Showing posts with label kajal. Show all posts
Showing posts with label kajal. Show all posts

16 January 2014

வீரமான ஜில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வருடத்தின் தைப்பொங்கல் தமிழ் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவின் இருபெரும் துருவ நட்சத்திரங்களான அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. ரசிகர்கள் தீபாவளியும் பொங்கலும் ஒரே நாளில் அமைந்தது போல கொண்டாட்ட மனநிலையுடன் இருக்க, திரையரங்க உரிமையாளர்களை பொறுத்தமட்டில் ஒரு சிறிய பின்னடைவு. இருவேறு தினங்களில் தனித்தனியாக வெளியாகி இரட்டை வசூல் பொன் முட்டைகளை தர வேண்டிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ஒரேயொரு பொன் முட்டை மட்டுமே சாத்தியம். பன்திரை வளாகங்களுக்கு பிரச்சனையில்லை. பல ஒற்றைத்திரை அரங்குகள் வேறு வழியின்றி ‘தலைக்கு’ இரண்டு காட்சிகள் காட்டின. ஒரு புறம் தலயா ? தளபதியா ? என்ற போட்டி இருந்தாலும், இருவருக்கும் பொதுவான மசாலாப்பட பிரியர்கள் அடுத்தடுத்து இரண்டு படங்களையும் பார்த்து ஆனந்தக்கூத்தாடினர். எல்லாம் சரிதான். ஆனால் இந்த படங்கள் இரண்டும் உண்மையாகவே நன்றாக இருந்ததா என்று சற்று உணர்ச்சிவசப்படாமல் பார்க்கலாம்.

வீரம், ஜில்லா படங்கள் வெளியாகி முழுமையாக ஏழு நாட்கள் ஆகிவிட்டதால் கதை எல்லாம் சொல்லத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

ஜில்லா – பார்த்து பார்த்து சலித்த கதை இல்லை என்றாலும் ஏற்கனவே வேறு பரிமானங்களில் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட ‘தீனா’ பாணி கதை. விஜய்யும் மோகன் லாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க அவர்கள் இருவருடைய பிரஸ்தாங்களே நிரம்பியிருக்கின்றன. அதாவது, தேவர் மகன் படத்தில் கமல் எப்படி நடிகர் திலகத்தை பயன்படுத்திக் கொண்டாரோ அதே போல மோகன் லாலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். ஜில்லாவின் காரணமாக மலையாள தேசத்தில் விஜய்யின் புகழ் ஓங்கியிருக்கக்கூடும். லாலேட்டன் நடித்திருப்பதாலோ என்னவோ பின்னணி இசையில் பெரும்பாலும் 'செண்டை மேளம்' பயன்படுத்தியிருக்கிறார்கள். மோகன் லால் விஜய்யை விட பெரிய காமெடி பீஸாக இருப்பார் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் நான் சிவன்டா என்று கத்திக்கொண்டே இருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் கமிஷனர் போல ஏதோவொரு பதட்டத்துடனேயே வசனம் பேசுகிறார். ரவி மரியா கதாபாத்திரத்தை அடிக்கடி குறுகுறுவென காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கு சந்தேக மசுறை ஏற்படுத்துறாங்களாமாம். இறுதியில் வில்லன் யார் என்பதில் டுவிஸ்ட் வைத்து, சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஜில்லாவின் நாயகி காஜல். இறுக்கமான காவலர் உடுப்பில் தோன்றி கிறக்கமூட்டுகிறார். ஜில்லாவில் காஜலின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று பாடல்களில் தோன்றி களிப்பூட்டுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இலவச இணைப்பாக நிவேதா தாமஸை தேர்ந்தெடுத்தமைக்கு விஜய் மச்சானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரம் – அண்ணன் தம்பிகள் கதை. கேட்டதும் சலிப்பாக இருக்கிறது அல்லவா...? படமும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறது. அஜித்தின் தம்பிகளாக விதார்த் உட்பட நான்கு சுமார் மூஞ்சிகள் நடித்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஆளு. நீயும் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி தானா என்று கேட்ட பாவத்திற்காக கல்லூரி படிப்பு முடிக்காமலே கூட ஐந்தாவது தம்பிக்கொரு ஜோடி சேர்த்திருக்கிறார்கள். நல்லவேளையாக அஜித் அட்டகாசத்தில் முயற்சித்தது போல வட்டார வழக்கு எதையும் முயற்சிக்கவில்லை. வசனங்களை அழுத்தம் திருத்தமாக பேசாமல் கொஞ்சம் லூஸ் விட்டு பேசுகிறார். வழக்கமான மசாலா படங்களில்லாத புதுமை ஒன்று வீரத்திலிருக்கிறது. துவக்கத்திலிருந்தே அஜித் பக்கம் ஒரு உயிர்பலி கூட ஏற்படுவதில்லை. ஒரு சறுக்கல் கூட இல்லை. எல்லோரையும் போட்டு துவம்சம் செய்கிறார். அந்த ஊரில் இனி அடிக்க ஆட்கள் இல்லையென்றதும் தமன்னாவின் ஊருக்கு போய் அங்கே ஒரு கும்பலை புரட்டி எடுக்கிறார். கடைசியில் மீண்டும் அதுல் குல்கர்னி என பழைய வட இந்திய வில்லனை அழைத்துவந்து சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

காஜலோடு ஒப்பிடும்போது வீர நாயகி ஒரு படி மேல். சிற்பங்களை பராமரிப்பவள் என்ற புதுமையான பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் தீபங்களுக்கு இடையே தேவதை போல காட்சியளிக்கிறார். ஏதோவொரு பனி பிரதேசத்தில், நோகாமல் கோர்ட்டு சூட்டு போட்டு ஆடும் அஜித்துடன் குறைந்தபட்ச ஆடைகளுடன் ஆடி சூடேற்றுகிறார். தமன்னாவின் தொப்புளை பார்க்கும்போது அவருடைய மார்க்கெட் சுணக்கமாக இருக்கிறதென்று நம்ப முடியவில்லை.

இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் சராசரி அக்ஷன் மசாலா படங்கள். இரண்டும் மொக்கை. பிரதீப் ராவத், தம்பி ராமையா, வித்யுலேகா ராமன், ஸ்டண்ட் சில்வா என இரண்டிலும் சிலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரதீப் ராவத் என்ற வட இந்திய நடிகர். பார்ப்பதற்கு வலைப்பதிவர் பபாஷாவிற்கு வயதானது போல இருப்பார். முன்பொரு காலத்தில் கஜினி, தொட்டி ஜெயா என ஒரு சுற்று வந்தவர். அவரை வலியச் சென்று அழைத்துவந்து சிரிப்பு வில்லன், குணச்சித்திர வேடங்களை கொடுத்திருக்கிறார்கள். ஜில்லாவில் பிரதீப் ராவத் தோன்றும் போதெல்லாம் பிண்ணனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கின்றன. ஒரு காட்சியில் கூட, வடமொழியில் பேசுகிறார். ஒருவேளை பிரதீப் ராவத்தை, திராவிட நாயகர்களான மோகன் லாலையும் விஜய்யையும் எதிர்க்க வந்த ஆரிய சக்தியாக சித்தரித்திருக்கிறார்களோ என்னவோ...? ஸ்டண்ட் சில்வா பாவம். இரண்டு நாயகர்களிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். இரண்டு படங்களுக்கும் எப்படி ‘யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதை எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. ஜிங்குனமணி பாடலில் ஆட்டக்காரிகளின் மாராப்பை மறைத்தால் மட்டும் போதுமா...? வன்முறை காட்சிகள்...? காட்சி நேர்த்தியாக வரவேண்டி ரத்தத்தை பார்வையாளர்களின் முதுகு வரைக்கும் தெறித்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், பாடல் காட்சிகள் என சரிவிகித வார்ப்புருவில் பொருத்தப்பட்டுள்ளன. ஜில்லாவில் சூரி வந்து புட்டத்தில் குத்து வாங்கி சிரிக்க வைக்க முயற்சித்து படுத்தி எடுக்கிறார். வீரத்தில் கொஞ்சம் ஆறுதல். சந்தானத்தின் வசன வெடிகள் உண்மையாகவே ரசித்து சிரிக்க வைக்கின்றன.

வாய்வழி பிரச்சாரம் என்று ஒன்று இருக்கிறது (எதுவும் கெட்டவார்த்தை இல்லை) ஆங்கிலத்தில் word of mouth marketing என்பார்கள். அதன்படி இரண்டு படங்களும் வெளியான தினத்திலிருந்தே ஜில்லா படத்தை மொக்கையென்றும், வீரத்தை ஹிட்டென்றும் யாரோ ஒரு மகானுபாவர் கிளப்பிவிட அதையே மற்றவர்களும் பின்பற்றி கிட்டத்தட்ட அதுதான் உண்மை என்பது போலாக்கிவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் வீரம், ஜில்லா இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டில் எது பரவாயில்லை என்று கேட்டால் வீரத்தை சொல்லலாம், சந்தானத்திற்காக.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 December 2013

கனவுக்கன்னி 2013 - பாகம் 2

05. காஜல் அகர்வால்
ன்னுக்குட்டி காஜலுக்கு தமிழில் அழகுராஜா மட்டும் தான் வெளிவந்திருக்கிறது. அதிலும் மகா மட்டமான கேரக்டர். பாடல் காட்சியில் கூட சேலையை கட்டிக்கொண்டு தங்கு புங்கு'ன்னு குதிக்க விட்டிருக்கிறார்கள். கன்னுக்குட்டியின் குத்தமில்லை என்றாலும் வருந்தக்கூடிய விஷயம். மற்றபடி தெலுங்கில் காஜல் நடித்து வெளிவந்த பாட்ஷா, நாயக் இரண்டும் விஷுவல் விருந்து. ஜில்லாவில் மறுபடி துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல சீறணும்...!

04. நஸ்ரியா
ல்ல நேரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மீண்டுமொரு கேரள வரவு. தமிழ் சினிமாவில் துரிதமாக பிரபலமாகி அதைவிட துரிதமாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி என அடுத்தடுத்து படங்கள். ஜெனிலியா ரக குறும்புத்தனம் நஸ்ரியாவின் சிறப்பம்சம். சிலருடைய முகவெட்டு புகைப்படங்களுக்கு பொருந்தாது. அதுபோல நஸ்ரியாவின் முகவெட்டு புகைப்படங்களிலும், குறும்புத்தனம் காட்டும்போதும் மட்டுமே ஈர்க்கிறது. தொப்புள் சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் உயரத்தை எட்டியிருப்பார்.
03. டிம்பிள் சொபேட்
ராத்திய மண்ணில் பிறந்த மல்லிகைப்பூ. நல்லவேளையாக மராத்தி சினிமாவில் டிம்பிளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலிவுட்டிலும் வத வத'ன்னு வந்து போகும் நடிகைகள் போல ஒரே படத்தில் காணாமல் போய்விடுவார் போல டிம்பிள். துரதிர்ஷ்ட வசமாக டிம்பிளின் நடிப்பில் வெளிவந்த யாருடா மகேஷும் கவனிக்கப் படவில்லை. எடுப்பான முகம், அளவான உடல், தாராள கவர்ச்சி என எல்லாம் இருந்தபோதும் கூட டிம்பிளை கண்டு கொண்டாரில்லை. இதுபோல கைவிடப்பட்டவர்கள் தெலுங்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வருவது வழக்கம். பார்க்கலாம். பிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்கணும்.

