Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

21 October 2016

கொல்லிமலை - ஆகாயகங்கை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: தொடக்கம்

கொல்லிமலை ஒரு தேனிலவு என்றால் அதில் மணப்பெண் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி !

கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே கூடாதென்பது என் எண்ணம். ஆனால் அனைவரும் அணுகத்தக்க வகையில் இருக்கிறதா ஆகாய கங்கை என்றால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து ஆயிரத்தி சொச்சம் படிக்கட்டுகள் இறங்கியபிறகே அருவியைக் காண முடியும். ஆயிரம் படிக்கட்டுகள் என்பதால் உடல் / மன உறுதி குறைபாடு கொண்டவர்களுக்கு உகந்ததல்ல. நீர்வீழ்ச்சியை சென்றடைய ரோப்-கார் சேவை வேண்டுமென்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால விருப்பம். எனினும் அதன் நடைமுறை சாத்தியம் குறைவே என்று தோன்றுகிறது.

நீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது. ‘முடவாட்டு கால்’ என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது மூட்டு வலிக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தரக்கூடும்.

ஒரு காலத்தில் நீர்வீழ்ச்சிக்கு இறங்கிச்செல்ல சீரான படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அப்படியில்லை முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு தோதான இடங்கள் என போதிய வசதிகள் உள்ளன. பேரலில் இலவசக் குடிநீர் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இதனை அவ்வப்போது நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் இறங்கியேற சிரமப்படுவதால் நூறு படிக்கட்டு தொலைவிலேயே குடிநீரை வைத்துவிடுகின்றனர். எனவே கட்டாயமாக குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது.

படிக்கட்டுகள் இறங்க இறங்க அருவியின் சிணுங்கல் கேட்கத் துவங்குகிறது. இதுவே நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் (2010) பல தடைகளை கடந்து சோழ நகரத்தை கண்டடையும் குழுவினர் பரவசமடைவார்கள், மரியான் இறுதிக்காட்சியில் கடலைக் கண்டதும் பெரும் நிம்மதியடைவார் தனுஷ். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. சுமார் நூற்றியைம்பது அடி உயரத்திலிருந்து (அவ்வளவாக) பாறைகளின் இடையூறு ஏதுமின்றி நேரடியாக பாய்கிறது அருவி !

ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஆகாய கங்கைக்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தூரத்திலேயே அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து என்னை தடுத்து நிறுத்தியது. இப்போது அப்படியில்லை. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டதா அல்லது பருவ வேறுபாடா என்று தெரியவில்லை. இம்முறை நேரடியாக அருவியிலேயே தலைகாட்ட முடிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு தான். காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லியில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து பாய்வதால் அருவிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணிநேரம் அருவியோடு உறவாடிவிட்டு திரும்பினோம்.

படியேறும்போது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதே புரிகிறது. நானாவது பரவாயில்லை. அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஏறினேன். சகாக்களில் ஒருவர் அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவருடைய மோஜோவிற்கு நான் வாழ்க்கை தர வேண்டுமென சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். இதே போல பல நடுத்தர வயதுக்காரர்களும் ‘உஸ்ஸு, அஸ்ஸு’ என்று புலம்பிக்கொண்டு சரிவதைக் காண முடிந்தது. அதே சமயம் வயதான சிலர் கூட தெம்பாக படியேறுவதையும் காண வியப்பாக இருந்தது.


நண்பரின் ஐபோனில் எடுக்கப்பட்ட ஸ்லோமோஷன் வீடியோ. கீழே லுங்கியை அட்ஜஸ்ட் செய்பவரை பொறுத்துக்கொள்ளவும் :)

ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கி ஏறுவது சிரமம் தான். ஆனால் ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை தாராளமாக ஈடு செய்துவிடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று கேள்விப்பட்டோம். அதற்கு முன் கொல்லியில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

30 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 30122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய வலைப்பூவின் வலதுபக்கத்தில் ‘படித்ததில் பிடித்தது’ என்றொரு பகுதி இருப்பதை பார்த்திருக்கலாம். அங்கே பகிரப்படும் இடுகைகளை ஒரு சிலர் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். 2013 முழுவதும் அப்படி நான் படித்து பிடித்து பகிர்ந்த இடுகைகளின் இணைப்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். அந்த சேமிப்பில் இருந்து முத்தான பத்து இடுகைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளேன். நல்ல எழுத்தை வாசிக்க விரும்புபவர்கள் பயன் பெறட்டும். அதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் :- இந்த செக்ஷனில் லக்கி, அதிஷா, சமுத்ரா, வா. மணிகண்டன், சேட்டைக்காரன் போன்ற ஜாம்பவான்களின் (ராஜன், டுபுக்கு மன்னிக்க) இடுகைகளை நான் ஏதோ பரிந்துரைப்பது போல வெளியிடுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, அவர்களுடைய பதிவுகள் நீங்கலாக என்னுடைய முத்து பத்து (வரிசை படுத்தவில்லை, ஷார்ட் லிஸ்ட் செய்வதற்கே நாக்கு தள்ளிவிட்டது) :-


இரண்டு படங்கள் பார்த்தேன். பிரியாணி, கல்யாண சமையல் சாதம். இரண்டும் இணைய விமர்சகர்களின் கூற்றை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம். அல்லது விமர்சனங்களை படித்துவிட்டு பார்த்ததால் எதிர்பார்ப்பு விகிதம் குறைந்து, படம் நன்றாக இருப்பதாக தெரிந்திருக்கலாம்.

முதலில் கல்யாண சமையல் சாதம். இது ஒரு மாதிரி கார்ப்பரேட் ஆசாமிகளுக்கும், மேல்தட்டு (பொருளாதார ரீதியாக) வர்க்கத்திற்கும் மட்டும் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது. காசுக்கு கஷ்டப்படுபவர்கள் படத்தைப் பார்த்தால் வயிற்றெரிச்சலுக்கு உத்தரவாதம். என் போன்ற ஏழைகளுக்கும், பழைய பஞ்சாங்க ஆசாமிகளுக்கு ஒத்துவராது. அந்த வகையில் எனக்கு நிறைய காட்சிகள் எரிச்சலூட்டியது. ஆயிரத்தெட்டு கதாபாத்திரங்கள். சதா லொட லொடவென்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் நிறைய மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. பிரசன்னாவிற்கு முக்கியமான கட்டத்தில் எழுச்சி ஏற்பட மறுக்கிறது. அந்த சிக்கலை வைத்தே வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வார்த்தைகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். லேகா வாஷிங்க்டன் முகம் க்ளோசப்பில் மட்டுமல்ல, லாங் ஷாட்டில் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அட்லாஸ்ட், மனதுவிட்டு சிரிக்க வைத்ததால் க.ச.சா ஒரு ஃபீல் குட் படம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அடுத்து பிரியாணி. வெளியான சமயம் சென்னையில் இருந்திருந்தால் முதல் நாளே பார்த்திருப்பேன். அதன்பிறகு, விமர்சனங்களை படித்து சற்று சுதாரித்துக்கொண்டாலும், மந்தி டக்கர் மட்டும் மனதிற்குள் குடிகொண்டு மக்கர் செய்துக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்துவிட தயாரானோம். ‘னோம்’ என்றால் நானும் சிங்கமும். அவரும் மந்தி டக்கருக்கு விழுந்திருப்பாரோ என்னவோ...? பிகு பண்ணாமல் வந்துவிட்டார். படம் ஃபிகரு, ஜொள்ளு என நன்றாகத் துவங்கி ஆங்காங்கே சில சுமார் ஜோக்குகள் என நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மந்தி டக்கர் வருகிறார். சரியாக பத்து நிமிடங்கள் இருக்கலாம். கிறங்கடித்துவிட்டு போய்விட்டார். மந்திக்கு குரல் கொடுத்தவர் யாரென்று விசாரிக்க வேண்டும். அப்புறம், படம் அசுர வேகத்தில் தடதடக்கிறது. எல்லாம் சரி, இறுதி இருபது நிமிடங்கள் மட்டும் படு கேவலமான சொதப்பல். க்ளைமாக்ஸில் யாருமே யூகிக்கமுடியாத ஒரு ட்விஸ்டை வைக்க வேண்டுமென வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறார். அதற்காக இப்படியா பூமாலையை போட்டு குதறுவது...? பிரேம்ஜி நாசராக நடிப்பதை எல்லாம் ஸ்கூல் பசங்க கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசி இருபது நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பிரியாணி சரோஜா லெவலுக்கு இல்லையென்றாலும் ஒகே ரகம்.

மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது வேறு வழியில்லாமல் மசாலா படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று அவர்களுடைய ரசிகர்கள் லாபி பண்ணுவது சமகாலத்தில் அதிகரித்துவிட்டது. அதனை சாதகமாக்கிக் கொண்டுதான் கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அழகுராஜாவை பார்த்ததற்கு ஒரேயொரு காரணம் இருக்குமானால் அது அழகுராணி காஜல் மட்டுமே...! இயக்குநர் ராஜேஷின் முந்தய படங்கள் மூன்றையும் நான் சிரித்து ரசித்திருக்கிறேன். இருப்பினும் “ராஜேஷ் படமென்றால் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்...” என்பது போன்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. அவருடைய படங்களில் ஒருவித பொறுப்பின்மை ஆங்காங்கே விரவிக்கிடப்பதை காண முடியும். எனக்கும் உங்க பொண்ணுக்கும் மேட்டர் ஆயிடுச்சு’ன்னு சொன்னாக்கூட பேக்கு மாதிரி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார் ஒரு அப்பா. நான் வேலைக்கே போகாம வெட்டியா இருந்தா நீ என்னை லவ் பண்ணுவியா’ன்னு ஹீரோயினிடம் கேட்கும் அரைலூஸு ஹீரோ போன்ற irritating காட்சிகளை அவருடைய படங்களில் பார்க்கலாம். அழகுராஜாவின் ட்ரைலர் பார்த்தபோதே அது மொக்கையென்று தெரியும். படம் வெளியான சில மணிநேரங்களில் சூரமொக்கை என்று தெரிந்துவிட்டது. காஜலுக்காக தாங்கிக்கொள்ள மாட்டேனா என்ன ?

எல்லா ராஜேஷ் படங்களைப் போலவே இவருதாங்க நம்ம ஹீரோ என்ற வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கிறது. கார்த்தி ஒரு லோக்கல் சேனல் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய பணியாளர் சந்தானம். பட்ஜெட் மீட்டிங் என்று சில வேடிக்கைகள், நகைக்கடை அதிபராக கோட்டாஜி. படம் துவங்கி ஒரு இருபது நிமிடங்கள் இருக்கும். ஏதோ சுமாராக பார்க்கக்கூடிய அளவில் போய்க்கொண்டிருப்பதாக தோன்றியது. போகப் போக என்னடா இது எழவு வீட்டுக்கு வந்துட்டோமா ? என்று தோன்ற ஆரம்பிக்கிறது. எதற்கெடுத்தாலும் வாயைப் பொத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். காமெடியாம் ! ஆளாளுக்கு லபோ திபோவென்று கத்திக்கொண்டே இருக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவுடைய சின்னச் சின்ன மேனரிசங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரே ஹை-பிட்சில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ?

காஜல் காட்சிகளை பார்க்கும்போது கோபம் தான் வருகிறது. ப்ரதர் ராஜேஷ், உங்களுக்கு காமெடி பீஸ் வேண்டுமென்றால் அனுயா பகவத், ஹன்சிகா மோத்வாணி போன்ற சீமாட்டிகளை போட்டு, விடிய விடிய காமெடி செய்யலாமே ? எங்கள் காஜல் உமக்கு என்னய்யா துரோகம் செய்தார் ? காஜல் ஃபீல்ட் அவுட் ஆனால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தமாதிரி கேவலமான வேடங்களை ஏற்று நடிப்பதை பார்த்தால் சங்கடமாக இருக்கிறது.

யாருக்கும் சொல்லாம... என்றொரு பாடல் வருகிறது. அதில் காஜலை பார்க்கும்போது காஜல் ஃபீல்ட் அவுட் ஆனால் பரவாயில்லை என்று எழுதிய கைகளை கருக்கிவிடத் தோன்றுகிறது. புத்திசாலி காஜல் ரசிகர்கள் அந்த பாடல் முடிந்ததும் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளம்பி வந்துவிடலாம். அல்லது அந்த பாடல் யூடியூபில் வெளிவந்ததும் பதிவிறக்கி காஜல் கலெக்ஷனில் சேர்த்துக்கொள்ளலாம். காஜலுக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையில் பாடல் நன்றாகயிருக்கிறது. தவில் இசை கின்னென்று இருக்கிறது.

அப்புறம் இரண்டாவது பாதியில் எண்பதுகளின் பாணியில் சில காட்சிகள். அதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் எடுபடவில்லை. கடைசியில் ராதிகா ஆப்தே (காஜலின் அத்தை) என்ன ஆனார் என்றே சொல்லவில்லை.

ஆக, ஒரு பாடல், இடைவேளைக்குப் பின் சில காட்சிகள் தவிர்த்து படம் குப்பை. திரையரங்கில் பின்-டிராப் சைலன்ஸ் ! விறுவிறுப்பான ஒரு த்ரில்லரைக் கூட மக்கள் இவ்வளவு அமைதியாக ரசிக்க வாய்ப்பில்லை. படத்தில் அவர்களை அவர்களே கிண்டலடித்து நிறைய குறியீடுகளை வைத்திருக்கிறார்கள். ஓவர் கான்பிடன்ஸ் சித்ரா தேவிப்ரியா, அடிக்கடி ஓஹோன்னானாம் என்று நக்கல் விடும் சந்தானம், இந்த பணிவும் சமயோஜித புத்தியும் உங்களை எங்கேயோ கொண்டு போய் விடப்போகுது என்று சொல்லும் கார்த்தியின் வசனம் என அடிக்கடி ராஜேஷின் நிலையை எதிரொலிக்கின்றன.

ராஜேஷுக்கு வெ.மா.சூ.சொ நான்கில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட தொலைக்காட்சியில் ப்ரோமோ என்கிற பெயரில் வந்து பல்லிளிக்க மாட்டார். காஜல் கதாநாயகி இல்லாத பட்சத்தில் ராஜேஷுடைய அடுத்த படத்தை நான் நிச்சயமாக திரையரங்கில் பார்க்கப்போவது இல்லை.

படம் பார்த்தபிறகு படத்தின் ட்ரைலர் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது. ட்ரைலரில், அழகு, இனிமையான குரல் இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றவள் கரீனா சோப்ரா என்று வர்ணிக்கிறார் கார்த்தி. சந்தானம் நம்பியார் பாணியில் கையைக் கசக்கிக்கொண்டே மும்பை கரீனா சோப்ரா’வா ? அம்பை தேவிப்ரியாவா ? என்று கேட்கிறார். மேலே சொன்ன காட்சிகள் படத்திலேயே இல்லையே ? அப்புறம் என்ன மா’ன்னாவுக்கு ட்ரைலரில் ? 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment