Showing posts with label guru. Show all posts
Showing posts with label guru. Show all posts

24 January 2014

பண்பலை குரல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன் பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில், கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும். நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம் சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில் பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.

என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில் தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக் கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?

முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான் குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும் மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை. உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!

அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில் ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும் பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார் குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும். யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன். வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார். உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும் வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா... ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால் இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில் பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன். மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும் காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால் லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.

யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும் நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர், பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர் நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர் உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள் தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2013

ஒன்பதுல குரு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அறுபதுகளில் பீச் பார்ட்டி என்கிற அமெரிக்க படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே சாயலில் சில படங்கள் வெளிவந்தன. தமிழில் வெளிவந்த கோவா கிட்டத்தட்ட அந்த ரகம் என்று கொள்ளலாம். போலவே டீன் ஃப்லிம்ஸ் என்றொரு ஜான்ரா உள்ளது. பதின்பருவ வயதினரை குறி வைத்து எடுக்கப்படும் அத்தகைய படங்கள், முதல் காதல், காம உணர்ச்சிகள், பெற்றோருடன் கலாசார இடைவெளி போன்றவற்றை மையப்படுத்தி அமைந்திருக்கும். கவர்ச்சி தூக்கலாக இருக்கும். ஒன்பதுல குரு விளம்பரங்கள் அந்த படங்களை நினைவூட்டியது. லட்சுமி ராயின் இருப்பு, மந்த்ராவின் மீள்வருகை போன்ற தகவல்களாலும் திரையரங்கிற்கு உந்தப்பட்டேன்.


திரைப்படங்கள் மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் கதையே இல்லை என்று கிண்டலடிப்பது விமர்சன க்ளிஷே. ஆனால் உண்மையிலேயே ஒன்பதுல குருவில் கதையை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டியிருக்கிறது. வாழ்க்கையை கொண்டாடும் சில பேச்சுலர்கள் திருமணத்திற்குப் பின் பேச்சு இல்லாதோராகி விடுகின்றனர். குடும்பத்தை விட்டு விலகி மீண்டும் பேச்சுலராக முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களே ROTS.

ஒன்பதுல குரு ஒரு நகைச்சுவை திரைப்படம் என்று சொல்வது தான் உச்சக்கட்ட நகைச்சுவையாக படுகிறது. நான்கைந்து நல்ல நகைச்சுவைகளை வைத்துக்கொண்டு, ஏராளமான சிரிப்பே வராத பாடாவதி காமெடிகளை சேர்த்து, கோர்வையாக இல்லாமல் பயங்கர மொக்கையாக இருக்கிறது.

பராசக்தியில் நடிகர் திலகம் அறிமுகமானபோது, “மீன்குஞ்சு மாதிரி வாய வாய தொறக்குறான்...” என்று கமெண்ட் அடித்தார்களாம். வினய்யும் அதேபோல அடிக்கடி வாயை திறக்கிறார் என்பதற்காக அவரை சிவாஜியாகவோ, வாயை கோணலாக வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து பேசுவதால் ரஜினியாகவோ, படத்தில் பில்லா என்ற பெயரை சூட்டிக்கொண்டதற்காக அஜித்தாகவோ கருதிவிட முடியாது. வினய்க்கு பொருந்தாத வேடம். குறிப்பாக பாடல்காட்சிகளில் அவருடைய வாயசைப்பு நாசம்.

சத்யன், ப்ரேம்ஜியின் நடிப்பு எரிச்சலும் இரைச்சலும் கலந்த கூட்டுக்கலவை. அரவிந்த் அகாஷும் உடன் இணைந்து சலம்பாதது ஆறுதலளிக்கிறது. ஒன்பது குருவின் பிரதான வேடங்களில் முதலில் நடிப்பதாக இருந்தவர்கள், நகுல், சிவா, சந்தானம், ப்ரேம்ஜி. ஒப்பீட்டளவில் நல்ல காம்பினேஷன். பவர் ஸ்டாரின் கோமாளித்தனங்களை எல்லாம் ஒருமுறை தான் ரசிக்க முடியும்.


லட்சுமி ராய் - மங்களகரமான பெயர். புத்தம் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் போல பளபளப்பாக இருக்கிறார். மைதா மாவை பிசைந்து செய்யப்பட்ட ஐந்தே முக்கால் அடி சிலை. மனோபாலாவின் மனைவியாக வருபவர் வல்லிய கேரளத்து பெண்குட்டி. சோனா, மந்த்ரா போன்ற டபுள் டக்கர் ஆண்ட்டிகள் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, லட்சுமி ராய், சாம்ஸ், பவர் ஸ்டார் போன்ற நல்ல ரிசோர்ஸஸ் வீணடிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர், வசனம் எழுதியவர் எல்லாம் பெரிதாக எதுவும் உழைக்கவில்லை. பழைய பாடல்கள், பழைய படங்களின் பிண்ணனி இசை, பிரபலமான வசனங்கள், இதையெல்லாம் கொஞ்சம் டிங்கரிங் செய்தோ செய்யாமலோ சொருகியிருக்கிறார்கள். முதலில் பழைய பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவர வேண்டும். ஆல்ரைட், சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் ஆரம்பித்த போது ரசிக்க வைத்தது. ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் ? ஒரு ரம்மியமான இரவுப்பொழுதில் வா வா அன்பே அன்பே பாடலையோ கடலோர கவிதைகள் பாடலையோ கேட்கும்போது உங்களுக்கு சோனாவும் ப்ரேம்ஜியும் நினைவுக்கு வந்தால் எப்படி இருக்கும் ? மாட்டு சாணம்.

திருமணம் செய்துகொள்பவர்கள் ஒன்பதுல குரு, எட்டுல சனி, மூணுல ராகு என்று ராசி, ஜாதகமெல்லாம் பார்த்து திருமணம் செய்வதை விட, தமக்கு மனதளவில் பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒன்பதுல குருவின் மையக்கருத்தாக நாமே வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். படக்குழுவினரை பொறுத்தவரையில் மந்த்ரா, சோனா, லட்சுமி ராய், அப்புறம் நிறைய துணை நடிகைகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்று நன்றாக கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள்லாம் நல்லா வருவீங்க !

ஒன்பதுல குரு - தேவி திரையரங்கில் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்கும் சாமர்த்தியம் இருப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 March 2013

ஆல்ப்ஸ் மலைக்காற்று

அன்புள்ள வலைப்பூவிற்கு,

“மந்த்ரா என்று சொன்னதும் உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்குமானால் நீயும் என் தோழனே...!”

- Philosophy Prabhakaran

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் திரையுலகத்தையே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்க வைத்தவர், மிரட்சியில் மலைக்க வைத்தவர் - மந்த்ரா. நாயத்துக்கு நாமெல்லாம் ஆந்திராவின் வரைபடத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். மந்த்ராவை பெற்றெடுத்த பூமி அது ! ஆம், பாலாறு ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி பாய்கிறது.


தமிழகத்தில் ஒரு நடிகர் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இந்தப்படம் என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையில் அவருடைய முதல் படம் தான் திரையுலகிற்கே திருப்பமாக அமைந்தது. ப்ரியமான மந்த்ரா தமிழர்களின் நெஞ்சங்களில் தில்ருபாவாக குடியேறினார். ஆனால், நடிகரின் திராபையான நடிப்பில் படம் தோல்வி. விளைவு, அடுத்து வெளிவந்த லவ் டுடே படத்தில், “காதலுங்குறது வானத்துல பறக்குற புறா இல்ல, கடல்ல மெதக்குற சுறா மாதிரி" என்று டாகுட்டரின் அரிய தத்துவங்களை கேட்க வேண்டிய துர்பாக்கிய கதாபாத்திரம்.