02. மனிஷா யாதவ்
ழக்கு எண்ணில் கவனித்து, பேசப்படக்கூடிய வேடம் இல்லை என்றாலும் மனிஷா தனக்கென சில வாய்ப்புகளுடன் தமிழ் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார். மனிஷா நடிப்பில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் வருடத்தின் சிறந்த படங்களுள் ஒன்று மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் என் மனம் கவர்ந்த படமும் கூட. ஜன்னல் ஓரம் பார்க்கவில்லை. தோற்றம் காரணமாக இவரைத் தேடி ஒரு மாதிரி சின்னப்பெண் கேரக்டரே கிடைக்கிறது போல. தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டு படங்களுக்கென நேர்ந்து விடப்பட்ட நடிகையாக மாறிவிடும் அபாயம் வேறு இருக்கிறது. பட்டைய கெளப்பணும் மனிஷா...!

01. பார்வதி
ரு படம். அவரா இவர் என்று எல்லோரையும் தோற்ற மாற்றம் காரணமாக மிரள வைத்துவிட்டார். என்னதான் பூ நல்ல படம் தான் என்றாலும், பார்வதி அவார்டுகளை அள்ளினார் என்றாலும் அப்படி ஒன்றும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தற்போது சில பல டிங்கரிங் வேலைகள் செய்து சிக்கென திரும்பி வந்திருக்கிறார். அவருடைய நடிப்பில் வெளிவந்த மரியான் தோல்வியடைந்தாலும் அவர் தோல்வி அடையவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன ? என்று கேட்ட குத்தத்திற்காக மனதில் டெண்ட் அடித்துவிட்டார்.

Post Comment

5 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அழகுராஜாவை பார்த்ததற்கு ஒரேயொரு காரணம் இருக்குமானால் அது அழகுராணி காஜல் மட்டுமே...! இயக்குநர் ராஜேஷின் முந்தய படங்கள் மூன்றையும் நான் சிரித்து ரசித்திருக்கிறேன். இருப்பினும் “ராஜேஷ் படமென்றால் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்...” என்பது போன்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. அவருடைய படங்களில் ஒருவித பொறுப்பின்மை ஆங்காங்கே விரவிக்கிடப்பதை காண முடியும். எனக்கும் உங்க பொண்ணுக்கும் மேட்டர் ஆயிடுச்சு’ன்னு சொன்னாக்கூட பேக்கு மாதிரி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார் ஒரு அப்பா. நான் வேலைக்கே போகாம வெட்டியா இருந்தா நீ என்னை லவ் பண்ணுவியா’ன்னு ஹீரோயினிடம் கேட்கும் அரைலூஸு ஹீரோ போன்ற irritating காட்சிகளை அவருடைய படங்களில் பார்க்கலாம். அழகுராஜாவின் ட்ரைலர் பார்த்தபோதே அது மொக்கையென்று தெரியும். படம் வெளியான சில மணிநேரங்களில் சூரமொக்கை என்று தெரிந்துவிட்டது. காஜலுக்காக தாங்கிக்கொள்ள மாட்டேனா என்ன ?

எல்லா ராஜேஷ் படங்களைப் போலவே இவருதாங்க நம்ம ஹீரோ என்ற வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கிறது. கார்த்தி ஒரு லோக்கல் சேனல் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய பணியாளர் சந்தானம். பட்ஜெட் மீட்டிங் என்று சில வேடிக்கைகள், நகைக்கடை அதிபராக கோட்டாஜி. படம் துவங்கி ஒரு இருபது நிமிடங்கள் இருக்கும். ஏதோ சுமாராக பார்க்கக்கூடிய அளவில் போய்க்கொண்டிருப்பதாக தோன்றியது. போகப் போக என்னடா இது எழவு வீட்டுக்கு வந்துட்டோமா ? என்று தோன்ற ஆரம்பிக்கிறது. எதற்கெடுத்தாலும் வாயைப் பொத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். காமெடியாம் ! ஆளாளுக்கு லபோ திபோவென்று கத்திக்கொண்டே இருக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவுடைய சின்னச் சின்ன மேனரிசங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரே ஹை-பிட்சில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ?

காஜல் காட்சிகளை பார்க்கும்போது கோபம் தான் வருகிறது. ப்ரதர் ராஜேஷ், உங்களுக்கு காமெடி பீஸ் வேண்டுமென்றால் அனுயா பகவத், ஹன்சிகா மோத்வாணி போன்ற சீமாட்டிகளை போட்டு, விடிய விடிய காமெடி செய்யலாமே ? எங்கள் காஜல் உமக்கு என்னய்யா துரோகம் செய்தார் ? காஜல் ஃபீல்ட் அவுட் ஆனால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தமாதிரி கேவலமான வேடங்களை ஏற்று நடிப்பதை பார்த்தால் சங்கடமாக இருக்கிறது.

யாருக்கும் சொல்லாம... என்றொரு பாடல் வருகிறது. அதில் காஜலை பார்க்கும்போது காஜல் ஃபீல்ட் அவுட் ஆனால் பரவாயில்லை என்று எழுதிய கைகளை கருக்கிவிடத் தோன்றுகிறது. புத்திசாலி காஜல் ரசிகர்கள் அந்த பாடல் முடிந்ததும் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளம்பி வந்துவிடலாம். அல்லது அந்த பாடல் யூடியூபில் வெளிவந்ததும் பதிவிறக்கி காஜல் கலெக்ஷனில் சேர்த்துக்கொள்ளலாம். காஜலுக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையில் பாடல் நன்றாகயிருக்கிறது. தவில் இசை கின்னென்று இருக்கிறது.

அப்புறம் இரண்டாவது பாதியில் எண்பதுகளின் பாணியில் சில காட்சிகள். அதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் எடுபடவில்லை. கடைசியில் ராதிகா ஆப்தே (காஜலின் அத்தை) என்ன ஆனார் என்றே சொல்லவில்லை.

ஆக, ஒரு பாடல், இடைவேளைக்குப் பின் சில காட்சிகள் தவிர்த்து படம் குப்பை. திரையரங்கில் பின்-டிராப் சைலன்ஸ் ! விறுவிறுப்பான ஒரு த்ரில்லரைக் கூட மக்கள் இவ்வளவு அமைதியாக ரசிக்க வாய்ப்பில்லை. படத்தில் அவர்களை அவர்களே கிண்டலடித்து நிறைய குறியீடுகளை வைத்திருக்கிறார்கள். ஓவர் கான்பிடன்ஸ் சித்ரா தேவிப்ரியா, அடிக்கடி ஓஹோன்னானாம் என்று நக்கல் விடும் சந்தானம், இந்த பணிவும் சமயோஜித புத்தியும் உங்களை எங்கேயோ கொண்டு போய் விடப்போகுது என்று சொல்லும் கார்த்தியின் வசனம் என அடிக்கடி ராஜேஷின் நிலையை எதிரொலிக்கின்றன.

ராஜேஷுக்கு வெ.மா.சூ.சொ நான்கில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட தொலைக்காட்சியில் ப்ரோமோ என்கிற பெயரில் வந்து பல்லிளிக்க மாட்டார். காஜல் கதாநாயகி இல்லாத பட்சத்தில் ராஜேஷுடைய அடுத்த படத்தை நான் நிச்சயமாக திரையரங்கில் பார்க்கப்போவது இல்லை.

படம் பார்த்தபிறகு படத்தின் ட்ரைலர் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது. ட்ரைலரில், அழகு, இனிமையான குரல் இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றவள் கரீனா சோப்ரா என்று வர்ணிக்கிறார் கார்த்தி. சந்தானம் நம்பியார் பாணியில் கையைக் கசக்கிக்கொண்டே மும்பை கரீனா சோப்ரா’வா ? அம்பை தேவிப்ரியாவா ? என்று கேட்கிறார். மேலே சொன்ன காட்சிகள் படத்திலேயே இல்லையே ? அப்புறம் என்ன மா’ன்னாவுக்கு ட்ரைலரில் ? 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 May 2013

பெண் பார்க்கும் படலம்

அன்புள்ள மனைவிக்கு,

அது ஒரு ஞாயிறு மாலை. நான் என்னுடைய குடும்பத்துடன் உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தேன்.

