29 January 2014

வாசித்தவை - 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புக் மார்க்ஸ்
புத்தகக்காட்சி முடிந்த கையோடு முதலில் துவங்கிய புத்தகம். எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்களை பற்றியும் சுவாரஸ்யமான துணுக்குகள் அடங்கிய தொகுப்பு. ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், ஆதாரங்களோடு. சீவக சிந்தாமணியில் வரும் தாமரைக் கண்ணால் பருகினார்கள் என்ற சொற்றொடரைப் பற்றிய பத்தி மாஸ்டர் பீஸ்...!

சில கைவினைப் பொருட்கள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் சிறப்பாக இருக்காது. ஆனால் அது அதிக உழைப்பில் உருவாகியிருக்கும். அதுபோல புக் மார்க்ஸ் பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லாத புத்தகம் என்றாலும் அத்தனை தகவல்களை தொகுக்க என்.சொக்கன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. 

புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

தமிழா! நீ ஒரு இந்துவா?
பொதுவாக எனக்கு பிரசார வகைமை புத்தகங்களின் மீது ஈடுபாடு கிடையாது. நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தமிழா நீ ஒரு இந்துவா என்ற புத்தகத்தை தேடி, அது எங்கேயும் கிடைக்கவில்லை. திடல்லயே இல்லையாம்...! புத்தகக்காட்சிக்கு சென்றிருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் இருக்கிறதா என்று ஒரு வார்த்தை கேட்டுப்பார்த்தேன். உடனடியாக கிடைத்துவிட்டது.

சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார். அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழா! நீ ஒரு இந்துவா? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும்
இதுவும் கிட்டத்தட்ட முந்தய புத்தகத்தை போன்றது தான். தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் மிகவும் குறைந்த அளவில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், லெமுரியா,  சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. கிரேக்க கடவுள்களையும் ஹிந்து கடவுள்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் பகுதி கொஞ்சம் ரசிக்க வைத்தது. சுஜாதா விருது பெற்ற நூல் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் சொல்வதற்கில்லை.

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும் – பா.பிரபாகரன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.125 – ஆன்லைனில் வாங்க

கி.பி.2087இல்...
நான் சிறுவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதைகள் அடங்கிய நூல். ஒருவேளை நூல் வெளியான சமயத்திலேயே வாசித்திருந்தால் விரும்பியிருக்கக்கூடும். பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கைந்தை கூட முழுமையாக வாசிக்கவில்லை. 

கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25

திசை கண்டேன் வான் கண்டேன்
வாத்தியாருடைய சயின்ஸ் ஃபிக்ஷன். நோரா என்ற கிரகத்தினர் விண்வெளியில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமியை அழிக்க திட்டமிடுகிறார்கள். அது குறித்து பூமியின் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும்பொருட்டு பாரி என்னும் நோராவாசியும் அவனுடைய வாகனமும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பூமியின் எதிர்ப்பு நடவடிக்கை என்ன...? பூமி அழிந்ததா தப்பித்ததா...? என்பது கதை. மளமளவென வாசிக்க முடிந்தது. எனினும், இயந்திரா, ஜீனோ, சொர்க்கத்தீவு போன்ற அளவிற்கு ஈர்க்கவில்லை.

திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா - கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 comments:

Anonymous said...

அட்றா அட்றான்னான்னா, வி ஆர் வெயிட்டிங் பார் சிஐடி நகர் பாபு

? said...

//சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார்.//

பா. பிரபாகரன் புத்ததகத்துக்கு ஆதாரம் இல்லை ஆனால் மஞ்சை வசந்தன் புத்தகத்துக்கு ஆதாரம் இருக்குங்கறீங்க. சங்க காலம் என்பதே ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு ஆயிரம் வருடத்திற்கு பிந்தய காலம். ஆரியர்கள் வந்தது கிமு 2000 - 1500. அதற்கு பிறகான சங்க காலம் கிமு 300 - கிபி 400 வரை நடந்தது. அப்புறம் எப்படி சங்க காலத்தில் இருந்த வழிமுறை ஆரியர் வருகையால் மாறியதுன்னு சொல்ல முடியும்?


//மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை//

மனுஸ்மிருதியில் எப்படி வேதம் இருக்கும்? மனு ஸ்மிருதி இசுலாமிய ஷரியா மாதிரி ஒரு இந்து மதத்தின் ஒரு சட்டப்புத்தகம். அது எழுதப்பட்ட காலம் கிமு 200 - கிபி 200க்குள்தான் இருக்கும். ஆனால் வேதம் எழுதப்பட்டது கிமு 1500 - 500 க்கும் இடைப்பட்ட காலம். மனு என்பவர் எழுதிய ஸ்மிருதி அதாவது சட்டத்தொகுப்பு போலவே வேறு பல ஸ்மிருதிகளும் உண்டு. மனு ஸ்மிருதி எல்லோராலும் கடைபிடிக்கபட்டது என்பதல்ல. வெள்ளைக்காரர்களால் பேமஸ் ஆகப்பட்ட புத்தகம் இது அவ்வளவுதான்.

Philosophy Prabhakaran said...

நந்தவனத்தான்,

மஞ்சை வசந்தனின் புத்தகத்தில் தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் இருந்து ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன... அதுவே பா.பிரபாகரனின் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் தொல்காப்பியம், கலித்தொகை பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன... அதன் பின்பு வருகிற அத்தியாயங்கள் அனுமானங்களின் அடிப்படையில் அல்லது ஏற்கனவே அனுமானங்களின் அடிப்படையிலோ எழுதிய புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டோ எழுதப்பட்டுள்ளன...

// ஆரியர்கள் வந்தது கிமு 2000 - 1500. அதற்கு பிறகான சங்க காலம் கிமு 300 - கிபி 400 வரை நடந்தது. //

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி... புத்தகத்திலும் ஆரியர்களின் வருகையாக இதையே தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்... பின்பு ஆரியர்கள் எவ்வாறு வளர்ச்சி அடைந்தார்கள், ஆரம்பத்தில் அவர்கள் செய்த 'பார்ப்பு' தொழில், பின்னர் அரசவையில் பணியாற்ற துவங்கியது, அரசர்களுக்கு அறிவுரை சொல்லத் துவங்கியது எனப் படிப்படியாக விளக்கியிருக்கிறார்கள்...

// மனுஸ்மிருதியில் எப்படி வேதம் இருக்கும்? //

வேதம் என்ற சொல்லை நான் தவறாக புரிந்துக்கொண்டேன் என்று நினைக்கிறேன்... விளக்கத்திற்கு நன்றி...

Sivakumar said...

இதயக்கனி பாபுவுக்கு சிறப்பு மரியாதை!!

சமுத்ரா said...

நல்ல விமர்சகர் ஆயிட்டீங்க...வாழ்த்துக்கள்!:)

சீனு said...

குமரிகண்டம் படிக்கும் வாய்ப்பு சென்ற ஆண்டே கிடைத்தது, ஏனோ படிக்கும் சுவாரசியம் இல்லாமல் விட்டுவிட்டேன்...

தற்போது வாங்கியுள்ள புத்தகங்களை முடித்த பின் வாய்ப்பு கிடைத்தால் புக்மார்க்ஸ் மட்டும் வாங்க வேண்டும்..

மேல நீங்கள் குறிப்பிட்ட சுஜாதா புத்தகங்களைப் போல் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதை தொகுப்பு என்ற புத்தகம் வாங்கினேன் கொஞ்சம் அசுவாரசியமாக தான் செல்கிறது.. மற்றொரு விஷயம் அதில் இடம்பெற்றுள்ள கதைகளை வெவ்வேறு இதழ்களில் படித்துள்ளேன்... தவறவிட்டது மிக சில கதைகளையே.. ஏண்டா வாங்கினோம் என்று எண்ண வைத்துவிட்டது..

உங்கள் படித்ததில் பிடித்தது பற்றிய விஷயம் தெரிந்தது முதல் எனது பதிவு ஏதாவது ஒன்று அங்கு மாட்டப்படாதா என்று எதிப்ர்பார்த்த நாட்களும் உண்டு..

சமீபத்தில் வா.ம எழுதி இருந்தார், எந்த பதிவு எப்போது யாருக்கு பிடித்துப் போகுமென்று தெரியாதென்று, கிட்டத்தட்ட இப்பதிவும் (டீம் டின்னரும்) அப்படிப்பட்டதே. எழுத வேண்டும் என்று எழுத தொடங்கி ஒரு பாராவுக்கு மேல் வளராமல் ஒருவாரமாக கிடப்பில் கிடந்த பதிவு, ஆச்சரியம்... இதோ இங்கே நான் எதிர்பார்த்த பகுதியில் இருப்பது... கொஞ்சம் feel better...

Naga Chokkanathan said...

என் நூல் பற்றிய சுவையான அறிமுகத்துக்கு நன்றி நண்பரே!

வவ்வால் said...

பிரபா,

// ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், //

புத்தகத்தின் பேரு, மற்றும் உள்ளடக்க பற்றி சொல்லியிருப்பதைப்பார்த்தால் எல்லாம் இணையத்தில் தேத்துன சரக்கா இருக்கும்னு நினைக்கிறேன்,எனவே நமக்கு தேவைப்படாது!

# //அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல். //

இந்தப்புத்தகத்தை கடையிலவே புரட்டிப்பார்த்துட்டு வேணாம்னு தள்ளிவிட்டது, விரிவான ஒரிஜினல் ஆன "who were the shudras-B.R.Abedkar" இல் நல்லா அலசி இருப்பார் அம்பேத்கர்.

"மனுஸ்மிருதி ஸ்லோகங்கள்" என வர வேண்டும்,அப்புறம் இதிலும் வேதங்கள் வருமே,ஆனால் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டிருக்கும்.

அதாவது ,மனுஸ்மிருதியில் வேத உதாரணங்கள் உண்டு,ஆனால் வேதங்களில் மனுஸ்ருமிதி பற்றி இல்லை.குறிப்பாக பழமையான ரிக் வேதத்தில் இல்லை,மற்றவற்றில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டிருக்காம்.

ரிக் வேதத்தில் வரும் புருஷசூக்தம் என்பதையே உல்டா அடிச்சு "மனுஸ்ருமிதி" ஆக்கி ஏற்றத்தாழ்வுக்கற்பித்துவிட்டார்களாம்.

# // ஒரு கட்டத்தில், லெமுரியா, சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. //

லெமுரியா,சிந்து சமவெளீ நாகரிகம் திராவிட நாகரீகம் என தொல்லியல் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ஆச்சே!

லெமுரியாவுக்கு ஆதாரம் இல்லை,சிந்து சமவெளி நாகரீகத்துக்கு ஆதாரம் உள்ளது.

மயன்,இன்கா,அஸ்டெக் கலாச்சாரங்கள் திராவிட நாகரீகமாக இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் ஓரளவு உறுதி செய்துள்ளார்கள்.

# சுமேரிய நாகரீகம் ஆரியவகைனு பலரும் சொல்லியாச்சு,ஆனால் அதை தமிழாக்க ரொம்ப நாளாக முயன்று வருகிறார்கள்.

தமிழில் இருக்கும் சொற்களுக்கும் பொனிஷியன் மொழிக்கும் உள்ள சில பொதுவான பண்புகளை வைத்து சொல்கிறார்கள். சுமேரிய மொழி பொனிஷிய மொழியில் இருந்து உருவாச்சாம், தொடர்பு அப்படி போகுது.

இப்படியான ஆய்வில் இது முதல் நூல் அல்ல!!!

MANO நாஞ்சில் மனோ said...

குடுத்து வச்சவிங்க நீங்க எல்லாரும் [[சென்னைவாசிகள்]] வாசிங்க வாசிங்க...!

Riyas said...

நல்ல விமர்சனம் பிரபா..

@வவ்வால்

உங்கள் பின்னூட்டங்களை எல்லாம் தொகுத்தே ஒரு புத்தகம் வெளியிடலாம் எப்பூடி ஐடியா?