பெண்களை பழித்துப் பேசியே பழக்கப்பட்ட சமுதாயம், மந்த்ராவிற்கு ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தியது. அந்த கிராதகர்களின் முகத்தில் கரியை பூசுவதற்காக தன் பெயரையே ராசி என்று மாற்றிக்கொண்டார் அந்த மகராசி !

பெயரை மாற்றியதும் பெரிய இடத்து மாப்பிள்ளை தேடி வந்தார். ஆனால் பொருத்தமாக அமையவில்லை. கட்டம் போட்ட சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரர் மந்த்ராவோடு ஆட்டம் போட்டால் பொருத்தமாகவா இருக்கும்? மறுபடியும் திருப்புமுனை நடிகர் திருப்பிப் பார்த்தார், ம்ஹூம்.



தேடினேன் வந்தது என்று தேடாமலே ஒரு வாய்ப்பு வந்தது. சராசரி சினிமா தான். ஆனால், அதில் ஆல்ப்ஸ் மலைக்காற்று என்று ஒரு பாடல். அதுவரைக்கும் ஆல்ப்ஸ் போன்ற பிரம்மாண்ட மலைகளை பார்த்திராத இளைய சமுதாயம் இன்பத்தில் திக்குமுக்காடியது. பனி படர்ந்த மலைப்பகுதியில் படமாக்கப்பட்ட அந்த பாடல் பல இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்தது. மியாமி கடலலைகள் சென்னைக்கே வந்துவிட்டதை போலொரு புத்துணர்வு !

தல - மந்த்ரா ! குட் காம்பினேஷன் ரெட்டை ஜடை வயசில் அமைந்தது. பேச்சிலர்களின் தேசிய கீதம் கேட்டிருக்கிறீர்களா ? தனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும், அவளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வேன் என்று பாடுவார் அஜீத். அந்த பாடலுக்கான விடை யாரென்று நினைக்கிறீர்கள் ? ஷாத்ஷாத் மந்த்ராவே தான். கும்முன்னு இருக்கலாம் குஷ்பூ, உள்ளத்தை அள்ளலாம் ரம்பா, அன்னநடையில் கலக்கலாம் நக்மா, ஆனா அத்தனையும் மந்த்ராவைப்போல வருமா ! என்று ஒரு புதுக்கவிஞன் அன்றே பாடினான். ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட்டை பார்த்தால் உன் நினைப்பு என்ற வரிகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் பிரதிபலித்தார் தல. 



காத்திருந்தது தமிழனுக்கு எதிர்பாராத சோதனை. ஜகபதி பாபு மந்த்ராவை கையோடு ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அப்பொழுதும் வட சென்னை தமிழர்கள் கள்ள ரயிலேறி ஆந்திராவிற்கு சென்று கலைச்சேவையை தொடர்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வப்போது தமிழுக்கு தலைக்காட்டினாலும், சவலைப்பிள்ளையாக ஏங்கியது கோலிவுட்.

தல அஜித்துக்கும் ராசிக்கும் அப்படி ஒரு ராசி ! அஜித்தின் ராஜா படத்தில் அதிரடியாக குத்தாட்டம் போட்டு தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அவரது மீள் வருகையின் போது தமிழகத்தில் எப்போதுமில்லாத அளவு வெற்றிலையின் விலை சிகரத்தை தொட்டது.



எனினும் இரண்டாவது ஆட்டத்தை தொடர முடியாதபடி, குடும்ப வாழ்க்கைக்குள் குதித்துவிட்டார் மந்திரம். கடைசியாக மந்த்ரா நடித்த தமிழ்ப்படம் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி மட்டுமே தமிழனுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. நேற்று வரை !

இதோ ! இப்போது துவண்டு போன தமிழ் ரசிக நெஞ்சங்களை துள்ளி எழ வைப்பதற்காக மீண்டும் வருகிறார் மந்த்ரா ! நாளை வெளியாகவிருக்கும் ஒன்பதுல குருவில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுகிறார். செய்தியை கேட்டதிலிருந்து என் மனது இமயமலைக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் மாறி மாறி பயணித்துக்கொண்டிருக்கிறது...!


தொடர்புடைய சுட்டி: நக்மாயிசம்




என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment