Showing posts with label kolli. Show all posts
Showing posts with label kolli. Show all posts

30 December 2016

கொல்லிமலை – பயணக்குறிப்புகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலை ஒரு பேச்சுலர்’ஸ் பேரடைஸ் என்றுதான் சொல்லவேண்டும். கொல்லியில் நீங்கள் கோவில்களைத் தவிர மற்ற போக்கிடங்களுக்கு சென்றால் அங்கே குழுவாக மது அருந்திக்கொண்டிருக்கும் ஆடவர்களை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஆங்காங்கே காலி மது புட்டிகள் வீசப்பட்டிருக்கும். இதனாலும் வேறு சில காரணங்களாலும் இங்கே குடும்பமாக அதிகம் பேர் செல்வதில்லை. செல்லக்கூடாது என்றில்லை. சில கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்பவர்கள் செல்லலாம்.

எப்படி செல்வது...?
சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ. பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ. சொந்த வாகனத்தில் சென்றால் எட்டிலிருந்து ஒன்பது மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம். சென்னையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம் வழியாக செல்லலாம். ஒரு ஐம்பது கி.மீ கூடுதலாக சுற்ற தயாராக உள்ளவர்கள் வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக வரலாம். இந்த வழியில் சிறப்பம்சம் ரோடு அட்டகாசமாக இருக்கிறது. 

பேருந்தில் அல்லது ரயிலில் செல்பவர்கள் நாமக்கல் சென்று அங்கிருந்து செம்மேடு அல்லது நேரடியாக அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் பேருந்தை பிடிக்கலாம். ஆனால், மலை மீது உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க தனி வாகனம் இருந்தால் தான் சரியாக இருக்கும். எனவே நாமக்கல்லிருந்து தனியார் வாகனத்தை வாடகைக்கு பிடித்துக்கொள்ளலாம்.

எங்கே தங்குவது...?
பெரும்பாலான தங்கும் விடுதிகள் செம்மேட்டையும் அதனை ஒட்டியும் அமைந்திருக்கின்றன. முன்பே ஒருமுறை சொன்னது போல கொல்லியில் ரிஸார்ட் என்கிற வார்த்தையே ஒரு மாயை. குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் பாங்கான விடுதியில் தங்க விரும்பினால் P.A.Holiday Innல் தேர்ந்தெடுக்கலாம். ஓரளவிற்கு கெளரவமான இடத்தில் தங்க விரும்பும் நல்ல தம்பிகள் நல்லதம்பியில் தங்கலாம். தண்ணிவண்டி தம்பிகளுக்கு ஏரோ மேன்ஷன், SKGV லாட்ஜ். இவற்றில் SKGV லாட்ஜ் மட்டும் செம்மேட்டில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. இதில் சாதக, பாதகங்கள் உண்டு. ஒரு அவசரத்திற்கு பிளாஸ்டிக் கிளாஸ் வாங்கக்கூட கடை இருக்காது. ஆனால் மனித நடமாட்டம் குறைவான பகுதியில் தனிமையாக பொழுதைக் களிக்கலாம். 

எத்தனை நாட்கள்...?
மூன்று நாட்கள். வெள்ளி காலை கிளம்பி மாலை சென்றடைந்து, சனி சுற்றிப் பார்த்து, ஓய்வெடுத்து, ஞாயிறு திரும்புவது கச்சிதமான திட்டம். நேரமில்லாதவர்கள் இரண்டு நாட்களில் பயணத்திட்டத்தை சுருக்கிக்கொள்ளலாம்.

என்ன பார்க்கலாம்...?
கொல்லியில் என்னென்ன இடங்களை பார்க்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. கூடவே அவற்றை எந்த வரிசையில் பார்ப்பது என்றும் ஒரு முறை இருக்கிறது. நானே பிரத்யேகமாக தயாரித்த இந்த வரிசைமுறையை பின்பற்றினால் உங்கள் நேரத்தை சேமிக்கலாம். 


10. நம்ம அருவி (வரைபடத்தில் இல்லை)


முதல் நான்கு இடங்களை போகும் வழியிலேயே / தினத்திலேயே பார்த்துவிடலாம். அடுத்த எட்டு இடங்களை மறுநாள் காலை துவங்கி ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு இறங்கலாம். கடைசி எட்டை மூன்றாவது நாள் அல்லது திரும்பும்போதோ பார்க்கலாம்.

எப்போது செல்லலாம்...?
ஆகாயகங்கையில் வருடம் முழுக்க நீர்வரத்து இருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதென்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்றால் தட்ப வெப்பம் செமத்தியாக இருக்கும். எல்லா அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கோவில்கள் மீது விருப்பம் உள்ளவர்கள், கொங்கலாய் அம்மன் கோவில் திருவிழாவை காண விழைபவர்கள் ஏப்ரலில் செல்லலாம். வருடாவருடம் நடைபெறும் வல்வில் ஓரி திருவிழாவை பார்க்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் செல்லலாம்.

எங்கே வாங்கலாம்...?
கொல்லி செல்லும்போது ஒரு முழு பகார்டி பாட்டிலை இங்கிருந்து சுமந்துச் சென்றோம். அங்கே சென்று பார்த்தால் செம்மேட்டில் அழகாக, அளவாக ஒரு டாஸ்மாக் இருக்கிறது, அங்கே பகார்டி கிடைக்கவும் செய்கிறது. பொதுவாகவே கொல்லிமலை குடிகாரர்களின் சொர்க்கம் போல தோன்றுகிறது. எந்த மூலைக்கு திரும்பினாலும் சுற்றுலாவாசிகள் மறைவாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் காலி புட்டிகள். குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளின் மீது வீசி சிதறடிப்பது இங்குள்ளவர்களின் கைப்பழக்கம் போலிருக்கிறது. 

முடிந்தவரைக்கும் சுற்றுச்சூழலை, இயற்கையை நாசம் செய்யாமல், சக சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் கொல்லியைக் கொண்டாடுங்கள். இத்துடன் கொல்லிமலை பயணக்கட்டுரைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுகிறது. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 November 2016

கொல்லிமலை – வீரகனூர்பட்டி சமணர் கோவில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் சீண்டாத, தனித்துவமான இடம் ஒன்றினைப் பற்றி சொல்லப்போகிறேன். வீரகனூர்பட்டி என்ற மலை கிராமம். அங்கே அமைந்திருக்கும் கொங்கலாய் அம்மன் கோவில். தொன்மையான சமணர் (?!) உருவச்சிலை. இவற்றைப் பற்றியெல்லாம் தமிழில் இதற்குமுன் எழுதியிருக்கும் ஒரே நபர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் தானென நினைக்கிறேன். கூடவே, எதிர்காலத்தில் கொல்லிமலை செல்லும் நண்பர்கள் வீரகனூர்பட்டிக்கும் செல்வதற்கு தோதாக மேலதிக தகவல்களும் தருகிறேன்.

நாங்கள் வீரகனூர்பட்டிக்கு சென்ற கதையை மட்டுமே தனிக்கட்டுரையாக எழுத வேண்டும். கொல்லிமலைக்கு ஸ்கெட்ச் போடும்போதே கூகுள் மேப்பில் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்த்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். முன்பே சொன்னது போல மேப்பில் குத்துமதிப்பாக கொல்லிமலை பக்கம் உலவினால் கூட ஆங்காங்கே ‘Ancient Jain Temple’, ‘Ancient Jain Idol’ போன்றவை கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, நெகனூர்பட்டி சமணர் கோவில். ஒதுக்குப்புற கிராமம் என்பதால் ஆர்வம் அதிகமானது. 

கொல்லியில் சென்று இறங்கியதிலிருந்து ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரிடமும் சித்தர் குகைகள் பற்றியும் நெகனூர்பட்டியைப் பற்றியும் விசாரித்தபடி இருந்தோம். நெகனூர்பட்டி என்று ஊர் இருப்பதே அங்கே யாருக்கும் தெரியவில்லை. இணைய அணுகல் (ஏர்டெல்) வேறு துண்டிக்கப்பட்டு விட்டதால் மறுபடியும் மேப்பில் அவ்விடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. திட்டமிட்ட மற்ற இடங்களை எல்லாம் பார்த்தாயிற்று. மறுநாள் காலை கிளம்புவதாக முடிவு செய்திருந்தோம். இன்னும் நெகனூர்பட்டி சமணர் கோவிலை மட்டும் பார்க்கவில்லை. கடைசி முயற்சியாக அன்றிரவு எனது டோகோமோ எண்ணை மீள்நிரப்பி 2G வேகத்தில் நெகனூர்பட்டியை கண்டுபிடித்து ஆஃப்லைனில் சேமித்தேன். விடிந்ததும் அங்கே சென்று வந்து பிறகு சென்னைக்கு கிளம்பலாம் என்று முடிவானது.

மழையுடன் விடிந்தது. இன்னொரு அரை மணிநேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று காத்திருந்து, காத்திருந்து எட்டு மணிக்கு மழை நின்றது. பத்து மணிக்காவது கொல்லியிலிருந்து கிளம்பினால் தான் மாலையிலாவது சென்னை வர முடியும். இப்போது போய் நெகனூர்பட்டிக்கு போகலாம் என்றால் என் உடன் வந்தவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அமைதியாக மோட்டுவளையை பார்த்தபடி படுத்திருந்தேன். என் மனக்குறையை குறிப்பால் உணர்ந்துகொண்ட என் தளபதி என்னை நெகனூர்பட்டிக்கு அழைத்துச் செல்ல அவராகவே மனமுவந்து ஒப்புக்கொண்டார்.

செம்மேட்டிலிருந்து வாசலூர்பட்டி வழியாக தின்னனூர்நாடு செல்லும் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் இலக்கை அடைந்துவிடலாம். இது செம்மேட்டிலிருந்து பத்து கி.மீ. கிலோமீட்டர் கணக்கை பார்த்தால் குறைவு போல தோன்றினாலும் மலைச்சாலை என்பதால் இந்த இடத்தை சென்றடைய அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. அங்கே சென்றதும்தான் அந்த ஊரின் பெயர் நெகனூர்பட்டி அல்ல வீரகனூர்பட்டி என்று தெரிந்தது. யாரோ கூகுள் மேப்பில் தவறுதலாக கொடுத்திருக்கிறார்கள். ஊர்க்காரர்களிடம் சமணர் கோவில் என்றதும் அம்மன் கோவில் தான் உள்ளது என்று மலையுச்சியை கை காட்டினார்கள். அங்கே வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் நடந்தே சென்றோம்.

 
பனிமூட்டமான வீரகனூர்பட்டி
அப்போது நேரம் காலை ஒன்பது மணி சுமார் இருக்கும். ஆனால் நாங்கள் நடந்து சென்ற பகுதி முழுக்க பனிமூட்டம். பத்து அடிக்கு முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. இதையெல்லாம் தவற விட்டுவிட்டு சென்னை செல்லப் பார்த்தோமே என்று என்னை நானே கடிந்துகொண்டேன். 

அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை
சிறிது தூரம் நடந்து மலையுச்சியை அடைந்தோம். அங்கே கேட்பாரற்று அமைந்திருக்கிறது கொங்கலாய் அம்மன் கோவில். 

கொங்கலாய் அம்மன்
அம்மனைக் கண்டதும் எனக்கு செந்தூரதேவி படம்தான் நினைவுக்கு வந்தது. பாழடைந்த கோவில், பார்வையால் பயம் காட்டும் அம்மன் உருவம். ஒருபுறம் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று முண்டியடிக்கிறார்கள். வெவ்வேறு அடுக்கில் பணம் கொடுத்து, கொடுத்த காசுக்கேற்ப தரிசனம் செய்கிறார்கள். இன்னொருபுறம் எங்கேயோ மலை மீது, ஒதுக்குப்புறமாக உள்ள கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்று தனியாக இருக்கிறது. 

அம்மன் கோவிலின் முகப்புப் பகுதி
வருடத்திற்கு ஒருமுறை (சித்திரை மாதம்) திருவிழா சமயத்தில் மட்டும் கோவிலை திறப்பார்கள் என்று ஊர்க்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். 

கொங்கலாய் அம்மனை பார்த்தாயிற்று. ஆனால் நாம் தேடி வந்தது சமணர் கோவிலாயிற்றே... மேப்பை கையில் வைத்துக்கொண்டு போக்கிமான் விளையாட்டைப் போல இங்கும் அங்கும் அலைந்தோம். கொஞ்ச நேரத்தில் ஊர்க்காரர்கள் இருவர் அந்தப்பக்கம் வந்தனர். இம்முறை சமணர் என்ற வார்த்தையை அவர்களிடம் பிரயோகிக்காமல் பழங்கால சிலை ஏதேனும் உள்ளதா என்றோம். அதோ அங்கே என்று வாழைத்தோப்பிற்குள் கை காட்டினார்கள். 

வாழைத்தோப்புக்குள் சமணர் (தெரிகிறாரா ?)
முதலில் அங்கிருக்கும் உருவம் எங்கள் கண்களுக்கே தெரியவில்லை. நாங்கள் சாமி கும்பிடுவதற்கு தான் வந்தோம் எங்களோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்றனர் அவ்விருவர். உள்ளே சென்றால் மோனலிஸா புன்னகையுடன், இடைப்பகுதி வரை மண்ணில் புதையுண்டு இருக்கிறது ஒரு சமணர் சிலை. ஜெயமோகன் இச்சிலையை 24 தீர்த்தங்காரர்களில் ஒருவர் என்றும், மகாவீரராக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

சமணர் உருவச்சிலை
எங்களை அங்கே அழைத்துச் சென்ற கிராமவாசிகள் பயபக்தியுடன் கற்பூரம் கொளுத்தி சமணரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சாமியின் பெயரென்ன என்றேன். இருவரில் இளையவர், முதியவரின் முகத்தை பார்த்தார். முதியவர் முனிவர் சாமி என்றார். அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்தபிறகு சமணரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். (பெரும்பாலும், கிராமவாசிகள் கோவில்களில், கடவுள் உருவச்சிலைகளை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை). 

வீரகனூர்பட்டி பயணம் ஒருவாறு எனது கொல்லிமலை பயணத்தை முழுமையடையச் செய்தது போல உணர்ந்தேன். வீரகனூர்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றதற்காகவும், ஒட்டுமொத்தமாக கொல்லிமலை பயணத்தில் முகம் கோணாமல், கோபப்படாமல், கால தாமதங்களையும், கரடுமுரடான சாலைகளையும் பொறுத்துக்கொண்ட எனது போர்ப்படை தளபதிகள் பிரகாஷ் மற்றும் ஜெய் ரமேஷ் இருவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஏறத்தாழ கொல்லிமலை பயணக்கட்டுரைகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். கடைசியாக கொல்லிமலை சென்றடைவது எப்படி..?, பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தங்கலாம்..?, எவ்வளவு செலவாகும்..? போன்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். தொடர்ந்து இந்த பகுதியை படித்து வந்த நண்பர்களுக்கு ஏதேனும் (விவகாரமில்லாத) சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.

கூகுள் மேப்பில்:
(நண்பர்கள் நேரமிருந்தால் மேப்பில் உள்ள தகவல் பிழைகளை சரி செய்யலாம்)

கடைசி இடுகை: பயணக்குறிப்புகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 November 2016

கொல்லிமலை – நோக்குமுனைகளும் பிற இடங்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: அருவிகள்
 
கொல்லிமலை தொடரில் அடுத்து நோக்குமுனைகள் பற்றியும் வேறு சில போக்கிடங்கள் குறித்தும் பார்க்கலாம். நோக்குமுனை என்றதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட வேண்டாம். ‘வியூ பாயின்ட்’ என்பதைத்தான் நம் மொழியில் எழுதியிருக்கிறேன். மலை வாசஸ்தலங்களுடைய சிறப்பம்சங்களில் ஒன்று நோக்குமுனைகள். தனிப்பட்ட முறையில், நோக்குமுனைகள் எப்போதும் எனக்கு பரவச உணர்வை தரக்கூடியவை. கொல்லிமலை சென்றபோது மொத்தம் மூன்று நோக்குமுனைகள் கண்டோம்.

சீக்குப்பாறை நோக்குமுனையிலிருந்து
முதலாவது சீக்குப்பாறை நோக்குமுனை. கொல்லியில் உள்ள பிரதான நோக்குமுனை இது. கொல்லி சென்ற எவரும் சீக்குப்பாறைக்கு செல்லாமல் திரும்பியிருக்க மாட்டார்கள்.

மாலை வேளையில்
செம்மேட்டிலிருந்து வெறும் 2 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது சீக்குப்பாறை. இங்கிருந்து மலையடிவார கிராமங்கள் குட்டிக்குட்டியாக அழகாக தெரிகின்றன.

சீக்குப்பாறையிலிருந்து இரவு
இங்கே காணக்கிடைக்கும் காட்சி பகல் வெளிச்சத்தில் ஓரழகு என்றால் இரவிருளில் பேரழகு.

இரண்டாவது டெம்பிள் கட் ரோடு நோக்குமுனை. இந்த நோக்குமுனை எங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஆகாயகங்கையிலிருந்து மாசிலா அருவிக்கு போகும் வழியில், தனியாக பிரியும் பாதையைக் கண்டு உள்ளே நுழைந்தால் ஓர் அற்புதமான நோக்குமுனை கிடைத்தது. இங்கிருந்து பார்த்தால் ஆகாயகங்கைக்கு அப்பாலிருக்கும் மலைப்பகுதி தெரிகிறது. 

டெம்பிள் கட் ரோடு நோக்குமுனையிலிருந்து
நாங்கள் இங்கே சென்றபோது நான்கைந்து இளைஞர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வழக்கம் போல சித்தர்களைப் பற்றி விசாரித்தோம். உடனே ஒருவர் சித்தர்கள் இங்கிருப்பது உண்மைதான் என்றார். மேலும் சித்தர்கள் இரண்டடி உயரம் தான் இருப்பார்கள், ஒருமுறை தான் அவர்களுடைய குகைப்பக்கம் போனபோது மார் முழுக்க ரோமங்களுடன், சட்டை அணியாத சித்தர் கக்கத்தை சொறிந்தபடி வெளியே வந்ததாகவும், அவரைக் கண்டதும் உள்ளே ஓடிப்போய்விட்டதாகவும் கதை சொல்லலானார். கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது.

மூன்றாவது சேலூர் (கஸ்பா) நோக்குமுனை. இதனுடைய சிறப்பம்சம் – இங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்க கோபுரம், திருச்சி மலைக்கோட்டை, தலைக்காவிரி ஆகியவை தெரியும் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு சிறப்பம்சம் இது மனித நடமாட்டம் அதிகமற்ற பகுதி. சேலூரிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் நுழைந்தபிறகு கிராமவாசிகள் நம்மை வித்தியாசமாக பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். 

சேலூர் கிராம வீடுகள்
ஜோத்பூர் நகரத்தில் உள்ளதைப் போல நெருக்கமாக கட்டப்பட்ட சின்னச்சின்ன வீடுகளை கடந்து மலையுச்சிக்கு சென்றோம். அங்கே காவல்துறை கண்ட்ரோல் ரூம் ஒன்று மட்டும் இருந்தது. நோக்குமுனை கட்டுமானம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 

சேலூர் நோக்குமுனையிலிருந்து
உள்ளே இருந்த ஒரு காவலரை விசாரித்து, இங்கே நோக்குமுனை கட்டுமானம் ஏதுமில்லை. இந்த இடமே ஒரு நோக்குமுனை என்று தெரிந்துக்கொண்டோம். தூரத்தில் தெரிந்த மலைக்குன்று திருச்சி மலைக்கோட்டையாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டோம்.

இவை தவிர்த்து சோளக்காட்டில் ஒரு நோக்குமுனையும், தமிழக அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நோக்குமுனையும் உள்ளன. 

புலியிடம் பால் கறக்கும் சிங்கம் (கோப்பு படம்)
தாவரவியல் பூங்கா குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் இளைப்பாறவும் தோதாக அமைந்திருக்கிறது.

வாசலூர்ப்பட்டியில் படகுத்துறை அமைந்திருக்கிறது. படகு சவாரியில் பெரிய ஆர்வமெதுவும் இல்லாததாலும், நேரமின்மையாலும் படகுத்துறையை தவிர்த்துவிட்டோம். ஆனால், வாசலூர்ப்பட்டி படகு இல்லத்திற்கு பக்கவாட்டிலுள்ள ஒற்றையடிப் பாதையில் நடந்து போனால் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று காணக்கிடைக்கிறது. 

தொன்மையான சிவன் கோவில்
இவற்றைத் தவிர்த்து பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் சோளக்காடு சந்தை, வல்வில் ஓரி சிலை. சோளக்காடு சந்தையில் பிரதானமாக பல்வகை வாழைப்பழங்களும் பலாப்பழமும் கிடைக்கின்றன.

வல்வில் ஓரி சிலை மலையின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது. குதிரையின் மீது வீற்றிருக்கிறார் வல்வில் ஓரி. குதிரையோடு இருக்கும் சிலைகளைப் பற்றி ஒரு சுவையான குறிப்பு உண்டு. சிலையில் குதிரை முன்னிரண்டு கால்களை தூக்கியபடி இருந்தால் அந்த மன்னர் போரில் வீர மரணம் அடைந்திருக்கிறார் என்று பொருள். குதிரை ஒரு காலை மட்டும் தூக்கியபடி இருந்தால் மன்னர் போரில் விழுப்புண் பெற்று சில காலம் கடந்து இறந்திருக்கிறார் என்றும், குதிரையின் நான்கு கால்களும் தரையில் இருந்தால் மன்னர் இயற்கை மரணம் அடைத்திருக்கிறார் என்றும் அர்த்தம். 

முன்னிரண்டு கால்களைத் தூக்கியபடி கம்பீரமாக நிற்கிறது ஓரியின் குதிரை !

ஆங்கிலத்தில் சேவ் தி பெஸ்ட் ஃபார் லாஸ்ட் என்பார்கள். அதுபோல, கொல்லியில் இதுவரை மக்கள் கால்தடம் அதிகம் பதிக்காத ஒரு பிரத்யேக இடம் குறித்து அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

(தொடரும்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 October 2016

கொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: ஆகாயகங்கை 

கொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் ! கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.

சித்தர்கள் குகையை தவிர்த்து கொல்லியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.

1. அறப்பளீஸ்வரர் கோவில்
ஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.

புகைப்படம்: HolidayIQ
அக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்
அறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடைந்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம். 

அக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.

இங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா ? பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.

3. மாசி பெரியசாமி கோவில்
இதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. 

பொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண கோவில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். 

அதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த இடுகை: மற்ற அருவிகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 October 2016

கொல்லிமலை - ஆகாயகங்கை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: தொடக்கம்

கொல்லிமலை ஒரு தேனிலவு என்றால் அதில் மணப்பெண் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி !

கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே கூடாதென்பது என் எண்ணம். ஆனால் அனைவரும் அணுகத்தக்க வகையில் இருக்கிறதா ஆகாய கங்கை என்றால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து ஆயிரத்தி சொச்சம் படிக்கட்டுகள் இறங்கியபிறகே அருவியைக் காண முடியும். ஆயிரம் படிக்கட்டுகள் என்பதால் உடல் / மன உறுதி குறைபாடு கொண்டவர்களுக்கு உகந்ததல்ல. நீர்வீழ்ச்சியை சென்றடைய ரோப்-கார் சேவை வேண்டுமென்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால விருப்பம். எனினும் அதன் நடைமுறை சாத்தியம் குறைவே என்று தோன்றுகிறது.

நீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது. ‘முடவாட்டு கால்’ என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது மூட்டு வலிக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தரக்கூடும்.

ஒரு காலத்தில் நீர்வீழ்ச்சிக்கு இறங்கிச்செல்ல சீரான படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அப்படியில்லை முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு தோதான இடங்கள் என போதிய வசதிகள் உள்ளன. பேரலில் இலவசக் குடிநீர் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இதனை அவ்வப்போது நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் இறங்கியேற சிரமப்படுவதால் நூறு படிக்கட்டு தொலைவிலேயே குடிநீரை வைத்துவிடுகின்றனர். எனவே கட்டாயமாக குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது.

