7 January 2014

பேரடைஸ் பிரியாணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற ? என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.

ரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே !
அதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.

சமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா...? அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது. 

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்....! புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 comments:

Yaathoramani.blogspot.com said...

பதிவைப் படிக்கையில்
படிப்பவர்களும் ஒரு நல்ல மெஸ்
கிடைத்திடாதா என உங்களுடன்
சேர்ந்து அலைவதைப் போன்ற
அனுபவத்தை உணரச் செய்தது
தாங்கள் சொல்லிச் சென்ற விதம்

வாழ்த்துக்கள்

வவ்வால் said...

Prabha,
I think ,
You are. Creating wrong impressions about guindy, there are lot of food outlet at guindy and e kaattuthaangkal area, I think you are looking for food outlet at 10 feet walking distance :-))

Near by Hyundai showroom area you can find many food outlet, near ambaalmansion up to 12-1 am (after midnight) you can get food.

Many times I used to boost up there and finish my dinner -:))

If you are looking for 5star range just go to le meridian :-))

In fact south chennai is better than north chennai in food provision, I had many time struggled at north zone may be laps of knowledge!!!

Unknown said...

ஒரு பிரியாணிக்கி இவ்ளோ அக்கப்போரா... அப்பப்பா...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

நீங்கள் சொல்லும் அம்பாள் மேன்ஷன் பகுதி நடக்கக்கூடிய தொலைவு தான்... வாரத்திற்கு ஒருநாள் என்றால் ஓகே... தினமும் அவ்வளவு தொலைவு நடக்க முடியாது...

சில சமயங்களில் நண்பர்களோடு சேர்ந்து போனால் பைக்கில் போய் வருவோம்...

ஐந்து நட்சத்திர ரேஞ்செல்லாம் எதிர்பார்க்கலை சாமீ... மிடில்கிளாஸ் சாப்பாடே போதும்...

ஏன் கொஞ்ச நாட்களாக ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுகிறீர்கள்... ரைட்டரில் ஏதாவது பிரச்சனையா ?

arasan said...

உங்கள் பாணியில் தூள் ....

லெக் பீஸ் ரெண்டும் ரொம்ப பழசு தல ... எப்படி ?

வவ்வால் said...

Prabha,

Hi...hi...laptop k/b broken down,(this is second time)service person demanding 3k bucks ,Bpl people like me can't afford that much for just k/b repair,what to do?

For time being managing with tablet ,no tamil typing in it, me too finding it very difficult to express my view avv!

For a while people have to tolerate my "since I'm suffering from feverish" type English ,soon I'll be back with my beloved "sentamil"

# //நீங்கள் சொல்லும் அம்பாள் மேன்ஷன் பகுதி நடக்கக்கூடிய தொலைவு தான்... வாரத்திற்கு ஒருநாள் என்றால் ஓகே... தினமும் அவ்வளவு தொலைவு நடக்க முடியாது...

சில சமயங்களில் நண்பர்களோடு சேர்ந்து போனால் பைக்கில் போய் வருவோம்...//

Every day I have to walk minimum 2kms to reach bus stop avv!

That's why I told that's a walkable distance ,but you are a "sugavaasi" :-))

unmaiyanavan said...

"//பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.//" - நான் இன்னமும் ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கிட்டு தாங்க அழுகிறேன்.
‘லஞ்ச் பாக்ஸ்’ - எடுத்துக்கொண்டு போகாத நாட்களில் சைவ சாப்பாட்டுக்காக நான் படும் அவஸ்தை சொல்லி மாள முடியாது.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல உணவகங்களை தேடுதல் கூட ஒரு கலைதான்! சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி!

Ponmahes said...

பேரடைஸ் பிரியாணி நல்லா இருக்கு லே....

வாழ்த்துக்கள்....

-தோழன் மபா, தமிழன் வீதி said...

பிரபா, உங்க கதை அப்படி, நம்ம கதை வேற மாதிரி.

தி நகர், அடையார், பாரீஸ், அண்ணா நகர், திருவல்லிக்கேணி என்று திக்கு ஒன்றாய் அலையும் வேலை என்பதால் எந்த ஏரியாவில் எந்த கடையில் சாப்பிடுவது என்று இங்கி பிங்கி போட்டு பார்க்கவே அரைமணி நேரம் ஓடிவிடும். (பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்)

அதுவும் நமது மார்கெட்டிங் மனித ஜந்துகள் அருகில் இருந்தால் போதும், அந்த டிஸ்கஷன் ஒரு மணி நேரம் நடைபெரும். அப்புரம்தான் சாப்பாட்டுக்காக... பைக்கை ஸ்டார்ட் செய்வது.

நல்ல வாசமான பதிவு!

Anonymous said...

தந்தையை கொன்றவனை கதற கதற பழிவாங்கினால் ஜில்லா
படம் பார்க்க வந்தவர்களை கொன்றவனை கதற கதற பழிவாங்கினால் வீரம்

சீனு said...

மிகவும் விரும்பிப் படித்த பதிவு.. சில வார்த்தைப் பிரயோகங்கள், வாக்கிய கட்டமைப்புகள் அசரடிக்கின்றன.. இது உங்களுக்கு டெம்ப்ளேட் கமெண்ட் போல் தோன்றாலாம் :-) இல்லை கேட்டு கேட்டு சலித்திருக்கலாம்.. ஆனால் என்ன செய்வது உண்மை சில நேரங்களில் டெம்ப்ளேட் கமெண்ட் போல் ஆகிவிடுகிறது :-)