20 November 2013

Nuances of யாருக்கு யாரோ ஸ்டெப்னி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யாருக்கு யாரோ ஸ்டெப்னி என்கிற உன்னதமான சினிமா 2007ம் ஆண்டு வெளிவந்தபோது அதனை ரசிகர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. திரை மொழியை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளின் மூலம் பல தகவல்களையும் சிந்தனைகளையும் குறியீடுகளாக உணர்த்திய அத்திரைப்படத்தை தமிழர்களால் எளிதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். அவைகளை விளக்கும் பொருட்டு இதோ என்னுடைய கோனாரு உரை !

- முதலில் படத்தின் தலைப்பு. படத்தின் கதைக்கருவான முக்கோண காதலை குறிக்கும்படி ‘யாருக்கு யாரோ’ என்ற பதத்தையும், காருக்கு பின்னால் உள்ள ஸ்டெப்னி என்பதோடு சேர்த்து மிக பொருத்தமாக ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி ?’ என்று சூட்டியிருக்கிறார்கள். தலைப்பில் ஸ்டெப்னி என்ற சொல் கதை நாயகிகளை குறிக்கிறது. பெண்களை ஸ்டெப்னி என்று குறிப்பிட்டு இழிவு படுத்தியிருப்பதாக எண்ணுதல் தவறு. கதைப்படி நாயகன் டேவிட்டின் கனவு கார் தொழிற்சாலை அமைப்பது. அவ்வாறாக கார் என்பது டேவிட்டின் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கிறது. காருக்கு பிற்பகுதியில் ஸ்டெப்னி இருக்கிறது. அதுபோல டேவிட் என்ற மனிதனுக்கு பின்னால், அவனுடைய வெற்றிக்கு பின்னால் இருக்கக்கூடிய பெண்ணை ‘ஸ்டெப்னி’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

- அடுத்தது படத்தலைப்பு திரையில் தோன்றிய விதம். வெகுஜன சினிமாக்களில் தோன்றுவது போல ரகளையான கிராபிக்ஸ் எல்லாம் இல்லை. மிக ரம்மியமான பின்னணி இசையினூடே தலைப்பு தோன்றுகிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி’ என்ற தலைப்பு திரையில் அலைபாய்ந்தபடி தோன்றுகிறது. அது டேவிட்டுடைய மனது தீபா, ஜோதி காதல்களுக்கிடையே அலைபாய்வதற்கான குறியீடு. தலைப்பில் ‘ஸ்டெப்னி’ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘STEPNEE’ என்று காட்டப்படுகிறது. உண்மையில் அந்த வார்த்தையுடைய ஸ்பெல்லிங் ‘STEPNEY’ என்று இயக்குநருக்கு தெரியாமலா இருந்திருக்கும். டேவிட் வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளின் STEP NEE என்பதனால் அப்படி காட்டியிருக்கிறார்.

- கதையின் நாயகன் டேவிட்டின் அறிமுகக்காட்சி. தீபாவின் கழுத்துச்சங்கிலியை சமூக விரோதிகள் பறித்துக்கொண்டு பைக்கில் பறக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அங்கே டேவிட் வருகிறார். கீழே விழுந்து கிடக்கும் தீபாவை பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்துகிறார். இக்காட்சியின் மூலம் டேவிட் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை காட்டிலும் தர்க்கரீதியாக சிந்திப்பதை விரும்புபவன் என்று ரசிகர்கள் மனதில் பதியப்படுகிறது. கூடவே, அவனுடைய அபார நினைவாற்றல், துறை சார்ந்த அறிவு, இசை நாட்டம், கொடை பண்பு போன்றவற்றையும் நேர விரயம் செய்யாமல் எளிமையாக சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

- படம் முழுக்க கருப்பு நிறத்தை அறிவின் குறியீடாகவும், சிகப்பு நிறத்தை அன்பின் குறியீடாகவும் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். டேவிட் கருப்பு நிற ஸ்கூட்டியையும், தீபா சிகப்பு நிற ஸ்கூட்டியையும் பயன்படுத்துகிறார். அதே சமயம் டேவிட் தீபாவின் மீதும், செயின் திருடர்கள் மீதும் அன்பு செலுத்தும் காட்சிகளில் சிகப்பு நிற சட்டை அணிந்து தோன்றுகிறார். தீபாவும் அன்பை வலியுறுத்தும் பாடலோடு தான் அறிமுகமாகிறார். முக்கியமான காட்சிகள் அனைத்திலும் சிகப்பு நிற உடையணிந்து வருகிறார். மற்றொரு நாயகியான மஞ்சு, கனடாவிலிருந்து சிகப்பு நிற காரில் வந்து இறங்குகிறார். டேவிட்டும் மஞ்சுவும் உணர்வுகளால் சங்கமிக்கும் காட்சியில் இருவரும் சிகப்பு நிற உடை அணிந்துள்ளனர்.

- என்னதான் கதை கார், காதல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதன் கரு மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘யாருக்கு யாரோ’ என்ற தலைப்பினைக் கூட யாருக்கு யாரோ கடவுளாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று குறிப்பதாக புரிந்துக்கொள்ளலாம். ஹிந்துப்பெண் தீபா கிறிஸ்தவ துதிப்பாடலை பாடுவதாக படம் துவங்குகிறது. மற்றொரு காட்சியில் கிறிஸ்தவரான டேவிட்டை பார்த்து ‘கண்ணா, நீ எங்கே...?’ என்று தீபா பாடுகிறார். டேவிட் அணிந்துள்ள சிலுவை குறியீடு கொண்ட சங்கிலியை தீபாவுக்கு கொடுக்கிறார். இந்த சிலுவை டாலர் தான் படத்தின் உயிர்நாடி...! எப்படி என்பதை பின்னால் பார்க்கலாம்.

- பாடல்கள், அதில் நடிகர் / நடிகை வெளிப்படுத்தும் நடனம் அருமையானதொரு வாழ்க்கை தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் ஓவராக ஆட்டம் போடக்கூடாது அல்லவா ? அதை உணர்த்தும்பொருட்டு அளவாக ஆடுகிறார் டேவிட். வாழ்க்கை எத்தனை எளிமையானது என்பதை உணர்த்துவதற்காகவே டேவிட் மிகவும் எளிமையான நடன அசைவுகளை செய்து காட்டுகிறார் என்று புரிந்துக்கொள்ளலாம். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடல்கள் அனைத்தும் நம் மன-உளைச்சலை போக்கி ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

- ஒரு காட்சியில் கடற்கரையில் வைத்து தீபாவும், டேவிட்டும் சந்திக்கிறார்கள். டேவிட் தன்னுடைய தொழிற்சாலையை துவங்க கடன் கிடைக்க இருப்பதாக சொல்கிறான். அதைக் கேட்ட தீபா மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுகிறாள். டேவிட் அவளை பின்தொடர்ந்து ஓடுகிறாள். அப்போது அவனுக்கு இடையூறாக ஒரு கட்டுமரம் எதிர்ப்படுகிறது. அதாவது தீபா – டேவிட் காதலுக்கு ஏதோவொரு இடையூறு இருக்கிறது என்ற எச்சரிக்கை ஊட்டப்படுகிறது. இரண்டாவது பாதியில் மஞ்சு கதைக்குள் நுழைந்து தீபா – டேவிட் காதலுக்கு இடையூறு செய்வதன் மூலம் அது ஊர்ஜிதமாகிறது.

- ‘ராசாத்தி என் ஆசை ராசாத்தி’ என்றொரு பாடல். காதலிக்கும்போது பொங்கியெழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதமாக துள்ளிசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோ ஸ்டேன்லி. பாடலில் ஒவ்வொரு முறை ‘ராசாத்தி’ என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதும் வெவ்வேறு தொனியில் வெவ்வேறு உணர்ச்சிகளை பாடகர் வெளிப்படுத்துவதை உன்னிப்பாக கவனித்து கேட்டால் உணர முடியும். பாடலின் இடையிடையே வண்ண வண்ண உடைகளணிந்து தீபாவும் டேவிட்டும் ஓடுவதாக காட்சியாக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய காதல் வாழ்க்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஓடுவதற்கான குறியீடு.

- கார் தொழிற்சாலைக்கு கடன் வழங்கும்பொருட்டு ஃபைனான்சியர் வருகிறார். டேவிட்டும் நண்பர்களும் ஆளுயுர மாலையோடு அவரை வரவேற்கின்றனர். ஃபைனான்சியர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனக்கே உரிய பாணியில் டேவிட்டின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் பற்றி விசாரிக்கிறார். அவருக்கு முழு திருப்தியில்லை. கடன் வழங்க முடியாது என்ற தன்னுடைய நிலையைச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். காட்சி சோகமயமாகிறது. அப்போது ஒரு கதாபாத்திரம் ஃபைனான்சியருக்கு போட்ட மாலையை எடுத்துச்சென்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கார் படத்திற்கு போட்டுவிட்டு சோகமாக நிற்கிறார். இது குவென்டின் டொராண்டினோ பாணியிலான ப்ளாக் காமெடி !

- ‘லவ் ப்ரோபோசல்’ காட்சியில் இயக்குநர் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கவித்துவமான காட்சியமைப்பை பயன்படுத்தியுள்ளார். ‘ஐ லவ் யூ’ – ‘லவ் யூ டூ’ போன்ற அபத்தங்கள் இல்லை. தீபா டேவிட்டிடம், தீடிரென ‘உங்க லைப் பார்ட்னரு யாரு ?’ என்று கேட்கிறார். டேவிட் நேரடியாக பதில் சொல்லவில்லை. ‘கார் படத்தை எனக்கு கொடுத்த மகாராணி !’ என்று குறிப்பால் உணர்த்துகிறார். தீபா அதனை கச்சிதமாக புரிந்துக்கொள்கிறார். உடனே டூயட் பாட ஓடிவிடாமல் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் டேவிட் – தீபா தம்பதியர்.

- டேவிட்டின் மனநிலை மாற்றங்களைக் கொண்டு நமக்கெல்லாம் ஒரு ஜென் நிலையை சொல்லிக் கொடுக்கிறார் இயக்குநர். கார் தொழிற்சாலைக்கு கடன் கிடைக்க இருப்பது, அது ரத்தாகி போவது, தீபாவுடன் காதல் பரிமாற்றம், மஞ்சுவின் வருகை, தீபாவின் பிரிவு என்ற சகல விதமான காட்சிகளுக்கும் டேவிட் அழுகையோ, சிரிப்போ அல்லது எந்தவிதமான உணர்ச்சிகளையோ வெளிக்காட்டாமல் புத்தரைப் போல காட்சியளிக்கிறார். நாமும் அதைப்போல வாழ்க்கையில் எத்தகைய இன்ப துன்பங்கள் ஏற்பட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

- டேவிட்டின் சிலுவை டாலர் கதையின் உயிர்நாடி என்று கூறினேன் அல்லவா ? இங்கே சிலுவை என்பது மனது அல்லது காதலை குறிக்கின்றது. முதலில் மஞ்சு தன்னுடைய மனதை, அதாவது சிலுவை டாலரை டேவிட்டிடம் கொடுக்கிறார். பின்னர், அதனை டேவிட் தீபாவிடம் கொடுக்கிறார், தீபா முதலில் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். டேவிட்டை புரிந்துக்கொண்டபிறகு தீபாவே அதனை விரும்பிக்கேட்டு வாங்கிக்கொள்கிறார். இறுதியில் தீபா அந்த டாலரை மஞ்சுவிடமே ஒப்படைத்துவிடுகிறார். அதாவது டேவிட்டின் காதல் மஞ்சுவிடம் சேர்பித்து விடப்படுகிறது. டாலர் மஞ்சுவிடமிருந்து மஞ்சுவிற்கே திரும்ப கிடைப்பதன் மூலம் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற உண்மையும் உணர்த்தப்படுகிறது.

- உச்சக்கட்ட காட்சி. தீபா சிலுவை டாலரையும், ஸ்டெப்னியையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார். சிறிய ஊடலுக்கு பின்னர் டேவிட்டும் மஞ்சுவும் இணைகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஹுண்டாய் காரை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். அதாவது தங்களின் தொழிலான காரையே கடவுளாக கருதி சுற்றி வருவதோடு படம் முடிந்து திரை இருள்கிறது.

அடுத்து வருவது: கோவை நேரம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 18112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படித்த புத்தகம் – டாக்டர் பிலோ. இருதயநாத் எழுதிய கேரள ஆதிவாசிகள். படிப்பதற்கு கொஞ்சம் அசுவாரஸ்யமாக இருந்தாலும் ஆதிவாசிகளின் பண்பாடு, சடங்குகள் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம். செருமர்கள், மலைப் பணிக்கர்கள், நாயாடிகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதிவாசிகள் குழுவினரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்னும் நிறைய டீடெயிலிங், சுவையான எழுத்து இருந்திருக்கலாம். எனக்கு என்னவென்றால் புத்தகத்தை விட அதன் ஆசிரியர் இருதயநாத் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மனிதர் சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறாராம். சைக்கிளிலேயே இரவு உறங்குவதற்கு தகுந்தபடி ஒரு செட்டப் வைத்திருப்பாராம். ஆசிரியரின் பிற புத்தகங்களையும் படித்து முடித்தபிறகு, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து பதிவிட வேண்டும். கேரள ஆதிவாசிகள் உள்ளிட்ட ஆசிரியரின் புத்தகங்களை வாங்குவதற்கு.

இப்பொழுது கேரள ஆதிவாசிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள் :- நாயாடிகளுக்குள் விசித்திரமான ஒரு சுயம்வரம் நடக்கிறது. ஒரு புதிய குடிசை கட்டி அதில் சுயம்வரப் பெண்ணை தனியே வைப்பார்கள். பெண்ணின் தந்தையோ உறவினர்களில் ஒருவனோ குடிசைக்கருகில் அமர்ந்து மேளம் அடித்துப் பாட்டு பாடுவான். மணமாகாத பல வாலிபர்கள் ஆளுக்கு ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே வந்து சேருவார்கள். குடிசையை சுற்றி ஆடிப்பாடுவார்கள். பின்னர் எல்லா வாலிபர்களும் தங்கள் கைக்குச்சியை குடிசை மீது சொருகுவார்கள். குடிசைக்குள்ளே இருக்கும் பெண் தன் குலதெய்வத்தை எண்ணியபடி, குச்சிகளுள் ஒன்றை இழுத்துக்கொள்ளுவாள். குச்சியுடன் குடிசையிலிருந்து வெளியே வருவாள். குச்சி யாருடையதோ அந்த வாலிபனையே அவள் மணந்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு புத்தகமும் படிக்கக் கிடைத்தது. எனினும் அதன் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அது தனிப்பதிவாக எழுதப்படும். புத்தகத்தின் பெயர் கோவை நேரம் !

உன்னோடு ஒரு நாள் என்றொரு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. அண்ணாச்சி கூட அத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் பதிவிறக்கக் கிடைத்ததாலும், க்ரைம் த்ரில்லர் என்று சொல்லப்பட்டதாலும் பார்த்தேன். ஒப்பீட்டளவில் நன்றாகவே இருந்தது. ஹீரோ, அவனுடைய மனைவி, நண்பன் மூவர் தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவின் மனைவிக்கும் நண்பருக்கும் தொடர்பு. அது ஹீரோவிற்கு தெரிந்துவிடுகிறது. ஒருநாள் நண்பனும் மனைவியும் ஹோட்டல் அறையில் இருக்க, ஹீரோ வலியச் சென்று அவர்களுக்கு எதிர் அறையை பிடித்து லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். எதிர் அறையின் கதவு எப்போது திறந்தாலும் தன்னிடமுள்ள துப்பாக்கியை வைத்து சுட்டுவிட வேண்டுமென்பது திட்டம். மனைவிக்கும் நண்பருக்கும் விஷயம் தெரிந்து... என்ன நடந்தது என்று நேரமிருந்தால் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும். பதிவிறக்க லிங்க். இயக்குநர் துரை கார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் என்பது துயரம். லோ பட்ஜெட் படம் தான் என்றாலும் அது அவ்வளவாக தெரியாதபடி திறம்பட உழைத்திருக்கிறார்.

நேற்றைய தினமணி கதிரின் புதிய வார்ப்புகள் என்னையும் சக பதிவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘சக பதிவர்கள்’ என்ற சொல்லுக்காக யாராவது அடிக்க வந்தாலும் வரலாம். தினமணி அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தோழன் மபா அவர்களுக்கு நன்றிகள். மபாவுக்கு குறும்பு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது. பாராட்டுவது போலவே நன்றாகவே ஊமைக்குத்து விடுகிறார். என்னைப் பற்றி ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல, வா.மணிகண்டனை ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர் என்றும், சுரேஷ் கண்ணனை பிற்போக்குத்தனமான முற்போக்குவாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர் என்றும் எழுதியிருக்கிறார். நக்கலுய்யா உனக்கு ! இப்படியே இதுபோன்ற அறிமுகங்களிலேயே திருப்தி அடைந்துவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன். புதிய வார்ப்புகள் பகுதியை வாசிக்க.

வில்லா பார்த்தபிறகு அதன் இயக்குநரின் சில குறும்படங்களை தேடி, பார்த்தேன். Coffee பிடித்திருந்தது. காபியின் சிறப்பு என்னவென்றால் பிரதான கதாபாத்திரம் Kopi Luwak பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்கிறது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நமக்கு விருப்பமிருந்தால் நாமாகவே தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒரு விளம்பரம்.

சமீபத்தில் அதீத் ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து. விஜய் சேதுபதியின் உடல்மொழி அட்டகாசம். அப்படியே வடசென்னை வாலிபர்களை பிரதிபலிக்கிறது. கூடவே கானா பாலா குரல், ராஜூ சுந்தரம் நடனம், இடையிடையே வரும் ரைம்ஸ் என்று அத்தனையும் சூப்பர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment