15 May 2014

யாமிருக்க பயமே

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சினிமா பார்த்து இரண்டு மாதங்களாகி விட்டது. கடைசியாக பார்த்த படம் தெகிடி. சினிமா பார்க்கலாம் என்று முடிவு செய்தபோது எனக்கு வாய்த்தது கோச்சடையான். டிக்கெட் எடுத்துவிட்டு கொஞ்சம் திகிலோடு காத்திருந்தேன். நல்லவேளையாக அதன் ரிலீஸ் தள்ளிப்போக, பிழைத்துக்கொண்டேன். சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தெய்வாதீனமாக யாமிருக்க பயமே பற்றி நல்லவிதமாக பேசிக்கொண்டார்கள். 

தொலைக்காட்சியில் லேகிய பாணி நிகழ்ச்சி நடத்தியதில் ஒரு தாதாவை ஏமாற்றி மாட்டிக்கொள்கிறார் கிருஷ்ணா. கூடவே அவருடைய காதலி. தாதாவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கும்போது கிருஷ்ணாவுக்கு கொள்ளியூர் என்கிற மலை கிராமத்தில் பூர்விக சொத்து இருப்பது தெரிய வருகிறது. தனது காதலியுடன் அங்கே செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாகரனும் அவருடைய தங்கை ஓவியாவும் உதவி செய்கிறார்கள். பாழடைந்த பங்களாவாக இருக்கும் பூர்விக சொத்தை செலவு செய்து ரெசார்ட்டாக மாற்றுகிறார். அவருடைய ரெசார்டுக்கு விருந்தினராக வரும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஏன் அப்படி இறக்கிறார்கள் ? கிருஷ்ணா மற்றும் சகாக்களுக்கு என்ன ஆயிற்று ? என்பதை காமெடியும் திகிலும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

அதென்ன திகில் + காமெடி வித்தியாசமான காம்போவாக இருக்கிறதே என்று முதலில் யோசித்தேன். படம் பார்த்தபிறகு அதனை உணர்ந்தேன். கிருஷ்ணா பலான மாத்திரை விற்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன் படம் துவங்குகிறது. இதேபோன்ற காட்சியை ஏற்கனவே மிர்ச்சி சிவா நடித்த ஏதோவொரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். நகைச்சுவை என்று சொல்லப்படுகிற காட்சிகளுக்கு சிரிப்பே வரவில்லை. தவிர, இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச சித்தரிப்புகள் வேறு. யாரோ நன்றாக இருப்பதாக கிளப்பிவிட இணையத்தில் எல்லோரும் அதையே வழிமொழிந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன். முதல் மரணம் நிகழும்போது தான் கதை துவங்குகிறது. அதன்பிறகு ஆங்காங்கே தொய்வடைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நிறைவடையும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது.

கிருஷ்ணா தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நடித்திருக்கிறார் என்பதோடு சரி. ரசிக்கும்படியாக எந்த சிறப்பம்சமும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. உதாரணத்திற்கு, இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை எடுத்துக்கொண்டால் விஜய் சேதுபதியின் உடல்மொழிக்காகவே அதனை ரசிக்கலாம். அதுவும் ஹாரர் படம் என்பது ஆளில்லாத கோல் போஸ்ட் இல்லையா ? அடுத்ததாக, ரூபா மஞ்சரி. அம்மையார் நிறைய மேடை நாடகங்களில் நடிப்பார் போல தெரிகிறது. அவ்வளவு செயற்கையாக வசனம் பேசுகிறார். வேறு நடிகையே கிடைக்கவில்லையா டைரக்டர் சார் ?

ஓவியா மட்டும்தான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார். பாந்தமாக ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த ஓவியா அம்மையார் ஒரேயடியாக அதிரடி கவர்ச்சிக்கு தரையிறங்கிவிட்டார். எப்படி புடவை கட்டுவது ? என்று செளகார்பேட் அம்மாள்களிடம் சிறப்பு வகுப்பு சென்று வந்திருப்பார் போல. ஏன் யாமிருக்க பயமே 3Dயில் தயாரிக்கப்படவில்லை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு காட்சியில் கிருஷ்ணாவின் கனவில் ஓவியா வந்து ஒரு மாதிரியாக கிறக்கமாக நெளிகிறார். யப்பா என்ன ஒரு நளினம் !

நிறைய விஷயங்கள் குறைகளாக தென்படுகின்றன. முதலில், கிட்டத்தட்ட பாதி படத்திற்கு நிறைய மொக்கையான காட்சிகள். ஒருவன் சம்பந்தமே இல்லாமல் கிருஷ்ணா மீது வாந்தி எடுத்துவிட்டு போகிறான். இரண்டாவது, இப்பொழுதெல்லாம் சினிமாவில் லாஜிக் பார்ப்பது என்பதே தெய்வ குற்றமாகிவிட்டது. இருக்கட்டும். ஆனால் குறைந்தபட்சம் கதை வடிவிலாவது ஒரு லாஜிக் இருக்க வேண்டுமல்லவா ? பங்களாவின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரையும் பேய் கொல்கிறது என்றால் கிருஷ்ணாவின் அப்பா என்று சித்தரிக்கப்பட்டிருப்பவர் ஏன் அவ்வாறு கொலையாகவில்லை ? இயக்குநரிடம் சில கேள்விகள் என்று கேட்பவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கக்கூடும். ஒரு காட்சியில் கந்தன், பத்மா தம்பதியர் கொலையுண்டு கிடக்கும்போது கந்தன் மட்டும் ஜாலியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார். கடைசியாக, பெரிய குறை என்னவென்றால் குடும்பத்துடன் பார்க்கத்தகாத படமாக எடுத்தது. இந்த படத்திற்கு எந்த அறிவாளி யூ / ஏ சான்றிதழ் கொடுத்தது என்று தெரியவில்லை. அதுபோக தினசரிகளில் குடும்பத்தோடு குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். அதைநம்பி சிலர் குடும்பத்தோடு திரையரங்கிற்கு வருகிறார்கள். வேறென்ன, ஓவியாவின் வளைவுகளையும், ரூபாவின் பூரி நகைச்சுவையையும் குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டியது தான்.

எல்லாம் இருந்தும் கடைசி முக்கால் மணிநேரத்தில் நம்மை சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து எல்லா குறைகளையும் மறக்கடித்து விடுகிறார்கள். யாமிருக்க பயமே அட்டகாசமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். பலான சமாச்சாரங்களை தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு படம் என்று சொல்லியிருக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment