8 June 2013

கடையேழு வள்ளல்கள்



அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. கிட்டத்தட்ட என்னுடைய குருநாதருக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் போலவே இருந்தது. நெல்லையிலிருந்து செந்தில் என்பவர் அனுப்பியிருந்தார். அவர் என்னுடைய வாசகர் என்றும், கடையேழு வள்ளல்களை பற்றியும் அவர்கள் ஏன் வள்ளல்கள் ஆனார்கள் என்றும் எழுதும்படி பணித்திருந்தார். அதாவது மயிலுக்கு போர்வை தந்த பேகன், அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் மாதிரி ஒவ்வொரு வள்ளலுக்கும் பின் உள்ள வரலாற்று சம்பவத்தை குறித்து கேட்டிருக்கிறார். “அது ஏன்டா என்னைப் பார்த்து அந்த கேள்விய கேட்ட !” என்று செந்திலை பளார் விடும் கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வாட் எ கோ-இன்ஸிடென்ஸ், நம்முடைய வாசகர் பெயரும் செந்தில் தான் ! இருப்பினும் என்னையும் நம்பி ஒரு ஜீவன் ஒரு வாசகர் விருப்பத்தை முன் வைத்திருப்பதால் தாமதமானாலும் கூட அதனை முடிந்த வரைக்கும் நிறைவேற்றலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் படித்து இன்புற அன்னார் அனுப்பிய குறுந்தகவல்.

புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு, லொட்டு லொசுக்கு போன்ற சங்க இலக்கியங்களில் வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தை கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுக்கப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் இருபத்தியொன்று. ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றிய தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. தவிர, செந்தில்நாதர் கடையேழு வள்ளல்களைப் பற்றி மட்டும் கேட்டிருப்பதால் மற்றவர்களை வசதியாக புறக்கணித்து விடலாம். சிறு குறிப்பாக :-

முதலேழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்

சரி, கடையேழு வள்ளல்கள் ? பாரி, அதியமான், பேகன்.... அப்புறம்... அப்புறம்... ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ? கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன். ஏன் பாரி, அதியமான், பேகன் - மூவரை மட்டும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது ? ஏன் கடையேழு வள்ளல்களில் மற்றவர்கள் அவ்வளவு ஃபேமஸ் இல்லை. எனக்குத் தெரிந்த முக்கியமான காரணம், நம்முடைய பாடத்திட்டம். பள்ளிக்கூட கல்வித்தமிழில் பாரி, அதியமான், பேகன் பற்றி படித்திருக்கிறோம். மற்றவர்களை பற்றி அதிகம் படித்ததில்லை. அப்படியே படித்திருந்தாலும் அவை பதினாறு மதிப்பெண் கேள்விகளில் கேட்கப்படுவதில்லை. மறுபுறம், முன்னரே குறிப்பிட்டது போல இவர்கள் மூவருக்கும் இருப்பதைப் போல ஸ்பெஷல் வரலாற்றுச் சம்பவம் மற்றவர்களுக்கு பதியப்படவில்லை / முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் அவர்கள் எதன் அடிப்படையில் வள்ளல்களாக தெரிவு செய்யப்பட்டனர் ? யார் இதையெல்லாம் தெரிவு செய்தார்கள் ? போலவே கோர்வையாக நிறைய கேள்விகள் ஏழத் துவங்கிவிட்டன. இதுகுறித்து சில புத்தகங்கள், இணையத்தரவுகளை படித்து / சேகரித்து வருகிறேன். பெரிய ஆய்வு, ஆராய்ச்சி அளவில் இல்லையென்றாலும் கூட செந்தில் அவர்களுடைய கேள்விக்கு விடை சொல்லும் வகையில் அடுத்த சில வாரங்களுக்கு போதிய இடைவெளியில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகள் தொடராக வெளிவரும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிக்குறிப்பு 1: தமிழ் மீதுகொண்ட பற்று காரணமாகவும், வள்ளல்களின் வரலாற்றின் மீதான ஆர்வம் காரணமாகவும் வாசகர் செந்தில் அவர்கள் தன்னுடைய மகனுக்கு பேகன் பெயர் சூட்டியுள்ளார்.

அடிக்குறிப்பு 2: இதுகுறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டங்களில் நிறைய தகவல்கள் கிடைத்தன. எனவே, இதனை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 June 2013

ரம்பாயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இ-ங்-கு ப-ணி-யா-ர-ம் வி-ற்-க-ப்-ப-டு-ம் :- கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த பலகையில் எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருந்தேன். பேசாமல், மீன் மார்க்கெட்டில் வடிவேலுவிடம் பார்த்திபன் செய்வதைப் போல லந்து செய்யலாமா ? மறுபடியும் எதோ ஒரு யோசனை தோன்ற பலகை வாசகத்தை கவனித்தேன் - பணியாரம். இப்போது எனக்கு அவருடைய ஞாபகம் வந்தது. என்னது யாரா ? ரம்பா சார் ரம்பா ! ஒரு தட்டு பணியாரத்தை வாங்கி அதனோடு சேர்த்து ரம்பாவின் நினைவுகளையும் அசை போடத் துவங்கினேன்.


மிகச்சரியாக முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ரம்பா பூமியில் அவதரித்தார். ஆந்திர மாநில விஜயவாடா அன்று முதல் புண்ணியஸ்தலம் ஆகப்பெற்றது. அவரிடம் விஷயம் உள்ளது என்பதை குறிப்பால் உணர்ந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் அவருக்கு விசயலட்சுமி என்று பெயர் சூட்டினர். ஆமாம், அதுதான் அவருடைய இயற்பெயர். சினிமாவிற்காக அமிர்தா என்று மாற்றியிருக்கிறார். பின்னர் அவருடைய அழகில் சொக்கிய இயக்குனர் / தயாரிப்பாளர் யாரேனும் ரம்பா என்ற பெயரை சூட்டியிருக்க வேண்டும்.

பொதுவாக யாரும் அதிகம் கண்டுகொள்ளாத கன்னட சினிமாதான் முதன்முதலில் ரம்பாவை கண்டுக்கொண்டது. சர்வர் சோமன்னா என்கிற கன்னட படத்தில் பதினாறு வயது ரம்பா மழையில் நனைந்தபடி போட்ட ஆட்டத்திற்கு கர்நாடக மாநில நிலப்பரப்புகளில் சூடு கிளம்பியிருக்க வேண்டும். ஆந்திராவில் உருவாகிய புயல் கன்னட தேசம் வழியாக கேரளம் கண்டு மீண்டும் தெலுங்கு தேசம் சென்று கடைசியாகத்தான் தமிழகத்தை தாக்கியது. தெலுங்கில் ரம்பா முதன்முதலில் ராஜேந்திர பிரசாத்துடன் ஜோடி சேர்ந்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

தமிழில் ரம்பாவுடைய முதல் படம் உழவன். அப்போது ரம்பாவின் வாளிப்பைக் கண்ட வாலிபக்கவிஞர் தன் வரிகளால் வாலிபால் விளையாடிவிட்டார்.

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ !

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ !

என்று துவங்கி உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து தள்ளிவிட்டார் மனிதர். நியாயத்திற்கு ரம்பாவின் புகழ் உச்சகட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனினும் அந்த படத்தில் நடித்த மற்றொரு நாயகி ராக்கோழியாக மாறி கவன ஈர்ப்பு செய்துவிட்டார். கிடைத்த கேப்பில் ரம்பா தாய்தேசம் திரும்பி சிரஞ்சீவி, வெங்கடேஷ் என ஒரு சுற்று வந்தார்.


அப்போது காமெடி ஸ்பெஷலிஸ்டுகளின் ஒருவரான சுந்தர்.சி கண்களில் ரம்பா சிக்கினார். ரம்பாவைக் கண்ட சுந்தர்.சிக்கு குஸ்காவிற்குள் லெக்பீஸ் கிடைத்தது போல இருந்திருக்க வேண்டும். உடனடியாக தன்னுடைய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நாயகியாக்கி விட்டார். கூடவே அழகிய லைலா என்ற அழகிய அறிமுகப் பாடலை ரம்பாவுக்கு வைத்து, அதில் அவரை மர்லின் மன்றோ பாணியில் நடனமாட விட்டு தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார். ரம்பாவின் வருகையைக் கண்டு மற்ற நடிகைகள் தொடை நடுங்கியிருக்கக்கூடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழகத்தில் தீம் பார்க்குகள் அப்படியொன்றும் பிரபலமில்லை. அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதாக நடுத்தர வர்க்கம் கருதிக்கொண்டிருந்தது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ என்றொரு பாடல், MGM பார்க்கில் படம் பிடிக்கப்பட்டது. படம் வெளிவந்ததும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக MGMமிற்கு படையெடுத்தனர். இதுதான் ரம்பா ஓடிவந்த இடம், இதுதான் ரம்பா தொடை வைத்திருந்த பெஞ்ச் என்று கண்டு களித்து இன்புற்றனர். 


அதுமுதல் ரம்பாவிற்கு ஏறுமுகம் துவங்கியது. 1997ல் வி.ஐ.பி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. இரட்டை நாயகிகள் கதையம்சம். ஒருவர் ரம்பா, இன்னொருவர் சிம்ரன். ஒரே கல்லில் இரண்டு மாங்கா. மயிலு மயிலு மயிலம்மா பாடலில் ரம்பாவும் சிம்ரனும் போட்டி போட்டுக்கொண்டு திறமை காட்டினர். இருப்பினும் கொழு கொழு ரம்பாவின் ஆட்டத்திற்கு முன் கொத்தவரங்காய் சிம்ரனின் ஆட்டம் செல்லுபடியாகவில்லை. ரம்பாவின் புகழ் ஓங்கியது. உச்ச நடிகரின் பட வாய்ப்பு, அஜித்துடன் ராசி என்று அந்த ஆண்டு முழுவதும் ரம்பாவுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.

டாகுடர் விஜய்க்கும் ரம்பாவுக்கும் அப்படியொரு பொருத்தம். விஜய் தன்னுடைய கனவில் இடுப்பில் மச்சம் வைத்த பெண்ணொருத்தியை அடிக்கடி காண்கிறார். முகத்தை பார்க்க முடியவில்லை. கனவில் வந்தவள் யாரென்று மணிவண்ணன் விசாரிக்கிறார். மனிஷா கொய்ராலா, மாதுரி தீட்சித் தொடங்கி பானுப்ரியா வரைக்கும் அத்தனை பேரையும் கேட்டுப் பார்த்தாயிற்று. கடைசியில் விஜய்யுடைய கனவில் வந்தவர் யார் ? ஷாத்ஷாத் நம்ம ரம்பாவே தான் ! அங்கே தொடங்குகிறது அவர்களுக்குள்ளான வேதியியல். விஜய்யும் ரம்பாவும் மூன்று படங்களில் ஜோடியாக நடித்தார்கள் என்பது செய்தி.


கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்ட ரம்ஸுக்கு கடைசியாக அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. ஆம், கமல் பட வாய்ப்பு. காதலா காதலா படத்தில் ரம்பா கமலுக்கு ஜோடியாக நடிக்காவிட்டாலும் செளந்தர்யாவைக் காட்டிலும் பிரதான வேடம். நகைச்சுவையிலும் தடம் பதித்திருப்பார். பொதுவாகவே, கமல் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்று திரையுலகில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு மித். ஆனால் ரம்பா விஷயத்தில் அது துரதிர்ஷ்டவசமாக உண்மையாகிவிட்டது.

ரம்பாவின் மார்க்கெட் சரிய துவங்கியது. பாலிவுட்டில் முயற்சித்துப் பார்த்தார். கோவிந்தா கோவிந்தா ஆகாதது தான் மிச்சம். விபரீத முடிவாக தமிழில் சொந்தப்படம் எடுத்து கையையும் தொடையையும் சுட்டுக்கொண்டார். எனினும் மனம் தளராமல் பெங்காலி, போஜ்புரி என்று கிடைக்கிற ஜீப்பில் தொற்றிக்கொண்டு பயணித்தபடி இருந்தார் ரம்பா. தெலுங்கில் ரம்பாவின் முதல் நாயகன் ராஜேந்திர பிரசாத் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? சொல்லி வைத்தாற்போல மீண்டும் ராஜேந்திர பிரசாத்துடன் க்விக் கன் முருகனில் ரம்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ரம்பாவின் கடைசி படம் அதுதான்.


2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் நாளில் அந்த துயர செய்தி ரம்பா ரசிகர்களின் காதுகளுக்கு எட்டியது. செய்தியை கேட்டதும் இதய பலவீனமானவர்கள் பலர் மாரடைப்பில் பலியானார்கள். நிறைய வீடுகளில் கோபத்தில் செய்தி வாசித்த ரேடியோக்களும் தொலைக்காட்சிகளும் நொறுங்கின. பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செய்தி: நடிகை ரம்பா தொழிலதிபரை மணந்தார். திருமணமாகி சரியாக ஒன்பதே மாதங்களில் ரம்பா, குட்டி ரம்பாவை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுபோய் நின்றால் கோபம் போய்விடும் என்பார்கள். ரம்பா ரசிகர்கள் விஷயத்தில் அது உண்மைதான், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தற்போது ரம்பாவை பல்லிளித்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.


தொடர்புடைய சுட்டிகள்:
நக்மாயிசம்
ஆல்ப்ஸ் மலைக்காற்று

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment