அன்புள்ள வலைப்பூவிற்கு,
Such an eventful weekend...!
நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். என்னைப்
பொறுத்தவரையில் மெரினா மகிழ்ச்சிக்கு பல வாயில்கள் கொண்ட ஒரு வீடு. கடலலையில் கால்
நனைக்கலாம், மணலில் காலாற நடக்கலாம், மல்லாக்க படுத்துக்கொண்டு அண்டவெளியை வேடிக்கை
பார்க்கலாம், சைட் அடிக்கலாம் அல்லது அமைதியாக ஏதேனும் ஒரு கல்லிருக்கையில்
அமர்ந்து கொள்ளலாம். நான் கடைசி வாசலை தேர்ந்தெடுத்தேன். கடற்கரையில் காக்கைகள்
அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு
பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து,
பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. நானாக இருந்தால்
சோத்துப்பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியே போயிருப்பேன். அந்த மனிதருக்கு அது வழக்கம்
போல. அவர் பாட்டுக்கு அசராமல் சாப்பிட்டு முடித்தார். அதுவுமில்லாமல் காக்கைகள்
மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும்,
நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும், அப்புறம் யாராவது பார்த்திருப்பார்களோ என்று
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அசடு வழிவதாகவோ பொழுது போனது.
![]() |
புகைப்படம்: தி ஹிந்து |
காக்கைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு சில மூடநம்பிக்கைகள்
உள்ளன. ஆனால் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த தொந்தரவும் தராதவை. சந்தோஷ் சுப்ரமணியம்
படத்தில் ஒருமுறை தலையில் முட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று ஜெனிலியா
நம்புவார். ஜெயம் ரவி நீ இதையெல்லாமா நம்புற...? என்று கேட்கும்போது நல்லா
இருக்குல்ல என்று சிரித்தபடி பதிலளிப்பார் ஜெனிலியா. அதுபோல தான் எனக்கு சில
நம்பிக்கைகள். விஷயம் இதுதான். தினமும் காலையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு
குறிப்பிட்ட காகம் வந்து கரைகிறது. உடனே தாத்தா வந்துவிட்டார் என்று அதற்கு
கொஞ்சம் உணவுப்பொருள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த காக்காவும் சளைத்ததில்லை. உப்புமாவோ, வெண் பொங்கலோ வைத்தால் சீண்டாது. உணவை எடுத்துக்கொண்டு
போய் வைக்க தாமதமானாலும் விடாமல் கரைந்து கொண்டிருக்கும். அதுவும் அசாதாரண
குரலில். ஏதோ சுனாமி வரப்போகிறது என்று எச்சரிப்பது போல இருக்கும். என்றோ ஒருநாள்
அந்த காக்கைக்கு உணவளித்து அது தினமும் வந்து பழகியிருக்கக்கூடும். அல்லது
உண்மையாகவே மறைந்த முன்னோர்கள் காக்கைகளாக உரு பெறுகிறார்களோ என்னவோ...?
அப்படி அவர்கள் காக்கைகளாக உருப்பெறும் பட்சத்தில் அவர்களுடைய
வாழ்நாள் எவ்வளவாக இருக்கும் என்று தேடினேன். காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. காக்கைகளில் பல இனங்கள்
இருக்கின்றன. பொதுவாக காக்கைகள் இருபது வயது வரை வாழ்கின்றன. அதாவது உருமாறும்
நமது மூதாதையர்களின் வாழ்நாள் இருபது வருடங்கள். அதன்பிறகு அவர்கள் என்னவாக
ஆகிறார்கள் என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு காக்கை 59
வயது வரை வாழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. டாட்டா
என்று பெயரிடப்பட்ட அந்த காக்கை ஒரு செல்லபிராணியாக வீடுகளில் வளர்ந்திருக்கிறது. ஒருவேளை
அதனை அதிக கவனம் செலுத்தி வீட்டுச்சூழலில் வளர்த்தமையால் கூட அத்தனை வருடங்கள்
வாழ்ந்திருக்கலாம். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது.
டாட்டாவை விட வேறு எந்த காக்கையும் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததில்லை என்று எப்படி
சொல்ல முடியும். உலகில் உள்ள எல்லா காக்கைகளின் வயதையும் சென்சஸ் அதிகாரிகள்
கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா என்ன...?
சரி, காகங்கள் பற்றிய கரைதலை நிறுத்திக்கொள்வோம். நேற்று காலை ஒரு
புதிய அனுபவம் கிடைத்தது. நண்பர் அருள் செல்வன் அவருடைய குறும்பட ஷூட்டிங்கை
பார்ப்பதற்கு அழைத்திருந்தார். வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதை போட்டியில் ரஜினியிசம்
என்ற சிறுகதை நிறைய பேருடைய நினைவிலிருக்கும். அதை எழுதியவர் தான் இந்த அருள்
செல்வன். ஏற்கனவே சொம்பு, மொக்கை பையன் சார் உட்பட ஐந்தாறு குறும்படங்களில்
பணியாற்றியிருக்கிறார். எல்லாமே சராசரிக்கு மேல் என்று சொல்லக்கூடிய அளவில்
இருந்தன. அவற்றில் சொம்பு என் விருப்பதிற்குகந்தது. எல்லா படங்களையும் மிகக்
குறைந்த செலவில் தயாரிக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தற்சமயம் H2SO4,
பொண்ணு ஒன்னு கிடைக்கல என்று இரு குறும்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு
உற்சாகமான அணியையும் தன்னகத்தே வைத்திருக்கிறார் அருள். பெங்களூரில் ஒரு உலக பிரபல
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணனுக்கு நடிப்பதில் பேரார்வம். அருளுக்காக
பெங்களூரிலிருந்து சென்னை வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்கிறார். கிட்டத்தட்ட
அருளின் எல்லா படங்களிலும் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும்
இயல்பாக நடித்துவிடுகிறார். இந்தமுறை அருள் செல்வன் குழுவினர் நாளைய இயக்குநரில்
பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் காதில் விழுந்தது. அவருக்கும் அவருடைய
குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...!
பார்க்க: சொம்பு
அங்கிருந்து மதிய உணவிற்கு அண்ணா நகர் ஸீ ஷெல்ஸுக்கு அழைத்துச்
சென்றார் அஞ்சாசிங்கம். ஏதோ மட்டன் ரான் பிரியாணி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் கூட ஆட்டுத்தொடையை அப்படியே கொண்டு வந்து வைப்பார்கள் போல என்று
நம்பிக்கொண்டிருந்தேன். வண்ணமயமான உணவகம். ஏராளமான மேட்டுக்குடி யுவதிகளும்,
சீமாட்டிகளும் சில தடிமாடுகளுடன் வந்து செல்கிறார்கள். கைகளை கழுவிவிட்டு
வருவதற்குள் சைட்டடிக்க தோதான இடத்தில் அமர்ந்துகொண்டார் சிவக்குமார். சரி, வளர்ற
பிள்ளையாச்சே’ன்னு விட்டுத்தர வேண்டியதாக போய்விட்டது. கேபிள், கே.ஆர்.பி, பிரபு
கிருஷ்ணா ஆகியோரை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆரூர்
மூனாவும் வந்திருந்தார். பிரியாணி வெகு சுமார். பில்லுக்கு பணம் செலுத்திய
அஞ்சாசிங்கத்துக்கு என்னுடைய அனுதாபங்கள்.
முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன,
கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது
அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர்
நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன
கருமம்டா...! போனதற்கு உருப்படியாக ஆரூராரிடமிருந்து ராஜீவ்காந்தி சாலை,
உப்புநாய்கள், மரபல்லி ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறேன்.
சமீபத்தில் எழுதியது: தெகிடி
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|