படிக்கட்டுகள் இறங்க இறங்க அருவியின் சிணுங்கல் கேட்கத் துவங்குகிறது. இதுவே நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் (2010) பல தடைகளை கடந்து சோழ நகரத்தை கண்டடையும் குழுவினர் பரவசமடைவார்கள், மரியான் இறுதிக்காட்சியில் கடலைக் கண்டதும் பெரும் நிம்மதியடைவார் தனுஷ். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. சுமார் நூற்றியைம்பது அடி உயரத்திலிருந்து (அவ்வளவாக) பாறைகளின் இடையூறு ஏதுமின்றி நேரடியாக பாய்கிறது அருவி !

ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஆகாய கங்கைக்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தூரத்திலேயே அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து என்னை தடுத்து நிறுத்தியது. இப்போது அப்படியில்லை. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டதா அல்லது பருவ வேறுபாடா என்று தெரியவில்லை. இம்முறை நேரடியாக அருவியிலேயே தலைகாட்ட முடிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு தான். காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லியில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து பாய்வதால் அருவிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணிநேரம் அருவியோடு உறவாடிவிட்டு திரும்பினோம்.

படியேறும்போது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதே புரிகிறது. நானாவது பரவாயில்லை. அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஏறினேன். சகாக்களில் ஒருவர் அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவருடைய மோஜோவிற்கு நான் வாழ்க்கை தர வேண்டுமென சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். இதே போல பல நடுத்தர வயதுக்காரர்களும் ‘உஸ்ஸு, அஸ்ஸு’ என்று புலம்பிக்கொண்டு சரிவதைக் காண முடிந்தது. அதே சமயம் வயதான சிலர் கூட தெம்பாக படியேறுவதையும் காண வியப்பாக இருந்தது.


நண்பரின் ஐபோனில் எடுக்கப்பட்ட ஸ்லோமோஷன் வீடியோ. கீழே லுங்கியை அட்ஜஸ்ட் செய்பவரை பொறுத்துக்கொள்ளவும் :)

ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கி ஏறுவது சிரமம் தான். ஆனால் ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை தாராளமாக ஈடு செய்துவிடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று கேள்விப்பட்டோம். அதற்கு முன் கொல்லியில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 October 2016

கொல்லிமலை - தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கொல்லிமலை – மலைகளின் இளவரசி ! தென்னிந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களிலேயே குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. ஏனென்றால் வரலாற்றுச் சிறப்புகளையும், ஆன்மிகப் பெருமைகளையும் கொண்ட, அதே சமயத்தில் சுற்றுலாவிற்கும் உகந்த மலை வாசஸ்தலம் கொல்லிமலை. மேலும் சென்னையிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த தூரம். தோராயமாக 370 கி.மீ.

மூலம்: கூகுள் மேப்ஸ்
கொல்லிமலைக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கொல்லி மலையுச்சிக்கு சென்றடைய மொத்தம் 70 கொண்டையூசி வளைவுகளை கடக்க வேண்டும். இதனை கூகிள் மேப்ஸில் பார்த்தால் நம் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிகரித்த இயதுடிப்பை ECGயில் ப்ளாட் செய்தது போலிருக்கும். சுயமாக வாகனம் ஓட்டிச்செல்பவர்களுக்கு இது ஒரு கொடுப்பினை. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கொல்லிமலைக்கு செல்வதென்று முடிவு செய்தோம்.

ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை, அதிகாலை நான்கு மணிக்கு துவங்கியது எங்கள் பயணம். மூன்று பேர், இரண்டு வாகனம், ஒரு இலக்கு – கொல்லிமலை.

நேர்த்தியான திட்டமிடலுடன், ராணுவ ஒழுங்குடன் துவங்கியது எங்கள் பயணம். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இடைவேளை. சராசரியாக மணிக்கு 50 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டுமென திட்டம் வகுத்துக்கொண்டோம். அதன்படி அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பிய நாங்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, (கள்ளக்குறிச்சிக்கு முன்பாக ஒருமணிநேர உணவு இடைவேளை) கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திம்மநாயக்கன்பட்டி வழியாக மலையடிவார கிராமமான காரவள்ளியை மதியம் 12:15க்கு சென்றடைந்தோம்.

இதில் ஆத்தூரிலிருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக வந்தது மட்டும் மோசமான அனுபவமாக அமைந்தது. இந்த பாதையில் நிறைய சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுவாகவே மோசமான சாலைகள் என்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது. திம்மநாயக்கன்பட்டி வழிக்கு பதிலாக கொஞ்சம் சுற்றி சேலம், ராசிபுரம் வழியை தேர்ந்தெடுத்திருந்தால் சாலை நன்றாக இருந்திருக்கக்கூடும்.


காரவள்ளியில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 70 கொண்டையூசி வளைவுகளை ஸ்பரிசிக்கத் துவங்கினோம். கடந்தமுறை ஏலகிரி சென்றபோது சில கொண்டையூசி வளைவுகளை கடந்ததுமே நல்ல உயரத்தை அடைந்துவிட்டோம் என்று உணர முடிந்தது. கொல்லிமலை அப்படியில்லை. ஒரு தேர்ந்த உற்சாக பானத்தைப் போல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற ஆரம்பித்தது.

கொண்டையூசி வளைவுகளினூடே பயணம் செய்யும்போது நீங்கள் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ, இளைப்பாறிக்கொள்ளவோ உகந்த நோக்குமுனை முப்பத்தி நான்காவது வளைவில் அமைந்துள்ளது.

இவ்வளைவில் மன்னர் வல்வில் ஓரியை பற்றிய புறநானூற்றுப் பாடலையும் பாடலின் ஓவிய வடிவையும் காணலாம். இச்செய்யுள் குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன். மன்னர் ஓரியின் வில்லாற்றலை புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுள் அது ! அதாவது ஓரி ஒரேயொரு அம்பினை எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி ஆகிய விலங்குகளை துளைத்து ஊடுருவி இறுதியாக தரையிலிருக்கும் உடும்பின் மீது பாயுமாம் !

மன்னரின் பராக்கிரமங்களை வியந்தபடி எஞ்சியிருக்கும் கொண்டையூசி வளைவுகளையும் கடந்து செம்மேடு என்ற சிற்றூரை அடைந்தோம். கொல்லிமலையை பொறுத்தவரையில் செம்மேடு தலைநகரம் போன்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு உண்ணவும், உறங்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், செல்பேசிக்கு மீள்நிரப்பு செய்யவும் ஒற்றை நிறுத்தமும், மையப்புள்ளியும் செம்மேடுதான். சகாக்களில் ஒருவரின் ஆலோசனைப்படி வசந்தமாளிகை உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.

அறை தேடும் படலம் துவங்கியது. கொல்லியில் தங்குமிடங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவுதான். பொதுவாக எந்த சுற்றுலா தளத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே ரிஸார்ட் எனப்படும் உல்லாச போக்கிடங்கள் இருக்கும். உல்லாச போக்கிடம் என்றால் குறைந்தபட்சம் நீச்சல் குளம், சிறிய உள்விளையாட்டு அரங்கு, அறையில் குளிர்சாதனப் பெட்டி போன்றவை இருப்பது அவசியம். ஆனால் கொல்லியில் எங்கேயும் நீச்சல்குளம் கிடையாது. பெயரளவில் மட்டுமே ரிஸார்ட். மற்றபடி அவற்றை லாட்ஜ் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒப்பீட்டளவில் நல்லதம்பி (ரிஸார்ட்) மற்றும் P.A. ஹாலிடே இன் ஆகிய இரண்டும் பரவாயில்லை ரகம்.

சில தங்குமிடங்களை பார்வையிட்டுவிட்டு நல்லதம்பியில் செட்டிலானோம். (தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விரிவான குறிப்புகளை நாம் தொடரின் இறுதியில் பார்க்கலாம்). 

வெள்ளி மாலை நல்லதம்பியில் ‘முழு’ ஓய்வெடுத்துவிட்டு, சனி காலை கொல்லிமலையை சுற்றிப்பார்க்க உற்சாகமாக தயாரானோம்.

அடுத்த இடுகை: ஆகாயகங்கை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment