Showing posts with label danshika. Show all posts
Showing posts with label danshika. Show all posts

15 July 2013

அந்தப்பக்கம் போயிட்டுவா நீ


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இருவருமே மும்பையில் பிறந்தவர்கள், வெண்ணெய்க்கட்டி நிறம், கொழுக் மொழுக் உடல்வாகு, கொஞ்சம் ஒரே மாதிரியான முக அமைப்பு. கவனிக்க: கொஞ்சம் தான். இவ்வளவுதான் குஷ்பூவுக்கும் ஹன்சிகாவுக்கும் உள்ள ஒற்றுமைகள். அதற்காக எல்லாம் ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பூ’ என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷ்பூவுடன் ஒப்பிடும்போது மன்னிக்க அந்த வார்த்தையை பயன்படுத்த என் மனம் ஒப்பவில்லை. உடல் வாகிற்காக வேண்டுமானால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்லலாம். அதில் கூட கூடிய விரைவில் குஷ்பூவை சின்ன ஹன்சிகா என்று அழைக்கும் நிலை ஏற்படலாம். குஷ்பூ ஆரம்பத்திலிருந்தே அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் நடிப்புத்திறனையும் பெற்றிருந்தார். உடல் வனப்புடன் கூடிய வசீகரமான முக லட்சணமும் அவரிடம் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் விட குஷ்பூவிடம் ஒரு ஆளுமை இருந்தது. அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரதான அம்சம். அத்தகைய குஷ்பூவின் சிறப்புத்தன்மைகள் அனைத்திலும் ஹன்சிகா சுமார் என்று கூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று அழைப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா ? வேண்டுமென்றால் கொஞ்சூண்டு குஷ்பூ என்று அழைத்துக்கொள்ளலாம். சரி குஷ்பூவுடனான ஒப்பிடலை ஒதுக்கிவிடலாம். பொதுவாக ஹன்சிகாவிடம் அப்படியென்ன தான் இருக்கிறது.

ஹன்சிகா தமிழில் நடித்த முதல் படமான “மாப்பிள்ளை” பார்த்திருக்கிறீர்களா ? சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப்பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா ? மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் உதட்டசைவை பார்த்தால் ஓங்கி சுவற்றில் போய் முட்டிக்கொள்ள தோன்றும். உதாரணத்திற்கு, ‘திருவண்ணாமலை’ என்ற சொல்லுக்கு ஹன்சிகா உதடசைத்தால் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவது போல தெரியக்கூடும். பாடல்காட்சிகளில் அதைவிட மோசம். ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ ?

சச்சின் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். “...ஓசியில கிடைக்குதுன்னு சீஸ் பர்கர், சீஸ் பீட்சால்லாம் தின்னு தின்னு தின்னு இப்படி அஞ்சரையடி பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு...” என்று போகிற வசனம். நியாயமாக ஸ்லிம் ஜெனிலியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத வசனம் அது. இருப்பினும் நடைமுறையில் ஹன்சிகாவிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். வெண்ணையினால் செய்யப்பட்ட ஐந்தரையடி உருவமாகத்தான் ஹன்சிகா என் கண்களுக்கு தோன்றுகிறார். கெளதம் மேனன் படப்பாடல்களின் இடையிடையே மேலைநாட்டு பெண்கள் வந்து சம்மர்சால்டெல்லாம் அடிப்பார்களே, அவர்களில் ஒருவராக வேண்டுமென்றால் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்ளலாம். “இவ்வளவு பேசுகிறாயே... ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால் என்ன செய்வாய் ?” என்றொரு குரூர மனப்பான்மையுடைய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், சாரி பாஸ் அப்போதைக்கு சுப்பையா என்கிற மானஸ்தன் உங்கள் கண்களுக்கு அகப்பட மாட்டான். நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுமார்மூஞ்சிகளோடு ஒப்பிடும்போது, ஆமாம் ஹன்சிகா அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் சினிமா நடிகை என்ற தளத்தில் யோசித்துப்பார்க்கும்போது தான் சிக்கல் துவங்குகிறது.

தமிழன் எப்போது ஹன்சிகாவிடம் தன்னை ஒப்புவித்தான் என்று சிந்தித்துப் பார்க்கும்போது மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஏன் வேலாயுதம் வெளிவந்தபோது கூட தமிழன் தடுமாறாமல் தான் இருந்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி என்றொரு பாழாய்ப்போன சினிமா வந்து தொலைத்தது. அதில் இடம்பெற்ற அழகே அழகே என்ற பாடலில் இறுக்கமான மஞ்சள்நிற உடையணிந்து பாலைவனத்தில் ஓடிவந்து தமிழர்களுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. “பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.” – ஒ.க.ஒ.க.வில் ஹன்சிகாவைக் கண்டு மயங்கிய ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி எழுதியிருக்கிறார். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பார்ப்பதற்கு மெத்து மெத்து என்றால் என்ன அர்த்தம் ? “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா ? ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ? ம்ம்ம்... அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். சரி, மறுபடியும் கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். ஆமாம், ஒ.க.ஒ.க படப்பாடலில் ஹன்சிகாவின் கழுத்துக்கு கீழே பகுதிகள் கிறங்கடிக்கத்தான் செய்தன. ஆனால் முகலட்சணம் என்று ஒன்று இருக்கிறதே.

அதே ஒ.க.ஒ.க படத்தில் ஒரு கதாபாத்திரம் ஹன்சிகாவின் BMI, உடையலங்கார உணர்வு, பல் தெரிகிற சிரிப்பையெல்லாம் பார்த்து அலறுகிறது. ஹன்சிகா தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு என்றி எள்ளி நகையாடுகிறது. நாம் BMI லெவலுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...!”

திடீரென எனக்கு ஹன்சிகாவின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ? சமீபத்தில் வெளிவந்த தீ.வே.செ.கு திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மென்பொருள் நிறுவனம். அங்கே பணிபுரியும் ஆண் ஊழியர்கள் யாரும் அழகான பெண்களையே பார்த்திருக்க மாட்டார்கள் போலும். ஹன்சிகாவை கண்டதும் கிலோலிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கிறார்கள். லிப்ட் திறந்துவிடுவது தொடங்கி வாகனத்தில் லிப்ட் கொடுப்பது வரை விழுந்தடித்து ஊழியம் செய்கிறார்கள். ஐ.டி இளைஞர்கள் என்ன அப்படியா காய்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கென்னவோ தீ.வே.செ.கு ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் அவமானப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஹன்சிகாவைப் போன்ற வட இந்திய மைதாநிற அழகிகளை ரசிப்பதைவிட திராவிட பாரம்பரியத்தில் வந்த கோதுமை நிற தன்ஷிகாவை ரசிக்கலாம்.

ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ !

தொடர்புடைய சுட்டி: அமலா பால்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment