அன்புள்ள வலைப்பூவிற்கு,
சென்னையில்
 ஒரு நாள் - படம் பார்க்கும் ஆவலை பெரிதாக ஏற்படுத்தவில்லை. நண்பர் ஒருவர் 
டிக்கெட் எடுத்துவிட்டு அழைத்ததால் சென்றேன். சிலசமயங்களில் 
எதிர்பார்ப்பின்றி பார்க்கும் படங்கள் அதிகம் பிடித்துவிடுகிறது.
சென்னையில்
 ஒரு இளைஞன் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைகிறான். அதேசமயம், வேலூரில் ஒரு 
சிறுமிக்கு உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். 
ஒன்றரை மணிநேரத்திற்குள் இதயத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம். அது எப்படி
 சாத்தியமானது என்பதை மற்றும் சில கிளைக்கதைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
மலையாள
 ட்ராபிக்கின் மறுபதிப்பு என்பதால் படம் பார்க்கும்போது நியாயமாக நமக்கு 
ஏற்படவேண்டிய த்ரில் தவறிவிடுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை விட எப்படி 
நடக்க போகிறது என்ற எண்ணமே மேலிடுகிறது. 
பல்முனை
 பயண திரைக்கதையில் கிட்டத்தட்ட மையப்புள்ளி சேரனுடைய வேடம் என்று 
நினைக்கிறேன். ஒரே அடியில் பத்து பேரை தூக்கி வீசவில்லை, ஆனால் அப்படியொரு 
ஹீரோயிசம் சேரனுடைய வேடத்தில். ஆனால் சேரனுடைய நடிப்பு ? திங்கட்கிழமை காலை
 அலுவலகம் செல்வது போலொரு முகபாவனை. சகல உணர்ச்சிகளுக்கும் அதே தான்.
பூ
 படத்தில் நடித்த கருவாச்சி பார்வதியா ? பளீரென இருக்கிறார். கதையின் 
போக்கு அவரை அழவைப்பது துயரம். பிரசன்னாவின் மனைவி வேடத்தில் சினேகாவே 
நடித்திருக்கலாமே என்று முதலில் தோன்றியது. ஏன் நடிக்கவில்லை என்று படம் 
பார்த்தபின் தெரிந்துக்கொண்டேன். வெள்ளித்திரை நட்சத்திரமாக பிரகாஷ்ராஜ். 
அவருடைய மனைவியாக ராதிகா. ராதிகாவின் வேடம் லலிதகுமாரியின் பிரதிபலிப்பாக 
இருக்கலாம். காவல்துறை அதிகாரியாக சரத்குமார். ஆட்டோகிராப் மல்லிகா, மனோ 
பாலா, ப்ளேடு தினா, கிருஷ்ணன் பஞ்சு என்று நிறைய நடிகர்களுடன் சில 
அறிமுகங்கள். யார்றா இவன் என்கிற மாடுலேஷனுடன் ஒரே ஒரு காட்சியில் பாலா சிங் ரசிக்க வைக்கிறார்.
ஒரு
 தாய் - தந்தை, தன்னுடைய மகனின் காதலியை முதன்முதலாக சந்திக்கும் தருணம் 
எத்தகைய உணர்வுப்பூர்வமானது. ஆனால் கதையின் சூழ்நிலைப்படி அது அதற்கு 
எதிர்மறையான தருணமாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வை ஜேபியும், லக்ஷ்மி 
ராமகிருஷ்ணாவும் கண்களில் காட்டிய விதம் அபாரமான நடிப்பு. அடுத்த 
காட்சியில் காருக்குள் அமர்ந்து மகனுடைய மரணத்தை நினைத்து உடைந்து கதறுவது 
நடிப்பை கடந்தநிலை. ஒட்டுமொத்த படத்தில் சிறந்த நடிப்பு ஜே.பி லக்ஷ்மி 
ஜோடியுடையது.
படத்தின்
 மொத்தக்கதையையும் இருபது நிமிட குறும்படத்தில் சொல்லிவிடக்கூடியது தான். 
அதை இரண்டு மணிநேர சித்திரமாக சொல்லியிருப்பது முதல் பாதியில் பல இடங்களில்
 சலிப்பூட்டுகிறது. தவிர, பல காட்சிகளில் செயற்கைத்தனம் இழையோடுகிறது. மிஷன் இஸ் ஆன் என்று
 சரத்குமார் சொன்னதும் காவல்துறையினர் வெற்றிக்குறி போட்டுக்கொள்வதெல்லாம் 
டூ மச். ஜிந்தா காலனிஎபிசோடு முழுவதும் உச்சக்கட்ட சினிமாத்தனம். மகள் 
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்; ராதிகா அவரது கணவரின் பொறுப்பற்ற 
தன்மையை அழுத்தம் திருத்தமாக கடிந்துக்கொள்கிறார்; அழுது அரற்றியிருக்க 
வேண்டாமா ? 
படத்தின்
 இறுதியில் இனியா - பிரசன்னா ஜோடியின் மனமுடிவை சரிவர புரிந்துக்கொள்ள 
முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொள்கிறார்கள் என்பது 
வரைக்கும் மட்டுமே புரிகிறது. இனியாவும் பிரசன்னாவின் நண்பரும் சேர்ந்து 
பிரசன்னாவிற்கு சின்ன ஷாக் கொடுப்பதற்காக விளையாடினார்கள்; அதை 
புரிந்துக்கொள்ளாமல் பிரசன்னா அவரசப்பட்டுவிட்டார் என்று வைத்திருந்தால் 
பெண்மைக்கு பொடலங்காய் கூட்டு வைத்து பெருமை சேர்த்திருக்கலாம். போலவே, 
பிரகாஷ்ராஜ் அவருடைய மனைவி, மகளை புரிந்துக்கொண்டாரா ? சேரனுக்கு 
மீடியாவின் கவனத்தை தாண்டி வேறென்ன பெருமைகள் கிடைத்தன ? முதலில் மகனின் 
இதயத்தை தர மறுத்த ஜேபி - லக்ஷ்மி தம்பதி இன்னொரு உயிர் காப்பாற்ற பட்டதை 
நினைத்து எப்படி உணர்ந்தார்கள் ? என்று பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் 
நிறைய இருந்தும் அவசர அவசரமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.
திரையரங்கை
 விட்டு வெளியே வந்தபிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ நல்ல படமாகவே தோன்றுகிறது.
 பெண் வாகன ஓட்டிகளுக்கு தரவேண்டிய மரியாதை, தன்னுடைய மகன் தன் உதவியின்றி 
தானே காலூன்றி எழ விரும்பும் தந்தையின் மனப்பான்மை, தன்னுடைய தவறை உணர்ந்து
 கலங்கும் போக்குவரத்து காவலாளி, புகழ் போதையில் மயங்கிக்கிடக்கும் நடிகர்,
 எந்த ஒரு செயலையும் முடியும் என்று நினைக்கவேண்டிய தன்னம்பிக்கை, 
எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய மகன் உயிரைப் போல இன்னொரு பெற்றோருக்கு 
அவர்களுடைய மகள் உயிர் எவ்வளவு முக்கியம் என்கிற புரிந்துக்கொள்ளுணர்வுடன் 
கூடிய தியாகம் என்று படம் முழுக்க நெகிழ்ச்சிகளின் குவியலாகவும், கலியுக 
மனிதர்களுக்கு பாடமெடுக்கும் வகுப்பறையாகவும் விளங்குகிறது. பொழுதுபோக்கு 
படம் என்கிற வகையில் அந்த தரப்பினரையும் திருப்திப்படுத்திவிடுகிறது. 
இருப்பினும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று 
உரிமையுடன் கூடிய ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
| 
 | 


















