Showing posts with label abilash. Show all posts
Showing posts with label abilash. Show all posts

25 March 2015

ரசிகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கால்களை படித்து முடித்த கையோடு நான் தொட்ட அடுத்த நாவல் ரசிகன். இதிலிருந்து என்னுடைய மன உறுதியையோ அல்லது நாவலின் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ உணர்ந்து கொள்ளலாம்.

முன்னுரையில் அபிலாஷ் நாவலை எப்படி எழுதினார் ? என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் ? என்பது குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறார். எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அபிலாஷின் முன்னுரை கட்டாய பாடம்.

இடதுசாரி கொள்கையுடைய எண்பதுகளின் இளைஞனான சாதிக் என்பவனே நாவலின் மைய கதாபாத்திரம். அவனுடைய வாழ்வின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை நாவல் ஒரு பார்வையாளனாக, நண்பனாக உடனிருந்து கவனித்து நமக்கு விவரிக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மாற்று சினிமா, மலையேற்ற சுற்றுலா, சிற்றிதழ் சிந்தனைகள் என்று ஒரு நாடோடியைப் போல அதன் விருப்பத்திற்கேற்ப பயணிக்கிறது. தீவிர இடது சாரி கொள்கை பிடிப்பு கொண்ட சாதிக் வறுமையின் கோர பிடியிலும் கூட ‘செங்கதிர்’ என்ற சிற்றிதழை விடாமல் நடத்தி வருகிறான். அவன் லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடற்றவனாக செயல்படுகிறான். நாவலின் இரண்டாவது பாகத்தில் அவன் அந்த காலகட்டத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த பேரலல் காலேஜில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். அவனுடைய கொள்கை பிடிப்புகள் சற்று தளர்ந்திருக்கின்றன. ரெஜினா என்கிற பெண்ணை காதலிக்கிறான். காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறான். சிறைக்கு கூட செல்கிறான். மூன்றாவது பாகத்தில், அவனுடைய குணநலன்கள் மொத்தமாகவே மாறிப் போயிருக்கின்றன. அவன் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருக்கிறான். நிறைய குடிக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்டவனைப் போல இருக்கின்றன.

அபிலாஷின் முந்தைய நாவலுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் நாகர்கோவில் / கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் அப்பா காணாமல் போய்விடுகிறார். இரண்டிலும் அடிக்கடி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராவது வெட்டியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.

முக்கியமாக இரண்டு நாவல்களில் உள்ள பொதுவான சிக்கல், கண்டதையும் எழுதி வைத்திருப்பது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சில நொடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் எண்ணற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்தது மனித மனம். ஆனால் அப்படி மனித மனம் நினைப்பது அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிக்கொண்டே வந்தால் நன்றாகவா இருக்கும். இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது. அது ஒரு எல்லையை மீறிப்போகும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நாவலின் 139ம் பக்கம் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கிறது – அவர் கண்ணை மூடி நமசிவாய நமசிவாய என உதடு குவித்து முணுமுணுத்தார். அப்படிக் குவியும்போது அவர் உதடுகள் பார்க்க நாயின் ஆசனவாய் திறந்து மூடுகிறாற் போல இருந்தன. இதனை படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், எழுத்தாளர் எப்போதோ ஒரு சமயம் நாயின் ஆசனவாயைப் போய் குறுகுறுவென பார்த்திருக்கிறார். அது திறந்து மூடும்போது எப்படி இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெரியவர் உதடு குவிக்கும்போது அது முன்பு பார்த்த நாயின் ஆசனவாய் போலவே இருக்கிறதா என்று ஒப்பிடுகிறார். நினைத்துப் பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

சமீபமாக படித்த நாவல்களில் உள்ள பொதுவான ஒரு அம்சம், போகிறபோக்கில் இலைமறை காயாக மற்ற எழுத்தாளர்களை பகடி செய்கிறார்கள். குறிப்பாக, சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள். ஒன்றிரண்டு நாவல் எழுதியிருக்கும் புதிய எழுத்தாளர்கள் இப்படி கிண்டலடிப்பது சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத மிர்ச்சி சிவா ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ராமராஜனை கிண்டலடிப்பதை நினைவூட்டுகிறது.

ரசிகனை பொறுத்தவரையில் அபிலாஷின் முந்தைய நாவலைப் போல போரடிக்கவில்லை. ஆனால் அத்தியாயங்கள் போகப் போக நாவலின் கதாபத்திரங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் அரைகிறுக்கு போல இஷ்டத்துக்கு எதையாவது செய்கிறார்கள். அத்தியாயத்துக்கு ஒரு பிராண்ட் என்று குடிக்கிறார்கள். முதலில் டைரெக்டர்’ஸ் ஸ்பெஷல், அப்புறம் ப்ளாக் லேபிள், பகார்டி லெமன், ஈ & ஜெ, ஓல்ட் மாங்க், மார்பியஸ் என்று டாஸ்மாக் வகையறா அத்தனையும் வந்து போகின்றன. பெண் கதாபாத்திரம் ஒன்று மார்பகங்களை உடைகளுக்கு வெளியே எடுத்து விபத்தில் இறந்த கணவனின் மூளையை நினைத்து உச்சம் அடைகிறது. ம்ஹூம். ரசிகன் என்பது என்ன ஒரு அற்புதமான தலைப்பு என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment