Showing posts with label people. Show all posts
Showing posts with label people. Show all posts

7 March 2013

அந்தமான் - பாராடங் சுண்ணக்குகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமான் சுற்றுலா தளங்களில் சற்றே விந்தையானது பாராடங் சுண்ணாம்பு குகைகள். இருபது நிமிடங்கள் மட்டுமே சுற்றிப்பார்க்க வேண்டிய இடத்திற்கு காலையிலிருந்து மாலை வரை பயணத்தில் நேரம் செலவிட வேண்டும், அதுவும் வெவ்வேறு பயணமுறைகளில். அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுலா தளமும் கூட.

நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம், காலை உணவு மற்றும் மதிய உணவு உட்பட. பாராடங் செல்ல சில சிறப்பு அனுமதி தேவைப்படும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவது உத்தமம். அதிகாலை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் போர்ட் ப்ளேரின் வட கோடியிலிருந்து ஸ்வராஜ் மஸ்டா புறப்பட்டு, அவரவர் வசிப்பிடத்திற்கு சென்று தன்னை நிரப்பிக்கொள்ளும். காலை எட்டு, எட்டரை மணிக்கு ஒரு செக் போஸ்டை சென்றடையும், காலை உணவுகள் வழங்கப்படும். கனமான இட்லிகள், தொட்டுக்க சட்னி, சாம்பார். பிடிக்கவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அருகில் சில ஆடுகள் பாவமாக உங்கள் முகத்தை பார்த்தபடி நிற்கும். அவைகளுக்கு போட்டுவிடலாம். சரியாக காலை ஒன்பது மணிக்கு வாகனங்கள் கிளம்பத் தயாராகும்.



© உஷா ஸ்ரீகுமார்
செக் போஸ்டை தாண்டி நாம் பயணிக்கவிருப்பது ஜரவாக்கள் வாழும் பகுதி. அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன :-
    1. முன்னே ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம், பின்னர் சுற்றுலா வாகனங்கள், இறுதியில் ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம்.
    2. மணிக்கு நாற்பது கி.மீ மேல் வேகமெடுக்கக் கூடாது. இடையில் வாகனத்தை எங்கேயும் நிறுத்தக் கூடாது.
    3. ஜரவாக்களை காணும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது. அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.
    4. ஜன்னல் வழியாக உணவுப்பொருட்களையோ வேறு எந்த ஒரு பொருளையோ வீசக்கூடாது.

மேற்படி விதிமுறைகள் எதையாவது மீறினால் உங்களுக்கும், உங்களை அழைத்துவந்த சுற்றுலா நிறுவனத்திற்கும் கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். உணவுப்பொருட்களை ஜரவாக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் அதனை உடனடியாக உட்கொள்வதில்லை. பல நாட்கள் வைத்திருந்து கெட்டுப்போயிற்று என்று கூட அறியாமல் உட்கொள்வதால் அது அவர்களுக்கு விஷமாகி விட வாய்ப்புண்டு. அதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். அப்புறம் முந்தய பதிவில் சொன்ன நிர்வாண வீடியோ சர்ச்சையும் ஒரு காரணம்.



Ferry எனப்படும் சிறிய கப்பல்
ஜரவா பகுதிக்குள் நுழைந்ததும், நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருபுறமும் மாறி மாறி அலசிக்கொண்டிருந்தோம். கடைசி வரைக்கும் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாலைப்பகுதியை கடந்தபின்பு அங்கிருந்து சுமார் இருபது நிமிடங்கள் சிறிய கப்பலில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு சிறிய படகில் படகொன்றிற்கு எட்டு பேராக அழைத்துச்செல்வார்கள். தலை சுற்றுகிறதா ? பொறுமை. எட்டு பேர் கொண்ட குழுவில் என்னுடன் ஒரு வட இந்திய குடும்பம் பயணித்தது. இரண்டு ரசகுல்லாக்கள். இளையவள் பார்ப்பதற்கு ஒரு குட்டி காஜல் அகர்வால் போலவே இருந்தாள். அவளே மாட்டிவிட மாட்டாளா என்று லைப் ஜாக்கெட்டை தலைகீழாக பொறுத்தினேன். உல்டாக்கி புல்டா என்று இந்தியில் ஏதோ சொல்லிக்கொண்டே சைகை காட்டினாள். சீறிப்பாய்ந்தது... படகு !