“ஹே........ மாப்ள வந்துட்டாரு....!” என்று பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டே சில வாண்டுகள் எங்களை முந்திச் சென்றன. எங்களுடைய வருகையை உள்ளே இருப்பவர்களுக்கு முன்னறிவிப்பு செய்திருக்கக்கூடும். எட்டுத் திக்கிலிருந்தும் யாரோ எங்களை கண்காணித்துக் கொண்டே இருப்பதை போன்றதொரு குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இதமான மாலைத்தென்றலில் கூட வியர்த்துக் கொட்டியது. அண்டை வீட்டு வாசல்கள், மொட்டை மாடிகள், பால்கனிகள் என்று எங்கெங்கிலிருந்தும் மனித கண்கள் எங்களை, குறிப்பாக என்னை நோட்டமிட்டபடி இருந்தன. அவற்றில் பெரும்பாலும் பெண்கள். ஒருத்தி நைட்டி மீது குற்றால துண்டு ஒன்றினை தற்காலிக துப்பட்டாவாக சூடியிருந்தாள். அவள் முகத்தில் அர்த்தம் புரியாத ஒரு சிரிப்பு வியாபித்திருந்தது. அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து “வாங்க... வாங்க... வாங்க... வாங்க...” என்று ஒரு ஹை-பிட்ச் குரல் எகிறி வந்தது. உன்னுடைய தந்தை தான். கார்டனுக்குள் நுழைந்த அமைச்சர் போலவே பம்மியபடி வந்து எங்களை உள்ளே அழைத்தார். உன் தந்தையைக் கண்டதும் ஏனோ என் மனக்கண்ணில் ரைட்டர் பேயோனுடைய ப்ரோபைல் படம் தோன்றி மறைந்தது.

கதவைச் சுற்றி கோவில் வாசல் போல செருப்புகள் இரைந்து கிடந்தன. உன்னுடைய அப்பா யாரையோ கூப்பிட்டு செருப்புகளை ஓரம்தள்ளி வைக்காதமைக்காக கடிந்துக்கொண்டார். மிகவும் கண்டிப்பாக பேர்வழியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் தோன்றினாலும் கூட ஒரு நமுட்டுச்சிரிப்பும் கூடவே வந்துத்தொலைத்தது. வாசற்காலில் தலை இடித்துவிடாதபடி கவனமாக உள்ளே நுழைந்தேன். அந்த குறுகிய அறைக்குள் சுமார் ஐம்பது மனித தலைகளாவது தென்பட்டிருக்கும். நாங்கள் நுழைந்ததும் சட்டென வாத்தியார் நுழைந்த வகுப்பறை போல நுன்னமைதி. எங்களுக்கென சோபாவில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்யாத தரைப்பகுதியில் லட்டு, பாதுஷா, மைசூர் பாகு போன்ற லெமூரியா காலத்து பட்சணங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.

என் கண்கள் என்னையே அறியாமலும் வேறு வழியில்லாமலும் உன் வீட்டுச் சுவற்றை மேய்ந்துக் கொண்டிருந்தன. ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒருத்தர் கோட்டு-சூட்டு போட்டு டையெல்லாம் கட்டி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். உன்னுடைய மூதாதையராக இருக்கக்கூடும். இதயவேந்தன் ரசிகர் மன்றம் சார்பாக கொடுக்கப்பட்ட தினசரி நாட்காட்டி பல மாதங்களாக தேதி கிழிக்கப்படாமல் தொங்கிக்கொண்டிருந்தது. பீரோ கண்ணாடியில் கர்த்தர் ஜீவித்துக்கொண்டிருந்தார். நானில்லாத உங்களுடைய குடும்ப புகைப்படம். அதில் உன்னுடைய வெட்கச்சிரிப்பு. ஷோ கேஸ் சாயலில் இருந்த அலமாரியில் சில கைவினை பொருட்கள். இன்னொரு அலமாரியில் ஒருக்களித்து சாத்தி வைக்கப்பட்டிருந்த தடிமனான மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். அருகிலேயே உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையிலிருந்து கொஞ்சம் மின்விளக்கு வெளிச்சம் கசிந்துக்கொண்டிருந்தது. சர்வநிச்சயமாக நீ அந்த அறைக்குள்ளே தான் இருக்கவேண்டுமென எனக்குள்ளிருக்கும் விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார். ஒரு முழு சுற்றை முடித்துக்கொண்டு என் பார்வை தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, கீழே அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டார்கள். ஏதாவது ஜோக் அடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதற்குள் உன் அப்பாவிற்கு அருகில் அமர்ந்திருந்த உறவினர் உன்னைப்பற்றிய பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பிக்க, என்னுடைய கவனம் ஆங்கே நிலை கொண்டது. நீ சின்ன வயதிலிருந்தே படிப்பில் ரொம்ப சுட்டியாமே ! டீச்சருக்கே சொல்லிக் கொடுப்பியாம். பக்கத்து வீட்டு குழந்தைகளை எல்லாம் நீதான் பாத்துப்பியாம். ஒருமுறை ஸ்கூலுக்கு அப்துல் கலாம் வந்தபோது உன்னைப் பாராட்டி பேனா பரிசளித்ததை உன் தந்தையார் உறவுக்காரருக்கு நினைவூட்டும் தொனியில் என்னிடம் தெரிவித்தார். நீயே எம்ப்ராய்டரி போட்டது என்று ஒரு ஃப்ரேம் செய்த மயில் படத்தையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் தலையணை உரையையும் காட்டி சிலாகித்துக்கொண்டிருந்தார் உன் தந்தை. மேலும், உன்னை மருத்துவச்சியாக்க வேண்டுமென நீ பிறந்தபோதே முடிவெடுத்து விட்டதாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த கனவு நினைவான சந்தோஷமும் பெருமையும் அவருடைய கண்களில் தெரிந்தன. சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து ஒரு சிநேகமான புன்னைகையை உதிர்த்தார் உன்னுடைய அம்மா. அநேகமாக என்னுடைய காத்திருப்பின் வலியை அவர் உணர்ந்திருக்கக்கூடும்.

நம்மவர்களுக்கு பேச்சை எங்கே தொடங்கினாலும் சினிமாவிலோ அரசியலிலோ கொண்டுவந்து விடும் கெட்டப்பழக்கம் எப்பொழுதும் உண்டு. கப்பலோட்டிய தமிழனில் சிவாஜியின் நடிப்பைப் பற்றி உன்னுடைய அப்பாவும், நாடோடி மன்னனில் எம்.ஜி.யாரின் கத்தி சண்டையைப் பற்றி என்னுடைய அப்பாவும் சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாமல் மொக்கை போட்டுக்கொண்டிருந்தது எனக்கு அசுவாரஸ்யத்தையும் அசவுகரியத்தையும் ஏற்படுத்தியது. சண்டை போடாதீங்க ஏட்டய்யா என்று ஆட்டையை கலைக்க எத்தனித்தாலும் நாகரிகம் கருதி அடக்கியே வாசித்தேன். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி ? பொண்ண வரச்சொல்லுங்கப்பா என்று சபையில் எனக்காக ஒரு மீசை குரல் எழுப்பியது. மீசைக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்க முடியாவிட்டாலும் ஒரு குவாட்டராவது வாங்கித்தர வேண்டுமென்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

அடர் சிகப்பு நிற பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் நீ அன்னநடை போட்டு அறையிலிருந்து வெளிவந்த தருணம் மின்சார கனவு போல இருந்தது. பிண்ணனியில் ஸ்ட்ராபெர்ரி கண்ணே... விண்வெளி பெண்ணே... என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு மட்டும் ஏற்பட்டது. வீட்டு வாசலில் ஏன் கோவில் போல செருப்புகள் இரைந்து கிடந்தன ?, பட்சணங்களுக்கு மத்தியில் ஏன் ஜாங்கிரியை வைக்கவில்லை ? போன்ற உண்மைகள் புரிந்தன. “Hi... Im Prabhakar...” என்று கம்பீரமாக எழுந்து நின்று உன்னுடன் கைகுலுக்க வேண்டுமென என் வீட்டுக்கண்ணாடி முன்பு இருபத்தேழு முறை ஒத்திகை பார்த்திருந்தேன். ஆனால் உன்னைக் கண்டதும் நாக்கு குறழ... ச்சே... குழற ஆரம்பித்துவிட்டது. நான் உன்னை பார்க்கிறேனா என்று என்னையே பார்த்துக்கொண்டிருந்த அப்பா, “டேய்... பொண்ணை சரியா பாரேன்டா...” என்று என் காதில் கிசுகிசுத்தார். “நான் பாத்துக்குறேன் பா... நீங்க மொதல்ல அந்தப்பக்கம் திரும்புங்க...” என்று பெருசை ஆஃப் செய்தேன். பையன், பொண்ணுக்கிட்ட தனியா நாலுவார்த்தை பேசணும்ன்னு ஆசைப்படுறான் மறுபடியும் அதே மீசைதான். டேய் நான் எப்படா சொன்னேன் மீசைக்கு குவாட்டர் கேன்சல். உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாலும்கூட ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது.

நேர்முகத் தேர்விற்கு செல்லும் பணியாளனின் மனநிலையில் தான் அறைக்குள் நுழைந்தேன். நான் உன்னைப் பார்க்கும்போது நீ மண்ணையும், நான் மண்ணைப் பார்க்கும்போது நீ என்னையும் பார்ப்பதிலேயே பத்து நிமிடங்கள் ஓடிவிட்டன. யார் முதலில் பேச்சை துவங்குவது என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய மரணப்படுக்கையில் பக்கம் அமரப்போவது நீயேதான் என்று மட்டும் உள்ளுணர்வு ஆணித்தரமாக சொல்கிறது. அருகில் வந்து உன்னை இறுக்கி அனைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்து எனக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு ? என்று கேட்டுவிட்டேன். அதை உன்னுடைய காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லாத அளவிற்கு மெதுவாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். நினைவு திரும்பிய போது மீண்டும் சோபாவில் அமர்ந்து உன்னுடைய பதிலுக்காக காத்திருந்தோம். நீ என்னம்மா சொல்லுற ? என்றார் என் மாமனார். சரி என்ற சொல்லுக்கேற்ப ஒரு மெல்லிய தலையசைப்பு. சட்டென்று மக்காவ் டவரிலிருந்து பஞ்ஜி ஜம்ப் அடித்தது போன்றதொரு ஜில்லிப்பு. அந்த நொடியிலிருந்து நான் வாழத் துவங்கியிருந்தேன்.

அன்று உங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது உன் அப்பாவின் கையை பற்றிக்கொண்டு “தேங்க்ஸ் மாமா...” என்று சொன்னேன். ஒரு அழகு பதுமையாய் பெற்றெடுத்து எனக்கே எனக்காக கொடுத்ததற்குத்தான் தேங்க்ஸ் சொல்கிறேன் என்ற பேசிக் நாலேஜ் கூட இல்லாத என் மாமனார் ஒன்றும் புரியாமல் தலை சொறிந்தபடி சரிங்க மாப்ள என்று அசடு வழிந்தார்.

இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment