடு இரவலர்களுக்கு ஒரு பரிசுப்பெட்டகமாக அமைந்திருந்தது. பழமரம் நாடும் பறவைகள் போல கூட்டம் கூட்டமாக வந்த இரவலர்களை பறம்புநாடு வரவேற்றது. அக்காலத்தில் இப்படிப் பரிசில் பெற்றுச்செல்லும் இரவலர்கள் எவரும் சுயநலமிகளாக இல்லை. ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கோடு தன்போன்ற இரவலர்கள் எதிர்ப்பட்டால் அவர்களிடம் வலியச்சென்று பாரியின் பெருமையை எடுத்துச்சொல்லி அனுப்பி வைப்பார்கள். இதனால் பாரியின் புகழ் பரவியது.

அதியமானுக்கொரு ஒளவையார் போல பாரிவேளுக்கு கபிலர் என்னும் பெரும்புலவர் உயிரினும் மேலான நண்பராய் இருந்துவந்தார். பாரியும் கபிலரும் நட்பான கதையை எழுதுவதென்றால் பல பதிவுகள் தேவைப்படும். சுருக்கமாக சொல்வதென்றால், பாரியின் கொடைப்பண்பை அறிந்த கபிலர் அவனிடம் பொருள்பெற வந்தார். கபிலரின் இணையற்ற புலமையைக் கண்டுவியந்த பாரி அவரை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

பாரிவேள் அவ்வப்போது தன்நாட்டு மக்களையும் மலைவளங்களையும் காண்பதற்கு சென்றுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். அதில் அவனுக்கு அளவிலா ஆனந்தம். ஒருமுறை அதுபோல தன்னுடைய தேரை எடுத்துக்கொண்டு சென்றபோது வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி, கொழுக்கொம்பு இல்லாமல் காற்றால் அலைந்துக்கொண்டிருந்தது. ஆதரவற்ற அனாதைபோல, வாடிச்சோர்ந்து தவிக்கும் ஒரு பரிதாபத்திற்குரிய வறியனைப் போலத் தோன்றிய அக்கொடி பாரியின் கவனத்தை ஈர்த்தது. ஈர்த்ததோடா... உடனே இயங்கவும் செய்தது. தேரைவிட்டு இறங்கி, அதனை முல்லைக்கொடிக்கு அருகில் கொண்டு சென்றான். குதிரைகளை அவிழ்த்து அப்பால் விட்டான். பிறகு தேரின் மீது கொழுக்கொம்பிற்கு அலையும் முல்லைக்கொடியை எடுத்து பாங்குற படரவிட்டான். பின்னர் குதிரைகளுள் ஒன்றின்மீது ஏறிக்கொண்டு ஏனையவை பின்தொடர அரண்மனையை சென்றடைந்தான். ஓரறிவு உயிருக்கும் இரங்கும் அவனது ஒப்பற்ற கொடைத்திறன் நாடெங்கும் பரவியது.

பாரியின் புகழை முடியுடை வேந்தர் மூவரும் அறிந்தார்கள். அறிந்ததும் என்ன செய்தார்கள் ? அவன்மேல் அடங்காத அழுக்காறு கொண்டார்கள். மூவரும் ஒன்றுகூடி தத்தம் சேனைகளை திரட்டி பறம்புமலையைச் சூழ்ந்தார்கள். பாரி, தன் பலத்தையும் எதிரிகளின் பலத்தையும் எண்ணிப் பார்த்தான். போர் செய்வது இயலாத செயலாகப்பட்டது. ஆகையால் தற்காப்புப் பணியில் தன் கவனத்தை செலுத்தினான். மலைமேலுள்ள அரண்களை செப்பம் செய்தான். எதிரிகள் எவ்வழியிலும் நுழைய முடியாதபடி செய்ததோடு அவர்களை மறைந்து தாக்கும் மறைவிடங்களையும் அமைத்தான். பறம்பு மக்களும் உயிரையே பணயம் வைத்து ஒரு மூச்சாக செயல்பட்டனர்.

ஒருநாள் ஆயிற்று. ஒரு வாரம் ஆயிற்று. வாரம் மாதம் ஆனது. மாதம் ஒருமையிலிருந்து பன்மையாயிற்று. மூவேந்தர்களும் பறம்புமலையினுள் நுழைய முடியாமல் விழிபிதுங்கி நின்றனர். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற இறுமாப்புடன் இருந்த மூவேந்தர்களுக்கும் பாரியின் தற்காப்பு சவாலாக அமைந்திருந்தது. ஒருமுறை மலையடிவாரத்திலிருந்த போர் வீரர்களின் கூடாரத்திற்கு ஒரு ஓலை வந்து விழுந்தது. அதனைக் கண்டதும் பாரி சரணடைந்துவிட்டான் என்று அகமகிழ்ந்த மன்னர்கள், அதைப் படித்தபோது ஏமாற்றத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டார்கள். அது கபிலர் இயற்றிய பாடல்.

“அளிதோ தானே பாரியது பறம்பே !
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பல மூழ்க்கும்மே;
மூன்றே, கொழுங்கொடிவள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற வோரிபாய்தவின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான்க ணற்றவன் மலையே; வானத்து
மீன்க ணற்றதன் சுனையே; யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,
தாளிற் கொள்ளலிர், வாளிற் றரலன்;
யானறி குவனது கொள்ளு மாறே,
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
வாடினர் பாடினர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.”
(புறம் – 109)

விளக்கம்: பாரியினுடைய பறம்புமலை வெல்வது எளிதல்ல. நீங்கள் மூவரும் வெற்றிமுரசு கொட்டி, ஒன்றுகூடி பலநாள் முற்றுகையிட்டாலும் அதனை உங்களால் வெல்ல முடியாது. ஏனெனில், பறம்புமலை அகலத்தாலும் நீளத்தாலும் உயரத்தாலும் வான் போன்றது. வெண்மையான தோற்றம்கொண்ட அருவிகள் பலவாய்ப் பிரிந்து ஓடுவதற்குக் காரணமாயுள்ள நீர் நிரம்பிய சுனைகள் நிறைந்துள்ளன. அதனால், உழவர்கள் உழாமலேயே அந்நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை நான்கு :-
        - மலையிடத்து ஓங்கி வளரும் சிறிய இலையை உடைய மூங்கில்களிலிருந்து நெல் விளையும்.
        - மலையடிவாரத்தில் வளரும் பலாமரங்களில் கனித்து வெடித்த பழங்களிலிருந்து இன்சுவை சுளைகள் உதிரும்.
        - நிலத்தின் வெற்றிடங்களில் கொழுந்துவிட்டுத் தழைத்து ஓடும் வள்ளிக்கொடிகள் நிலம் வெடிக்கும்வண்ணம் பருத்த கிழங்குகளை ஊன்றும்.
        - மலையில் பல தேன்கூடுகள் உள்ளன. அழகிய நீலநிறமுடைய பெரிய தேனீக்கள் தேனில் வீழ்ந்து அமிழ்வதால் வழிந்துவரும் தேனும் உண்டு.

ஆகையால், எம் அரசனையும் எம் நாட்டையும் ஒருபோதும் உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் பறம்புமலையை பெற விரும்புவீர்களானால், வாசனை வீசும் நறுமண மலர்களைச் சூடிய கூந்தல் உடைய உங்கள் அன்புள்ள பெண்கள், வடித்துக் கூர்மையாக்கப்பட்ட நரம்புகளை உடைய யாழை ஏந்திக்கொண்டு இனிய பண்ணோசை ஒலிக்கப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் முன்வர நீங்கள் பின்செல்லல் வேண்டும். அப்போது, பாரி தன்நாட்டையும் மலையையும் ஒருங்கே ஈவான்.

கபிலர் வரைந்த பாடலைக் கண்டதும் அவர்கட்கு இன்னது செய்வதெனத் தெரியவில்லை. மூவரும் கூடி ஆலோசித்தார்கள். பாரியின் குடியை உறவாடிக் கெடுப்பதென முடிவு செய்தார்கள். பாரிக்கு ஆண்மக்கள் இல்லை. அழகிய பெண்கள் இருவர் இருந்தனர். அவர்கட்கு பாரி சூட்டிய பெயர் இன்னதென்று சங்கநூல்களில் குறிப்பு இல்லை. ஆயினும், பிற்காலத்தவர் அவர்களை அங்கவை சங்கவை என்பர். (அங்கவை சங்கவையை பற்றி பிற்பாடு தனி இடுகையில் எழுத முயல்கிறேன்). அன்பும், அறிவும், அழகும், வனப்பும் ஒருங்கே அமையப்பெற்ற மகள்கள் பாரிக்கு உளர் என்பதை மூவேந்தர்கள் அறிந்தார்கள். மூவேந்தர்களும் தனித்தனியே பெண்வேண்டி பாரியிடம் தூது அனுப்பினார்கள். பின் ஒன்று சேர்ந்தும் பெண்களை வேண்டினார்கள். பாரி மறுத்துவிட்டான். காரணம், ஒருவனுக்கே இரண்டு பெண்களையும் கொடுத்துவிட்டால் மற்ற இருவருக்கும் கலக்கமுண்டாகும். அன்றி, ஆளுக்கு ஒருத்தியாக கொடுத்தாலும் மூன்றாமவனுக்கு வருத்தம் வரும். பாரியின் மறுப்பிற்கான காரணத்தை மூவேந்தர்கள் அறிந்திருக்கவில்லை.

மூவேந்தர்களும் பாரியின் மீது சினம்கொண்டு முன்பைவிட அதிகமான சேனைகளை திரட்டினார்கள். இம்முறையும் அவனை வெல்லாமல் திரும்பிவிடின் நம்குடிகளும் நம்மை மதியார்களே என்று ஐயுற்றார்கள். உடனே ஒரு ஒற்றனை அழைத்து, பாரியின் நிலையை அறிந்து வரும்படி கூறி அனுப்பினார்கள். ஒற்றன் பறம்புநாட்டிற்குச் சென்றான். பாரியின் மாளிகையைக் கண்டான். பறம்புமலையின் மேலேறினான். அங்கிருந்த அரணது சிறப்பையும், வலிமையையும் உணர்ந்தான். மலையின் வளங்களை அறிந்தான். மற்றும் அறியவேண்டிய எல்லாவற்றையும் ஆங்காங்கு ஆராய்ந்து தெரிந்துக்கொண்டான். மிக்க வியப்புடன் மூவேந்தர்களிடம் திரும்பினான். பாரியை அவர்களுடைய படைபலத்தால் ஒருபோதும் வெல்ல முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்தான்.

முற்றுகை முயற்சி முட்டாள்த்தனமானது என்று அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கபிலருடைய புறநானூற்றுப் பாடலின் (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது) கடைசி நான்கு வரிகள் அவர்களின் நினைவுக்கு வந்தன. ஒரு பெளர்ணமி நாளில் மூவேந்தரும் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன் உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில் மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின் உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள் என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.

முந்தய பதிவு: அதியமான்

தொடர்புடைய சுட்டி: வள்ளல் பாரி வேள் வரலாறு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 March 2013

அந்தமான் - பழங்குடியினர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அடுத்து நாம் பார்க்கவிருப்பது பாராடங். போர்ட் ப்ளேரில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் சுண்ணாம்பு குகையை பார்ப்பதற்கு சாலை வழியாகவும், கடல்வழியாகவும் பின்னர் மேங்ரோவ் காடுவழியாகவும் பயணிக்க வேண்டியிருக்கும். பாராடங்கின் சிறப்பு அந்த சுண்ணாம்பு குகையல்ல. ஜரவா எனும் பழங்குடியினர் வசிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை கடந்து பயணிக்க வேண்டும். உண்மையில் அவர்கள்தான் நாகரிக மக்கள் வசிப்பதற்காக பிற பகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்தமான் & நிகோபர் தீவுகள் முழுமைக்கும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது எஞ்சியிருப்பதாக கருதப்படும் சில பழங்குடியின சமூகங்களை பற்றி தொடரும் பத்திகளில் காண்போம்.

ஜரவா (Jarawa)
அந்தமானின் செல்லப்பிள்ளைகள். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தெற்கு அந்தமானில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். வெள்ளையர்களின் வருகையாலும், நகரமயமாக்கல் காரணமாகவும் வேறு வழியில்லாமல் மேற்கு பகுதியில் வசிக்க தொடங்கிவிட்டனர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஜரவாக்கள் நாகரிக மக்களோடு சிநேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். முந்தய பத்தியில் குறிப்பிட்டது போல பாராடங் செல்லும் சுற்றுலா பயணிகளை வழிமறித்து அவர்களிடம் உணவுப்பொருட்கள் பெற ஆரம்பித்தனர். அதுபோல ஒருமுறை உணவுக்காக வழிமறித்த பழங்குடியினரை நடனமாட வைத்து அதை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள். அதற்குப்பின் அந்தமான் நிர்வாகம் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து, ஜரவா மக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. செய்தி. எனினும் தற்போது ஜரவா மக்கள் தாங்களாகவே வெளியுலகிற்கு வரவும், ஆடைகள் உடுத்தவும், கல்வி கற்கவும் தொடங்கியிருக்கிறார்கள். கவலையளிக்கும் வகையில், ஜரவா மக்கள் தற்போது சுமார் இருநூறிலிருந்து நானூறு பேர் வரை மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.



க்ரேட் அந்தமானீஸ் (Great Andamanese)
அந்நிய படையெடுப்புக்கு முன்பு அந்தமான் முழுவதிலும் வசித்து வந்த, ஒத்த மொழிகள் பேசிய பத்துக்கும் மேற்பட்ட இனங்களை தற்போது க்ரேட் அந்தமானீஸ் என்று பகுத்து வைத்திருக்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆறாயிரத்தை கடந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள், வெள்ளையர்கள் கொண்டு வந்து பரப்பிய நோய்களை சமாளிக்க முடியாமல் கிட்டத்தட்ட அழிவை நோக்கி சென்று பின் மீண்டு வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் வெறும் பத்தொன்பது பேர் மட்டுமே எஞ்சியிருந்து, தற்போது தோராயமாக ஐம்பது பேர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். சில தலைமுறைக்கு முன்பிலிருந்தே இவர்கள் இந்தியர்களோடு இல்வாழ்க்கையில் இணைந்ததால் ஹிந்தி சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு கி.மீ பரப்பளவு கொண்ட சிறிய தீவொன்றில் இவர்களுக்காக குடில்கள், பள்ளி, மருத்துவமனை போன்ற வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது அந்தமான் நிர்வாகம்.

ஆங்கீஸ் (Onge)
லிட்டில் அந்தமான் தீவில் வசித்து வரும் ஆங்கீ இன மக்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே உள்ளது. தங்களது பாரம்பரிய கதைகளின் வழியாக நிலநடுக்கத்தை பற்றியும் ஆழி பேரலைகளை பற்றி புரிந்து வைத்திருக்கும் ஆங்கீஸ் 2004ல் சுனாமி வந்தபோது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஷச் சாராயத்தை தவறுதலாக உட்கொண்டு எட்டு பேர் இறந்திருக்கிறார்கள். பெருகி வரும் சாராய மோகம் ஆங்கீஸ் இனமக்களுக்கு ஆபத்தாக இருந்து வருகிறது. தவிர ஆங்கீஸ் இனப்பெண்கள் மிகவும் அரிதாக கருவுருவதால் ஆங்கீஸ் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிகொபரீஸ் (Nicobarese)
க்ரேட் அந்தமானீஸை போலவே நிகோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினரை நிகொபரீஸ் என்று அழைக்கிறார்கள். நிகோபர் தீவுகளை இன்னமும் மிகவும் பாதுகாப்பாகவும், நாகரிக மக்கள் எளிதில் நுழைய முடியாதபடியும் வைத்திருப்பதாலோ என்னவோ நிகொபரீஸ் எண்ணிக்கையில் இருபதாயிரத்திற்கு மேல் உள்ளனர். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகமடைந்தவர்கள். இலவச கல்வி திட்டத்தின் வாயிலாக இன்னும் சில ஆண்டுகளில் நிகோபர் மக்கள் அரசு பணியிடங்களை நிரப்ப காத்திருக்கிறார்கள். மேலை நாட்டு மத போதகர் ஒருவர் பைபிளை நிகொபரீஸில் மொழி பெயர்த்ததால் நிகொபரீஸ் கிட்டத்தட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். சுனாமியில் இறந்தவர்களின் அலறல் இன்னமும் கேம்பெல் பே பகுதியில் நள்ளிரவுகளில் கேட்பதாக நிகோபர் மக்கள் நம்புகிறார்கள். 



செண்டிநெலீஸ்
முற்றிலும் நாகரிக மனித தொடர்பற்ற மக்கள். சுனாமி வந்த சமயம், ஹிந்து நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. ஒருமுறை அந்தமான் நிர்வாகம், நாகரிக மக்கள் குழுவை, இவர்களுடைய தீவிற்கு நட்புக்கரம் நீட்ட அனுப்பி வைத்தது. குறிப்பிட்ட தொலைவு வரை படகில் சென்று அங்கிருந்து தேங்காய்களை வீசியிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் தேங்காய்களை பெற்றுக்கொண்டனர் பழங்குடியினர். அடுத்தகட்டமாக கரையில் இறங்க முயற்சி செய்ததும் மூர்க்கமாக தாக்க தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய பகுதியில் அத்துமீறிய மீனவர்கள் இருவரை அம்பெய்தி கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கூட இதுவரையில் மர்மமாகவே இருந்து வருகிறது.



ஷாம்பென்
ஒப்பீட்டளவில் மிகவும் சாதுவானவர்கள். இந்தோனேசிய, பர்மிய, வியட்நாமிய மக்களின் சாயலை கொண்டவர்கள். க்ரேட் நிகோபர் தீவில் ஆங்காங்கே சிறுசிறு பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இருநூறிலிருந்து முன்னூறு வரையில் எண்ணிக்கை இருக்கலாம் என கருதப்படுகிறது. இடுப்புக்கு கீழே மட்டும் உடையணியும் வழக்கம் கொண்டவர்கள். வன விலங்குகளை வேட்டையாடியும், காய்கறி, பழங்களாலும் பசியாறுகிறார்கள். கடற்கரையோரம் குடியிருக்கும் பழக்கமில்லாததால் ஷாம்பென் மக்களை சுனாமி பெரிய அளவில் பாதிக்கவில்லை.

மேற்கண்ட தகவல்களையும் மேலதிக தகவல்களையும் போர்ட் ப்ளேரில் உள்ள மனித இயல் அருங்காட்சியகத்தில் தெரிந்துக்கொள்ளலாம். அதுபற்றிய விவரங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் விவரிக்கிறேன்.


படங்கள் உதவி: கூகுள்

சில  காணொளிகள்:
Jarawa
http://www.youtube.com/watch?v=tlRSsvB4iLE
http://www.youtube.com/watch?v=u5lwwsxVr9M
http://www.youtube.com/watch?v=q8thUedRXnk


Onge
http://www.youtube.com/watch?v=4GtZiW2GSkM

Sentinelese
http://www.youtube.com/watch?v=OaPYwlXOTzQ

Shompen
http://www.youtube.com/watch?v=fcLr22O6pl0

 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment