அன்புள்ள வலைப்பூவிற்கு,
புத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது.
உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக்
பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள
எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள்
(இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கிலுக்’
யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.
கொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை
ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot
SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன்
லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து
சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.
வானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்
கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட
வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில்
ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.
சற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’
என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா ?
என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில்
புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.
இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று
சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன்.
வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும்
ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா
அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார்.
ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று
நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார்
என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில்
எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட,
அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.
ஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள்
‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு
பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.
ஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில்
ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப்
பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை
படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று
ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன.
என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் !
ஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு
முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள
தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று
முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர்
குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள்
புத்தகத்தில் இல்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|