Showing posts with label kadaiyezhu. Show all posts
Showing posts with label kadaiyezhu. Show all posts

17 October 2013

கபிலரின் கலாய்த்தல் திணை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலில், பொதுவாக மப்பில் இருப்பவர்கள் மத்தியில் நிகழும் சில உரையாடல்களைப் பற்றி பார்ப்போம். நண்பர்கள் புடைசூழ போதையை போட்டுக் கொண்டிருக்கும்போது குழுவில் யாரேனும் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு “மச்சான்... நான் போதையில சொழ்றன்னு நினைக்காத....” என்று ஆரம்பிப்பார். உடனே அவருக்கு ஏறிவிட்டது என்கிற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு சிலர் நண்பராவது மண்ணாவது உனக்கு சீக்கு வந்தா எனக்கென்ன என்கிற ரீதியில் பழகுவார்கள். ஆனால் போதையேறி விட்டால் நண்பர் மீது பாசமழை பொழிவதும் கொடைவள்ளலாக பணத்தை வாரியிறைப்பதும் நடக்கும். அந்த மாதிரி ஒரு போதை நண்பர் வாழும் வள்ளலாக மாறிக்கொண்டிருக்கும்போது அவரிடம், “மச்சான்... சில பேர் போதையில தான் கன்னாபின்னான்னு செலவு பண்ணுவாங்க... ஆனா நீ எவ்வளவு சரக்கடிச்சாலும் தெளிவா இருக்க மச்சான்...” என்று உசுப்பேற்றி விட்டால் எப்படி இருக்கும் ?

ஓகே, இப்போது கடையேழு வள்ளல்கள் சீரிஸின் முந்தைய பதிவான மலையமான் திருமுடிக்காரியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பார்ப்போம். ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். அப்போது காரி, தன்னை எளியரும் காணும்படி வெளியிடத்தில் அமர்ந்திருந்தான். தன்னைப் புகழ்ந்து பாடும் புலவரை எதிரில் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள், தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவந்தீர்கள்; மீண்டும் அவ்வாறு நடவற்க: இத்தேர்மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்க.” என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறி மற்றும் வேண்டிய பொருள்கள் பல அளித்து அனுப்பினான். அதனை நேரில் கண்டுகொண்டிருந்த கபிலர் ஒரு பாடலை பாடினார். அது புறநானூற்றில் 123வது பாடலாக பதியப்பட்டுள்ளது.

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே !
புறம் 123

விளக்கம்: உலகிலுள்ள மக்கள் சிலர் மது அருந்துகிறார்கள். அதனால் மதிமயங்கிப் போகிறார்கள். அவ்வமயம் அவர்கள் இன்னது செய்யவேண்டும். இன்னது நீக்கவேண்டும் என்று ஓராமல் என்னென்னவோ செய்துவிடுகிறார்கள். அச்செயல்களுள் கொடைச்செயலும் ஒன்று. வெறிகொண்டபோது அளவுகடந்த கொடை செய்வது குடியர் எல்லோருக்கும் இயல்பு. தேர் முதலிய பொருள்களை அளிப்பார்கள். அங்ஙனம் மயக்கச் சேர்க்கையால் செய்யும் கொடை இயற்கையாகாது. அது செயற்கை கொடையாகும். காரி அவ்வாறு செய்பவன் அல்லன். இன்று காலை புதிதாய் கொணர்ந்த மதுவை உண்டான். ஆனால், அதன் மயக்கத்திற்கு ஆட்படவில்லை. அதுவும் அவன் மதியை ஆட்கொள்ளவில்லை. அவன் நல்லுணர்வுடனே தேரைப் புலவருக்கு அளித்தான். அவ்விதம், அவன் தேரை அளிக்கையில் வெறியர் போல மகிழவும் நகைக்கவும் இல்லை. ஆகையால், அக்கொடை இயற்கையையேச் சாரும்.

கபிலரின் வரிகளை கொஞ்சம் காம்பாக்ட்டாக புரிந்துக்கொள்வதென்றால் “மச்சான்... சில அயோக்கியப்பயலுக அப்படியெல்லாம் செய்வாங்க மச்சான்... ஆனா நீ யோக்கியன்டா...” என்று மறைமுகமாக கலாய்த்திருப்பது தெரிகிறது. கூடவே மன்னர்களின் கொடைபண்பு குறித்த உண்மைகளும், கபிலரின் ஹியூமர் சென்ஸும் புலப்படுகின்றன. நாம் முந்தய சில பதிவுகளில் வாசித்த புலவர்களைப் போல அல்லாமல் கபிலர் கொஞ்சம் ப்ராக்டிக்கலாகவும், தைரியமாகவும் மன்னர்களிடம் நடந்திருக்கிறார். அடுத்த பதிவில் அப்ரைசல் பற்றி கபிலர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 October 2013

கடையேழு வள்ளல்கள் – காரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.

படம்: இணையத்தில் இருந்து பெறப்பட்ட சித்தரிக்கப்பட்ட படம்
காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது. 

ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான். 

காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.

அக்காலகட்டத்தில் வடநாட்டில் அரசர்களாய் இருந்த ஆரிய வேந்தர்கள் சிறுகச் சிறுகத் தென்னாட்டின்மேல் படையெடுக்கலானார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள் திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதனை பறித்துக்கொள்ள எண்ணினார்கள். உடனே திரண்ட சேனையுடன் வந்து திருக்கோவலூரைச் சூழ்ந்து முற்றுகையிட்டார்கள். தகவல், காரியின் காதுகளுக்கு எட்டியது. அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய சேனைகளை சேர்த்துக்கொண்டு போர்க்களம் பூண்டான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. ஆரியர்கள் பலர் மாண்டனர். மற்றவர்கள் அஞ்சியோடினார்கள்.

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி ஆங்கு 

விளக்கம்: ஆரியர் நெருங்கிச் செய்த போரில், பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்தில், பலருடன் சென்று உறையினின்றும் உருவிய ஒளி வீசும் வாட்படையை உடைய மலையனது வேற்படைக்கு அஞ்சி அவ்வாரியப்படை ஓடியது.

ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். காரி தன்னை புகழ்ந்து பாடும் புலவரைக் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள் தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவராதீர்கள். தேர் மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்லுங்கள்...!” என்று மகிழ்ச்சியுடன் கூறி அவருக்கு தேரையும் மற்ற வேண்டிய பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். இதுபோலவே, நிறைய புலவர்களுக்கு தேர் கொடுத்திருக்கிறான் காரி. அவனுடைய தேர்க்கொடையின் காரணமாக அவனுக்கு தேர்வண்மலையன் என்ற பெயரும் உண்டு.

மேற்கூறிய சம்பவத்தைப் பற்றி கபிலர் புறநானூற்றில் ஒரு பாடல் இயற்றியுள்ளார். (புறம் 123). அது சற்றே எள்ளல் தொனி கலந்த பாடல் என்பதால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். அது குறித்து யாருக்கேனும் ஏற்கனவே தெரிந்திருந்தால் பின்னூட்டமிடவும்.

காரிக்குக் கொடையாலும் படையாலும் வரவரப் பெரும்புகழ் வளர்வதைக்கண்ட சில சிற்றரசர்கள், அவன்மீது அழுக்காறு கொண்டார்கள். சில குறுநில மன்னர்களின் சூழ்ச்சியால் காரிக்கும் அதியமான் அஞ்சிக்கும் பகைமை நேர்ந்தது. அதன் காரணமாக, ஆற்றல் படைத்த அஞ்சி காரியின்மேல் படையெடுத்துத் திருக்கோவலூரை முற்றுகையிட்டான். காரியோ அஞ்சினான். ஆயினும், தன்னிடம் உள்ள சேனைகளைக் கொண்டு எதிர்த்து அவனோடு போரிட்டு பார்த்தான். தனக்கு வெற்றி ஏற்படாது என்று உணர்ந்துக்கொண்டான். அவன் சேனைகளுள் மிகுதியும் மாண்டொழிந்தன. முடிவில் காரி உயிர் தப்பினால் போதுமென திருக்கோவலூரை விட்டு சேரநாட்டிற் புகுந்தொளிந்தான். பிறகு அஞ்சி திருக்கோவலூரைப் பிடித்துக்கொண்டு, தன் நாட்டுடன் சேர்த்தாள்வானாயினன்.

அப்போரில் அஞ்சிக்கு புறமுதுகு காட்டிய காரி சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சம் புகுந்தான். சேரனும் காரியை ஏற்றுக்கொண்டு நல்லுரை பல நவின்றான். மீண்டும் அவன் நாட்டை அதியனிடமிருந்து மீட்டுத் தருவதாய் வாக்களித்தான். காரியும் சற்று மனந்தேறினான். ஆயினும், அவன் தனது நாட்டைப் பெறுங்காலம் நோக்கிச் சாலத்துயர் உற்றிருந்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பிலிருந்தே சிற்றரசனான ஓரியின் மீது வெறுப்பு இருந்து வந்தது. அவன் காரியைக் கொண்டு ஓரியைத் தொலைத்துவிட எண்ணினான். சேரனே நேரடியாக ஓரியின் மீது போர் தொடுக்கலாம் எனினும் அது முறையாகாது. ஓரி சேரனுடன் சமபலம் பொருந்தியவனில்லை. அவ்வாறு சமபலமில்லாதவனிடம் போரிட்டு வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதனால் வசையே ஒழிய இசையேற்படாது. எனவே காரியை அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான். அதனை ஏற்றுக்கொண்ட காரி, இரும்பொறையின் பெருஞ்சேனைக்கு தலைமை தாங்கிச் சென்று கொல்லிமலையை முற்றுகையிட்டான்.

ஓரியுடனான காரியின் போர் பலநாள் நீடித்தது. அதனை சிறுபாணாற்றுப்படை காரிக்குதிரை காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும் என்று கூறுகிறது. பின்னர் ஓரி இப்போர் சேரனால் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொண்டான். போரின் முடிவில் காரி மிகத் தந்திரமாக ஓரியை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தான். 

ஓரி அகன்றுவிட்டதைக் கேள்விப்பட்ட இரும்பொறை தன் கவலையை ஒழித்தான். காரிக்கு உதவி செய்ய முற்பட்டான். உடனே பெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு தானே சேனைத்தலைவனாக அமர்ந்து அதியமானின் தகடூரை முற்றுகையிட்டான். அதியமானும் குகையிலிருந்து வெளிப்படும் சிங்கம் போல நேருக்கு நேராக போரில் இறங்கினான். ஆயினும் இரும்பொறையுடன் காரியும் சேர்ந்து போரிட்டமையால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. இறுதியில் இரும்பொறை அதியமானை போரில் கொன்று வீழ்த்தி அவனுடைய நாட்டை தன்னுடையதாக்கிக் கொண்டான். வெற்றிக்களிப்பில் மிதந்த சேரன் காரிக்கு அவனது ஆட்சிப்பகுதியான முள்ளூர் மலை நாட்டை தந்தான்.

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே !
அழல்புறந் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலை நீ பெருமிதத்தையே !
(புறம் 122) 
 
விளக்கம்: பழந்தமிழ் திருந்தடிக் காரி ! நின்னாடு கடலாலும் கொள்ளப்படாது. பகைவரும் மேற்கொள்ளார். நின்னாடு அந்தணருடைய வேள்வித் தீயைப் போன்றது. மூன்று பெரும் வேந்தர்களிடமிருந்து வந்தோர் நின்னை வாழ்த்தித் தரும் பெரும் பொருள் நும் குடியை வாழ்த்தி வரும் பரிசிலருடையது. ஆதலால் வடதிசை தோன்றும் அருந்ததியை ஒத்த கற்பினளான மென்மொழி நின்துணைவியை மட்டுமே உன்னுடையது என்று சொல்ல ஒன்று உடையவனாய் இருக்கையில் எப்படி நீ பெருமிதமுடையவனாய் இருக்கிறாய் ?

இங்ஙனம், இழந்த நாட்டினை திரும்பப் பெற்றுவிட்ட மலையமான் திருமுடிக்காரி தன்னாட்டை முன்புபோல நன்கு ஆட்சி புரிந்தான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 August 2013

கடையேழு வள்ளல்கள் – பாரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாரி – கடையேழு வள்ளல்களில் முதன்மையானவர், அதிக புகழ் பெற்றவரும் கூட. ஓரறிவு உயிரான முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்தவர் என்பதே அதற்கு காரணம்.

சிவகங்கை மாவட்டத்தில் சமகாலத்தில் பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும் குன்றுக்கூட்டம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பறம்புமலை என்று வழங்கப்பட்டது. பறம்புமலை முன்னூறு கிராமங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. சிரிப்பது போன்று சலசலக்கும் அருவிகள், ஓடைகள், கனி நிறை மரங்கள், மலர் நிறை சோலைகள், இசை நிறை பறவைகள், எழில் நிறை காட்சிகள் என பல நல்வளங்களை கொண்டிருந்தது பறம்புமலை. அதனை வேளிர்குல வழிவந்த சிற்றரசர்களே பல்லாண்டுகளாய் ஆண்டுவந்தார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் முடியுடை வேந்தர்க்கு அடங்கியும், அவர்களோடு அன்புகொண்டும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிற்றரசர்களின் வழிவந்தவர் தான் பாரி. வேளிர்குலத்தோன்றல் என்பதால் அவரை பாரிவேள் என்றும் வேள்பாரி என்றும் அழைப்பர்.

பாரி அரசனான பின் குடிகளிடத்தில் மிகவும் அன்புடையவனாய் இருந்தான். குடிகளும் அவனைப் பொன்னேபோல் போற்றி வந்தனர். அவனுடைய ஆட்சியில் குடிகள் முன்னையினும் பன்மடங்கு நலமுற்று இன்பம் துய்த்தார்கள். பறம்பு மக்கள் எள்ளளவும் சோம்பலின்றி உழைப்பவர்களாக இருந்தனர். தினை, வரகு, எள், கிழங்கு வகைகள் போன்றவற்றை விளைவித்து அவற்றுடன் மா, பலா, வாழை போன்ற கனிகளையும் கொண்டுசென்று மலையடிவார ஊர்களில் பண்டமாற்று செய்து வாழ்ந்து வந்தனர். பொதுவாகவே, மக்கட்பிறப்பை அடைந்தவர் எல்லோரும் நல்ல உடல்பலம் பெற்றிருக்க வேண்டுமென்பது பாரியின் எண்ணம். ஆகையால், அவன் நாட்டின் ஊர்கள்தோறும் சிலம்புக்கூடங்கள் ஏற்படுத்தியிருந்தான். வாலிபரைச் சிறந்த வித்தைகளைப் பயிலச்செய்தான். பாரியும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்பொருட்டு தேகபலம் கொண்ட மிகச்சிறந்த வீரனாய் இருந்தான். காரணமாக, அவனுடைய படை பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

பாரி படை வீரத்தில் மட்டுமின்றி கொடை தீரத்திலும் சிறந்திருந்தான். அவனை நாடிவந்த புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள் மற்றும் இரவலர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தான். எங்ஙனம் கொடுத்தான் என்றால், கேட்டவர்கள் ‘போதும், போதும்’ என்று சொல்லும்வரையில் கொடுத்தான். கேட்பதற்கு முன்பே கூட முகக்குறிப்பும் அங்கக்குறிப்பும் கண்டுணர்ந்து ஈந்தான். பறம்புநாடு இரவலர்களுக்கு ஒரு பரிசுப்பெட்டகமாக அமைந்திருந்தது. பழமரம் நாடும் பறவைகள் போல கூட்டம் கூட்டமாக வந்த இரவலர்களை பறம்புநாடு வரவேற்றது. அக்காலத்தில் இப்படிப் பரிசில் பெற்றுச்செல்லும் இரவலர்கள் எவரும் சுயநலமிகளாக இல்லை. ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கோடு தன்போன்ற இரவலர்கள் எதிர்ப்பட்டால் அவர்களிடம் வலியச்சென்று பாரியின் பெருமையை எடுத்துச்சொல்லி அனுப்பி வைப்பார்கள். இதனால் பாரியின் புகழ் பரவியது.

அதியமானுக்கொரு ஒளவையார் போல பாரிவேளுக்கு கபிலர் என்னும் பெரும்புலவர் உயிரினும் மேலான நண்பராய் இருந்துவந்தார். பாரியும் கபிலரும் நட்பான கதையை எழுதுவதென்றால் பல பதிவுகள் தேவைப்படும். சுருக்கமாக சொல்வதென்றால், பாரியின் கொடைப்பண்பை அறிந்த கபிலர் அவனிடம் பொருள்பெற வந்தார். கபிலரின் இணையற்ற புலமையைக் கண்டுவியந்த பாரி அவரை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

பாரிவேள் அவ்வப்போது தன்நாட்டு மக்களையும் மலைவளங்களையும் காண்பதற்கு சென்றுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். அதில் அவனுக்கு அளவிலா ஆனந்தம். ஒருமுறை அதுபோல தன்னுடைய தேரை எடுத்துக்கொண்டு சென்றபோது வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி, கொழுக்கொம்பு இல்லாமல் காற்றால் அலைந்துக்கொண்டிருந்தது. ஆதரவற்ற அனாதைபோல, வாடிச்சோர்ந்து தவிக்கும் ஒரு பரிதாபத்திற்குரிய வறியனைப் போலத் தோன்றிய அக்கொடி பாரியின் கவனத்தை ஈர்த்தது. ஈர்த்ததோடா... உடனே இயங்கவும் செய்தது. தேரைவிட்டு இறங்கி, அதனை முல்லைக்கொடிக்கு அருகில் கொண்டு சென்றான். குதிரைகளை அவிழ்த்து அப்பால் விட்டான். பிறகு தேரின் மீது கொழுக்கொம்பிற்கு அலையும் முல்லைக்கொடியை எடுத்து பாங்குற படரவிட்டான். பின்னர் குதிரைகளுள் ஒன்றின்மீது ஏறிக்கொண்டு ஏனையவை பின்தொடர அரண்மனையை சென்றடைந்தான். ஓரறிவு உயிருக்கும் இரங்கும் அவனது ஒப்பற்ற கொடைத்திறன் நாடெங்கும் பரவியது.

பாரியின் புகழை முடியுடை வேந்தர் மூவரும் அறிந்தார்கள். அறிந்ததும் என்ன செய்தார்கள் ? அவன்மேல் அடங்காத அழுக்காறு கொண்டார்கள். மூவரும் ஒன்றுகூடி தத்தம் சேனைகளை திரட்டி பறம்புமலையைச் சூழ்ந்தார்கள். பாரி, தன் பலத்தையும் எதிரிகளின் பலத்தையும் எண்ணிப் பார்த்தான். போர் செய்வது இயலாத செயலாகப்பட்டது. ஆகையால் தற்காப்புப் பணியில் தன் கவனத்தை செலுத்தினான். மலைமேலுள்ள அரண்களை செப்பம் செய்தான். எதிரிகள் எவ்வழியிலும் நுழைய முடியாதபடி செய்ததோடு அவர்களை மறைந்து தாக்கும் மறைவிடங்களையும் அமைத்தான். பறம்பு மக்களும் உயிரையே பணயம் வைத்து ஒரு மூச்சாக செயல்பட்டனர்.

ஒருநாள் ஆயிற்று. ஒரு வாரம் ஆயிற்று. வாரம் மாதம் ஆனது. மாதம் ஒருமையிலிருந்து பன்மையாயிற்று. மூவேந்தர்களும் பறம்புமலையினுள் நுழைய முடியாமல் விழிபிதுங்கி நின்றனர். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற இறுமாப்புடன் இருந்த மூவேந்தர்களுக்கும் பாரியின் தற்காப்பு சவாலாக அமைந்திருந்தது. ஒருமுறை மலையடிவாரத்திலிருந்த போர் வீரர்களின் கூடாரத்திற்கு ஒரு ஓலை வந்து விழுந்தது. அதனைக் கண்டதும் பாரி சரணடைந்துவிட்டான் என்று அகமகிழ்ந்த மன்னர்கள், அதைப் படித்தபோது ஏமாற்றத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டார்கள். அது கபிலர் இயற்றிய பாடல்.

“அளிதோ தானே பாரியது பறம்பே !
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பல மூழ்க்கும்மே;
மூன்றே, கொழுங்கொடிவள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற வோரிபாய்தவின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான்க ணற்றவன் மலையே; வானத்து
மீன்க ணற்றதன் சுனையே; யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,
தாளிற் கொள்ளலிர், வாளிற் றரலன்;
யானறி குவனது கொள்ளு மாறே,
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
வாடினர் பாடினர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.”
(புறம் – 109)

விளக்கம்: பாரியினுடைய பறம்புமலை வெல்வது எளிதல்ல. நீங்கள் மூவரும் வெற்றிமுரசு கொட்டி, ஒன்றுகூடி பலநாள் முற்றுகையிட்டாலும் அதனை உங்களால் வெல்ல முடியாது. ஏனெனில், பறம்புமலை அகலத்தாலும் நீளத்தாலும் உயரத்தாலும் வான் போன்றது. வெண்மையான தோற்றம்கொண்ட அருவிகள் பலவாய்ப் பிரிந்து ஓடுவதற்குக் காரணமாயுள்ள நீர் நிரம்பிய சுனைகள் நிறைந்துள்ளன. அதனால், உழவர்கள் உழாமலேயே அந்நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை நான்கு :-
        - மலையிடத்து ஓங்கி வளரும் சிறிய இலையை உடைய மூங்கில்களிலிருந்து நெல் விளையும்.
        - மலையடிவாரத்தில் வளரும் பலாமரங்களில் கனித்து வெடித்த பழங்களிலிருந்து இன்சுவை சுளைகள் உதிரும்.
        - நிலத்தின் வெற்றிடங்களில் கொழுந்துவிட்டுத் தழைத்து ஓடும் வள்ளிக்கொடிகள் நிலம் வெடிக்கும்வண்ணம் பருத்த கிழங்குகளை ஊன்றும்.
        - மலையில் பல தேன்கூடுகள் உள்ளன. அழகிய நீலநிறமுடைய பெரிய தேனீக்கள் தேனில் வீழ்ந்து அமிழ்வதால் வழிந்துவரும் தேனும் உண்டு.

ஆகையால், எம் அரசனையும் எம் நாட்டையும் ஒருபோதும் உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் பறம்புமலையை பெற விரும்புவீர்களானால், வாசனை வீசும் நறுமண மலர்களைச் சூடிய கூந்தல் உடைய உங்கள் அன்புள்ள பெண்கள், வடித்துக் கூர்மையாக்கப்பட்ட நரம்புகளை உடைய யாழை ஏந்திக்கொண்டு இனிய பண்ணோசை ஒலிக்கப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் முன்வர நீங்கள் பின்செல்லல் வேண்டும். அப்போது, பாரி தன்நாட்டையும் மலையையும் ஒருங்கே ஈவான்.

கபிலர் வரைந்த பாடலைக் கண்டதும் அவர்கட்கு இன்னது செய்வதெனத் தெரியவில்லை. மூவரும் கூடி ஆலோசித்தார்கள். பாரியின் குடியை உறவாடிக் கெடுப்பதென முடிவு செய்தார்கள். பாரிக்கு ஆண்மக்கள் இல்லை. அழகிய பெண்கள் இருவர் இருந்தனர். அவர்கட்கு பாரி சூட்டிய பெயர் இன்னதென்று சங்கநூல்களில் குறிப்பு இல்லை. ஆயினும், பிற்காலத்தவர் அவர்களை அங்கவை சங்கவை என்பர். (அங்கவை சங்கவையை பற்றி பிற்பாடு தனி இடுகையில் எழுத முயல்கிறேன்). அன்பும், அறிவும், அழகும், வனப்பும் ஒருங்கே அமையப்பெற்ற மகள்கள் பாரிக்கு உளர் என்பதை மூவேந்தர்கள் அறிந்தார்கள். மூவேந்தர்களும் தனித்தனியே பெண்வேண்டி பாரியிடம் தூது அனுப்பினார்கள். பின் ஒன்று சேர்ந்தும் பெண்களை வேண்டினார்கள். பாரி மறுத்துவிட்டான். காரணம், ஒருவனுக்கே இரண்டு பெண்களையும் கொடுத்துவிட்டால் மற்ற இருவருக்கும் கலக்கமுண்டாகும். அன்றி, ஆளுக்கு ஒருத்தியாக கொடுத்தாலும் மூன்றாமவனுக்கு வருத்தம் வரும். பாரியின் மறுப்பிற்கான காரணத்தை மூவேந்தர்கள் அறிந்திருக்கவில்லை.

மூவேந்தர்களும் பாரியின் மீது சினம்கொண்டு முன்பைவிட அதிகமான சேனைகளை திரட்டினார்கள். இம்முறையும் அவனை வெல்லாமல் திரும்பிவிடின் நம்குடிகளும் நம்மை மதியார்களே என்று ஐயுற்றார்கள். உடனே ஒரு ஒற்றனை அழைத்து, பாரியின் நிலையை அறிந்து வரும்படி கூறி அனுப்பினார்கள். ஒற்றன் பறம்புநாட்டிற்குச் சென்றான். பாரியின் மாளிகையைக் கண்டான். பறம்புமலையின் மேலேறினான். அங்கிருந்த அரணது சிறப்பையும், வலிமையையும் உணர்ந்தான். மலையின் வளங்களை அறிந்தான். மற்றும் அறியவேண்டிய எல்லாவற்றையும் ஆங்காங்கு ஆராய்ந்து தெரிந்துக்கொண்டான். மிக்க வியப்புடன் மூவேந்தர்களிடம் திரும்பினான். பாரியை அவர்களுடைய படைபலத்தால் ஒருபோதும் வெல்ல முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்தான்.

முற்றுகை முயற்சி முட்டாள்த்தனமானது என்று அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கபிலருடைய புறநானூற்றுப் பாடலின் (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது) கடைசி நான்கு வரிகள் அவர்களின் நினைவுக்கு வந்தன. ஒரு பெளர்ணமி நாளில் மூவேந்தரும் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன் உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில் மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின் உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள் என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.

முந்தய பதிவு: அதியமான்

தொடர்புடைய சுட்டி: வள்ளல் பாரி வேள் வரலாறு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment