Showing posts with label கனவுதுரத்தி குறிப்புகள். Show all posts
Showing posts with label கனவுதுரத்தி குறிப்புகள். Show all posts

2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 May 2012

கனவுதுரத்தி குறிப்புகள் – பாகம் 03


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முன்குறிப்பு: இது கொஞ்சம் வறட்சியான சப்ஜெக்ட். நிறைய பேருக்கு பிடிக்காது. அவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம். சிலர், ஏன் தொடரவில்லை என்று கேட்டதாலும் என்னுடைய எண்ணங்களை ஆவணப்படுத்தும் பொருட்டும் தொடர்கிறேன்.

கனவு கண்ட தேதி: மார்ச் 15, 2012
கனவு கலைந்த நேரம்: காலை 9:38

“வாகன இரைச்சல் நிறைந்த பகல் நேரம். நானும் என் தந்தையும் வீட்டு பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். கீழே பிரதான சாலையில், வெற்றிலை பாக்கு கடைக்கு முன்பாக ‘TAKE DIVERSION’ பலகை வைக்கப்பட்டு இருந்தது. அங்கே ஒரு வாலிபர் Bajaj M80 வாகனத்தில் வந்தார். போலீஸ் அவரை வழிமறித்து திரும்பிப்போகச் சொன்னார்கள். அவரும் சரி சரியென்று கேட்டுக்கொண்டு, போலீஸ்காரர் அசந்த நேரம் வண்டியோடு எங்கள் வீட்டு பால்கனிக்கு ஜம்ப் அடித்தார். (அந்த உயரத்திற்கு ஜம்ப் அடிப்பதற்கு இளையதளபதியால் மட்டுமே முடியும்). நானும் அப்பாவும் வியந்தோம். அதே சமயம் ‘என்ன இந்த ஆளு சுற்றி செல்வதற்கு கூட பொறுமையில்லாமல் ஜம்ப் பண்றான்... லூசுப்பய...’ என்று மனதிற்குள் கடிந்துக்கொண்டேன்.

இனி அவர் வண்டியோடு கீழே இறங்க வேண்டுமென்றால் வீட்டிற்கு உட்புறமாக வண்டியை எடுத்துக்கொண்டு வரவேண்டும் அல்லது மறுபடி பால்கனியில் இருந்து கீழே ஜம்ப் அடிக்கவேண்டும். நாங்கள் முதலாவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் போது அவர் இரண்டாவதை தேர்ந்தெடுத்தார். ‘வேண்டாம் சார்... இந்தப்பக்கமா வண்டியை எடுத்துட்டு போங்க என்று சொல்லச் சொல்ல செவிட்டுத்தனமாய் முன்னேறினார். இன்னும் ஒரு அடி முன்னேறினால் அவருக்கும் பைக்குக்கும் சிவலோக பதவி கிடைத்துவிடும். ஒருபுறம் அவருக்காக மனம் பரிதாபப்பட்டாலும், மறுபுறம் அவருடைய திமிருக்கு அது தேவை என்றே தோன்றியது. மேலும், ஒரு விபத்தை நேரடியாக பார்க்கும் ஆர்வமும் என்னிடம் தொற்றிக்கொண்டது. அடுத்த நொடி, M80க்காரர் ஜம்ப் அடித்துவிட்டார்.

ஆச்சர்யம் என்னவென்றால் அவர் கிட்டத்தட்ட கீழே இறங்கும் வரை எல்லாம் சுமூகமாகவே நடந்தது. தரையிறங்கும் தருவாயில் பைக் தலைக்குப்புற சாய்ந்து பெரிய சத்தத்துடன் கீழே விழுந்தார். சாக்கடை நீர் தேங்கியிருந்த, ஆற்று மணல் குவித்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் அவர் விழுந்தார். சில நொடிகளுக்குப்பின் மனநோயாளி போல தோற்றமளித்த ஒருவர் சாக்கடையில் இருந்த M80 நபரை தூக்கி மணல்மேட்டில் கிடத்தினார். கூட்டம் சேர்ந்தது. ஆள் இறந்துவிட்டார் என்று பேசிக்கொண்டனர். இப்போது என்னுடைய வேடிக்கை பார்க்கும் ஆர்வம் என்னைவிட்டு விலகி, ‘ச்சே... நாம நினைச்சிருந்தா காப்பாற்றியிருக்கலாமே...’ என்ற குற்ற உணர்ச்சி சூழ்ந்துக்கொண்டது. கிட்டத்தட்ட அழுதுவிட்டேன்.

சுமார் ஐந்து நிமிட சலசலப்புக்குப்பின் மணல்மேட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த மனிதரிடம் உயிர் இருக்கிறதா என்று மறுபரிசோதனை செய்தார்கள். அப்போது முதல் மரியாதை சிவாஜி கணேசன் மாதிரி அவருடைய கண் இமைகள் ஜெர்க் காட்ட, அனைவர் முகத்திலும் நிம்மதி ரேகைகள். ஆமாம் அவர் உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் உடல் முழுவதும் காயங்கள். அதாவது அவருடைய வம்சம் அவரோடு முடிந்துவிட்டது என்று உறுதியாக சொல்லுமளவிற்கு காயங்கள். முழுமையாக கண்களை திறந்தவர், எதிரே இருந்தவரிடம் தன்னுடைய கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொண்டு மீண்டும் கிளம்பினார். (ஆம், அவ்வளவு பெரிய விபத்திற்கு பின்னும் அவருடைய கண்ணாடி உடையாமல் இருந்தது). ஏதோ துக்க வீட்டிற்கு அவசரமாக சென்றுக்கொண்டிருந்ததாக கூறினார். ‘அடப்பாவி... விபத்து இன்னும் கொஞ்சம் மோசமாகியிருந்தாலும் உன் வீடே துக்க வீடாக மாறியிருக்குமே...’ என்று கடிந்துக்கொண்டே பால்கனி கதவை சாத்தினேன்.”

இனி எஸ்.கேயும், நானும் உரையாடலும்...

எஸ்.கே:
வணக்கம்...

உங்கள் கனவில் வரும் பைக் ஆசாமி நீங்கள் இதுவரை நிஜத்தில் பார்த்திராத ஆள் என்று நினைக்கிறேன்... உங்கள் கனவு உங்கள் வாழ்வில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை குறிக்கிறது என்று நினைக்கிறேன்...

சமீபத்தில் உங்களால் யாருக்காவது உதவி செய்யும் சூழ்நிலை இருந்து செய்யாமல் விட்டுவிட்டீர்களா...? அதனால் ஏற்பட்ட குற்ற உணர்வு கனவில் தெரிகிறது... அதே சமயம் பைக் ஆசாமி உயிர் பிழைப்பது, நீங்கள் எல்லாம் சுமூகமாக முடிய வேண்டுமென்று விரும்புவதை குறிக்கிறது... 

உங்கள் கனவில் இன்னும் சில குறியீடுகள் உள்ளன... மனநோயாளி, பைக், சாக்கடை, துக்க வீடு போன்றவை...

கனவுக்கு விளக்கம் கூறுவதற்கு முன் சில பதில்கள் தேவை :-

மார்ச் 15 அன்று கனவு கண்டிருக்கிறீர்கள்... இத்தனை நாட்களுக்குப்பின் கனவுக்கு விளக்கம் தேட வேண்டிய அவசியம் என்ன...??? இதே கனவு அடிக்கடி வந்ததா...? அல்லது இதேபோன்ற விபத்து கனவுகள் வேறெதுவும் வந்ததா...? வேறு ஏதேனும் மனரீதியான பிரச்சனைகள்...?

கனவில் கண்ட இடம் உங்கள் வீட்டுப்பகுதி தானா..? கனவில் உங்கள் தந்தை தவிர வேறு யாராவது உடன் இருந்தார்களா....? கனவில் உங்கள் தந்தையின் ரியாக்ஷன் என்ன...?

நான்:
// மார்ச் 15 அன்று கனவு கண்டிருக்கிறீர்கள்... இத்தனை நாட்களுக்குப்பின் கனவுக்கு விளக்கம் தேட வேண்டிய அவசியம் என்ன...??? இதே கனவு அடிக்கடி வந்ததா...? //

அப்படியெல்லாம் இல்லை மார்ச் 15 கனவு கலைந்ததும் ஒரு பேப்பரில் எழுதி வைத்தேன்... இப்போது நேரம் கிடைத்தமையால் டைப்படித்தேன்... நிறைய கனவுகள் வருகின்றன, ஆனால் யாவும் நினைவில் இருப்பதில்லை... நிறைய என்றால் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கனவுகள் வருகின்றன எண்பது என்னுடைய கணிப்பு... ஆனால் விடிந்ததும் அத்தனையும் மறந்துவிடுகிறது... கனவில் வந்த குறிப்பிட்ட செயல்களை செய்யும்போது மட்டும் கொஞ்சமாக நினைவு கூற முடிகிறது...

// இதேபோன்ற விபத்து கனவுகள் வேறெதுவும் வந்ததா...? வேறு ஏதேனும் மனரீதியான பிரச்சனைகள்...? //

வந்திருக்கலாம்... நினைவில்லை... மனரீதியான பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன....

// கனவில் கண்ட இடம் உங்கள் வீட்டுப்பகுதி தானா..? கனவில் உங்கள் தந்தை தவிர வேறு யாராவது உடன் இருந்தார்களா....? கனவில் உங்கள் தந்தையின் ரியாக்ஷன் என்ன...? //

ஆமாம் எங்கள் வீடே தான்... குறிப்பிட்ட ஒரு சுவர் மட்டும் இல்லாமல் இருந்தது...உங்களுக்கு தேவைப்பட்டால் சம்பவ இடத்தை போட்டோ எடுத்து அனுப்புகிறேன்... கனவில் நான், தந்தை தவிர வேறு யாருமில்லை... தந்தையிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை... பால்கனி கதவை சாத்தியபிறகு இன்னும் சில காட்சிகள் கூட வந்தன... ஆனால் எழுதி வைக்காததால் நினைவில்லை...

நீங்கள் கூறியது போல பைக் ஆசாமி முன்பின் தெரியாத நபர் தான்...

எஸ்.கே:
உங்கள் கனவினை முற்றிலுமாக விளக்க இயலவில்லை... ஆனால் சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஏதோவொரு சம்பவத்தின் பாதிப்பினாலேயே இந்த கனவு ஏற்பட்டுள்ளது... உதவி தேவைப்பட்ட ஒருவருக்கு உங்களால் உதவ முடியாமல் போயிருக்கலாம்... அல்லது நீங்களாகவே செய்யாமல் இருந்திருக்கலாம்,.. அதை நினைத்து உங்கள் மனம் வருத்தப்படுவதே கனவினுடைய மையக்கருத்து...

மற்றபடி கனவில் வந்த குறியீடுகளை உங்கள் சமகால நிகழ்வுகளோடு பொருத்திப்பார்த்து ஆராய்ந்தால் தெளிவாக விளங்கும். 

எப்படியிருப்பினும் கனவு நேர்மறையான முடிவையே கொண்டிருப்பதால் உங்கள் மனம் நிம்மதியாக இருக்கிறது அல்லது நிம்மதியை தேடுகிறது என்று கொள்ளலாம்... மீண்டும் அதே கனவு வராததால் தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
கனவுகள் தொடரும்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 December 2010

கனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2

வணக்கம் மக்களே...

கனவுதுரத்தி என்ற வார்த்தைக்கு கனவுகளை, லட்சியங்களை அடைய அயராது பாடுபடுபவன் என்று அர்த்தம் சொல்கின்றனர். ஆனால் எனது இந்த பதிவின் தலைப்பிற்கு அர்த்தம் அதுவல்ல. இதுபற்றி முதல் பாகத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும் புதியவர்களுக்காக மீண்டும் ஒருமுறை அதே வரிகளை காப்பி பேஸ்ட் செய்கிறேன். எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன். இதுபோல கடந்த வாரம் கண்ட பகல் கனவு ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.


கனவு கண்ட தேதி: நவம்பர் 25, 2010
கனவு கண்ட நேரம்: காலை 6:00

கனவின்படி நேரம் இரவு 8 மணி. நான் எனது முகம் தெரியாத நண்பன் ஒருவனுடன் சாலையில் நடந்து செல்கிறேன். இருவரும் ஒரு பிரவுசிங் செண்டருக்குள் நுழைகிறோம். தனித்தனி கணினி முன்பு அமர்கிறோம். நான் வலைப்பூ ஒன்றினை என்னை மறந்து படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறையின் வெளிச்சம் மங்கலாகிக் கொண்டே போகிறது. என்னைச் சுற்றி அமர்ந்திருந்த மற்ற மனிதர்களும் முகம் தெரியாத அந்த நண்பனும் ஒவ்வொருவராக காணாமல் போவதாக உணர்கிறேன். என்ன நடக்கிறதென்று புரியாமல் கணினிமுன்பிருந்து முகத்தை திருப்பி சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன். பிரவுசிங் செண்டராக இருந்த அந்த இடம் ஒரு ஏசி பாராக மாறியிருக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் இரண்டிரண்டு நண்பர்களாக அமர்ந்து போதையில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் இடுப்புக்கு கீழே உடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்துக்கொண்டிருப்பதை உணர்கிறேன். எனது இந்தக் கோலத்தை பார்த்துதான் சுற்றியிருந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று எனக்கு நானே எண்ணிக்கொள்கிறேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்கிறேன். ஆனால் பணம் கொடுக்க மறந்துவிட்டேன். என்னுடைய கிரெடிட் கார்டு பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் அந்தக் கடையின் உரிமையாளருக்கு ஏற்கனவே ஒருமுறை தெரிவித்திருக்கிறேன். எனவே அவர் எனது கார்டில் இருந்து எனக்கே தெரியாமல் பணத்தை எடுத்துக்கொள்வாரோ என்று ஒரு வித அச்சம் ஏற்பட்டது. சில தூரம் கடந்து வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. ஒரு அறையில் பெண்கள் எதையோ மறைத்தபடி கூடி நின்றிருந்தனர். அப்போதுதான் எனது தாத்தா இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன்.

தாத்தா இறந்த காட்சி வந்ததும் எனது உள்மனதிற்கு இது உண்மையல்ல கனவுதான் என்று புரிந்துவிட்டது. எனினும் என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் அப்படியே தூங்கி கனவை தொடர முயற்சி செய்தேன். ஆனால் கனவும் தூக்கமும் கலைந்துவிட்டது.

நண்பர் எஸ்.கே சென்ற முறை எனது கனவு ஒன்றிற்கு அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார். இந்த கனவிற்கும் அவர் சிறந்த முறையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காக புனைவுகள் ஏதுமின்றி நான் கண்ட கனவை அப்படியே எழுதியிருக்கிறேன். உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. எனது குடும்பத்தினர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் தாத்தா தான். அவர் இருந்து போகிறார் என்றால் அது கனவாக இருந்தாலுமே என்னால் தாங்கிக்கொள்ள இயலாது. அப்படி இருக்கும்போது என் கனவில் எப்படி அப்படிப்பட்ட காட்சி வந்தது என்று புரியவில்லை. மேலும் எனது கனவுகளில் அடிக்கடி நான் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக அதாவது வெறும் சட்டை மட்டும் அணிந்த நிலையில் (பாலு மகேந்திரா பட ஹீரோயின் போல) இருப்பதாக வருகிறது. இவை இரண்டினையும் தெளிவுப்படுத்தவும்.

பின்குறிப்பு: இந்தக் கனவை நான் எழுதி வைத்துவிட்டு மறுபடியும் தூங்கினேன். அரைமணிநேர தூக்கத்தில் மறுபடியும் ஒரு கனவு வந்தது. அது பதிவுலகம் சம்பந்தப்பட்ட ஒரு கனவு. அதையும் கூடிய விரைவில் எழுதுகிறேன்

எஸ்.கேயின் விளக்கம்:
வணக்கம் நண்பரே! இம்முறையும் என்னால் இயன்ற அளவு கனவை விளக்குகிறேன்!

உங்களின் இக்கனவில் பல விஷயங்கள் கலந்து வந்துள்ளன. முதலில் நண்பருடன் ஒரு பிரவுசிங் செண்டருக்கு செல்கிறார்கள். அங்கே வலைப் பக்கத்தை மெய் மறந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் மறைந்து விடுகிறார்கள். அவ்விடமே பாராக மாறுகிறது. இது ஒரு சந்தோசத்தை அளிக்கும் இடம். முதலில் இது நீங்கள் வலைப்பூக்களுக்கு அடிமையாகி உள்ளதை சுட்டி காட்டுகிறது, அதன் மீது தீராத பற்று, கைவிட முடியாத நிலையில் இருக்கிறீர்கள். அது உங்களை சுற்றியுள்ள நிஜ உலகத்தை மறக்க செய்கிறது.

அடுத்து அரை நிர்வாணம். நிர்வாணம் தூய்மையான நிலையை குறிக்கிறது. நம் வாழ்வில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். அதன் சார்பான கவலையை இது குறிக்கிறது. நிர்வாணம் வேறொன்றையும் குறிக்கிறது. அது நீங்கள் எதையோ மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நினைக்கிறீர்கள். அரை நிர்வாணம் என்பதால் நீங்களை உங்களை முழுமையாக வெளிப்படுத்த விரும்பவில்லை. அதாவது நாம் நம்மை பற்றி ஒரு விஷயத்தை/சில விஷயங்களை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். ஆனால் அதனால் மற்றவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்களோ என்ற அச்சமும் உங்களிடம் உள்ளது.

பணம் செலுத்துதல் என்பது பொறுப்பு, மதிப்பு ஆகியவற்றை குறிக்கின்றது. ஆனால் அதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அதே சமயம் பணம் சம்பந்தபட்ட தகவல் கடைக்காரருக்கு தெரிவதால் ஏதாவது பிரச்சினை நேருமோ என பயப்படுகிறீர்கள். உங்கள் விஷயங்களை தெரிந்து வைத்துள்ள ஒருவரால் உங்களுக்கு பிரச்சினை நேருமோ என கவலைப்படுகிறீர்கள். மேலும் பணம் சம்பந்தமாக சமீபகாலமா வாழ்வில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.

கனவில் மற்றொருவரின் மரணம் என்பது நாம் அந்நபரை குறிப்பிடும் ஒரு பண்பு அல்லது உணர்ச்சியை கைவிடுவதை குறிக்கும். உதாரணமாக கனவில் இறப்பவர் ஒரு முன்கோபி என வைத்துக்கொண்டால் நாம் நம் முன்கோப குணத்தை கைவிடுதலை குறிக்கும். மேலும் இறப்பவர் கொண்டுள்ள ஒரு குணம் நம்மிடம் இல்லாததை/முழுமையடையாமல் இருப்பதையும் குறிக்கலாம். இதற்கு நாம் கனவில் இறப்பவரிடம் நமக்கு பிடித்த விஷயம் எது அவரின் சிறப்பம்சம் எது என யோசித்தால் புரிந்து விடும்.

மேலும் இறப்பு இன்னொன்றையும் குறிக்கிறது. குறிப்பாக மிக நெருங்கிய/அன்பு கொண்டுள்ளவரின் இறப்பு என்பது அவர் நம் வாழ்வில் இனிமேல் இருக்க மாட்டார் என்பதை குறிக்கிறது. எனவே அவரில்லாமல் நம் வாழ்வு எப்படி மாறக் கூடும் என்பதை யோசிக்க வேண்டும். அதாவது நம் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை கனவின் இப்பகுதி குறிக்கிறது.

இக்கனவு ஒரு இன்பம், சங்கடம், கவலை, அச்சம் போன்ற உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. வாழ்வில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்/ விருப்பங்கள் ஆகியவையே இதற்கு காரணமாக இருக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 November 2010

கனவுதுரத்தி குறிப்புகள் - பதிவுலகில் புதுமுயற்சி

வணக்கம் மக்களே...

பதிவுலகில் இதுவரை யாரும் முயற்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சிலருக்கு பிடிக்கலாம் மற்றவர்கள் முட்டாள்தனமாக நினைக்கலாம். எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன். ஆனால் எல்லாக் கனவுகளையும் இதுபோல எழுத முடிவதில்லை. பெரும்பாலான கனவுகள் எழுந்து நோட்டு பேனாவை எடுப்பதற்குள் மறந்துவிடுகின்றன. பெரும்பலான கனவுகளை நோட்டில் எல்லாம் எழுதி வைக்க முடிவதில்லை. மேற்கண்ட இரண்டு தடைகளையும் தகர்த்து எறிந்த கனவு ஒன்றினை இந்தப் பதிவில் புனைவுகள் ஏதுமின்றி கண்டதை கண்டபடி எழுதுகிறேன். பிடித்திருந்தால் தொடர்ந்து இதுபோல பல விசித்திர கனவுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

கனவு கண்ட தேதி: ஜூலை 4, 2010
கனவு கண்ட நேரம்: காலை 10.30 (!!!)

நேற்றிரவு நைட் ஷிப்ட் செய்துவிட்டு வந்து படுத்தபோது கண்களுக்குள் நுழைந்த சின்னஞ்சிறிய கனவு. ஆனாலும் ரொம்ப பவர்புல்லான கனவு. கெட்ட கனவாகவே இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஷங்கர் படம் போல மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.


கனவில், மணி அப்போது தோராயமாக இரவு 8 இருக்கும். ஒரு வயல்வெளி போன்ற நிலத்தில் நானும் என் தங்கையும் கைகளை கோர்த்தபடி நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னும் பின்னும் சில மனிதர்கள் தென்பட்டனர். அப்போது ஒரு மிகப்பெரிய ஜெட் விமானம் அபரிமிதமான நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பல்டியடிப்பதும் செங்குத்தாக பரப்பதுமாக பல சாகசங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தது. அது சக்திமான் தொடரில் காட்டப்படும் வேற்றுக்கிரக மனிதர்களின் விண்கலம் போல இருந்தது என்றும் சொல்லலாம். அது தரைமட்டத்திற்கு மிகவும் அருகில், அதே சமயம் எங்கள் தலைக்கு நேரே அல்லாமல் சில கிலோமீட்டர்கள் தள்ளியே பறந்தது. திடீரென அந்த ஜெட் விமானம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுவது போல தெரிந்தது. நாங்கள் சற்று தொலைவில் இருந்தாலும் அவ்வளவு பெரிய விண்கலம் விழுந்தால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிந்தது. பேரழிவு வரப்போகிறது என்று உணர்ந்த போதிலும் என் மனம் அந்த பிரம்மாண்டமான காட்சியை ரசித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் எப்படியாவது தங்கையை மட்டும் காப்பாற்றி விட வேண்டுமென துடித்தேன். அந்த வயல்வெளியில் ஓடினாலும் பயனில்லை என்ற காரணத்தினால் நாங்கள் அசையாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தோம். சில நொடிகளில் பலமான சத்தத்தோடு அந்த விண்கலம் தரையில் விழுந்து அதன் சுற்றுவட்டாரத்தை நாசமாக்கியது. நல்லவேளையாக அதன் தாக்கம் எங்களை நெருங்கவில்லை. கீழே விழுந்த விண்கலம் அத்தோடு நில்லாமல் பூமியில் இருந்த கார், பஸ், லாரி போன்ற வாகனங்களை எல்லாம் தூக்கி வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் போல ஏதோ வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்படியே வயல்வெளியில் அண்ணாந்து படுத்துக்கொண்டு வானத்தில் நடக்கும் வேடிக்கைகளை ரசிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்குள்ளாக கனவு கலைந்துவிட்டது.

இந்தப் பதிவிற்கு நீங்கள் பெரும் வரவேற்பை கொடுப்பீர்கள் என்ற...
கனவுகளுடன்,
N.R.PRABHAKARAN

 பி.கு: நண்பர் எஸ்.கே எனது இந்தக் கனவிற்கு பின்னூட்டம் மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் கொடுத்துள்ள விளக்கம் ஏறத்தாழ நூறு சதவிகிதம் சரியாக இருப்பதால் அவரது விளக்கத்தை இந்த இடுகையில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...

பிற்சேர்க்கை:
எஸ்.கே:
நண்பரே...!
எனக்கு தெரிந்தவரை உங்கள் கனவை விளக்குகிறேன்...

வயல்வெளி பாதுகாப்பான / வசதியான இடத்தை குறிக்கிறது.
ஜெட் / விண்கலம் நீங்கள் தனியாக செயல்பட விரும்புவதை குறிக்கிறது. புதிய வழிகளில் நீங்கள் செயல்பட விரும்புவதை குறிக்கிறது. ஆனால் அது விபத்துக்குள்ளாகிறது. அப்படியானால் நீங்கள் தனியாக செயல்பட சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலும் அதனால் பிரச்சினைகள் உண்டாகிறது. அல்லது இது உங்கள் வாழ்வில் உங்களை சார்ந்தவர்களின் வாழ்வில் எதிர்மறையான மாற்றங்களை குறிக்கிறது. ஆனால் நீங்கள் விபத்தை ரசிக்கிறீர்கள். உள்மனது பிரச்சினைகளானாலும் பரவாயில்லை எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதில் விபத்து நிகழ்கிறது. மேலும் உடன் பிறந்தவரை காப்பாற்ற விரும்புகிறீர்கள். மரணம் மீதுள்ள பயம் மற்றும் உடன்பிறந்தவர் மீதுள்ள அக்கறையை குறிக்கிறது.

உங்கள் வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் / முடிவுகள் குறித்து யோசியுங்கள். மேலும் உடன்பிறந்தவர்களிடன் அன்போடு இருங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும். இக்கனவு / இதைப் போன்ற கனவு மீண்டும் வந்தால் தெரிவிக்கவும்.

Post Comment