இருபுறமும் அடர்த்தியான மேங்க்ரோவ் காடுகள், அனகோண்டா படங்களில் காட்டுவது போல. பின்னர் வளைந்து நெளிந்த குறுகிய பாதைக்குள் பயணித்து, நிறுத்தத்தை அடைந்தது. இன்னும் முடியவில்லை. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கி.மீ நடந்துசெல்ல வேண்டும். சரியாக சுண்ணக்குகை வாயிலில் எலுமிச்சை ஜூஸ் கடைகள் நான்கைந்து உள்ளன. இளைப்பாறிக்கொள்ளலாம்.


அங்கிருந்து ஒரு வழிகாட்டி டார்ச் லைட்டுடன் உடன் வருவார். சுண்ணக்குகைகளின் வரலாற்றில் வட இந்திய மொழியில் விளக்குவார். அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி, அதோ பாருங்க விநாயகர் மாதிரி உருவாயிருக்கு, இதோ நாகலிங்கம், அங்கே பவளப்பாறை என்று இயற்கையாகவே உருவான சிலவற்றை காட்டுவார். முடிந்தது. இவ்வளவு தான் பாராடங் சுண்ணக்குகைகள்.


Mud Volcano
அங்கிருந்து சற்று தொலைவில் சகதி எரிமலை (mud volcano) ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் அங்கே செல்ல முடியவில்லை. உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் முன்னரே மட் வால்கேனோ பற்றி கேட்டுக்கொள்வது நல்லது.

மதிய சாப்பாடு அங்குள்ள வீட்டுச்சமையல் விற்பன்னர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் விருந்தினர் வீடுகளில் கிடைக்கும் உபசரிப்பு. ஆனால் சைவம் மட்டும்தான்.

மாலை மூன்று மணியளவில் மீண்டும் வாகன அணிவகுப்பு தொடங்கும். அனைவருமே களைப்பாக உறங்கிக்கொண்டிருந்தோம். என்னருகில் அமர்ந்திருந்த இந்திக்காரர் “கானா... கானா...” என்று ட்ரைவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார். பாட்டு போடணுமாம். திடீரென ட்ரைவர், “ஜரவா... ஜரவா...” என்று அலற, அனைவரும் கண்விழித்து பார்த்தோம். ஆனா பெண்ணா என்று தெரியவில்லை. இடுப்புக்கு மேல் ஆடையணியாத இரண்டு மனிதர்கள். அடர் கறுப்பு நிறம். எங்களை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே கடந்தனர்.

படங்கள்: © ஜெயதேவ் தாஸ்
முந்தய பகுதி: அந்தமான் பழங்குடியினர்
அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு
அந்தமான் கட்டுரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 March 2013

அந்தமான் - பழங்குடியினர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அடுத்து நாம் பார்க்கவிருப்பது பாராடங். போர்ட் ப்ளேரில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் சுண்ணாம்பு குகையை பார்ப்பதற்கு சாலை வழியாகவும், கடல்வழியாகவும் பின்னர் மேங்ரோவ் காடுவழியாகவும் பயணிக்க வேண்டியிருக்கும். பாராடங்கின் சிறப்பு அந்த சுண்ணாம்பு குகையல்ல. ஜரவா எனும் பழங்குடியினர் வசிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை கடந்து பயணிக்க வேண்டும். உண்மையில் அவர்கள்தான் நாகரிக மக்கள் வசிப்பதற்காக பிற பகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்தமான் & நிகோபர் தீவுகள் முழுமைக்கும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது எஞ்சியிருப்பதாக கருதப்படும் சில பழங்குடியின சமூகங்களை பற்றி தொடரும் பத்திகளில் காண்போம்.

ஜரவா (Jarawa)
அந்தமானின் செல்லப்பிள்ளைகள். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தெற்கு அந்தமானில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். வெள்ளையர்களின் வருகையாலும், நகரமயமாக்கல் காரணமாகவும் வேறு வழியில்லாமல் மேற்கு பகுதியில் வசிக்க தொடங்கிவிட்டனர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஜரவாக்கள் நாகரிக மக்களோடு சிநேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். முந்தய பத்தியில் குறிப்பிட்டது போல பாராடங் செல்லும் சுற்றுலா பயணிகளை வழிமறித்து அவர்களிடம் உணவுப்பொருட்கள் பெற ஆரம்பித்தனர். அதுபோல ஒருமுறை உணவுக்காக வழிமறித்த பழங்குடியினரை நடனமாட வைத்து அதை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள். அதற்குப்பின் அந்தமான் நிர்வாகம் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து, ஜரவா மக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. செய்தி. எனினும் தற்போது ஜரவா மக்கள் தாங்களாகவே வெளியுலகிற்கு வரவும், ஆடைகள் உடுத்தவும், கல்வி கற்கவும் தொடங்கியிருக்கிறார்கள். கவலையளிக்கும் வகையில், ஜரவா மக்கள் தற்போது சுமார் இருநூறிலிருந்து நானூறு பேர் வரை மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.



க்ரேட் அந்தமானீஸ் (Great Andamanese)
அந்நிய படையெடுப்புக்கு முன்பு அந்தமான் முழுவதிலும் வசித்து வந்த, ஒத்த மொழிகள் பேசிய பத்துக்கும் மேற்பட்ட இனங்களை தற்போது க்ரேட் அந்தமானீஸ் என்று பகுத்து வைத்திருக்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆறாயிரத்தை கடந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள், வெள்ளையர்கள் கொண்டு வந்து பரப்பிய நோய்களை சமாளிக்க முடியாமல் கிட்டத்தட்ட அழிவை நோக்கி சென்று பின் மீண்டு வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் வெறும் பத்தொன்பது பேர் மட்டுமே எஞ்சியிருந்து, தற்போது தோராயமாக ஐம்பது பேர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். சில தலைமுறைக்கு முன்பிலிருந்தே இவர்கள் இந்தியர்களோடு இல்வாழ்க்கையில் இணைந்ததால் ஹிந்தி சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு கி.மீ பரப்பளவு கொண்ட சிறிய தீவொன்றில் இவர்களுக்காக குடில்கள், பள்ளி, மருத்துவமனை போன்ற வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது அந்தமான் நிர்வாகம்.

ஆங்கீஸ் (Onge)
லிட்டில் அந்தமான் தீவில் வசித்து வரும் ஆங்கீ இன மக்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே உள்ளது. தங்களது பாரம்பரிய கதைகளின் வழியாக நிலநடுக்கத்தை பற்றியும் ஆழி பேரலைகளை பற்றி புரிந்து வைத்திருக்கும் ஆங்கீஸ் 2004ல் சுனாமி வந்தபோது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஷச் சாராயத்தை தவறுதலாக உட்கொண்டு எட்டு பேர் இறந்திருக்கிறார்கள். பெருகி வரும் சாராய மோகம் ஆங்கீஸ் இனமக்களுக்கு ஆபத்தாக இருந்து வருகிறது. தவிர ஆங்கீஸ் இனப்பெண்கள் மிகவும் அரிதாக கருவுருவதால் ஆங்கீஸ் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிகொபரீஸ் (Nicobarese)
க்ரேட் அந்தமானீஸை போலவே நிகோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினரை நிகொபரீஸ் என்று அழைக்கிறார்கள். நிகோபர் தீவுகளை இன்னமும் மிகவும் பாதுகாப்பாகவும், நாகரிக மக்கள் எளிதில் நுழைய முடியாதபடியும் வைத்திருப்பதாலோ என்னவோ நிகொபரீஸ் எண்ணிக்கையில் இருபதாயிரத்திற்கு மேல் உள்ளனர். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகமடைந்தவர்கள். இலவச கல்வி திட்டத்தின் வாயிலாக இன்னும் சில ஆண்டுகளில் நிகோபர் மக்கள் அரசு பணியிடங்களை நிரப்ப காத்திருக்கிறார்கள். மேலை நாட்டு மத போதகர் ஒருவர் பைபிளை நிகொபரீஸில் மொழி பெயர்த்ததால் நிகொபரீஸ் கிட்டத்தட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். சுனாமியில் இறந்தவர்களின் அலறல் இன்னமும் கேம்பெல் பே பகுதியில் நள்ளிரவுகளில் கேட்பதாக நிகோபர் மக்கள் நம்புகிறார்கள். 



செண்டிநெலீஸ்
முற்றிலும் நாகரிக மனித தொடர்பற்ற மக்கள். சுனாமி வந்த சமயம், ஹிந்து நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. ஒருமுறை அந்தமான் நிர்வாகம், நாகரிக மக்கள் குழுவை, இவர்களுடைய தீவிற்கு நட்புக்கரம் நீட்ட அனுப்பி வைத்தது. குறிப்பிட்ட தொலைவு வரை படகில் சென்று அங்கிருந்து தேங்காய்களை வீசியிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் தேங்காய்களை பெற்றுக்கொண்டனர் பழங்குடியினர். அடுத்தகட்டமாக கரையில் இறங்க முயற்சி செய்ததும் மூர்க்கமாக தாக்க தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய பகுதியில் அத்துமீறிய மீனவர்கள் இருவரை அம்பெய்தி கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கூட இதுவரையில் மர்மமாகவே இருந்து வருகிறது.



ஷாம்பென்
ஒப்பீட்டளவில் மிகவும் சாதுவானவர்கள். இந்தோனேசிய, பர்மிய, வியட்நாமிய மக்களின் சாயலை கொண்டவர்கள். க்ரேட் நிகோபர் தீவில் ஆங்காங்கே சிறுசிறு பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இருநூறிலிருந்து முன்னூறு வரையில் எண்ணிக்கை இருக்கலாம் என கருதப்படுகிறது. இடுப்புக்கு கீழே மட்டும் உடையணியும் வழக்கம் கொண்டவர்கள். வன விலங்குகளை வேட்டையாடியும், காய்கறி, பழங்களாலும் பசியாறுகிறார்கள். கடற்கரையோரம் குடியிருக்கும் பழக்கமில்லாததால் ஷாம்பென் மக்களை சுனாமி பெரிய அளவில் பாதிக்கவில்லை.

மேற்கண்ட தகவல்களையும் மேலதிக தகவல்களையும் போர்ட் ப்ளேரில் உள்ள மனித இயல் அருங்காட்சியகத்தில் தெரிந்துக்கொள்ளலாம். அதுபற்றிய விவரங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் விவரிக்கிறேன்.


படங்கள் உதவி: கூகுள்

சில  காணொளிகள்:
Jarawa
http://www.youtube.com/watch?v=tlRSsvB4iLE
http://www.youtube.com/watch?v=u5lwwsxVr9M
http://www.youtube.com/watch?v=q8thUedRXnk


Onge
http://www.youtube.com/watch?v=4GtZiW2GSkM

Sentinelese
http://www.youtube.com/watch?v=OaPYwlXOTzQ

Shompen
http://www.youtube.com/watch?v=fcLr22O6pl0

 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 February 2013

அந்தமான் - வாழ்க்கைமுறை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அந்தமான் மண்ணில் கால்பதித்த சில நிமிடங்களிலேயே என் தந்தையின் நண்பருடைய செல்வாக்கை புரிந்துக்கொண்டேன். ஒருமாதிரி திருட்டுமுழியுடன் நுழைந்த என்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழிமறித்து கேள்விக்கணைகளை தொடுத்தார்கள். இன்னாருடைய விருந்தினர் என்று சொன்னதும் மரியாதையாக அனுப்பிவைத்தார்கள். நான் தங்கியிருந்த தெலானிப்பூர் பகுதியில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே அவரை தெரிந்திருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கிறது. தங்குமிடத்திற்காக அலைய அவசியமில்லாமல் போனது. விருந்தினருக்காக கட்டிவைக்கப்பட்ட சில அறைகளுள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டேன். ஏசி இல்லை. மற்றபடி விசாலமான கட்டில், தொலைக்காட்சி, சுத்தமான குளியல் மற்றும் கழிவறைகள், பாத்ரூமில் ஹீட்டர் என்று செளகரியமாக இருந்தது. அடுத்தநாள் என்னுடைய சைட் ஸீயிங் இனிதே துவங்கியது. இப்போது சுற்றுப்பயணத்தில் தொபுக்கடீர் என்று குதிப்பதற்கு முன்பு அந்தமான் மக்களின் வாழ்க்கைமுறையை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நம் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இரண்டு - சினிமா & அரசியல். இரண்டினுடைய ஆதிக்கமும் அந்தமான் மக்களிடம் அதிகமில்லை.

சினிமா
கப்பலில் பயணிக்கும்போது தான் உள்ளூர்வாசிகள் அந்த அதிர்ச்சியைக் கொடுத்தார்கள் - அந்தமானில் திரையரங்குகள் இல்லை. லைட் அவுஸ், ஆனந்த் பேரடைஸ், சப்னா தியேட்டர் போன்ற அரங்குகள் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்திருக்கின்றன. ஆட்கள் வரத்து குறைந்து நாளடைவில் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. இளைஞர்களை பொறுத்தமட்டில், சினிமா பார்ப்பதென்றால் டிவிடியில் தான் பார்ப்போம் என்கிறார்கள். அப்போதும் கூட புதுப்படம், உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. ரஜினி - கமல், அஜித் - விஜய் போன்ற பிம்பிள்ளிக்கி பிளாக்கி மோதல்கள் எல்லாம் அங்கே நடைபெறுவதில்லை.

அரசியல்
அந்தமான் & நிகோபர், பாண்டிச்சேரியை போலவே ஒன்றியப் பகுதியாகும். எனினும், அதன் அரசியல் மற்ற ஒன்றியப்பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. அந்தமானுக்கென்று முதலமைச்சர் கிடையாது. ஆட்சியதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது. ஒரேயொரு லோக் சபா எம்.பி அந்தமானில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். நீண்ட வருடங்களாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் அங்கு எம்பியிருக்கிறார். ஆனால் தற்போது பி.ஜே.பி எம்பி அமர்ந்திருக்கிறார். “யோவ்... பி.ஜே.பிக்கு ஓட்டு போடுற அளவுக்கு மோசமான ஆளுகளாய்யா நீங்க...” என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இங்கே கட்சி, சாதி, மதமெல்லாம் பார்த்து வாக்களிக்க மாட்டோம். வேட்பாளரை பார்த்துதான் வாக்களிப்போம் என்கிறார்கள்.



உணவு
சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடல்சூழ் பகுதியென்பதால் கடல் உணவுகள் பிரசித்தி. என்ன ஒன்று, தமிழகத்தில் வஞ்சிரை, சங்கரா, வாளை, சுறா, இறால் என்று சொல்லப்படுபவை அங்கே இந்தி, வங்காள மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஜிங்கான் மச்சி என்றால் இறாலை கொண்டுவந்து வைக்கிறார்கள். மற்றபடி, சுற்றுலா பயணிகளிடம் மான்கறி கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி ஆசை காட்டுகிறார்கள். அதேசமயம், மான்கறி சாப்பிட்டு மாட்டினால் கடுமையான தண்டனைகள் உண்டு என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.



மது
ANIIDCO எனும் நிறுவனம் தான் அந்தமான் முழுவதும் சரக்கு சப்ளை செய்கிறது. தமிழகத்தில் TASMAC மாதிரி என்று சொல்ல முடியாது. ANIIDCO நேரடியாக சில கடைகளை அந்தமானில் நிறுவியுள்ளது. இதனை அங்குள்ளவர்கள் ‘சொசைட்டி’ என்று சொல்கிறார்கள். அத்தகைய கடைகளில் நீங்கள் சரக்கு வாங்க மட்டுமே முடியும். உட்கார்ந்து பருக இடமில்லை. மற்றபடி போர்ட் ப்ளேரில் இருபதடிக்கு ஒரு மதுக்கூடம் (பார்) அமைந்திருக்கிறது. மதுக்கூடங்களில் நம்மூர் தனியார் பார் முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஸ்மால், லார்ஜ், கட்டிங் அளவுகளில் மது, கண்ணாடி குடுவைகளில் பரிமாறப்படுகிறது. நான்கைந்து கிண்ணங்களில் சைட் டிஷ். விலையும் ஒப்பீட்டளவில் குறைவு. அதிலும் அருகிலிருந்த Holiday Inn மதுக்கூடத்தில் வேண்டப்பட்டவர் என்று அறிமுகப்படுத்தி விட்டதில் நல்ல மரியாதை கிடைத்தது.



பட உதவி: கூகிள்
பயணம்
அரசு பேருந்துகளை தேட வேண்டியிருக்கிறது. மினி பஸ் போன்ற அளவில் தனியார் பேருந்துகள் நிறைய தென்படுகின்றன. எந்தவொரு தீவுக்கும் மேம்பால போக்குவரத்து கிடையாது. திக்லிப்பூர், ரங்கத், மாயபந்தர் போன்ற தீவுகளுக்கு செல்வதென்றால் பேருந்தே கப்பலில் ஏறி பயணிக்கிறது. ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுவதில்லை. ஆனால், அந்த வேலையை டூரிஸ்டு ஏஜெண்டுகள் செவ்வனே செய்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவு.

மொழி & மதம்
தமிழும் வங்காளமும் ஆதிக்க மொழிகள். ஹிந்தி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெலுங்கு, மலையாளம் பேசும் மக்களும் இருக்கிறார்கள். முதலாளிகள், தொழிலதிபர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருக்கிறார்கள். சமீபகாலமாக பெங்காலிகளின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மை. காளியும் விநாயகரும் இஷ்ட தெய்வங்கள். முருகனை வணங்குபவர்கள் நிச்சயம் தமிழர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம். அடுத்தபடியாக முறையே கிறிஸ்தவமும் இஸ்லாமியமும்.

மற்றவை
பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அவை தவிர்த்து மேற்படிப்பு படிக்க விரும்பினால் தாயகத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தான் செல்ல வேண்டும். இந்திய நகரங்களின் தீராத தலைவலியாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் அந்தமானில் மிக மிக குறைவு. சிக்னல் விளக்குகள் கிடையாது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் மட்டும் நிற்கிறார்கள். யாரையும் மடக்கி லஞ்சம் வாங்குவதில்லை. காய்கறி, பழங்கள் தாயகத்திலிருந்து அனுப்பப்படுவதால் கொள்ளை விலையில் விற்கப்படுகின்றன. யாரும் செய்தித்தாள்கள் படிப்பதில்லை. படிக்க வேண்டுமென்று நினைத்தாலும் மதியத்துக்கு மேல்தான் கிடைக்கும். சொல்லப்போனால் யாரும் செய்திகளை தெரிந்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.

தொடரும்

முந்தய பகுதிகள்:
பயணத்தொடர் ஆரம்பம்
கப்பல் பயணம்

மேலும் சில கேள்விகளும் பதில்களும்


1. சீசன் ?
டிசம்பர் - மே. மற்ற மாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சில தீவுகளில் சீசன் இல்லாத சமயம் பராமரிப்பிற்காக சுற்றுப்பயணிகளை அனுமதிக்க மாட்டார்கள். மழைக்காலத்தில் உள்ளூர்கப்பல்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் அபாயங்கள் உள்ளன.

2. எத்தனை நாட்கள் தேவை ?
போக வர விமானப்பயணம் சேர்த்து எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். ஓரிரு நாட்கள் குறைவாக இருப்பின் சில இடங்களை தவிர்த்துவிட்டு சுற்றிப்பார்க்கலாம்.

3. சொகுசுக்கப்பல்கள் உண்டா ?
முந்தய பதிவில் குறிப்பிட்ட Azamara Journey எப்போதாவது ஒருமுறை பயணிக்கும். டிக்கெட் கட்டணம் 3500 அமெரிக்க டாலர்களில் துவங்கும். தவிர, AMET நிறுவனம் இயக்கும் கப்பல்களில் டிக்கெட் விலை பதினெட்டாயிரத்தில் ஆரம்பிக்கிறது.

4. கப்பல், விமானம் இரண்டில் எது சிறந்தது ?
கப்பலில் போக வேண்டுமென்று பேராவல் கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் விமானத்தையே தேர்ந்தெடுக்கவும். கப்பலில் பயணம் செய்தால் மூன்று நாட்கள் ஸ்வாஹா, விமானத்தில் மூன்றே மணிநேரங்கள். தவிர, தீவுகளுக்கிடையே சிறிய கப்பல்களில் பயணிக்கலாம்.

5. விமானக் கட்டணம்
நான்கைந்து மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் ஒருவழிப்பயணத்திற்கு 5000ரூ வரை செலவாகும். தேதி நெருங்க நெருங்க பதினெட்டாயிரம் வரை அதிகரிக்கும். வார இறுதி நாட்களை விட, வாரநாட்களில் குறைவாக இருக்கும்.

மேலும் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment