Showing posts with label biriyani. Show all posts
Showing posts with label biriyani. Show all posts

7 January 2014

பேரடைஸ் பிரியாணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற ? என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.

ரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே !
அதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.

சமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா...? அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது. 

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்....! புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

30 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 30122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய வலைப்பூவின் வலதுபக்கத்தில் ‘படித்ததில் பிடித்தது’ என்றொரு பகுதி இருப்பதை பார்த்திருக்கலாம். அங்கே பகிரப்படும் இடுகைகளை ஒரு சிலர் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். 2013 முழுவதும் அப்படி நான் படித்து பிடித்து பகிர்ந்த இடுகைகளின் இணைப்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். அந்த சேமிப்பில் இருந்து முத்தான பத்து இடுகைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளேன். நல்ல எழுத்தை வாசிக்க விரும்புபவர்கள் பயன் பெறட்டும். அதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் :- இந்த செக்ஷனில் லக்கி, அதிஷா, சமுத்ரா, வா. மணிகண்டன், சேட்டைக்காரன் போன்ற ஜாம்பவான்களின் (ராஜன், டுபுக்கு மன்னிக்க) இடுகைகளை நான் ஏதோ பரிந்துரைப்பது போல வெளியிடுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, அவர்களுடைய பதிவுகள் நீங்கலாக என்னுடைய முத்து பத்து (வரிசை படுத்தவில்லை, ஷார்ட் லிஸ்ட் செய்வதற்கே நாக்கு தள்ளிவிட்டது) :-


இரண்டு படங்கள் பார்த்தேன். பிரியாணி, கல்யாண சமையல் சாதம். இரண்டும் இணைய விமர்சகர்களின் கூற்றை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம். அல்லது விமர்சனங்களை படித்துவிட்டு பார்த்ததால் எதிர்பார்ப்பு விகிதம் குறைந்து, படம் நன்றாக இருப்பதாக தெரிந்திருக்கலாம்.

முதலில் கல்யாண சமையல் சாதம். இது ஒரு மாதிரி கார்ப்பரேட் ஆசாமிகளுக்கும், மேல்தட்டு (பொருளாதார ரீதியாக) வர்க்கத்திற்கும் மட்டும் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது. காசுக்கு கஷ்டப்படுபவர்கள் படத்தைப் பார்த்தால் வயிற்றெரிச்சலுக்கு உத்தரவாதம். என் போன்ற ஏழைகளுக்கும், பழைய பஞ்சாங்க ஆசாமிகளுக்கு ஒத்துவராது. அந்த வகையில் எனக்கு நிறைய காட்சிகள் எரிச்சலூட்டியது. ஆயிரத்தெட்டு கதாபாத்திரங்கள். சதா லொட லொடவென்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் நிறைய மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. பிரசன்னாவிற்கு முக்கியமான கட்டத்தில் எழுச்சி ஏற்பட மறுக்கிறது. அந்த சிக்கலை வைத்தே வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வார்த்தைகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். லேகா வாஷிங்க்டன் முகம் க்ளோசப்பில் மட்டுமல்ல, லாங் ஷாட்டில் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அட்லாஸ்ட், மனதுவிட்டு சிரிக்க வைத்ததால் க.ச.சா ஒரு ஃபீல் குட் படம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அடுத்து பிரியாணி. வெளியான சமயம் சென்னையில் இருந்திருந்தால் முதல் நாளே பார்த்திருப்பேன். அதன்பிறகு, விமர்சனங்களை படித்து சற்று சுதாரித்துக்கொண்டாலும், மந்தி டக்கர் மட்டும் மனதிற்குள் குடிகொண்டு மக்கர் செய்துக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்துவிட தயாரானோம். ‘னோம்’ என்றால் நானும் சிங்கமும். அவரும் மந்தி டக்கருக்கு விழுந்திருப்பாரோ என்னவோ...? பிகு பண்ணாமல் வந்துவிட்டார். படம் ஃபிகரு, ஜொள்ளு என நன்றாகத் துவங்கி ஆங்காங்கே சில சுமார் ஜோக்குகள் என நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மந்தி டக்கர் வருகிறார். சரியாக பத்து நிமிடங்கள் இருக்கலாம். கிறங்கடித்துவிட்டு போய்விட்டார். மந்திக்கு குரல் கொடுத்தவர் யாரென்று விசாரிக்க வேண்டும். அப்புறம், படம் அசுர வேகத்தில் தடதடக்கிறது. எல்லாம் சரி, இறுதி இருபது நிமிடங்கள் மட்டும் படு கேவலமான சொதப்பல். க்ளைமாக்ஸில் யாருமே யூகிக்கமுடியாத ஒரு ட்விஸ்டை வைக்க வேண்டுமென வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறார். அதற்காக இப்படியா பூமாலையை போட்டு குதறுவது...? பிரேம்ஜி நாசராக நடிப்பதை எல்லாம் ஸ்கூல் பசங்க கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசி இருபது நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பிரியாணி சரோஜா லெவலுக்கு இல்லையென்றாலும் ஒகே ரகம்.

மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது வேறு வழியில்லாமல் மசாலா படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று அவர்களுடைய ரசிகர்கள் லாபி பண்ணுவது சமகாலத்தில் அதிகரித்துவிட்டது. அதனை சாதகமாக்கிக் கொண்டுதான் கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment