Showing posts with label jk. Show all posts
Showing posts with label jk. Show all posts

23 March 2015

ஜே.கே & ராஜதந்திரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜே.கே – உண்மையில் எனக்கு ஜே.கே பார்க்கும் ஆர்வம் துளி கூட இல்லை. C2Hன் முதல் முயற்சியை ஆதரிக்கும் ஒரு சமிக்ஞையாக குறுந்தகடை மட்டும் வாங்கி வைத்திருந்தேன். பிறிதொரு சமயத்தில் படத்தை ஓடவிட்டு நகம் வெட்டுவது, காது குடைவது மற்றும் ஹாலில் நடை பயில்வது போன்ற உபயோகமான அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் படமும் பார்த்தேன்.

பொதுவாக விமர்சகர்கள் கழுவி ஊற்றிய ஒரு படத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது, படம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையே என்று தோன்றும். கத்தி, லிங்கா படங்களை நான் பின்னாளில் பார்த்தபோது எனக்கு அவை அவ்வளவாக ஏமாற்றம் அளிக்கவில்லை. ஜே.கேவும் அந்த லிஸ்ட் தான்.

ஏதோ வண்டி ஓடுது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய படம். என்ன ஒன்று, கேன்சர், ப்ரைன் டியூமர் போன்ற இத்யாதிகளை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சித்தார்த், ப்ரியா ஆனந்த் அப்புறம் இதே நித்யா நடித்த நூற்றியெண்பது படம் அங்கங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

அபாரமான தரம் என்பதாலும், விலை வெறும் ஐம்பது ரூபாய் மட்டும் தான் என்பதாலும் படம் சுமாருக்கு கீழ்தான் என்பதை மறந்துவிட்டு தாராளமாக ஜே.கே டிவிடியை வாங்கலாம்.

ராஜதந்திரம் – ஏற்கனவே செத்து புதைத்த படத்தை பற்றி எழுதுவதால் யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. மீஞ்சூர் மணியில் இந்த வாரம் வெளியான படத்தை இரண்டே நாட்களில் தூக்கி வீசிவிட்டார்கள். திருவொற்றியூர் திரையரங்கு ஒன்றில் ஐ’யும் வேலையில்லா பட்டதாரியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் சென்ற வாரம் வெளியான படம் எம்மாத்திரம். நான் சென்றபோது என்னையும் சேர்த்து சரியாக பதினைந்து பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம்.

தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு, ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பது. தற்சமயம் ட்ரெண்டில் இருப்பது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது. ஆங்கிலத்தில் இதனை heist படங்கள் என்கிறார்கள்.

ராஜதந்திரத்தின் காட்சிகள் அப்படியே நமக்கு அதே சாயலில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களை நினைவூட்டுகின்றன. எவ்வளவு நாளைக்குத்தான் சின்ன சின்னதா அடிக்கிறது ? பெருசா அடிச்சிட்டு செட்டில் ஆயிடணும் என்கிற வசனம் வரும்போதும், எம்.எல்.எம் மீட்டிங்கில் எல்லோருமாக சேர்ந்து கை தட்டும்போதும் இதெல்லாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் ஆயிற்றே என்று நெருடுகிறது. உச்சகட்டமாக நகைக்கடை நூதன கொள்ளை காட்சி சதுரங்க வேட்டையை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் காட்சி படமாக்கப்பட்ட இடம் கூட அதே தானா என்று சந்தேகிக்க வைக்கிறது.

மற்றபடி, நூற்றிமுப்பது நிமிட படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் வரை யார் யாருக்கு பின் அடிக்கிறார்கள் என்று எந்த க்ளுவும் கொடுக்காமல் நகர்த்தி இருப்பது பாராட்டிற்குரியது. மிஷெல் டி’மெல்லோவை வைத்து தெலுங்கு சினிமாவில் என்னவெல்லாம் சாகசம் செய்கிறார்கள் தெரியுமா ? இங்கே என்னடா என்றால் அழவும், கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லவும் பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனின் துறுதுறு நண்பராக நடித்திருப்பவர் நல்ல ரிசோர்ஸ். யாரென்று விசாரித்தால் பண்பலை வானொலியை ஒருகாலத்தில் கலக்கிக்கொண்டிருந்த தர்புகா சிவாவாம். நல்வரவு தர்புகா சிவா.

விமர்சனங்களை படித்துவிட்டு நல்ல படத்தை தவற விட்ட குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று அடித்து பிடித்து கடைசி நாளன்று திரையரங்கில் பார்த்த படம், அவ்வளவு மோசமில்லை என்றாலும் இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு பொருந்தாத ஒரு சுமாரான படமாகவே தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment